;
Athirady Tamil News

ஆயிஷா போன்ற மொட்டுகள் இனிமேலும் கருகிவிடக்கூடாது! (கட்டுரை)

0

மொட்டொன்றை சேற்றுக்குள் அமிழ்த்தி, உதிரச்செய்த துயரச்செய்தி, மனிதாபிமானம் கொண்ட ஒவ்வொருவரினதும் மனங்களில் வடுவாகிவிட்டது. அந்த வயதை ஒத்தவர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு பெற்றோர்களிடத்திலும், இனம்புரியாத அச்சம், பயம், சூழ்கொள்ளச் செய்துவிட்டது பண்டாரகம, அட்டுலுகமவைச் சேர்ந்த 9 வயதான பாத்திமா ஆயிஷாவின் படுகொலை.

பாத்திமா ஆயிஷா, தனது வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்திலிருக்கும் கோழி இறைச்சிக் கடைக்கு, வெள்ளிக்கிழமை (27) காலை 10 மணிக்குச் சென்றுள்ளார். அதன்பின்னர் வீடுக்குத் திரும்பவில்லை. எனினும், அந்தப் பிரதேசத்திலிருந்து மறுநாள் (28) மாலை 3.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி காணாமல் போன செய்தியை அடுத்து, நாலாபு‌றமும் தேடுதல் வேட்டைகள் தொடர்ந்தன. பொலிஸ் குழுக்கள் நான்கு அமைக்கப்பட்டு, தேடுதல்கள் துரிதப்படுத்தப்பட்டன.

எனினும், சகலரையும் துயரத்தில் ஆழ்த்திய செய்தியே, சனிக்கிழமை (28) கிடைத்தது. அதுவும் சேற்றுக்குள் அமிழ்த்திவிடப்பட்டிருந்த நிலையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியைக் கடத்திச்சென்று, படுகொலை செய்துவிட்டு, சடலம் சேற்றுக்குள் மறைக்கப்பட்டதா? அல்லது, சேற்றுக்குள் உயிருடன் அமிழ்த்தி படுகொலை செய்யப்பட்டதா, என்பது தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பாலகியை படுகொலை செய்தவர்களைக் கைதுசெய்து, கடுமையான தண்டனை வழங்கவேண்டும். இல்லையேல், பிஞ்சுகளைப் படுகொலை செய்யும் மிகக்கேவலமான கலாசாரம் மலிந்துவிடும்.

சிறுமியான பாத்திமா ஆயிஷாவின் படுகொலை, முதலாவது சம்பவமல்ல. இன்னும் பல சிறார்கள் படுகொலை செய்யப்பட்ட கசப்பான வரலாறு கடந்தகாலத்தில் உள்ளது. ஆனால், இது இறுதியானதாக இருக்க வேண்டும். அதற்காக, கடுமையான தண்டனைகளை வழங்கி, சிறுவர், சிறுமியரை கொலை செய்ய எத்தனிப்போருக்கு ஒரு பாடமாக அமையவேண்டும்.

பெற்றோரும், சிறுவர், சிறுமிகள் விடத்தில் கண்ணும் கருத்துமாக இனியாவது இருக்க வேண்டும். மனிதாபிமானத்துக்கு விரோதமான செயல்கள், மலிந்து கிடக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆகையால், உச்ச விழிப்புடன் அவர்களைக் காக்கவேண்டும். இல்லையேல் படுபாதகர்கள், கௌவ்விக்கொண்டு போய், மொட்டுகளை கருக்கிவிடுவர்.

ஆயிஷாவின் படுகொலை விடயத்தில், போதைப்பொருள் பாவனை அதிகரிப்பையும் முடிச்சுப்போட்டு, சமூக வலைத்தளங்களில் பரவலாக கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். அட்டுலுகமவில் போதைப்பொருட்களின் பாவனை, அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

அட்டுலுகமவில் மட்டுமன்றி, நாடளாவிய ரீதியிலும் போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளது. இது முழு சமூகத்துக்கும் கேடானது. ஆகையால் அடிமையானவர்களை அதிலிருந்து மீண்டெழச் செய்வதற்காக, புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவதுடன் புதியவர்கள் நுகர்ந்து அடிமையாகிவிடக்கூடாது என்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு, நீதிமன்றத்தின் ஊடாக மிகத்துரிதமாக தண்டனைகளை வழங்கும் வகையில், சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதே காலத்தின் அவசியமாகுமென வலியுறுத்துகின்றோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.