;
Athirady Tamil News

உலக உணவு நெருக்கடி: அடுப்பிலிருந்து நெருப்புக்குள் இலங்கை!! (கட்டுரை)

0

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை, இலங்கையர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். ஆனால், இது வெறும் தொடக்கம் மட்டுமே என்பது போலவே, நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றபோது, ‘உடனடியாக வெளிநாடுகள் கடன் கொடுக்கும்; பிரச்சினைகள் தீரும்’ என்று சொல்லப்பட்டது. “எல்லா இலங்கையர்களுக்கும், மூன்றுவேளை உணவை உத்தரவாதப்படுத்துவதே எனது பணி” என்று பதவியேற்றவுடன் ரணில் விக்கிரமசிங்க சொன்னார்.

நடந்தது யாதெனில், அவர் பதவியேற்ற போது மூன்று வேளை உண்டவர்கள், இப்போது இரண்டு வேளையும், இரண்டுவேளை உண்டவர்கள் ஒரு வேளையும் உண்கிறார்கள். புதிய பிரதமரின் சாதனையாக இதையே சொல்லவியலும்.

நிலைமை இன்னும் மோசமடையும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், அதே அமைச்சர்கள்; அதே பதவிகள்; அதே சலுகைகள்; அதே பாராளுமன்றம். அதிகாரத்தில் உள்ளவர்களின் சலுகைகளில், மேலதிக கொடுப்பனவுகளில் எதுவித குறையையும் அரசாங்கம் வைக்கவில்லை. பாராளுமன்றில் சலுகை விலையில்தான் இன்னமும் உணவு பரிமாறப்படுகிறது. ஆனால், அவர்களால் வாய்கூசாமல் நிலைமை மோசமடையும் என்று சொல்ல முடிகிறது.

இன்றைய நெருக்கடி தொடங்கி, இரண்டு மாதங்களுக்கு மேலாகின்ற நிலையில் குறுங்கால, நீண்டகாலத் திட்டங்கள் எதுவுமின்றி, அரசாங்கம் செயற்படுகிறது. இப்போது எதிர்ப்பாளர்கள், கலகக்குரலை எழுப்புபவர்கள் மெதுமெதுவாகக் குறிவைக்கப்படுகிறார்கள். எதிர்க்கருத்துகளை, விமர்சனங்களை அடக்குவதிலேயே அரசாங்கம் கவனம் குவிக்கின்றது.

இலங்கை, உணவு நெருக்கடியை ஏற்கெனவே எதிர்கொண்டுள்ளது. உணவுப் பொருட்களின் தட்டுப்பாட்டையும் விலை உயர்வையும், உழைக்கும் மக்களால் உணர முடிகிறது. “இயேசு வருகிறார்”, “கல்கி அவதாரத்தில் கடவுள் வருகிறார்” என்று ஆருடம் சொல்லும் மதப்பிரசங்கிகளுக்கு எதுவிதத்திலும் குறைவற்ற வகையில், எமது அரசியல்வாதிகளும் “எல்லாம் சரி வரும்” என்று சொல்கிறார்கள்.

எமக்கு மறைக்கப்படுகின்ற மிக முக்கியமான உண்மை ஒன்றுண்டு. உலகம், மிகப்பாரிய உணவு நெருக்கடியில் சிக்கியுள்ளது. இது, இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளை மிகவும் மோசமாகத் தாக்கும்.

கடந்த ஏப்ரல் மாதம், ஐக்கிய நாடுகள் சபை ‘உக்ரேனியப் போரின் உணவு, சக்தி, நிதி அமைப்புகள் மீதான உலகளாவிய தாக்கம்’ (Global Impact of war in Ukraine on food,energy and finance systems) என்ற தலைப்பில், ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில்,

(1) உணவுப் பொருட்களின் விலைகள் 34% அதிகரித்துள்ளன.
(2) மசகு எண்ணெயின் விலை 60%த்தால் அதிகரித்துள்ளது.
(3) எரிவாயு, உரம் ஆகியவற்றின் விலைகள் இருமடங்காகியுள்ளன.

உலகம் உணவு, சக்தி, நிதி ஆகிய மூன்று நெருக்கடிகளால் சிக்கித்தவிக்கிறது. 107 நாடுகள், குறைந்தது இம்மூன்றில் ஒரு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளன. 69 நாடுகள் இம்மூன்று நெருக்கடிகளிலும் சிக்கித் தவிக்கின்றன.

இந்த நெருக்கடிகளில் பிரதானமானது உணவாகும். இதை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போது, உலகளாவிய ரீதியில் 45 மில்லியன் மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொண்டுள்ளார்கள். இத்தொகை நாளுக்குநாள் அதிகரிக்கும்.

“நாம் நிலைமையை உடனடியாகக் கவனிக்கவில்லை என்றால், பெரும் பஞ்சத்தை காண்போம். நாடுகளின் ஸ்திரமின்மையைக் காண்போம். பெருமளவில் இடம்பெயர்வதைக் காண்போம்” என்று உலக உணவு நிறுவகம் எச்சரிக்கிறது.

இந்த உணவு நெருக்கடி, இரண்டு வகையான சிக்கல்களை உடையது. வளர்முக நாடுகளில், உணவின்மையும் பட்டினியும் உருவாகியுள்ளன. வளர்ச்சியடைந்த நாடுகளில், உணவுப் பொருட்களின் விலை, கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த நெருக்கடி குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். அதில், “உக்ரேனின் விவசாய உற்பத்தி வழமைக்குத் திரும்பி, ரஷ்யா, பெலாரஸின் உணவு மற்றும் உர உற்பத்தி, போருக்கு முந்தைய நிலையை எட்டாமல், உலகளாவிய உணவுப் பாதுகாப்பு பிரச்சினைக்கு உண்மையில், நிலையான தீர்வு இல்லை”. இக்கூற்று மிகுந்த கவனிப்புக்கு உரியது.

உலகளாவிய உணவு உற்பத்தியில், ரஷ்யாவும் உக்ரேனும் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகின் தானிய ஏற்றுமதியில், மூன்றில் ஒரு பங்குக்கும், சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியில் பாதிக்கும் மேலான பங்குக்கும் இந்த இரண்டு நாடுகளும் சொந்தமாகும்.

உக்ரேனின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உலகளாவிய உணவுப் பிரச்சினையை மோசமாக்குகின்றன என்பது உண்மையாயினும், அது மோசமான நிலைமைக்கு முக்கிய காரணம் அல்ல. ரஷ்யாவின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருக்கும் மேற்கத்திய பொருளாதாரத் தடைகளே மிகவும் சக்திவாய்ந்த காரணமாகும்.

உக்ரேனுடன் ஒப்பிடுகையில், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் ஏற்றுமதியில் ரஷ்யா மிகப் பெரியது. ரஷ்யா உலகின் மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதியாளராக உள்ளது. உக்ரேனை விட, உலகளாவிய உணவுப் பொருள் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.

ரஷ்யா, உலகின் மிகப்பெரிய உர ஏற்றுமதியாளராக உள்ளது. மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளும் பெலாரஸூம் ஒரு முக்கியமான உர ஏற்றுமதியாளர். இவ்விரு நாடுகளும், உலகளாவிய உர விநியோகத்தில் காற்பங்குக்கும் அதிகமாகப் பங்களிக்கின்றன.

இந்நெருக்கடிக்கு முன்பே உரங்களின் விலை, எரிபொருள் விலை உயர்வின் காரணமாக அதிகரித்திருந்தது. உர உற்பத்தி, இயற்கை எரிவாயுவை பெரிதும் நம்பியுள்ளது. ரஷ்யா, உரத்தை ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகள், நிலைமையை மோசமாக்கியுள்ளன.

சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான டேவிட் லேபோர்டே, “உணவு அமைப்பு எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தல் உர வர்த்தகத்தின் சீர்குலைவு” என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், “கோதுமை ஒரு சில நாடுகளை பாதிக்கும். உரப் பிரச்சினை, உலகில் எல்லா இடங்களிலும் உள்ள ஒவ்வொரு விவசாயியையும் பாதிக்கும். கோதுமை மட்டுமின்றி, அனைத்து உணவுப் பொருட்களின் உற்பத்தியிலும் உரத்தட்டுப்பாடு சரிவை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.

மே மாத நடுப்பகுதியில், உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தியாளரான இந்தியா, கடுமையான வெப்ப அலையால் ஏற்பட்ட பயிர் இழப்புகள் காரணமாக, கோதுமை ஏற்றுமதியை நிறுத்துவதாக அறிவித்தது. ஏற்கெனவே, ஏப்ரலில் இந்தோனேஷியா பாம் ஒயில் ஏற்றுமதியை நிறுத்துவதாக அறிவித்திருந்தது. உலக, பாம் ஒயில் விநியோகத்தில், 60 சதவீதத்தை இந்தோனேசியா கொண்டுள்ளது.

இந்தியா, கோதுமை ஏற்றுமதியை நிறுத்துவது ஆசிய நாடுகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 2021-2022 ஆம் ஆண்டில் இந்தியா முதன்மையாக, இலங்கை, இந்தோனேசியா, யெமன், நேபாளம், மலேசியா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு ஏழு மில்லியன் மெட்ரிக் தொன் கோதுமையை ஏற்றுமதி செய்தது. 2022-2023 ஆம் ஆண்டில், கோதுமை ஏற்றுமதியை 10 மில்லியன் தொன்னாக விரிவுபடுத்த இந்தியா இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ளது.

ரஷ்ய – உக்ரேன் நெருக்கடிக்கு முன்பே, உலகில் உணவு நிலைமை ஆபத்தானதாக இருந்தது. காலநிலை மாற்றத்துக்கும் அதற்கும் நிறையத் தொடர்பு உண்டு. அதிகரித்து வரும் தீவிர வானிலை நிகழ்வுகள், விவசாயம் மற்றும் உணவு உற்பத்திக்கு தீங்கு விளைவித்துள்ளன. கடந்த தசாப்தத்தில், 1.7 பில்லியன் மக்கள் தீவிர வானிலை நிகழ்வுகள், காலநிலை தொடர்பான பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு சீனாவில் ஏற்பட்ட வெள்ளம், குளிர்கால கோதுமை அறுவடையின் விளைச்சலை, வரலாற்றில் என்றுமில்லதாவாறு குறைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சமீபகாலமாக நிலவி வரும் வெப்ப அலையும் பொய்த்த பருவமழையும், அங்குள்ள பல்வேறு உணவு உற்பத்திகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்க மாநிலங்களில் வரட்சி காரணமாக, 40 சதவீத கோதுமை அழிவடையும் நிலையில் உள்ளது. ஐரோப்பாவில், குறைந்த மழைப்பொழிவு காரணமாக விளைச்சல் நிச்சயமாக அபாயகரமாக கட்டத்தைத் தொடும். இவையனைத்தும் உணவு நெருக்கடிக்கு மேலதிகமான அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளன.

உணவு நெருக்கடியின் தீவிரத்தை உணர்ந்து, 35க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் சொந்த உணவு பாதுகாப்புக்கு பயந்து, உணவு ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சில ஏற்றுமதிக்கு முழுமையான தடை விதித்துள்ளன. செல்வந்த நாடுகள் இப்போதே உணவுப் பதுக்கலைத் தொடங்கிவிட்டன.

கொரோனா தடுப்பூசியை எவ்வாறு செல்வந்த நாடுகள் அதிகமாக வாங்கி, மூன்றாமுலக நாடுகளுக்கு இல்லாமல் செய்தனவோ, அதேநிலைமையே இப்போது உணவுப் பொருட்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உணவுத் தேவையின் பெரும்பகுதிக்கு, இறக்குமதியை நம்பியிருக்கும் இலங்கையின் நிலை மிகவும் பரிதாபகரமானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.