;
Athirady Tamil News

சாண் ஏற முழம் சறுக்கல்!! (கட்டுரை)

0

மட்டக்ளப்பு மாவட்ட த்தின், படுவாங்கரைப் பெரு நிலப்பரப்பின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளதே மாலையர்கட்டு கிராமமாகும். வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தில் வாழும் அக்கிராமத்திலுள்ள அநேகம்பேர், இருப்பதற்கு வீடின்றி அல்லலுறுகிறார்கள்.

கடந்த நல்லாட்சிக் காலத்தில், புதிய வீடமைப்புதிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் அது இன்றுவரை பூரணப்படுத்தப்படாத நிலையில் உள்ளதால், அம்மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று உறையுள். வயலில் கூலி வேலை செய்து, அதில் பிழைத்துவரும் மக்கள், தமது உழைப்பில் ஒரு வீட்டைக் கட்டி முடிப்பதற்கு வசதியில்லாத நிலையில், அரசாங்கம் வீட்டுத் திட்டத்தை அமைத்துக் கொடுத்துள்ள போதிலும், அது இற்றைவரை பூரணப்படுத்தப்படாத நிலையில், ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவிலை’ என்பதுபோல் வாழ்ந்து வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில், கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் சஜித் பிரேமதாஸ, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்தபோது, ‘செமட்ட செவன’ வீட்டுத்திட்டத்தின்கீழ் 29 திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதில் இதுவரையில், ஏழு செயற்றிட்டங்கள் மாத்திரமே பூரணப்படுத்தப்பட்டு உள்ளன. மிகுதியான வீட்டுத்திட்டங்கள் அனைத்தும் அரைகுறையாக உள்ளன.

“எமக்காக ஆரம்பிக்கப்பட்ட எமது வீட்டுத்திட்டம், தற்போது வனாந்தரமாக காணப்படுகின்றது. சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக வந்திருந்தால், எம்முடைய வீட்டுத்திட்டம் பூரணப்படுத்தப்பட்டு, நாங்கள் அதில் வசித்து வந்திருப்போம். எமது கிராம மக்கள், இருப்பதற்கு வீடுகளின்றிப்படும் இன்னல்களை நேரில் வந்து பார்த்தால்தான் தெரியும். இதனை விரைவில் முடித்துத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம்” என்றார் த. தங்கவடிவேல்.

“எமக்கு இருப்பதற்கு வீடு இல்லை; நாங்கள் தற்போது மாமியின் வளவில்தான் சிறிய குடில் வைத்து, அதில் வசித்து வருகின்றோம்.‘செமட்ட செவன’ வீட்டுத்திட்டத்தின்கீழ், எமக்கும் ஒரு வீடு கிடைத்தது. ஆனால், மூன்று வருடங்கள் ஆகியும் அந்த வீட்டுத்திட்டம் இற்றைவரை பூரணப்படுத்தப்படவில்லை. முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபாய் தந்தார்கள். அத்தோடு சேர்த்து எங்களிடமிருந்த சிறிய தங்க நகைகளை அடமானம் வைத்தும், கடன்பட்டும் ‘லின்டர்’ மட்டம் வரைக்கும் கட்டி முடித்துள்ளோம். எம்மைப்போன்றுதான் ஏனையவர்களும்; தற்போது எமது வீட்டுத்திட்டம் காடு வளர்ந்துபோய் பார்ப்பாருமில்லை, கேட்பாருமில்லை போன்று கிடக்கின்றது. நாம் படும் பாடுகளை யாரிடம் சொல்வது எனத் தெரியாதுள்ளது. லின்றர் மட்டம் கட்டி முடிக்கப்படும் பட்சத்தில், அடுத்தகட்ட காசு வரும் என சொன்னார்கள் இதுவரையில் யாரும் வரவும் இல்லை; பார்க்கவும் இல்லை; காசு தரவும் இல்லை.

எமது கிராமத்து மக்கள் தினமும் கூலி வேலை செய்து உழைத்து உண்டு வாழ்ந்து வரும் மக்கள். இந்நிலையில் இந்த வீடுத்திட்டத்தைக் கொடுத்து அனைவரும் கடனில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வீடும் கட்டி முடிக்கப்படவில்லை; கடன் தொல்லையும் விட்டபாடில்லை. இந்த வீட்டுத்திட்டத்தை எமது சொந்த வளவிலாவது கட்டப்பட்டிருக்குமாக இருந்தால், அது எமக்குப் பெரும் வாய்ப்பாக அமைந்திருக்கும். மாறாக, ஊரின் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளதால், ஒருவர் மாத்திரம், அங்குபோய் அரை குறையாகவேனும் முடித்துக் கொண்டு, தனியாக ஒரு குடும்பம் மாத்திரம் வாழ முடியாது.

எனவே, கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர்தான் எமக்கு இந்த வீடு வழங்கப்பட்டது. எமக்கு வீடுகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் சஜித், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேல்வியடைந்து விட்டதால்த்தான், அவரால் கொண்டு வரப்பட்ட இந்த வீடுகள் பூரணப்படுத்தப்படாமல் உள்ளதாக பலரும் கதைக்கின்றார்கள். இவ்வாறு சென்றால், எமது நிலைமை என்னாவது? தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் எமக்குப் பிரச்சினையில்லை; எமது வீட்டுத்திட்டத்தை அரசாங்கம் முடித்து பூரணப்படுத்தித் தரவேண்டும்” என்கின்றார் ஜீவராசா ஜெனித்தா.

“எமது கிராமத்தில் கடந்த அரசாங்கம் எமது கிராமத்தைச் சேர்ந்த 40 குடும்பங்களுக்கு 40 வீடுகளைத் தந்தார்கள். தற்போது இரண்டு லெட்சத்திற்குமேல் செலவாகியுள்ளது. ஆனால் அரசாங்கம் ஒருலெட்சம் ரூபா காசை மாத்திரம்தான் தந்துள்ளது. எனினும் அராங்கம் மாறியுள்ளதாக தெரிவித்து வீட்டுத்திட்டத் அரைகுறையாக கிடக்கின்றது. எமக்கு எந்த அரசாங்கம் வந்தாலும் பரவாயில்லை. எம்முடைய வீட்டுத்திட்டத்தை முற்றுமுழுதாக பூரணப்படுத்தி தரவேண்டும்” என்கிறார் வித்தகன்.

இவ்வாறு, ஒவ்வொரு வீடும் தலா 750,000 ரூபாய் ஒதுக்கீட்டில் நிர்மாணிப்பதற்கு திட்டவரைபு உள்ள நிலையில், அதில் ஒரு இலட்சம் மாத்திரம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாலையர்கட்டு கிராம மக்கள் தமது உட்கிடக்கைகளை எடுத்துரைக்கின்றனர்.

இவ்வாறு ‘செமட்டசெவன’ வீட்டுத்திட்டம் அரைகுறையாக இவ்வாறு இருக்க, தற்போதைய அரசாங்கத்தால் ‘உங்களுக்கு வீடு; நாட்டுக்கு எதிர்காலம்’ எனும் தொனிப்பொருளின் கீழ், மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கும் செயற்பாடுகள், 2020 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றன.

மாறி மாறி ஆட்சி செய்கின்ற அரசாங்கங்கள், தங்களுக்கு ஏற்றாற்போல் திட்டங்களை வகுத்து, மக்களை வைத்து அவரவர் முன்னேறிக் கொண்டு செல்கின்றார்களே தவிர, மக்களின் வாழ்க்கையில் ‘சாண் ஏற முழம் சறுக்குவது’ போன்ற நிலைமையே காணப்படுகின்றது.

எனினும் எந்த அரசாங்கம் என்றாயினும் மக்களுக்காக முன்வைக்கப்பட்ட திட்டங்கள் அரைகுறைகாக விட்டு விட்டுப் போகின்ற சந்தர்ப்பத்தில் அதனை பூரணப்படுத்திக் கொடுத்துவிட்டு புதிய செயற்றிட்டங்களை உருவாக்குகின்ற போதுதான் அவை நிலைபேறான தன்மைக்கு வித்திடும் எனலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*