;
Athirady Tamil News

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ கவனத்தை திசைதிருப்பும் செயலணி !! (கட்டுரை)

0

நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கிறது. இன்றைய வேகத்தில், விலைவாசி ஏறிய ஒரு காலம், இதற்கு முன்னர் வரலாற்றில் ஒருபோதும் இருந்ததா என்பது சந்தேகமே. இருந்தால், அது 1972- 1974 கால கட்டத்தில் மட்டுமே!

தற்போது, இலங்கையில் சாதாரண மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு, நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது. பல அத்தியாவசியப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்த நிலைமையைச் சமாளிக்க முடியாமல் அரசாங்கம் திணறுகிறது.

இதற்கிடையில் தான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஒக்டோபர் 26ஆம் திகதி ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற எண்ணக்கருவை நடைமுறைப்படுத்துவதற்காக, ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்து இருக்கிறார்.

அந்தச் செயலணியின் தலைவராக, கடும் இனவாதியும் சர்ச்சைக்குரிய பிக்குவுமான கலகொடஅத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். 13 உறுப்பினர்களைக் கொண்ட செயலணியில் ஒன்பது சிங்களவர்களும் நான்கு முஸ்லிம்களும் உள்ளடக்கப்பட்டு உள்ளனர்.

அரசியலமைப்பின்படி சட்டத்தை நிலைநாட்டுவதற்காகவும் எந்தவொரு பிரஜையும் இன, மத, சாதி அல்லது வேறெந்த அடிப்படையிலும் பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படுவதை தடுப்பதற்காகவும், தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் அங்கிகரிக்கப்பட்ட மனிதநேய பண்பாடுகளை உறுதிப்படுத்துவதற்காகவும் சகல பிரஜைகளும் சட்டத்தின் முன் சமமாக மதிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காகவுமே இந்தச் செயலணி நியமிக்கப்பட்டுள்ளதாக அது தொடர்பான வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில், ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற சித்தாந்தத்தை அமலாக்குவதைப் பற்றி ஆராய்ந்து, அதற்கான சட்ட வரைவைத் தயாரிப்பது இந்தச் செயலணியின் பொறுப்பாகும். ‘உங்கள் அறிவு, ஞானம், திறமை, விசுவாசம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்து, உங்களை இந்தச் செயலணிக்கு நியமிக்கிறேன்’ என, ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மேலோட்டமாக பார்க்கும் போது, இந்தச் செயலணியின் நோக்கம் மிகவும் உன்னதமானதாகவே தெரிகிறது. வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள அதன் நோக்கங்களை, எவராலும் நிராகரிக்க முடியாது. ஆனால், செயலணி நியமிக்கப்பட்ட நேரம், அதன் உள்ளடக்கம், பணிகள் ஆகியவற்றைப் பார்க்கும் போது, பல சந்தேகங்கள் ஏற்படுகின்றன.

இன்று நாட்டில், சட்டத்தின் முன் சகலரும் சமமாக மதிக்கப்படுவதில்லை என்பது உண்மையே. ஒர் ஏழை எதற்காகவாவது குற்றஞ்சாட்டப்பட்டால், அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதிலும் குற்றஞ்சாட்டப்பட்ட செல்வந்தர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதிலும் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.

ஏழை, பொலிஸ் நிலையத்துக்கு இழுத்துச் செல்லப்படுவார்; செல்வந்தர் அழைத்துச் செல்லப்படுவார். செல்வந்தர் அல்லது அதிகாரம் உள்ளவர்கள், “இன்று என்னால் பொலிஸ் நிலையத்துக்கு வர முடியாது; மற்றொரு நாளில் வருகிறேன்” என்று கூற முடியும். ஆனால், ஏழைக்கு அது முடியாது. குற்றஞ்சாட்டப்பட்ட ஏழை தாக்கப்படுவார். ஆனால், சிலவேளை செல்வந்தரால், பொலிஸார் தான் தாக்கப்படுவார்.

அரசியல்வாதிகளும் உயரதிகாரிகளும் நாட்டில் கோடிக் கணக்கான ரூபாய் பெறுமதியான பொதுச் சொத்துகளை அபகரிப்பது தொடர்பான, ஆயிரக் கணக்கான சம்பவங்களைக் கடந்த பல தசாப்தங்களாக அறிகிறோம். ஆனால், எத்தனை பெரும் புள்ளிகள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்? ஒரே நாட்டில், ஒரே சட்டம் இல்லை.

இது ஒரு புறம். மறுபுறத்தில், அரச ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் சட்டம் ஒரே விதமாகச் செயற்படுவதில்லை. ஆளும் கட்சியின் ஆதரவாளர்களுக்கு எதிரான வழக்குகள், சிலவேளை எவ்வித காரணமும் காட்டாது வாபஸ் பெறப்படுகின்றன. குறிப்பாக, சிறுபான்மையினர் பாதிக்கப்பட்ட சம்பவங்களில், படையினர் அல்லது பிக்குகள் சம்பந்தப்பட்டு இருந்தால், அவர்களைத் தொடக்கூட, சட்டத்தின் கை சிலவேளைகளில் எட்டாது.

இவ்வாறு, சட்டம் பல்வேறு தரப்பினருக்கு பல்வேறு விதமாகச் செயற்படுவதைப் பற்றி எத்தனையோ உதாரணங்களைக் காட்டலாம். ஆனால், ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்று கூறும் போது, எவருக்கும் இந்த விடயங்கள் நினைவுக்கு வருவதில்லை. நினைவுக்கு வருவது, முஸ்லிம்களின் மத்ரஸாக்கள், முஸ்லிம் தனியார் சட்டத்தின் கீழான காதி நீதிமன்றம், பலதாரமணம் போன்றவையே ஆகும்.

தனியார் சட்டங்கள், வேறு சில சமூகங்களுக்கும் இருக்கின்றன. யாழ்ப்பாணத் தமிழர்களின் தேசவழமை, கண்டி தனியார் சட்டம் போன்றவையாகும். அதேபோல், பௌத்தர்களின் விகாரைகள், விகாரை நிலங்கள் தொடர்பானதொரு சட்டமும் இருக்கிறது. அது, தனியார் சட்டமாகக் கருதப்படாவிட்டாலும், அதுவும் ஒரு சமூகத்துக்காக மட்டும் உள்ள சட்டமாகும். ஆனால், ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்று கூறும் போது, இவற்றில் எதுவும் நினைவுக்கு வருவதில்லை.

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற சுலோகத்தை அறிமுகப்படுத்தியவர் ஞானசார தேரரே. 2012ஆம் ஆண்டு, அவர் முஸ்லிம் விரோத பிரசாரங்களை ஆரம்பித்த போதே, அதை அறிமுகப்படுத்தினார். எனவே, இச்சுலோகமானது முஸ்லிம் விரோதத்தின் சின்னமாகவே, நாட்டு மக்கள் மனதில் பதியப்பட்டுள்ளது. அதனால் தான், இச்சுலோகத்தைப் பற்றிக் கூறும் போது, நாட்டில் இடம்பெறும் மாபெரும் பாகுபாடுகளோ அல்லது, ஏனைய தனியார் சட்டங்களோ நினைவுக்கு வருவதில்லை.

இந்தச் செயலணி நியமிக்கப்பட்ட நேரமும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும். பொருளாதார நெருக்கடியின் காரணமாக, அரசாங்கத்தின் ஜனரஞ்சகத்தன்மை வெகுவாகக் குறைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா, கடந்த மார்ச் மாதமே கூறியிருந்தார். இவ்வாறு, செல்வாக்குச் சரிந்து வரும் நிலையில் தான், கடந்த வருடம் செப்டெம்பர் மாதம், மாடறுப்பை அமைச்சரவை தடை செய்யத் தீர்மானித்தது. அதன்படி, தேவையான சட்டங்களின் திருத்தங்கள் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி, அமைச்சரவையால் அங்கிகரிக்கப்பட்டன.

முஸ்லிம்களைக் குறிவைத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அப்போது பலர் கூறினர் அத்தோடு, செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி, ஞானசார தேரர் ‘ஹிரு’ தொலைக்காட்சியில் தோன்றி, மிக மோசமான முறையில் முஸ்லிம்களின் மத நம்பிக்கைகளை பரிகசித்தார். சில நாள்களுக்குப் பின்னர், அரச தொலைக்காட்சியான ‘ரூபவாஹினி’யும் பேட்டிக்காக அழைத்தது. அப்போதும் அவர், அந்த விஷத்தைக் கக்கினார்.

“அரசாங்கத்தை மக்கள் வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள்” என்று, அடுக்கடுக்காக அரசாங்கத்தின் அமைச்சர்களே கூறும் பின்னணியிலேயே, நன்கு திட்டமிடப்பட்ட வகையில், முஸ்லிம்களைச் சீண்டும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் ஓர் அம்சமாகவே, இந்தச் செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.

அதாவது, நாடு எதிர்நோக்கி இருக்கும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக, நாட்டில் இன உணர்வுகளைத் தூண்ட வேண்டிய ஒரு தேவை, அரசாங்கத்துக்கு இருக்கிறது போலும். பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாததால், மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதே இதன் நோக்கமாகும்.

நாட்டுக்கு புதிய அரசியலமைப்பை வரைவதற்காகவென, அமைச்சரவையால் சிரேஷ்ட சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவின் தலைமையில் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவொன்று, 2020ஆம் ஆண்டு செப்டெம்பர் மூன்றாம் திகதி நியமிக்கப்பட்டது.

அதேவேளை, நீதி அமைச்சர் அலி சப்ரி, முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களைத் திருத்தி அமைக்க, நடவடிக்கை எடுத்து வருகிறார். அவ்வாறு இருக்க, இந்தச் செயலணி எதற்காக?

நாட்டில், ஒரே சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக, நீதி அமைச்சால் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவுகளை ஆராய்ந்து, பொருத்தமான திருத்தங்களை அவற்றில் சேர்ப்பதும் இந்தச் செயலணியின் பணிகளாகும். அக்கடமையை நிறைவேற்றுவதற்கான சட்டத்துறை தேர்ச்சி, இந்தச் செயலணியின் தலைவரான ஞானசார தேரரிடமும் அதன் உறுப்பினர்களிடமும் இருக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகும்.

காதி நீதிமன்றங்களில் தீர்ப்பு வழங்குவதில், அநீதி இடம்பெறுகிறது என்பது ஞானசார தேரர் போன்றோர் முன்வைக்கும் குற்றச்சாட்டாகும். அது முற்றிலும் மறுக்கக்கூடியதல்ல. எனவே, முஸ்லிம் தனியார் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான முஸ்லிம்களின் நிலைப்பாடாகும்.

ஆனால், குறைப்பாடு இருப்பதால், அந்த நீதி முறையையே ஒழிக்க வேண்டுமா? தாம் ஒரு குற்றவாளியைத் தப்பிக்கச் செய்வதற்காக வழங்கிய தீர்ப்பொன்றுக்காக, பிரதம நீதியரசர் ஒருவர், பின்னர் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்ட நாடு இது. அதற்காக, இலங்கையில் நீதிமன்றங்களை மூடிவிட வேண்டுமா?

எதிர்க்கட்சிகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பலர், இந்தச் செயலணிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஞானசார தேரர், பல முறை சட்டத்தை மீறி, நீதிமன்றத்தையும் அவமதித்த ஒருவர் என்பதும் அவர்கள் சுட்டிக் காட்டும் ஒரு காரணமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 6 =

*