;
Athirady Tamil News

சின்னஞ்சிறு தீவுகளும் பெருவல்லரசுகளும்!! (கட்டுரை)

0

சீன அமெரிக்க சர்வதேச அதிகார போட்டியில் தற்பொழுது பசுபிக் சமுத்திரத்தின் மத்தியில் உள்ள மிகச் சிறிய தீவுகள் மாட்டிக் கொண்டுள்ளன. அண்மையில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ பசுபிக் தீவுகளுக்கான பத்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

டோக்கியோவில் அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாற்கர நாடுகளின் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் தான் அவர் இந்த விஜயத்தினைச் செய்துள்ளார்.

அவரின் விஜயம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. பொதுப்படையில், ஆசியாவின் புவிசார் அரசியல் போட்டிகளில் நீண்டகாலமாக ஒரு மூலோபாயப் பங்கைக் கொண்டிருக்கும் சங்கிலிகளாக உள்ள பசுபிக் தீவுகளை பீஜிங் நண்பர்கள் என்ற அடிப்படையில் வென்று முன்னெடுக்கும் விரிவாக்கமாகவே கொள்ள வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன், பசுபிக் தீவுகளுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் ஆசிய கூட்டணிகளை வலுப்படுத்தும் அமெரிக்க முயற்சிகளை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டது என்றும் குறிப்பிடப்படுகின்றது.

அதேவேளை புதிதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘இந்தோ – பசுபிக் பொருளாதார கட்டமைப்பு’ உடன்படிக்கைக்கு பசுபிக் தீவுகளிடத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு கோருவது குறித்த செயற்பாடுகளும் நடைபெறுகிறது.

இந்தோ-பசுபிக் பிராந்தியம் சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் இருக்க வேண்டும் என்பது அமெரிக்காவினதும், சீனாவினதும் நிலைப்பாடுகளாக உள்ளன.

ஆனால் அவை இரண்டும் ஆதிக்கத்தைச் செலுத்துவதில் போட்டாபோட்டி போடுகின்றன. இதனால் தற்போது பசுபிக் சமுத்திரத் தீவுகளின் முக்கிய வகிபாகத்தைக் கொள்கின்றன.

2021ஆம் ஆண்டின் உலகிலேயே மிக மகிழ்ச்சியான பிராந்தியங்கள் பட்டியலில் முன்னிலையில் இருப்பது வட,கிழக்கு ஐரோப்பா மற்றையது பசுபிக்தீவுகள் ஆகியனவாகும்.

தற்போது இந்த இரு பிராந்தியங்களுக்கும் சோதனைக்காலம் ஆரம்பித்துள்ளது என்று தான் கூற வேண்டியுள்ளது.

பசுபிக் சமுத்திரப் பிராந்தியத்தைத் தமது செல்வாக்கினுள் வைத்திருப்பதில் உலக வல்லாதிக்கப் போட்டியில் உள்ள அமெரிக்காவும், சீனாவும் களமிறங்கியுள்ளன.

சீனா தனது ‘கடன்பொறி இராஜதந்திரம்’ மூலம் பல சிறிய தீவுகளைத் தனது தேவைக்கேற்ப உபயோகப்படுத்த முனைகிறது.

அதற்காக சீனா பல உத்திகளைக் கையாண்டு வருகின்றது. அந்தந்த நாடுகளின் காவல்துறையினருக்கு பயிற்சிகள் அளித்தல்.

இணையவழிப் பாதுகாப்பு முறைகளில் உதவுதல், அரசியல் உறவுகளை வலுவடைய செய்தல் என்பன அவற்றுள் சிலவாகும்.

ஆனால் இத்தகைய முறைமைகளின் ஊடாக கட்டியெழுப்பப்படும் சீனச் செல்வாக்கின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா தனது அரசியல் தெளிவுபடுத்தல்களைச் செய்து வருகிறது. இருப்பினும், இருதரப்பிற்கும் இடையிலான போட்டாபோட்டிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

இவ்வாறான நிலையில் பசுபிக் பிராந்தியத்தில் முக்கியமான பகுதியாக காணப்படுவது பிஜி தீவுகள். அண்மைய நாட்களில் பிஜித்திவுகளும் இத்தகைய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.

பிஜி தீவுகளைப் பொறுத்தவரையில், இந்தோ-பசுபிக் பொருளாதார கட்டமைப்பில் இணைந்த முதலாவது பசுபிக் தீவுகள் என்ற பெருமையைக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறிருக்கையில், சீனா அதிகளவில் சிறிய நாடுகளை தம் வசப்படுத்துவதில் பெரும் ஆர்வம் காட்டி வருகிறது. தாம் எந்தவொரு நாடுகளினதும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடமாட்டோம் என்ற வாக்குறுதிகளை பகிரங்கமாக வழங்குவதன் மூலம் சிறிய நாடுகளின் மெல்ல உட்பிரவேசிக்கும் சீனா, அங்கிருந்து மேலை நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைத்து உள்நாட்டு பதற்றத்தை உருவாக்குவதற்கு காரணமாக இருந்து வருகின்றன. இதனால் சிறிய நாடுகளில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை ஏற்படுகிறது.

சீனாவின் எடுத்துகாட்டுதல்கள் மீது அதிகளவு நம்பிக்கை வைக்கும் சிறிய நாடுகள் சீனாவுடன் உடன்பட்டுச் செல்கின்றன. அது மட்டுமல்லாது தம்மீது மனித உரிமை மீறல்கள் குறித்த விவகாரங்கள், எதேச்சதிகார ஆட்சி அமைப்புகள் ஆகியவற்றை சீனா கருத்தில் கொள்ளாது என்ற நோக்கு நிலையும் சில சிறிய நாடுகளுக்கு உள்ளன.

இதனைவிட, சீனா சிறிய நாடுகளில் காலுன்றுவதற்கு கடல் எல்லைகளை பயன்படுத்துதல். நிலத்திலும் நீரிலும் உள்ள மூல வளங்களை பயன்படுத்துதல் என்று பல்வேறு உள் நோக்கங்கள் காணப்படுகின்றன.

இதற்குப் பல உதாரணங்கள் காணப்படுகின்றன. இருப்பினும், சீனா பல இடங்களில் இவ்விதமான செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணமே உள்ளது.

ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் பசுபிக் சமுத்திரத்தை தமது கடற்கரைகளாக கொண்டவையாக உள்ளன.

இந்நாடுகள் சீன விரிவாக்கத்துக்கு எதிரானவை. ‘சீன விரிவாக்கத்துக்கு எதிர்’ என்ற மையகருத்தை முன் வைத்து ஒன்றிணைந்துள்ள இவை, வடகிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, ஒசியானியா மற்றும் பசுபிக் தீவுகள் என்று அனைத்து பிராந்திய சிறு நாடுகளையும் தமது பக்கம் ஈர்த்து கொள்வதில் கரினை செலுத்தியுள்ளன.

இந்தப் புதிய போட்டி நிலைக்கு முக்கிய காரணம் அண்மையில் சீனாவினால் சொலமான் தீவுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமே ஆகும்.

சொலமான் தீவுகளின் அபிவிருத்திக்குத் தேவையான பயிற்சிகள், பாதுகாப்புகள் என பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்துவிடும் வகையில் குறித்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.

சீனா சொலமான் தீவுகள் மீது கவனம் செலுத்துவதற்கு காரணம், சொலமான் தீவுகளின் இருப்பிடம் தான். அத்தீவுகள் பசுபிக் சமுத்திர பிராந்தியத்தையும் இந்து சமுத்திரத்தையும் இணைக்கும் பகுதிக்கு அண்மையாக அமைந்திருக்கின்றது.

இதனால் இத்தீவுகளில் சீனா தனது ஆயுதப்படைகளுக்கான படைக்கல வசதிகளையும் முகாம்களையும் நகர்த்தி வைத்திருக்க வாய்ப்புக்கள் உள்ளன என்று அமெரிக்க பாதுகாப்பு ஆலோசனையாளர்கள் கருதுகின்றார்கள்.

அத்துடன் சீனா, கிரிபாட்டி தீவுகளுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகளை உருவாக்குவதற்கான ஆரம்ப வேலைகளைச் செய்து வருகிறது.

அத்துடன், சீனா தன்னுடைய முன்னெடுப்பில் ‘சீன பசுபிக் தீவு நாடுகளின் பொது அபிவிருத்தி நோக்கு’ என்ற பெயரில் செயற்றிட்டமொன்றை வரைந்துள்ளது.

இதில் பசுபிக் பிராந்தியத்தின் முக்கியமான பத்துத் தீவுகளை உள்வாங்குதல் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான செயற்பாடுகளையும் ஆரம்பித்துள்ளது.

அதேநேரம், அமெரிக்காவும், அதிற்குப் பதிலடிகளை வழங்குவதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்து முன்னெடுத்து வருகின்றது.

இதில் யார் வெற்றிவாகை சூடப்போகின்றார் என்பது ஒருபுறமிருக்கையில், இராணுவ வலுவற்ற பசுபிக்தீவுகள் உலக வல்லரசுகளின் போட்டியில் சிக்கித் தவித்து வருகின்றது என்பதே யதர்த்தம்.

அதேநேரம், வல்லரசுகள் தாம் நேரடியான மோதல்களில் இறங்குவதன் மூலம் பொருளாதார பெருநாசம் ஏற்படக்கூடிய நிலைமை உருவாகும் என்பதை நன்கு அறிந்து கொண்டுள்ளன.

இதன் காரணமாக சிறிய நாடுகளை தமது கூட்டுக்களில் சேர்த்து கொள்வதன் வாயிலாக எதிர்த்தரப்பை அழுத்தத்திற்கு உள்ளாக்கலாம் என்று கருதுகின்றன.

இதனை, நவீனகால இராஜதந்திரப்போராட்டம் என்றே கொள்ளவேண்டியுள்ளது. எது, எவ்வாறாக இருந்தாலும், வல்லாதிக்க சக்திகளின் மோதல்கள் ‘பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு வேதனை’ என்ற நிலையைத்தான் அநேகமான நாடுகளில் ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.