;
Athirady Tamil News

வீட்டுத்தோட்டத் திட்டத்தால் உணவு பஞ்சத்தை எதிர்கொள்ள முடியுமா? (கட்டுரை)

0

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலங்கையில் மிக விரைவில் பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படப் போவதாக, தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பலர் கூறுகிறார்கள். கடந்த வருடம், இரசாயன பசளை இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்த தடையின் காரணமாக, உள்நாட்டு உணவு உற்பத்தி வெகுவாகப் பாதித்தமையும் நாடு எதிர்நோக்கியிருக்கும் வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினையின் காரணமாக உணவு இறக்குமதி செய்ய முடியாமல் இருப்பதுமே, இந்த அச்சத்துக்கு காரணங்களாகும்.

இந்த நிலைமையால், நாட்டில் பட்டினிச் சாவு அதிகரிக்கும் என்றும் உணவுக்காகக் கலவரங்கள் ஏற்படலாம் என்றும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஏற்கெனவே நாட்டில் கொள்ளை, வழிப்பறிகள் போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் அண்மையில் நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த மூன்றாம் திகதி இலங்கை மன்றத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில், உணவுப் பிரச்சினையைப் பற்றிக் குறிப்பிட்டு உரையாற்றும் போது, “விரையில் இலங்கை மக்கள், இரண்டு வேளை உணவில் திருப்தி காண வேண்டிய நிலைமை உருவாகும்” என்று கூறியிருந்தார்.

அதை அடுத்து, கடந்த ஏழாம் திகதி நாட்டின் பொருளாதார நிலைமையைப் பற்றி, நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய பிரதமர், “நாட்டு மக்களில் 73 சதவீதமானோர், ஏற்கெனவே தமதுணவின் அளவையும் தரத்தையும் குறைத்துக் கொண்டுள்ளதாக உலக உணவுத் திட்டத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது” என்று கூறியிருந்தார்.

அத்தோடு, “இலங்கையின் சனத்தொகையில் 22 சதவீதமானவர்கள் உணவு இல்லாமல் இருக்கிறார்கள்” என இலங்கையிலுள்ள ஐ.நா பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்தி, வெள்ளிக்கிழமை (10) தெரிவித்திருந்தனர்.

இலங்கையில் அண்மைக் காலத்தில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதில்லை. தற்போதைய இளம் தலைமுறையினருக்கு, அவ்வாறானதொரு நிலைமையைப் பற்றிய அனுபவமும் இல்லை. ஆனால், தற்போது முதியவர்களாக இருக்கும் தலைமுறையினர் 1970களின் ஆரம்பத்தில், பாரியதோர் உணவுப் பஞ்சத்தை எதிர்நோக்கினர்.

அக்காலத்தில், இந்தப் பஞ்சத்தால் தோட்டத் தொழிலாளர்களே மிகவும் பாதிக்கப்பட்டனர். நாட்சம்பளத்தில் வாழும் அவர்களால், கிராமத்தவர்களைப் போல் சுற்றுப்புற சூழலில், உணவு வகைகளை தேடிக் கொள்வதும் கடினம். அவர்கள், நகரப்புற ஏழைகளைப் போல், குறைந்த அளவிலாவது ஆட்சியாளர்களினதும் அதிகாரிகளினதும் கண்ணில் படுவதும் இல்லை. தற்போதைய நிலையிலும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டால், தோட்டத் தொழிலாளர்களே மிகவும் மோசமாக பாதிக்கப்டுவார்கள்.

உலக உணவுத் திட்டத்தின் ஆய்வில் குறிப்படப்பட்டுள்ள நிலைமையை, சந்தைகளிலும் கடைகளிலும் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். மக்கள் முன்னரைப் பார்க்கிலும் குறைந்த அளவிலேயே பொருட்களை கொள்வனவு செய்வதாக, வியாபாரிகள் கூறுகிறார்கள்.

காரணம் மிகத் தெளிவானதாகும். கடந்த ஒரு வருடத்தில் மட்டும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை, 200 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதாவது, விலை மும்மடங்காகியுள்ளது. ஆனால், வர்த்தகர்கள் உள்ளிட்ட தமது வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வாய்ப்புள்ளவர்கள் தவிர்ந்த, ஏனைய சகலரினதும் வருமானம் குறைந்துள்ளது. பல தனியார் நிறுவனங்களில் ஊழியர்களின் சம்பளம், கொவிட்-19 நோய் காரணமாக, தொழில் திணைக்களத்தின் அனுமதியுடன் 2020 ஆம் ஆண்டு முதல் குறைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கூறுமளவுக்கு பிரச்சினை பாரதூரமானதல்ல என்றும், அவர் அரசியல் கண்ணோட்டத்தில் அவ்வாறு மக்களை அச்சமூட்டி வருவதாகவும் சிலர் கூறுகின்றனர். ஆயினும் விலைவாசி உயரும் வேகத்தையும் அடுத்த பெரும் போகம் வரை பசளைப் பிரச்சினை நீடிக்கும் என்பதையும் கருத்திற் கொள்ளும் போது, மேலும் ஓரிரு மாதங்களில் நிலைமை, பிரதமர் கூறுமளவுக்கு இல்லாவிட்டாலும் மிகவும் மோசமாகும் என்றே தெரிகிறது.

இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த வாரம் ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதியையும் ஐ.நா அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான பிரதி இணைப்பாளரையும் சந்தித்து, இலங்கைக்கு உதவிகளைப் பெறுவது தொடர்பாக கலந்துரையாடி இருந்தார்.

இதற்கு முன்னரே, இலங்கைக்கு உதவி வழங்குமாறு கோரி ஐ.நா உலகளாவிய கோரிக்கையொன்றை விடுக்க தீர்மானித்திருந்தது. அந்தக் கோரிக்கை வியாழக்கிழமை (09) ஆம் திகதி ஐ.நாவால் வெளியிடப்பட்டும் இருந்தது. அதன் மூலம், எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு உணவு, விவசாயம், சுகாதாரம் ஆகிய துறைகளுக்கு 1,600 கோடி ரூபாய் உதவியை ஐ.நா எதிர்ப்பார்க்கிறது.

இதற்கிடையே, வரப்போகும் பெரும் உணவுப் பஞ்சத்தை எதிர்நோக்கும் வகையில், விவசாயத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயிர்ச் செய்கைக்கு பொருத்தமான சகல காணிகளிலும் பயிர்ச் செய்கையை ஊக்குவிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அதன்படி பெருந்தோட்டத்துறையில் 23 தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத 9,000 ஹெக்டயர் காணி இருப்பதாகவும் அவற்றை உணவுப் பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்துமாறும் ஜனாதிபதி அண்மையில் அதிகாரிகளுக்குப் பணித்தார்.

அரசாங்கத்தின் இந்த முயற்சியைப் பார்க்கும் போது, சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருவதற்கு எடுத்த முடிவைப் போலவே, அரசாங்கம் சகல முக்கிய முடிவுகளையும் தாமதித்தே எடுக்கிறது போலும்! இரசாயன உர இறக்குமதி தடைசெய்யப்பட்டபோதே, அதாவது இந்த வருட ஆரம்பத்திலேயே உணவுத் தட்டுப்பாடு ஏற்படப் போகிறது என, கமநலத்துறை நிபுணர்களும் எதிர்க் கட்சியினரும் எச்சரித்தனர்.

எனினும், அரசாங்கம் அதனை பொருட்படுத்தவில்லை. விவசாய அமைச்சராக இருந்த மஹிந்தாநந்த அலுத்கமகே, உணவுப் பஞ்சம் பற்றிய எச்சரிக்கை, எதிர்க்கட்சியினரின் பிரசாரம் என்றும் உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும் கூறினார். விவசாய நடவடிக்கைகளுக்கான அரசாங்கத்தின் தற்போதைய முயற்சிகள், பாரதூரமாக சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவுகளாயின் இந்த வருட ஆரம்பத்திலேயே, அந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

தற்போதைய நெருக்கடிக்கு, அரசாங்கமே தான் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதில் எவ்வித விவாதத்துக்கும் இடமில்லை. ஆனால், அதனால் தற்போதைய முயற்சிகள் வெற்றியளித்தால், இந்த அழிவுக்கு நாட்டை இட்டுச் சென்ற அரசாங்கம், அரசியல் ரீதியாக மீண்டும் பயனடையும் என்று எதிர்க்கட்சிகள் சிந்தித்தால் அது, மக்கள் நலனை மறந்த சிந்தனையாகும். அரசாங்கம் இதுவரை நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் சென்றாலும், தாம் அரசியல் ரீதியாக பயன்பெறுவதற்காக நாடு அதே அழிவுப் பாதையிலேயே செல்ல வேண்டும் என்று சிந்திக்க, எதிர்க்கட்சிகளுக்கு தார்மிக உரிமை இல்லை.

எவ்வாறாயினும் வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கை உள்ளிட்ட அரசாங்கத்தின் தற்போதைய விவசாய முயற்சியானது, திட்டமிடப்பட்ட ஒன்றல்ல என்பதாகவே தெரிகிறது. இதுவரை விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு, எதிர்வரும் பெரும்போகத்துக்கே உரம் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியிருக்கிறார். அவ்வாறு இருக்க, தோட்டப்புறங்களிலும் வீட்டுத் தோட்டங்களிலும் இப்போது புதிதாக விவசாயம் செய்ய ஆரம்பித்திருப்போர், எங்கிருந்து உரத்தை பெறப் போகிறார்கள்?

திட்டமிடப்படாமையால் பெரும் பிரசாரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு பாரிய பயிர்ச் செய்கைத் திட்டங்கள், இறுதியில் பெரும் தோல்வியிலேயே முடிவடைந்தன. ஒன்று, முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக்கவால் 1965- 1970 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதாகும். அது வெறும் பிரசாரமாக மட்டுமே இருந்தது. 1970- 1977 காலப்பகுதியில் ‘விவசாயப் போர்’ என்ற பெயரில் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவால் ஆரம்பிக்கப்பட்ட விவசாய அபிவிருத்தி திட்டம், மக்களுக்கு பெரும் கொடுமையாகவே அமைந்தது.

உணவுப் பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டது. பாரிய பிரசாரத் திட்டமொன்று முடுக்கிவிடப்பட்டது. எனினும், மலைநாட்டில் பெரும்பாலான விவசாயிகள் காணி அற்றவர்களாக இருந்தமையாலும் வரண்ட பிரதேசத்தில் நீர்ப்பாசன வசதிகள் இல்லாமையாலும் வர்த்தகர்களின் கடும் சுரண்டலின் காரணமாகவும், மக்கள் விவாசயத்தின் பக்கம் ஈர்க்கப்படவில்லை. விவசாயத்தில் ஈடுபட்டவர்களும் தமது முயற்சியால் திருப்பியடையவில்லை.

இறுதியில், சுமார் நான்கு வருட காலமாக நாடு பெரும் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டது. வரலாறு காணாதவாறு, 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று வெற்றி பெறுவதற்கு, அந்தப் பஞ்சம் ஐக்கிய தேசிய கட்சிக்கு உதவியது. இந்த வரலாற்றில், தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் கற்க பாடங்கள் இருக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.