;
Athirady Tamil News

முட்டி மோதுவதற்கு தயாராகும் நிலையில் தமிழ்க் கட்சிகள்!! (கட்டுரை)

0

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமல் 3 வருடங்களுக்கு மேலான காலப் பகுதி கடந்திருக்கும் இன்றைய நிலையில் அத்தேர்தல்களுக்கான சமிக்ஞை அரசாங்கத்தின் பக்கத்திலிருந்து வெளியாகியுள்ளது. அடுத்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்குள் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை எதிர்பார்க்க முடியுமென்ற அறிகுறிகள் இப்போது தென்படுகின்றன.

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதில் எதிர்நோக்கப்படுகின்ற சட்டரீதியான தடைகளை நிவர்த்தி செய்ய அரசின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் இன்றைய நிலையில், மறுபக்கத்தில் வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல்வாதிகள் தேர்தலுக்கான ஆயத்தப்படுத்தல்களைத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளதை சமீப தினங்களாக அவதானிக்க முடிகின்றது.

அதற்கான அறிகுறிகளாகவே வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கிடையே சமீப நாட்களாக சொற்போரும் உருவாகியிருக்கின்றது. குறிப்பாக வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் இம்மாகாணங்களுக்குரிய முதலமைச்சர் வேட்பாளர்கள் யார் என்ற விடயம் முக்கிய விவகாரமாக பேசப்படத் தொடங்கியுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் மத்தியில் சில மாதங்களுக்கு முன்னர் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விடயம் காரசாரமாக விவாதிக்கப்படத் தொடங்கியிருந்தது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் பெயர் உள்ளிட்ட பலருடைய பெயர்கள் அரசியல் அரங்கில் அடிக்கடி பேசப்படும் பெயர்களாகியுள்ளன.

மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவது குறித்து அக்கட்சி முடிவு எடுத்திருப்பதாக கடந்த காலங்களில் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் அக்கட்சியின் உறுப்பினர்களாலேயே இச்செய்தி மறுக்கப்பட்டிருந்தமை தமிழ் மக்களால் விசித்திரமாக நோக்கப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் களத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் குறித்த பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகளின் மத்தியில் ஆரம்பம் முதலே நிலவி வருகின்ற கருத்து முரண்பாடுகள் இன்றும் முடிவின்றித் தொடருவதால் தேர்தல் கூட்டணி பற்றிய பேச்சுக்களும் எதிர்வரும் நாட்களில் சூடுபிடிக்கத் தொடங்குமென எதிர்பார்க்கலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் ஏற்கனவே சில விடயங்களில் தீவிர முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதால் இம்முறை மாகாணசபைத் தேர்தல்கள் விடயத்தில் அவர்கள் எவ்வாறு செயற்படப் போகின்றார்கள் என்பதும் தமிழ் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளது.

இந்த விடயத்தில் நாம் குறிப்பாக ஒன்றை நோக்குவோமானால், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்த கடிதமொன்றை அனுப்புவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் குறிப்பாக தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. வார்த்தைப் பிரயோகங்களும் காரசாரமாக இருந்தன.

இதன் காரணமாக தமிழரசுக் கட்சி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு மேற்படி கடிதத்தை தனியாக அனுப்பி வைத்திருந்தது. மறுபக்கத்தில் புளொட் உள்ளிட்ட கட்சிகள் ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதத்தை அனுப்பி வைத்திருந்தன.

இதுபோன்று தமிழ்க் கட்சிகள் இடையே பல்வேறு விடயங்களில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுவதால் இம்முறை மாகாணசபைத் தேர்தல்களை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர் என்பது மக்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது என்றே கூற வேண்டும். அதேநேரம், உலகப் பெரும் தொற்றான கொவிட்-19 இன் பின்னர் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் விலைவாசி அதிகரிப்புப் போன்ற அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளின் மத்தியில் தேர்தலொன்று எதிர்நோக்கப்படுவதால் தமிழ் அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எந்தளவுக்கு அமையப் போகிறது என்பதும் இங்கு சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

தமிழ் அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகமொன்றின் முன்னேற்றத்துக்கு, குறிப்பாக பொருளாதார ரீதியிலான முன்னேற்றத்துக்கு எந்தளவு அவை பங்களித்துள்ளன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். தமிழ் மக்கள் மத்தியில் இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகள் மீது அதிருப்தியும், வெறுப்பும் ஏற்கனவே உள்ளதையும் மறுக்க முடியாது.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்கள் நடைபெறும் காலத்தில் மாத்திரம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு பற்றியும் உரிமைகள் பற்றியும் தமிழ்க் கட்சிகள் அக்கறை காண்பிப்பது கடந்த சில வருடங்களாக அவதானிக்கப்படும் விடயமாக உள்ளது.

மறுபக்கத்தில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒற்றுமையின்மை மற்றுமொரு விடயமாகும். தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்ற ரீதியில் ஒற்றுமையாகக் குரல் கொடுக்காது பிரிந்து நின்று செயற்படுவதால் எந்தப் பயனும் ஏற்பட்டு விடப் போவதில்லை என்பதே தமிழ் மக்களின் உறுதியான எண்ணமாகுமென்பதை தமிழ்க் கட்சிகள் இன்னுமே புரிந்து கொள்வதாக இல்லை.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள் தற்போது எந்த அளவில் உள்ளன என்பதையும் வாக்கு வங்கியில் சரிவு அல்லது முன்னேற்றம் ஏற்பட்டதா என்பதையும் அறியும் ஒரு தேர்தலாக மாகாணசபைத் தேர்தல் அமையப் போகின்றது.

குறிப்பாக கடந்த பொதுத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள சரிவு மாகாணசபைத் தேர்தலிலும் பிரதிபலிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் கூட்டமைப்பு பலமான முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, குழுக்களின் பிரதித் தலைவர் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி போன்ற பல்வேறு தரப்புகள் இத்தேர்தலில் போட்டியில் இறங்கப் போகின்றன. இதனைச் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் தமிழரசுக் கட்சியை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது. அது பெரும் சவாலாகவும் அமையப் போகின்றது.

கிழக்கிலும் தமிழ்க் கட்சிகளுக்கிடையே தேர்தல் விடயத்தில் போட்டிகளே நிலவப் போகின்றன என்பது தெரிகின்றது. ஒருபுறத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுபுறத்தில் சிவநேசதுரை சந்திரகாந்தன், கருணா உட்பட பலமுனைகளில் போட்டிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தமிழ் அரசியல் கட்சிகள் தனித்தனியாகக் கூட்டணியமைத்து பல முனைகளில் போட்டியிட்டால் வாக்குகள் சிதைவடைந்து எந்தவொரு தரப்புக்கும் பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியமைப்பதற்கான பலம் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. இது போன்ற பல்வேறு விடயங்களைக் கவனத்தில் கொண்டு தமிழ் கட்சிகள் புத்திசாலித்தனத்துடன் செயற்படுவது அவசியமானதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + fifteen =

*