;
Athirady Tamil News

செனேட்டர் ஏ.எம்.ஏ. அஸீஸ்: ஓர் உள்ளுணர்வுப் பகுப்பாய்வு !! (கட்டுரை)

0

செனேட்டர் அஸீஸை, 2021 ஒக்டோபர் மாதம் நான்காம் திகதி நிகழ்ந்த, அன்னாரின் 110ஆவது ஜனன தினத்தை நினைவுகூரும் வேளையில் இம்முஸ்லிம் தூரதரிசன மாமனிதர் பற்றிய பல நினைவுகள், சிந்தனைக்கு வருகின்றன.

பெரும் புத்திசாதுரியம் நிறைந்த வல்லுநனராகவும் திறமையான நிர்வாகியாகவும் புலமை ஆற்றல் மிகுந்தோனாகவும் சிறந்த கல்விமானாகவும் திகழ்ந்த அன்னார், நாட்டுக்கும் மக்களுக்கும் குறிப்பாக, முஸ்லிம் சமுதாயத்துக்கு ஆற்றியுள்ள சேவைகள் சேமமாக ஆவணப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

மனித வாழ்க்கையின் வளர்ச்சிப் பாதையில் சந்திக்கின்ற சவால்களை வெற்றிகொள்கின்ற ஊக்கமிகு உதாரணங்கள் அன்னாரின் வாழ்க்கையில் காணக்கிடைக்கின்றன.

செனேட்டர் அஸீஸூடனான என்னுடைய இணைப்பு, என்னுடைய 16ஆவது அகவையின்போது அடையப்பெற்றேன். என்னுடைய ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியில் கற்ற காலம் அது. செனேட்டர் அஸீஸூம் இவ்வறிவகத்தின் ஆதி சீடன் ஆவார்.

யாழ்ப்பாணம், வண்ணார் பண்ணையில் அஸீஸ் அவதரித்தார்கள். அது போன்று நானும் அங்கேயே பிறந்தேன். அறிவாளிகள் அமர்ந்திருந்த செயலமர்வுகளில், ஆறுமுகநாவலரின் போதனைகள் பற்றி அஸீஸ் ஆற்றிய பேருரைகள் யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள், பாரம்பரிய பண்பாடுகள் சம்பிரதாயங்கள் தொடர்பாக அவர் கொண்டிருந்த ஆழ்ந்த அறிவு நம்பமுடியாதவாறு வியப்பை நல்கின.

உயர் பண்புடன், மாட்சிமை நிறைந்த பின்னணியைக் கொண்டிருந்த யாழ்ப்பாண முஸ்லிமான அஸீஸூக்கு இப்புலமைகள் இயற்கையாகவே அமைந்திருந்தன.

செனேட்டா அஸீஸ், யாழ்ப்பாணத்தில் பிரபல இரண்டு இந்துக் கல்லூரிகளான வைத்திஸ்வரா வித்தியாலயம், யாழ். இந்துக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் கற்று, பொலிவுடன் பிரகாசித்தவராகத் திகழ்ந்தார். அவர் இக்கல்லூரிகள் பற்றிப் பெருமிதம் கொண்டிருந்ததுடன், அங்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியப் பெருந்தகைகளின் வழிகாட்டல்கள், பயிற்சிகள் காரணமாக தமிழ் மொழியிலும் இந்து சமயத்திலும் சிறந்து விளங்கினார்.

வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் தன்னுடைய கற்கைக் காலப்பகுதியை இவ்வாறு கணித்துள்ளார்.“ இங்கே நான் கற்ற காலப்பகுதி, 1921 மாசி மாதம் தொடக்கம் 1923 ஆனி மாதம் வரையிலுமான காலப்பகுதி அளவில் குறைந்திருந்தபோதிலும் தரத்தில் நிறைந்திருந்தது. காலாகாலமாக உலகம் முழுவதிலும் வியாபித்து விளங்கும் தொன்மையும் தூய்மையும் நிறைந்த இனிமைத் தமிழ் மொழியில், கண்ணியமும் கருத்தாழமும் நிறைந்த தெய்வபக்திப் பாடல்கள் எனக்கு அறிமுகமானது வித்தியாலயத்திலேயே”.

அஸீஸ், 1929ஆம் ஆண்டில் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு உள்வாங்கப்பட்டார். அங்கே, வரலாற்றுத் துறையில் நிதர்சனம் செய்து காண்பிப்பவராகத் திகழ்ந்ததுடன் 1933 இல் லண்டன் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் சிறப்புப் பட்டம் பெற்று அரச புலமைப் பரிசில் வழங்கப்பட்டு கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்துக்குப் பட்டப்பின் படிப்பைத் தொடரச் சென்ற அவர், இலங்கைச் சிவில் சேவைப் பரீட்சையில் சித்தி அடைந்த காரணத்தால், சிறிது காலம் கழித்து இலங்கைக்குத் திரும்பினார். அந்தக் காலத்தில் அதி உன்னதமாகவும் பெரிதும் மதித்தும் போற்றப்பட்ட சேவையில் இணைக்கப்பட்ட முதலாவது முஸ்லிம் அஸீஸ் ஆவார்.

1959 இல் என்னுடைய பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட நான், என்னுடைய மரியாதையைச் செலுத்துவதற்கு அஸீஸ் அவர்களைச் சந்திக்கச் சென்றபோது, அவர் என்னைச் ஸாஹிராவில் ஆசிரியராக இணையுமாறு ஆலோசனை வழங்கினார். நான் சிவில் சேவைப் பரீட்சைக்குத் தோன்ற இருப்பதால், அதற்கு ஆயத்தப்படுத்த ஓய்வு தேவை என்றேன். கற்பித்துக்கொண்டே கற்குமாறு ஆசி வழங்கினார். 1960 பங்குனி மாதத்தில் சிவில் சேவைப் பரீட்சையில் தேறிய எட்டுப் பேரில் நானும் ஒருவன் ஆனேன். தன்னுடைய கல்லூரி மாணவனின் சாதனையையிட்டு அஸீஸ், அடைந்த அளவிலா ஆனந்தத்தை வார்த்தைகளால் வடிக்க முடியாது. அன்பு ஊற்றாகவும் இரக்க சுபாவமானவரான இந்த மாமனிதருடன் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டதையும் அன்னாருடன் பழகியதையும் பெரும் பாக்கியமாகவே பார்க்கின்றேன்.

இச்சந்தர்ப்பத்தில் பார்புகழ் மெய்யியல் வித்தகரும் நோபல் பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்ட பேட்ரம் ரசலின் எழுத்துகள் என்னுடைய நினைவுக்கு வருகின்றன. ‘வாழ்க்கையில் அதிமுக்கிய பெறுமானங்கள் பணத்தால் அளவு செய்யப்படுவதில்லை. காணி, பூமி, வீடுமனைகள், வங்கிவைப்புகள் அல்ல அப்பெறுமானங்கள்; மாறாக, அப்பெறுமானங்கள், அன்பு, நம்பிக்கை, இரக்க சுபாவம், நம்பகத்தன்மை ஆகியவை ஆகும். செனேட்டர் அஸீஸ், இலங்கையில் அனைத்துச் சமூகங்களுக்கிடையிலும் அன்பையும் பரஸ்பர நம்பிக்கையையும் கட்டி எழுப்பிய தலைவராவார்.

அன்னார் எம்மையும் இவ்வுலகத்தையும் விட்டுப் பிரியும் வரையிலும் நான் அவருடன் தொடர்ச்சியான தொடர்பில் இருந்தேன். ஆங்கிலம், தமிழ் இலக்கியத்தில் அவர் கொண்டிருந்த அளப்பரிய புலமையால் நான் கவரப்பட்டேன்.

ஸாஹிராவின் பழைய மாணவர்களான ‘தினகரன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரான காலஞ்சென்ற சிவகுருநாதன், காலஞ்சென்ற வாழ்நாள் பேராசிரியர் சிவத்தம்பி, நான் ஆகியோர் அஸீஸின் இல்லத்துக்குச் சென்று, கல்வி தொடர்பான கருத்துகளைப் பரிமாறிக்கொள்வோம். அறிவுப் பரிமாற்றங்களில் சில அபிப்பிராய பேதங்கள் எழுந்தால், அவற்றைச் சுமூகமாக ஏற்றுக்கொள்வோம். எம்முடைய உரையாடல்களின்போது, அவருடைய வாழ்க்கைத் துணைவியாரும் அருமை மகளும் உபசரிக்கத் தவறியதில்லை. ரமழான் மாதத்தில் வழங்கப்பட்ட வட்டிலப்பத்தை இன்னும் மறக்கவில்லை. இஸ்லாமிய இலக்கியம், அரபுத்தமிழ், இஸ்லாமிய கலாசாரப் பண்பாடுகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு அன்னார் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இலங்கை முஸ்லிகளைக் கல்வித்துறையில் மேம்படுத்தும் நோக்கத்துடன் பேரும் புகழும் அதிகாரமும் ஒருங்கிணையப்பெற்ற அரச சிவில் சேவையைத் தியாகம் செய்த, மனித மாணிக்கம் அஸீஸ் ஆவார். இத்தியாகம் போன்ற வேறு நிகழ்வு இலங்கை வரலாற்றில் நிகழவில்லை.

சிவில் சேவையில் இணைந்த முதலாவது முஸ்லிமான அவருக்கு அரச சேவையில் அதிசிறந்த எதிர்காலம் இருந்தது. ஆனால், தன்னுடைய சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்கும், கலாசார மறுமலர்ச்சிக்குமான அர்ப்பணிப்பு அவரிடம் மேலோங்கி இருந்தமையால், ஸாஹிராவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

அவருடைய இத்தீர்மானம், இலங்கையின் பல்கலாசார சமூகங்கள் போன்று முஸ்லிம் சமூகமும் உயரவேண்டுமென்ற உண்மையானதும் உத்தமமுமான அபிலாஷையுடன் எடுக்கப்பட்டதால் அன்னார் முஸ்லிம் சமூகத்தின் தலைவராகவும் உயர்ந்தார்.

13 வருடங்கள் நீடித்த அவருடைய அதிபர் காலப் பகுதியில், கல்லூரி உயர்ந்த கல்வித்தரத்தை எட்டியது. பல்கலைக்கழகத்தில் மாணவர்களில் அனுமதியும் அதிகரித்தது. அனைத்து இனங்களையும் சேர்ந்த மாணவர்களின் தனித்தனிக் கல்வி தகைமைகளுக்கு அமைந்தவாறு அவர்களை ஒருங்கிணைத்து, அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் முயற்சிசெய்து ஸாஹிராவின் உயர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். இதற்கு ஓர் உதாரணமாக நான் உள்ளேன்.

எவ்வித இனபேதமும் கலாசார வேறுபாடுமில்லாத ஒரு தமிழனான நான், அஸீஸ் அவர்களை அனைத்து சமூகங்களுக்குமான ஒரு விவேகமான இராஜதந்திரி ஆகவும் ஒரு புலமை மிகு கல்வி வித்தகனாகவும் திகழ்ந்தார் எனக் குறிப்பிட்டுக் கொள்வதில் பெ௫மை அடைகின்றேன்.

ஒரு முன்னோடிக் கல்விமானாக அவர் ஏனைய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களைச் சேர்த்தணைத்து ஊக்குவித்தார். திருக்குறள், திருவாசகம், கம்பராமாயணம், புறநானூறு, சிலப்பதிகாரம் ஆகிய தமிழ்ப் பெரும் காப்பியங்களை கௌரவித்துப் பாரறியச் செய்ய, பலப்பல கூட்ட அமர்வுகள் ஏற்பாடு செய்துள்ளார். செனேட்டர் அஸீஸ், மனிதர்களில் ஒரு மாணிக்கம். எனக்கு வழிகாட்டியாகவும் நம்பத்தகு நண்பனாகவும் விளங்கிய பெருந்தகைக்கு என்னுடைய சமர்ப்பணம் இது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − six =

*