;
Athirady Tamil News

மக்களை ஏமாற்றும் 21ஆவது திருத்தம் !! (கட்டுரை)

0

இரட்டை நெருக்கடிகளை, இலங்கை எதிர்நோக்கி இருக்கிறது. ஒருபுறம் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியும் மறுபுறம், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையினரின் ஆதரவில் பிரதமர் நியமிக்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தும், நாடாளுமன்றத்தில் ஒரே ஓர் ஆசனம் மட்டுமே இருக்கும் கட்சியொன்றின் தலைவரை பிரதமராக நிமயனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஜனாதிபதியை தள்ளுமளவுக்கு, அரசியல் நெருக்கடி மோசமாக உள்ளது.

இந்த இரண்டு நெருக்கடிகளும், தனித் தனி நெருக்கடிகளாகக் கருதவும் முடியாது. பொருளாதார நெருக்கடியின் விளைவாகவே, அரசியல் நெருக்கடி தோன்றியது. விலைவாசி உயர்ந்து, எரிவாயு, எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு, நீண்ட நேரம் மின்வெட்டு அமலாக்கப்பட்டு, மக்கள் கொதித்தெழுந்த நிலையில், மாதத்துக்கு ஒரு முறை அமைச்சரவையை மாற்ற வேண்டிய நிலை உருவாகியது. இந்த நிலையிலேயே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஓர் ஆசனத்தின் தலைவரை, பிரதமராக நியமிக்க வேண்டியதாயிற்று.

வாழ்க்கையே வெறுத்துப் போகும் அளவுக்கு, உக்கிரமடைந்து இருக்கும் பொருளாதார பிரச்சினையின் காரணமாக, கோபமடைந்து இருக்கும் மக்களின் வாயிலிருந்து “முடியாவிட்டால் வெளியேறுங்கள்” என்ற வாரத்தைகளே வெளிவருகின்றன. இது ஓர் அரசியல் மாற்றத்தின் அவசியத்தையே காட்டுகிறது.

எனவே, பொருளாதார நெருக்கடிக்கும் அரசியல் நெருக்கடிக்கும், ஒரே நேரத்தில் தீர்வு தேட வேண்டும் என்ற பொது உடன்பாடொன்று பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக அரசியல் ஆர்வமுள்ளவர்கள் மத்தியில் சுயமாகவே ஏற்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியைப் பொறுத்தவரை, அதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டும் என்றதோர் உடன்பாடும், அதேபோல் சுயமாகவே ஏற்பட்டுள்ளது. பொதுவாக, இந்நாட்டு இடதுசாரிகள் ஆரம்பத்திலிருந்தே சர்வதேச நாணய நிதியத்தையும் உலக வங்கியையும் வெறுத்து வருகிறார்கள்.

அந்நிறுவனங்கள், பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் போது நலன்புரிச் செலவுகள், அரச திணைக்கள செலவுகள் ஆகியவற்றைக் குறைக்கவும் வரி வருமானத்தை அதிகரிக்கவும் பரிந்துரைப்பதே இதற்குக் காரணமாகும். ஆனால், இப்போது நாணய நிதியத்தின் உதவியைப் பெற்று, பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க, அரசாங்கம் எடுக்கும் முயற்சியை, எந்தவோர் இடதுசாரியும் எதிர்ப்பதாகத் தெரியவில்லை.

அரசாங்கத்தின் முயற்சிக்கு மாற்றமாக, விரக்தியின் விளிம்புக்கே தள்ளப்பட்டு இருக்கும் மக்கள் மத்தியில், முன்வைக்க அவர்களிடம் எந்தவொரு தீர்வும் இல்லாமை, அதற்குப் பிரதான காரணமாகும். அவர்களிம் மாற்றுத் தீர்வு இல்லாமல், அரசாங்கத்தின் முயற்சியை எதிர்ப்பதானது, நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தி, மக்களை கஷ்டத்துக்குள் தள்ளிவிட்டு, அதன் மூலம் மக்களை வென்றெடுக்க முயல்வதாக அர்த்தப்படலாம் என அவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே, நாணய நிதியத்திடம் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல், மௌன அங்கிகாரத்தை வழங்கும் நிலைக்கு, அந்த இடதுசாரிகளும் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தப் பொருளாதார உடன்பாட்டுக்கு புறம்பாக, அரசியலமைப்பு முறையையே மாற்ற வேண்டும் என்ற மற்றொரு உடன்பாட்டையும், இந்த இரட்டை நெருக்கடிகள் உருவாக்கியுள்ளன.

மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியின் இறுதிக் கட்டத்தைப் போன்று, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைக்கு எதிரானதொரு மனநிலை, மக்கள் மத்தியில் சுயமாகவே உருவாகியிருப்பதே, அரசியலமைப்பு முறைமை மாற வேண்டும் என்பதன் வெளிப்பாடாகும். ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்குகளும் ஆளும் தரப்பினர் பாரியளவில் ஊழல்கள் மூலமாக மக்கள் சொத்தை கொள்ளையடிப்பதுமே, தம்மை வாட்டும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குக் காரணம் என்ற தெளிவே, இந்த ஆட்சி அமைப்புக்கு எதிரான கோரிக்கையாகும்.

மஹிந்தவின் அரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் அவ்வளவு வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், கோட்டாபயவின் அரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். எரிபொருளுக்காகவும் எரிவாயுவுக்காகவும் மக்கள் பல நாள்களாக வரிசைகளில் காத்திருக்க நேர்ந்துள்ளமையின் காரணமாகவும் நீண்ட நேர மின்வெட்டுக் காரணமாகவும் கோட்டாபயவின் மீது இருந்த பயத்தை பார்க்கிலும், மக்களின் விரக்தி மேலெழுந்துள்ளது. அவர்கள் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தின் முன்னாலும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்; “கோட்டா வெளியேறு” என்று கோஷமெழுப்புகிறார்கள். இப்போது இந்தக் கோஷம், ஆர்ப்பாட்டம் நடத்தும் சகல குழுக்களினதும் பிரதான கோரிக்கையாகவும் கோஷமாகவும் அமைந்துள்ளது.

ஆனால், “கோட்டா வெளியேறு” என்ற கோஷத்தையும் கோரிக்கையையும் நீர்த்துப் போகச் செய்வதில், அரசியல்வாதிகள் ஓரளவுக்கு வெற்றி கண்டுள்ளனர். அதன்படி, இப்போது நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்குப் பதிலாக, ஜனாதிபதியின் அதிகாரங்களை ஓரளவுக்கு மட்டும் குறைக்கும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளனர்.

ஏற்கெனவே, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு இருப்பதால், இனி, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரமாணங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக இருந்தால், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தமாகத்தான் அதைச் செய்ய முடியும். எனவேதான், இப்போது ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்காக, அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற, முயற்சிக்கப்படுகிறது.

மஹிந்தவின் ஆட்சிக் காலத்துக்குப் பின்னர் போலவே, இம்முறையும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான முயற்சியை, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பது என்ற நிலைக்கு நீர்த்துப் போகச் செய்வதில், முன்நின்று செயற்பட்டவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

கடந்த முறை அவர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தே ஜனாதிபதியானார். பின்னர், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற, சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதைக் காரணமாகக் காட்டி, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றினார். எனினும், சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமாயின், அதையும் நடத்துவதாக தேர்தல் காலத்தில், மைத்திரி குறிப்பிட்டு இருந்தார்.

இம்முறையும், பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்து, ஜனாதிபதியையும் ஜனாதிபதி ஆட்சி முறையையும் மக்கள் வெறுத்துக் கிளர்ந்தெழுந்த போது, 19ஆவது திருத்தத்தின் பிரமாணங்களை மீண்டும் கொண்டு வந்து, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என, கடந்த ஏப்ரல் மாதம் முதன் முதலாகக் கருத்துத் தெரிவித்தவர் முன்னாள் ஜனாதிபதி சிறிசேன ஆவார். அதை ஏனோ, ஏனைய பல அரசியல்வாதிகளும் ஏற்றுக் கொண்டனர்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மூலம், ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தன என்பது உண்மை தான். ஆரம்பத்தில், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம் போன்ற உயர்மட்ட அதிகாரிகள் அனைவரையும் நியமிக்கவும் பதவிநீக்கம் செய்யவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தது.

அதன் மூலம், ஒரு சர்வாதிகாரியைப் போல் அவர்களை, தமது இஷ்டப்படி செயற்படும் நிலையில் வைத்திருந்தார். ஆனால், அரசியலமைப்பின் 17, 19 ஆகிய திருத்தங்கள், அவர்களை அரசியலமைப்புச் சபை என்றதொரு நிறுவனத்தின் அங்கிகாரத்துடனேயே நியமிக்கவும், பதவிநீக்கம் செய்வும் முடியும் என்ற நிலையை உருவாக்கின. ஆயினும், 18ஆவது திருத்தத்தின் மூலம், மஹிந்தவும் 20ஆவது திருத்தத்தின் மூலம் கோட்டாபயவும், மீண்டும் பழைய சர்வாதிகார அதிகாரங்களைப் பெற்றனர்.

2015ஆம் ஆண்டு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது, மூன்று கட்டமாக அது நீர்த்துப் போகச் செய்யப்பட்டதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறுகிறார்.

முதலாவதாக, அப்போதைய நிலையில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த முடியாது என்று மைத்திரி, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை முன்வைத்தார்.
இரண்டாவதாக, 19ஆவது திருத்தத்துக்கான சட்டமூலம், உயர்நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட போது, உயர்நீதிமன்றமும் சில வாசகங்களை நிறைவேற்ற, சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூறியதை அடுத்து, அந்த வாசகங்களும் நீக்கப்பட்டன.

மூன்றாவதாக, திருத்தத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற வேண்டும் என்பதால், அப்போது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையினராக இருந்து மஹிந்தவின் ஆதரவாளர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, மேலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியதாயிற்று என சுமந்திரன் கூறுகிறார்.

இப்போது, 19ஆவது திருத்தத்தில் இருந்த சில வாசகங்களையும் நீக்கிவிட்டே, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ, 21ஆவது திருத்தத்தை முன்வைத்திருக்கிறார். தமக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால், கடந்த காலத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை விமர்சித்து வந்தாலும், விஜயதாஸவுக்கும் கோட்டாபயவுக்கும் இடையில் விசேட உறவு இருக்கிறது.

கடந்த நல்லாட்சி காலத்தில், கோட்டாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போது, அவரைக் கைது செய்ய இடமளிப்பதிலலை என அப்போதைய நீதி அமைச்சரான விஜயதாஸ கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பாலம் தான், ‘அவன்ட்காட்’ நிறுவனத்தின் தலைவர் நிஸங்க சேனாதிபதி. நிஸங்கவும் கோட்டாவும் நெருங்கிய நண்பர்களாவர். விஜயதாஸ, அவன்ட்காட் நிறுவனத்தின் சட்டத்தரணியாக முன்னர் கடமையாற்றி இருந்தார்.

எனவே, இம்முறையும் கோட்டாவின் அதிகாரங்களைப் பாதுகாப்பதற்கு செயற்படுகிறார் என்றும் ஊகிக்கலாம். எனவே, போதியளவில் மக்களின் நெருக்குவாரம் அதிகரித்தால் மட்டுமே, அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பயனுள்ளவையாக அமையும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.