;
Athirady Tamil News

தடுப்பூசி வேலைத்திட்டம் – தொற்று நோயியல் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கை!!சக்கைபோடு போடும் ‘விலை அரசியல்’ !!

0

நாடொன்றில் மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் நகர்வுகளின் தன்மையைப் பொறுத்து, அதற்கான விலையை மக்கள் செலுத்த வேண்டி ஏற்படலாம். அதுபோல, பொருட்களின் விலை ஏற்றஇறக்கங்கள் மீதான ஓர் அரசியலும் உள்ளது. இலங்கை மக்களுக்கு, இவ்விரண்டு விடயங்களிலும் நிறையவே அனுபவங்கள் உள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி முடிவுக்கு வருவதற்கிடையில், நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது. இச்சூழலில், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பல பொருட்களின் விலைகள், உத்தியோகபூர்வமாகவும் உத்தியோகபூர்வமற்ற முறையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இயலாமையின் காரணமாகவோ அல்லது, நடப்பதைப் பார்த்துக் கொள்ளாலாம் என்ற அசட்டு துணிச்சலின் அடிப்படையிலோ, அரசாங்கம் விலையேற்றத்துக்கு இடமளித்திருக்கின்றது.

மக்களுக்கும் அவர்களது வாழ்க்கைச் சுமைக்கும், முன்னுரிமை வழங்காத இந்த ‘எகத்தாளமான’ விலை அதிகரிப்பு, மக்களுக்கு கடந்த பல வருடங்களில் இல்லாத வாழ்வாதார நெருக்கடியையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

ஒரே நாளில், எரிவாயுவின் விலை 1,250 ரூபாயால், (78 சதவீதம்) அதிகரிக்கப்பட்டதுடன் சீமெந்து, கோதுமை மா ஆகியவற்றின் விலைகளும் உயர்த்தப்பட்டன. அதற்கு அடுத்த சில நாள்களுக்குள், பால்மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டது.

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களுக்கே விலை அதிகரிப்பு அவசியம் என, முன்னர் கூறப்பட்டாலும், அதன் பின்னர், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் தட்டுப்பாடு நீங்கியபாடில்லை.

கோதுமை மா, எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்ட மறுகணமே, பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. அல்லது, அதன் நியமநிறைகள் குறைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.

இப்போது, எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்குமாறு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கோரி வருகின்றன. ஆனால், “எரிபொருள் விலையை அதிகரிக்க எதிர்பார்க்கவில்லை” என்று, அரசாங்கம் கூறுகின்றது. இதைப் பார்க்கின்ற போது, இன்னும் சில தினங்களுக்குள், எரிபொருள் விலைகளும் அதிகரிக்கப்படலாம் என்றே, கடந்தகாலச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

ஏனெனில், தினசரி பாவனைப் பொருட்களுக்கு, சில்லறைச் சந்தையில் கடுமையான தட்டுப்பாடு நிலவிய போது, கொழும்பில் இருந்து கொண்டு, “தட்டுப்பாடு எதுவும் இல்லை” எனக் கூறி, அமைச்சர்கள் ‘வாயால் வடை’ சுட்டனர்.

பின்னர், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படப் போகின்றது என அனுமானங்கள் வெளியாகியிருந்த வேளையில், “இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை; மக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்று, அரசாங்கம் கூறியது. இவ்வாறு, சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. எனவே, எரிபொருள் உள்ளடங்கலாக, எந்தப் பொருளின் விலையும் அதிகரிக்காது என்று, அறுதியிட்டுச் சொல்ல முடியாது என்பதே யதார்த்தமாகும்.

சாதாரண மக்களைப் பற்றிய உளப்பூர்வமான சிந்தனையுடன், முறையான திட்டமிடல் ஊடாக, விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாத அரசியலும் அரசியலை ஆட்டுவிக்கும் விலைசார் தீர்மானங்களும், நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் சுமையை அதிகரிக்கச் செய்துள்ளன.

நாம் உண்மையில் கோதுமை, சீனி, பால்மா, எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்புகள் பற்றித்தான், கவனம் செலுத்துகின்றோம். ஆனால், விலை அதிகரிப்புப் பற்றி, பெரிதாக நாம் அலட்டிக் கொள்ளாததும், அடிக்கடி கொள்வனவு செய்யும் (எப்.எம்.சி.ஜி) பொருட்களான சவர்க்காரம், பற்பசை, தேயிலைத்தூள் போன்ற ஏகப்பட்ட பொருட்களின் விலைகள், சம்பந்தப்பட்ட கம்பனிகளால் இரகசியமாக, அடிக்கடி அதிகரிக்கப்படுகின்றன என்பது வேறுகதை!

போகின்ற போக்கைப் பார்த்தால், பொருட்களின் விலை அதிகரிப்பு, எங்கே போய் முடியப் போகின்றது என்று எவருக்கும் தெரியாது. எத்தனை பொருட்களுக்கு, இன்னும் விலை அதிகரிக்கப் போகின்றது என்பதும் அனுமானங்களுக்கு அப்பாற்பட்டது.

நாடு முடக்கப்பட்டிருந்த காலத்தில், பால்மா உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அவசியமான பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக, ஆட்சியாளர்கள் கூறினர். ஆனால், நிறுவனங்கள் அவற்றை விநியோகிக்கவில்லை. சில சில்லறைக்கடை வியாபாரிகள், கொள்ளை இலாபத்துக்காகப் பதுக்கினார்கள்; பின்னர் விலை உயர்த்தப்பட்டது.

ஆகவே, பொருட்களுக்குத் திறந்த சந்தையில், செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, கறுப்புச் சந்தையில் விலை உயர்வை உண்டுபண்ணுவதன் மூலம், ‘என்ன விலைக்காவது பொருள் கிடைத்தால் போதும்’ என்ற மனநிலையை, மக்களிடையே உருவாக்கும், சூட்சுமமான உத்தி பயன்படுத்தப்படுகின்றதா என்ற சந்தேகமும், எழாமல் இல்லை.

இங்கு, மிக உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய விடயம், அரசாங்கத்தின் அசட்டுத் துணிச்சலாகும். அதாவது, ‘என்ன நடந்தாலும் பரவாயில்லை’ என்ற எண்ணத்திலும் மக்களைச் சமாளிக்கலாம் அல்லது, பொருட்படுத்தத் தேவையில்லை என்ற தைரியத்திலும், விலை அதிகரிப்புக்கு அனுமதி அளித்துள்ளமையாகும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பில், சிறுபான்மை மக்களும் சிங்கள மக்களும் எப்போதும் கரிசனை காட்டுகின்றனர். பொது விலை மட்டமும் பொருட்களின் கிடைப்பனவும், இலங்கை அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியன என்பதற்கு, கடந்த காலத்தில் பல அனுபவங்கள் உள்ளன.

சிறிமாவோவின் ஆட்சிக்காலத்தை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடுவார்கள். மூடிய பொருளாரதாரக் கொள்கையில் வெற்றி பெறுவதற்காக, பொருட்களின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டமையும் அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியும், அந்த ஆட்சி மீது மக்கள் வெறுப்படைய, முக்கிய காரணங்களாக அமைந்தன.

இந்தப் பின்னணியில், கடந்த நான்கு தாசப்தங்களாக ஆட்சிக்கு வந்தவர்கள் குறிப்பாக, பெரும்பான்மை மக்களைக் கவர்வதற்கான கருவியாக, பொருட்களின் விலைகளைப் பயன்படுத்தினர்.

தேர்தல் காலத்தில், “நாட்டை அபிவிருத்தி செய்வோம்” போன்ற வாக்குறுதிகளை விட, அரசி, பருப்பு, சீனி, நெத்தலி, எரிபொருள் போன்றவற்றின் விலைக் குறைப்புக்கான பரப்புரைகள், அதிக செல்வாக்குச் செலுத்தின. அது ஓரளவுக்கு, வெற்றியையும் கொடுத்தது.

ஆனால், இதையும் தாண்டி, இத்தனை பொருட்களின் விலைகளை அதிகரிக்க, இன்று இடமளித்ததன் மூலம், மக்களின் அதிருப்தியை அரசாங்கம் சம்பாதித்துக் கொண்டுள்ளமை, சற்று ஆச்சரியமானதுதான். இதனை இரண்டு கோணங்களில் நோக்க முடியும்.

ஒன்று, விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான மாற்று உபாயங்ளையும் அரசியல் தீர்மானங்களையும் எடுக்க முடியாத ஓர் இயலாமைக்குள், அரசாங்கம் மாட்டிக் கொண்டிருக்கிறது.

இரண்டாவது, ‘இப்போதிருக்கின்ற நிலைமையில், என்னதான் விலை அதிகரிப்பை மேற்கொண்டாலும், மக்கள் ஒன்றும் நினைக்க மாட்டார்கள்; அவர்களைச் சமாளிப்பதற்கான வியூகத்தை, தேர்தல் வரும்போது சிந்திக்கலாம்’ என்று, அரசாங்கம் நினைத்திருக்க வேண்டும்.

எது எப்படியிருப்பினும், இம்முறை மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற விலை அதிகரிப்பு என்பது, ஏற்றுக் கொள்ள முடியாததும், ‘மரத்தால் விழுந்த மக்களை, ஏறிமிதிக்கும் மாட்டை’ப் போன்றதாகும்.

ராஜபக்‌ஷர்களின் அரசாங்கம் பற்றிய, அபரிமிதமான எதிர்பார்ப்புகளுடன்தான், 69 இலட்சம் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர். ‘தேசிய பாதுகாப்பு’ போன்ற வழக்கமான விடயங்களுக்கு மேலதிகமாக, பெரும் அபிவிருத்தித் திட்டங்கள், விலைக் குறைப்புகள், மக்களுக்கான நிவாரணங்கள் எனக் கூறியே, ராஜபக்‌ஷர்களும் மக்கள் ஆணையைக் கோரி நின்றனர். ராஜபக்‌ஷர்கள் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையும், பெரும்பான்மையின மக்களுக்கு இருந்தது.

பாராளுமன்றம், ஜனாதிபதி ஆகிய தேர்தல்களில், பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக் கொண்ட பின்னரும் கூட, அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதன் மூலம், அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டாலேயே, நாட்டைச் சிறந்த முறையில் முன்கொண்டு செல்ல முடியும் என்று, ஆளும் கட்சி கூறியது.

அதைத் தொடர்ந்து, “பசில் ராஜபக்‌ஷ அமைச்சராக உள்வந்தால், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டும்” என்று, ஆளுந்தரப்பினர் கூறினர். அதன்படியே, இவையெல்லாம் கனகச்சிதமாக நடந்தேறின.

ஆனால், கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி உட்பட, வேறெந்தப் பிரச்சினையும் நாட்டில் தீர்ந்த மாதிரித் தெரியவில்லை. மாறாக, பிரச்சினைகளும் மக்கள் மீதான சுமைகளும், ‘தலைக்கு மேல் வெள்ளம் போல’ பாய்கின்றன.

ஸ்திரமான அரசியல், பொருளாதார நிலையை ஏற்படுத்துவதில் வல்லவர்களாக, முன்னைய ஆட்சிக்காலங்களில் ராஜபக்‌ஷர்கள் திகழ்ந்தார்கள். ஆனால், இந்த ஆட்சியில், சர்வதேச அழுத்தங்களுக்குப் புறம்பாக, உள்ளக கட்சி முரண்பாடுகளையும் பொருளாதார சவால்களையும் சிக்கல்களையும் ஒருசேர எதிர்கொண்டுள்ளனர்.

இது சகஜமானதுதான். ஆனால், இவற்றை வெற்றிகரமாகச் சமாளிப்பதற்கு, காத்திரமான திட்டங்கள் வகுக்கப்படவில்லை என்பதே, பரவலாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் ஆகும்.

‘தலையிடிக்கு தலையணையை மாற்றுவது போல’, சுகாதார நெருக்கடி காலத்தில், சுகாதார அமைச்சர் மாற்றப்பட்டார். அவ்வாறே, மத்திய வங்கி ஆளுநரும் இப்போது மாற்றப்பட்டுள்ளார்.

ஆனால், பொருட்களின் விலை அதிகரிப்பாலும், பணத் தாள்கள் அச்சிடப்படுவதாலும், பொது விலை மட்டமும் பணவீக்கமும் உள்நாட்டுக்குள்ளேயே அதிகரிக்க இடமளிக்கப்பட்டு இருக்கின்றதே தவிர, ஆறுதலான முன்னேற்றங்கள் எவற்றையும் காணக்கிடைக்கவில்லை; இந்நிலை மாற வேண்டும்.

இவ்வாறிருக்க, தமது போக்குகள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்ற விடயத்தை, தற்போது அரசாங்க மேலிடங்கள், சற்று உணரத் தலைப்பட்டிருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. அது உண்மையாக இருந்தால், அதனை அரசாங்கம் செயலில் வெளிக்காட்ட வேண்டும்.

‘மக்களுக்காகவே ஆட்சி; ஆட்சிக்காக மக்களல்ல’ என்ற அடிப்படைத் தத்துவத்தை, தேர்தல் காலத்தில் மட்டுமல்ல, ஆட்சிக் காலத்திலும் புரிந்து செயற்பட்டால், நல்லது நடக்க வாய்ப்பிருக்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.