;
Athirady Tamil News

அடுத்த கட்டங்களைத் தீர்மானிக்கும் ‘குத்து வெட்டுகள்’ !! (கட்டுரை)

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தன்னுடைய நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி, கல்வி இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த சுசில் பிரேமஜயந்தவை, செவ்வாய்க்கிழமை (04/01) பதவி நீக்கினார்.

சில தினங்களுக்கு முன்னர், சந்தைக்குச் சென்ற சுசில் பிரேமஜயந்த, பொருட்களின் விலை உயர்வு தொடர்பில், ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்திருந்தார். அதைக் காரணம் காட்டியே, அவர் பதவி நீக்கப்பட்டிருக்கிறார்.

சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் ரவூப் ஹக்கீமும் மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் அநுர பண்டாரநாயக்கவும் ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி, அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறி, அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்தார்கள் என்கிற விடயமே, அப்போதும் பதவி நீக்கங்களுக்கான காரணமாக சொல்லப்பட்டிருக்கின்றது.

69 இலட்சம் இலங்கையர்களின் வாக்குகளைப் பெற்றே ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்கள். ‘பௌத்தத்தின் காவலன்’ என்ற அறிவிப்போடு ஜனாதிபதி பதவியை ஏற்ற கோட்டாபய, தன்னுடைய இரண்டு ஆண்டுகால பதவிக் காலத்துக்குள்ளேயே, ‘தோல்விகரமான தலைவர்’ என்கிற விமர்சனங்களை சந்திக்கத் தொடங்கிவிட்டார். அதுவும், அவரின் விசுவாசிகளாக, அவரது வெற்றிக்காகக் கடந்த காலத்தில் தொடர்ச்சியாக, இனவாதத் தீயை எழுப்பிய விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார போன்றோராலேயே விமர்சிக்கப்படுகிறார்.

அமெரிக்காவுடனான ஒப்பந்தமொன்றை, இரவோடு இரவாக அமைச்சரவைக்கு அறிவிக்காமல் மேற்கொண்ட ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, அமைச்சரவை அங்கத்தவர்களான அவர்கள் மூவரும் உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள்.

அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாடுகளின் குளறுபடி, தோல்வி என்பவற்றின் தொடர்ச்சியாகவே ஆளுங்கட்சியின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்காளிக் கட்சிகளும், தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கோட்டாவோ மஹிந்தவோ, ராஜபக்‌ஷ குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களோ மீண்டும் ஆட்சிக்கு வரும் போது, இவ்வாறான நெருக்கடியைச் சந்திப்போம் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. குறைந்தது பத்து ஆண்டுகளுக்காவது யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத ஆட்சியை செலுத்த வேண்டும் என்று ராஜபக்‌ஷர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு, அவர்களின் ஆட்சி ஆரம்பித்த ஒரு சில மாதங்களுக்கு உள்ளேயே ஆட்டங்காணத் தொடங்கி விட்டது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியை, பொதுத் தேர்தலில் ராஜபக்‌ஷர்கள் பெற்றுக்கொண்டார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருந்த முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் தவிர்ந்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் எந்தவித நிபந்தனைகளும் இன்றி ராஜபக்‌ஷர்களுக்கு ஆதரவளித்தும் வருகின்றனர்.

பிரதான எதிர்க்கட்சியோ, அரசாங்கத்துக்கு எதிராகப் பாரிய மக்கள் திரட்சியை ஏற்படுத்தும் போராட்டங்களை பெரியளவில் நடத்தவில்லை. ஒரேயொரு போராட்டத்தை மாத்திரமே, பாரிய ஏற்பாட்டோடு நடத்தியிருக்கின்றது. அந்தப் போராட்டத்தில் அரசாங்கத்தின் மீதான அதிருப்தியால், மக்களே தன்னெழுச்சியாகப் பங்கெடுத்திருந்தார்கள்.

அரசாங்கத்தின் தோல்விகரமான கொள்கைகளால் நாடு வங்குரோத்தை அடைந்துவிட்ட நிலையில், அவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான கொள்கைகளோடு மக்களிடம் செல்ல வேண்டும். ஆனால், அந்த நிலையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தத் தவறியிருக்கின்றன.

அவ்வாறான நிலையில்தான், எதிர்க்கட்சி ஆற்ற வேண்டிய வேலைகளை, ஆளுங்கட்சியின் அமைச்சர்களும் பங்காளிகளும் செய்யத் தொடங்கியுள்ளார்கள். அரசாங்கத்தின் தோல்வி குறித்தும் புதிய நம்பிக்கையான ஆட்சிக்கான கனவு குறித்தும், அவர்கள் பேசுகிறார்கள். இவையெல்லாம், ராஜபக்‌ஷர்கள் மீதான அவநம்பிக்கையின் செய்தியாக, தொடர்ச்சியாக தென்னிலங்கை மக்களிடம் சேர்ப்பிக்கப்படுகின்றன. இதனால், ராஜபக்‌ஷர்கள் கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

எதிர்க்கட்சியின் விமர்சனங்களை ஆளுங்கட்சியொன்று எதிர்கொள்வது இயல்பானது. அதனைச் சமாளித்துவிட முடியும். ஆனால், ஆளுங்கட்சிக்குள் இருந்தே, ஆட்சிக்கு எதிராக எழும் விமர்சனங்கள், ஆட்சியைத் தோற்கடித்துவிடும். அதனைத் தடுப்பதற்காகவே, சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கப்பட்டிருக்கிறார். இது மற்றவர்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தும் என்று கோட்டா நினைக்கிறார்.

ஆனால், கோட்டாவின் இந்தச் செயற்பாடு குறித்து, சிரேஷ்ட அமைச்சர்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். டலஸ் அழகப்பெரும, தினேஷ் குணவர்தன போன்றோர், சுசில் பிரேமஜயந்த நீக்கத்தைத் தாங்கள் ரசிக்கவில்லை என்பதை ஊடகங்களின் முன்நிலையில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக, அவரின் பதவி நீக்கம், அமைச்சரவைக்கு அறிவிக்கப்படாமல் ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்டிருப்பதாக டலஸ் அழகப்பெரும கூறியிருக்கிறார்.

இந்தத் தருணத்துக்காக காத்துக்கொண்டிருந்த மைத்திரிபால சிறிசேன, இதன்மூலம் ராஜபக்‌ஷர்களின் முதல் தேர்தல் தோல்வி நிகழ்ந்திருப்பதாக நையாண்டி செய்திருக்கிறார். அத்தோடு, 19ஆவது திருத்தம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றி, மக்கள் இப்போதாவது அறிந்து கொள்வார்கள் என்றும் பேசியிருக்கிறார். 20ஆவது திருத்தத்தின் மூலம் அதிகாரங்கள் அனைத்தையும் ஜனாதிபதியிடம் கையளிக்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதனாலேயே யாருக்கும் அறிவிக்காமல், அமைச்சர்களை ஜனாதிபதியால் பதவி நீக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டு, தன்னுடைய ஆட்சிக்காலத்தின் சிறப்பு பற்றி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.

அரசாங்கத்தின் பங்காளியாக இருந்தாலும், சுதந்திரக் கட்சிக்கான மதிப்பு போதுமான அளவுக்கு அளிக்கப்படவில்லை என்பது மைத்திரி, தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் கோபம். இப்போது, அந்தக் கோபத்தைத் தீர்க்கும் கட்டம் வந்திருப்பதாக நினைக்கிறார்கள். அதன்மூலம், ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான பொதுக் கூட்டணியொன்றுக்கான அத்திவாரத்தைப் போட நினைக்கிறார்கள்.

ராஜபக்‌ஷர்களின் ஆட்சிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் பொது கூட்டின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்கிற உரையாடல்கள் தென் இலங்கையில் எழுந்திருக்கின்ற நிலையில், ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக, ஏற்கெனவே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக இருந்த ஜனாதிபதியான மைத்திரி, தற்போதும் அந்த இடத்தை அடைவது குறித்து ஆசையோடும் ஆர்வத்தோடும் இருக்கிறார்.

இதனை அறிந்துதான், மைத்திரிக்கு எதிராக மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்டவர்களை ராஜபக்‌ஷர்கள் களமிறக்கி இருந்தனர். மைத்திரியின் ஆட்சிக்கால குறைபாடுகள் பற்றி, மஹிந்தானந்த பாராளுமன்றத்துக்குள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனையடுத்து சில நாள்கள் மைத்திரியும் மஹிந்தானந்தவும் பாராளுமன்றத்துக்குள் மோதிக்கொள்ள வேண்டி வந்தது. இவ்வாறான நிலைகளால்தான், ராஜபக்‌ஷர்களின் முதல் தேர்தல் தோல்வி என்று சுசில் பிரேமஜயந்தவின் நீக்கத்தை மைத்திரி விளித்திருக்கிறார்.

ராஜபக்‌ஷ குடும்பத்துக்குள்ளேயே பாரம்பரிய அரசியல்வாதியான மஹிந்தவுக்கும், திடீர் அரசியல்வாதிகளான கோட்டா, பசில் உள்ளிட்டோருக்கும் இடையில் முரண்பாடுகள் பாரியளவில் அதிகரித்திருக்கின்றன.

மஹிந்தவை பிரதமர் பதவியில் இருந்து அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அமர வேண்டும் என்கிற எண்ணத்தில் பசில் ஏற்கெனவே காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டார். ஏற்கெனவே, மஹிந்தவிடம் இருந்து நிதி அமைச்சைப் பெற்ற அவர், இப்போது பிரதமர் பதவியைப் பிடுங்க நினைக்கிறார். இதனால், பொதுஜன பெரமுனவுக்குள்ளேயே அவர் குழு அரசியலை செய்யத் தொடங்கிவிட்டார்.

ஏற்கெனவே, மஹிந்த ஆதரவு அரசியல்வாதிகளை கோட்டா தன்னுடைய அமைச்சரவைக்குள் பெரியளவில் மதிப்பதில்லை. அப்படியான நிலையில், பசிலும் அவ்வாறான ஆட்டமொன்றை ஆடத்தொடங்கியிருப்பது, பாரம்பரிய அரசியல்வாதியான மஹிந்தவுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் பிடிக்கவில்லை.

அப்படியான தருணத்தில், பாரம்பரிய அரசியல்வாதிகளான சிரேஷ்ட அரசியல்வாதிகள், அமைச்சர்கள் ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தக் கூடாது என்பதற்காகவுமே சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கம் நிகழ்ந்திருக்கிறது. இவ்வாறான பின்னணிகளை நோக்கினால், ஆளுங்கட்சிக்குள் இனி நிகழப்போகும் குத்து வெட்டுகளே, இலங்கை அரசியலின் அடுத்த கட்டங்களைத் தீர்மானிப்பவையாக அமையும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × three =

*