;
Athirady Tamil News

கொழும்பு அரசியலில் என்ன நடக்கிறது? (கட்டுரை)

0

ஆளுந்தரப்பிலுள்ள அனைத்து கட்சிகளின் கூட்டத்தை ஜனாதிபதி ஒத்திவைப்பார் என்று நேற்றே கூறியிருந்தேன்.அதன்படி இன்று, சுயாதீனமாக செயற்படும் ஆளுங்கட்சி அரசியல் தலைவர்களை மட்டுமே ஜனாதிபதி சந்தித்தார்.

சகலரையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தை அமைக்கத் தயார் எனவும், ஆனால் பிரதமரை பதவியில் இருந்து நீக்க முடியாது எனவும், அவ்வாறு செய்வது நாட்டை சீர்குலைத்து பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அரசுடன் இணைந்து செயற்படும் 11 சுயாதீன கட்சிகளுடன் இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமரை நீக்கினால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய சர்வதேச உதவிகள் கிடைக்காமல் போகும் அபாயம் காணப்படுவதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, அது எப்படி இருக்க வேண்டும், அதன் உள்ளடக்கம் என்ன, அமைச்சர்கள் யார், போன்ற ஒட்டுமொத்த திட்டத்தையும் தன்னிடம் முன்வைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் கோரியுள்ளார்.

எவ்வாறாயினும், பிரதமரையும் அரசாங்கத்தையும் மாற்றி சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எம்.பிக்கள் விமல் வீரவன்ச, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

”சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது பிரச்சினையல்ல எனினும் பிரதமரை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்படுவதாக” ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை குறித்து விளக்கமளிக்க ஜனாதிபதி நிதி அமைச்சர் அலி சப்ரியையும் இந்த கூட்டத்திற்கு அழைத்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான நிதி நெருக்கடி குறித்து அலி சப்ரி, இங்கு விரிவாக சுட்டிக்காட்டினார். ”எதிர்காலத்தில் நாடு இன்னும் கடுமையான பொருளாதார விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்ற சுரேன் ராகவன் மற்றும் சாந்த பண்டார ஆகியோரின் அமைச்சுக்களையாவது நீக்குமாறு இங்கு தயாசிறி ஜயசேகர ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையினை ஏற்க மறுத்துள்ள ஜனாதிபதி, அவ்வாறு செய்வது தனது நம்பகத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

சுயாதீன குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் துமிந்த திஸாநாயக்க, சந்திம வீரக்கொடி மற்றும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோர் கலந்துரையாடலை புறக்கணித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த சந்திப்பில் இருந்து வெளியே வந்த மைத்ரி ,ஊடகங்களிடம் பேசுகையில் இடைக்கால அரசு குறித்தும் புதிய பிரதமர் நியமனம் குறித்தும் சொன்னாரே அவற்றில் உண்மையில்லையா என்று நீங்கள் கேட்கலாம். பெரும்பாலும் அதில் உண்மை இல்லை என்பதுதான் உண்மை..

” மஹிந்த தன்னிடம் 117 பேருக்கு மேற்பட்டோர் இருப்பதாக சொல்கிறார்.நீங்கள் 113 பேரையாவது காட்ட வேண்டாமா?அப்படி காட்டாமல் பிரதமரை நீக்குங்கள் ,இடைக்கால அரசை அமையுங்கள் என்று நீங்கள் கூறுவது முறையில்லை.என்னால் அப்படி செய்ய முடியாது..” என்றே ஜனாதிபதி மேற்படி சுயாதீன எம்.பிக்களிடம் கூறியிருக்கிறார்.

அப்படியானால் மைத்ரிபால சிறிசேன வெளியே வந்து இப்படிக்கூற காரணம் என்ன ? என்று நீங்கள் கேட்கலாம்.

இப்போதுள்ள நிலைமையில் பிரதமரும் ,ஜனாதிபதியும் அடிக்கடி சந்திப்பதோ அல்லது தொலைபேசியில் பேசுவதோ இல்லை. எனவே நேற்று பிரதமரை மாற்றமாட்டேன் எனக்கூறிய ஜனாதிபதி இன்று மாற்றுவேன் எனக்கூறினார் என்று ஊடகங்களிடம் சொன்னால் அரசியல் சலசலப்பு ஏற்படும் ஏற்கனவே இருதரப்பிலும் உள்ள விசனம் அதிகரிக்கும் என்று மைத்ரி நினைத்திருக்கக் கூடும்.
ஜனாதிபதி மீதான பிரதமர் தரப்பின் சந்தேகக்கண்களை மேலும் கூர்மையாக்குவது மைத்திரியின் எண்ணமாக இருந்திருக்கலாம். உடனடியாக இதனை மறுக்கும் நிலையில் ஜனாதிபதியும் இல்லை.

இடைக்கால அரசில் முன்னாள் அமைச்சர் டலசை பிரதமராக நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டாலும் இன்னொரு தரப்பு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நியமிக்க முனைகிறது.தினேஷ் குணவர்தனவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.ஆனால் இவையெல்லாம் பேச்சளவில் மட்டுமே நிற்கின்றன.

எம்.பிக்களின் ஆதரவு தங்களுக்கு இருக்குமென கூறும் விமல் ,கம்மன்பில போன்றோர் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதற்கு தேவையான
ஆதரவை பெற்று அதனை நிறைவேற்றி பிரதமரை வீட்டுக்கு அனுப்புவது மட்டுமே இப்போதுள்ள ஒரே தெரிவாக அவர்கள் பக்கம் இருக்கிறது .நாடாளுமன்றம் தீர்மானிக்கலாம் ஆனால் நிறைவேற்றதிகாரம் இதில் தலையிடாது.

‘எல்லாவற்றுக்கும் மேலாக பிரதமர் அண்ணன் எனது சகோதரன்..அவர் மீது கைவைக்க மாட்டேன்.அவரை நீக்கவும் மாட்டேன்..” என்று நேற்றிரவு கூறிய கோட்டா இன்றும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்.”

இந்தியத் தூதுவர் சந்திப்பு

சுயாதீன எம்.பிக்கள் குழுவை கடந்த வாரம் சீனத் தூதுவர் சந்தித்தாரல்லவா ?அவர்களை இந்திய உயர்ஸ்தானிகர் நேற்று சந்தித்துள்ளார்.

”இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை உயர்ஸ்தானிகர் பாக்லே மீண்டும் வலியுறுத்தினார். இலங்கை மக்களுடன் என்றும் துணைநிற்பதற்காக இந்திய மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நன்றியினை தெரிவித்திருந்தனர்.அத்துடன் இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலவரம் குறித்த தமது கருத்துக்களையும் அவர்கள் உயர் ஸ்தானிகருடன் பகிர்ந்துகொண்டனர்.” என்று செய்திக்குறிப்பொன்றினை இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ளது.

ஆனால் இதற்கு மேல் பல அரசியல் விடயங்கள் இங்கு பேசப்பட்டுள்ளன என்பதை மட்டும் அறியமுடிந்தது.

மாநாயக்க தேரர்கள் தீர்மானம்

பிரதமர் பதவி விலகாதபடியாலும் ,இடைக்கால அரசை அமைப்பது குறித்து ஜனாதிபதி தெளிவாக அறிவிக்காத காரணத்தினாலும் இன்று அல்லது நாளை மாநாயக்க தேரர்கள் விசேட மகா சங்க ஆணை ஒன்றை பிறப்பிக்கவுள்ளனர்.
சரியான தீர்வொன்றை முன்வைக்காதவரை மாநாயக்க தேரர்களை சந்திக்க அரச தலைவர்களுக்கு நேரம் வழங்குவதில்லையென்ற முடிவை எடுக்க மாநாயக்க தேரர்கள் தயாராகி வருவதாக தெரிகிறது.அனைத்துக்கட்சி தலைவர்களை மாநாயக்க தேரர்கள் விரைவில் சந்தித்து சில கட்டளைகளை இடவுள்ளதாகவும் தகவல்.

அரசியல் களம் கலவரமாகிக்கொண்டிருக்கிறது…

நன்றி – ஆர்.சிவராஜா

You might also like

Leave A Reply

Your email address will not be published.