;
Athirady Tamil News

அரசில் இருந்து ஏன் மதம் பிரிக்கப்பட வேண்டும்? – கல்கந்தே தம்மாநந்த தேரர்!! (கட்டுரை)

0

கண்ணியத்திற்குரிய கல்கந்தே தம்மாநந்த தேரர் விடிவெள்ளி பத்திரிகையில் பத்தி ஒன்றுக்காக தெரிவித்த கருத்துக்கள்.

அரசில் இருந்து ஏன் மதம் பிரிக்கப்பட வேண்டும்?

அரசின் பணியானது அடிப்படையில் உலகாயத நோக்கு கொண்டதாகும். நாட்டிற்குத் தேவையான கொள்கைகளை வகுத்தலும் நடைமுறைப் படுத்தலும், மக்களின் உலகாயத தேவைகளான நல்ல கல்வி, சுகாதாரம், பொருளாதாரப் பாதுகாப்பு, சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்படுவதை உறுதி செய்தல் என்பன ஓர் அரசின் கடமையாகும்.

நிகழ்கால சூழ்நிலைகளை கருத்திலெடுத்து இவை தொடர்பாக தர்க்கரீதியான தீர்மானங்களை அரசு மேற்கொள்ளும்.
மதங்களின் பணி இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. பிரபலமான மதங்களின் நம்பிக்கை வழிபாடுகள் அனைத்தும் விசுவாசித்தலையும் பின்பற்றுதலையும் அடிப்படையாகக் கொண்டே கட்டியெழுப்பப் பட்டுள்ளன. அங்கு பகுத்தறிவு சார்ந்த சிந்தனைக்கு மிகவும் குறைவான இடமே வழங்கப்படுகிறது.

மதத்தின் அடிப்படைத் தத்துவங்களூடாக மிகவும் முன்னேற்றமான அரசாட்சி மாதிரியொன்றை உருவாக்கத் தேவையான அடிப்படைகளை வகுத்துக் கொள்ள முடியும் என்பது உண்மையே. ஆயினும் இன்றைய நிறுவனமயப்பட்ட மதங்கள் அவற்றின் அடிப்படை சிந்தனைகளில் இருந்து விலகி அம் மத நிறுவனங்களின் இருப்பு, நிறுவன உறுப்பினர்களின் நலன்கள் மற்றும் அவற்றுக்கு ஆதரவளிப்பவர்களின் நலன்களை பாதுகாப்தற்காகவே இயங்குகின்றன. மேலும், அரசியல் அதிகாரத்தை பெறுவதும் பொருளாதார வளங்களை அடைந்து கொள்வதும் இம் மத நிறுவனங்களின் முதன்மை இலக்குகளாக மாறியுள்ளன. எனவே, இந்த பத்தியின் நோக்கம் நிறுவனமயமாக்கப்பட்ட மதங்களின் அரசியல் பற்றி கலந்துரையாடல் செய்வதே அன்றி, அவ் மதங்களின் அடிப்படை நம்பிக்கை கோட்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதல்ல.

நிறுவனமய மதங்களில் மதத் துறவிகளும் மதத் தலைவர்களும் பகுத்தறிவுடனான பின்பற்றலை விட விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டதோர் பின்பற்றலை வளர்க்கவே தங்கள் பக்தர்களுக்கு வழிகாட்டுகிறார்கள். உதாரணமாக, மறுபிறப்பு, கர்ம பலன், விதி பற்றிய நம்பிக்கை, சொர்க்கம், நரகம், கடவுள் பற்றிய விசுவாசம் ஆகிய அனைத்தும் மனிதனின் நம்பிக்கையுடன் தொடர்பான விடையங்களாகும்.

எனவே, பக்தர்கள் தங்கள் மதத் துறவிகள் மற்றும் மதத் தலைவர்கள் சொல்வதை எவ்வித மறுப்புமின்றி மிகுந்த மரியாதையுடனும் பக்தியுடனும் நம்பி பின்பற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் மதத் தலைவர்கள் அரசியலில் தலையிடுவதால், நன்கு சிந்தித்து, கவனமாக தர்க்கரீதியான முடிவுகளை எடுக்க வேண்டிய ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் போன்ற சந்தர்ப்பங்களில் இதுபோன்ற நம்பிக்கைகளை வளர்ப்பவர்களால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுவது தான் நாட்டுக்கும் மக்களுக்கும் மிகப் பெறும் ஆபத்தாக உள்ளது.

இந்நிலைமை இலங்கை அரசியல் சூழலுக்கு மிகவும் பொருந்துகிற ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு முறை தேர்தல் நடைபெறும் போதும் சமய நம்பிக்கை கொண்ட மக்களின் வாக்குகளை கவருவதற்காகவே பௌத்த பிக்குகளை முன்நிலைப் படுத்துகின்றனர். இவர்கள் நாட்டிலே பௌத்த மதத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே பௌத்தத்தை காப்பாற்ற தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு வகையில் மக்களை தூண்டுகின்றனர். இலங்கையின் சனத்தொகையில் பெரும்பகுதி பௌத்தர்களாக இருப்பதால், இவ்வாறான பிரசாரங்கள் மூலம் ஓர் பெளத்த வேட்பாளர் இலகுவாக பெரும்பான்மை வாக்குகளைப் பெற முடிகிறது.

ஆனால் மக்களின் உண்மையான பிரச்சனை பௌத்த மதத்தை பாதுகாப்பது அல்ல. தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைப் பெற்றுக்கொடுப்பது, சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெறுவது, பொருளாதாரப் பாதுகாப்பு, முதுமைக் காலத்தில் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை அமைத்துக் கொள்வது என்பனவே இவர்களின் உண்மையான பிரச்சினைகளாக உள்ளன.

எனினும், பௌத்த மதத்தை காப்பாற்றவே ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், மேற்கூறிய தங்களது தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதை அவர்கள் ஓர் அரசியல் பிரச்சினையாக பார்ப்பதில்லை. எனவே, தங்கள் கர்ம பலன் காரணமாகவே தங்களின் அடிப்படைத் தேவைகளை அரசால் நிறைவேற்ற முடியவில்லை என்று அவர்கள் தமது உள்ளங்களை ஆறுதல் படுத்திக் கொள்கின்றனர். எனவே, பொது மக்களின் நலனுக்காக அரசும், மதமும் வேறாக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வது பொதுமக்களுக்கே நன்மை பயக்கும் என்பதை நாம் அவர்களுக்கு அழுத்திக் கூறுதல் வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.