;
Athirady Tamil News

இதய சுத்தி முக்கியம் !! (கட்டுரை)

0

கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கும் இடையில், மூன்று தடவைகள் தடைப்பட்ட பேச்சுவார்த்தை, மார்ச் 25 நடந்ததன் பின்னர், அதிரடியான சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராகிக்கொண்டிருப்பதாகவே அறியமுடிகின்றது.

‘அரசியல் தீர்வு’,‘ காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடு’,‘ வடக்கு, கிழக்கில் காணிகளை அபகரித்தல்’, ‘அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை, காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் முழுமையாக அமல்படுத்தல்’, ‘அரசியல் கைதிகளின் விடுதலை’, ‘வடக்கு, கிழக்கு நிதியம்’ உள்ளிட்டவற்றை குறிப்பிட்டுச் சொல்லமுடியும்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர், மேற்படி விடயதானங்களுக்கு பொறுப்பான உயர் அதிகரிகளுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தொலைபேசியின் ஊடாக தொடர்புகொண்டு, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணித்துள்ளதாகவே அறியமுடிகின்றது. அப்படியாயின், பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனலாம்.

ஆனால், சிலவற்றுக்கு காலம் தேவைப்படும். அரசியல் கைதிகளின் விடுதலையை அதிரடியாகச் செய்யலாம். தென்னிலங்கையை சேர்ந்த இனவாத சக்திகள், ‘புலிகளைத் திறந்துவிட்டனர்’ எனக் கூப்பாடு போடக்கூடும். பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்தவராகவே கோட்டாபய பார்க்கப்படுகின்றார் என்பதால், அதன் தாக்கம் குறைந்திருக்கும்.

அதல பாதாளத்துக்குள் விழுந்துகிடக்கும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டும். டொலரைக் கவர்ந்து இழுக்கும் நோக்கில், வடக்கு கிழக்கு நிதியத்தை ஆளும் தரப்பு யோசனையாக முன்வைத்திருக்கக் கூடும்.

‘அரசியல் தீர்வின்றி, அதற்கான சாத்தியப்பாடுகள் குறைவு’ என விளக்கமளித்து, கூட்டமைப்பு அதற்குப் பதிலடி கொடுத்திருக்கிறது. ஆக, இருதரப்பினரின் முன்பாக இருக்கின்ற பிரச்சினை, ஒன்றின் மீது மற்றொன்று தங்கியிருக்கின்றது.

இதற்கிடையே, நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், ஆபத்தான அரசியல் பொறியை வைக்க புலம்பெயர் தமிழர்கள் முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை, அரசாங்கத்தின் பங்காளியாக இருந்து விலகி நிற்கும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி முன்வைத்துள்ளது.

அதேபோல, அரசாங்கத்துக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் பாலமாக இருப்பதாக எம்.ஏ.சுமந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார். இது, சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ‘உலகில் இருக்கும் பாலங்களை விடவும் கடும் ஆபத்தான பாலம்’ என விமர்சிக்கப்பட்டுள்ளது.

பேச்சு ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. தீர்வை நோக்கி, முன்னோக்கி நகர்த்திச் செல்வது இருசாராரின் கைகளிலேயே தங்கியுள்ளது. விமர்சனங்களுக்கு அஞ்சி, நிறுத்திக் கொண்டால், பிரச்சினைக்கு இனியொரு போதுமே தீர்வைக் காணவே முடியாது. ‘புலிகளை அழித்த கோட்டா, நாட்டைத் துண்டாட மாட்டார்’ என்ற மனப்பான்மை, பெரும்பாலான சிங்களவர்களிடத்தில் உள்ளது.

அந்த நம்பிக்கையை காப்பாற்றிக் கொண்டு, கடும் ஆபத்தான பாலம் என்ற விமர்சனத்தைத் தகர்த்தெறிந்து, இதய சுத்தியுடன் இரு தரப்பும் பேச்சை முன்னகர்த்த வேண்டும் என்பதே எமது அவாவாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.