;
Athirady Tamil News

இலங்கை அரசியல் தலைவரின் மாற்றமும்! மக்களின் எதிர்பார்ப்பும்!! (கட்டுரை)

0

இலங்ரகையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் மக்களை பெரும் எதிர்பார்ப்பிற்குள் தள்ளி விட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் சரிசெய்யப்பட்டு மக்களின் வாழ்க்கை மாற்றமடையும் என்ற எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளது.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதும் மாற்றமானது எவ்வாறு அமைய வேண்டும், அது மக்கள் நலன்சார்ந்து முற்போக்கு கொள்கையுடன் இந்த மாற்றம் முன்னெடுக்கப்பட வேண்டும்.இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக நாட்டில் பதவி விலகல் கோரிக்கையை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட கடும் போராட்டங்கள் காரணமாக பிரதமராக பதவி வகித்த மகிந்த இராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

அத்துடன் நின்று விடாத போராட்டக்காரர்கள் ‘கோட்டா கோ கோம்’ எனும் தொனிப்பொருளுடன் ஜனாதிபதியை பதவிவிலகுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக மக்களால் சகல அதிகாரங்களுடனும் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்த முடியாத நிலையில் நாட்டை விட்டு தப்பி ஓடியிருந்தார்.

போராட்டக்காரர்கள் அடுத்து பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு கோரிக்கை வைத்து போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு அடிபணியாத ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் சாணக்கியத்தின் மூலம் ஜனாதிபதி ஆகி நிறைவேற்று அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
.லங்கை நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் அவைகள் குறித்து அக்கறை கொள்ளும் மன நிலையில் இல்லை, அரசியல் மாற்றங்கள் மற்றும் அரசியல் சாகசங்கள் குறித்து மக்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதாக இல்லை , மக்கள் தங்கள் பொருளாதார மற்றும் வாழ்வாதார பிரச்சனைகளை எவ்வாறு சரிசெய்வது அல்லது எவ்வாறு பொருளாதார மாற்றத்திற்குள் பயணிப்பது என்பது குறித்து தவித்து வருகின்றனர்.

நாட்டை விட்டு இளைஞர்கள் யுவதிகள் வெளியேறுவதற்கு ஆர்வம் காட்டிவரும் நிலையில் புதிய அரசியல் மாற்றமும், புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க மக்களால் பொருளாதாரப்பிரச்சனையை சீர் செய்யக்கூடியவராக எதிர்பார்க்கப்படுகின்றார்.
இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க மேற்குலக நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை கொண்டவராகவும் அந்நாடுகளுக்கு உவப்பானவராகவுமே காணப்படுகின்றார்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் பலமாக இருந்த காலத்தில் அவர்களின் பலம் தொடர் போராட்டமே என்பதனை கண்டறிந்து புலிகளுடன் சமாதான உடன்படிக்கையை கைச்சாத்திட்டு சமாதான கால வாழ்வியலுக்குள் அவர்களை உட்படுத்தி புலிகளின் போரிடும் ஆற்றலை குறைத்து இறுதியில் புலிகளை அழித்த தந்திரவாதியான ரணில் விக்கிரமசிங்க இலங்கை அரசியல் வரலாற்றில் நீண்ட பழுத்த அரசியல் அனுபவம் கொண்டவர்.

இலங்கை அரசியல் வரலாற்றில் நாற்பத்தைந்து ஆண்டுகள் பாராளுமன்றத்தில் மக்கள் சேவையாற்றியுள்ள ரணில் விக்கிரமசிங்க படித்த மேல்தட்டு வர்க்கத்தினரால் மிகவும் விரும்பப்படும் ஒரு அரசியல் சாணக்கியன்.
மக்களால் தெரிவு செய்யப்படாமலே, நிறைவேற்று அதிகாரத்தை கைப்பற்றி சர்வஅதிகாரங்களையும் பெற்று ஒரு பலமிக்க அரசியல் தலைவனாக ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

நாடாளுமள்றத்தில் சபாநாயகர் பதவியை தவிர அனைத்து பதவிகளையும் வகித்தவர் ரணில் விக்கிரமசிங்க.
கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர்.
ஐ.தே.க.வின் இளைஞர் முன்னணி ஊடாக அரசியல் பயணத்தை ஆரம்பித்த ரணில் விக்கிரமசிங்க 1977 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கம்பகா மாவட்டத்தில் பியகம பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

ரணிலின் அரசியல் பயணத்தில் இரண்டு அதிகார மையங்களை வீழ்த்திய பெருமை ரணிலை சாரும் ஒன்று புலிகளை அழித்தமை, இரண்டாவது 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவி வகித்த மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, மைத்திரிபால சிறிசேனாவை களமிறக்கியதுடன், ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனாவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் என்ற தொனியில் வியூகம் வகுக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்தின் காரணமாக மகிந்த ராஜபக்சவின் பத்து ஆண்டுகால அரசியல் சாம்ராஜியம்’ சரிக்கப்பட்டு அந்த இடத்திற்கு மைத்திரிபால சிறிசேனாவுடன், பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இணைந்துகொண்டு நல்லாட்சி என்ற தொனிப்பொருளில் அதிகாரங்கள் பகிரப்பட்டிருந்தது.
புலிகளை வெற்றி கொண்டு இன்னும் இருபது வருடங்கள் ஜனாதிபதியாக இருக்கும் கனவுடன் இலங்கை அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியிருந்த மகிந்த ராஜபக்சவின் அதிகார மையத்தை வீழ்த்தியமை இரண்டாவது வெற்றியாக ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடு காணகப்படுகின்றது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் தமிழ் சிங்கள மக்கள் வெள்ளைவான் கடத்தலுக்கு அஞ்சி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. அக்காலப்பகுதியில் பல சிங்கள தமிழ் ஊடகவியலாளர்கள் வெள்ளைவானில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர். நாடு ஒரு காட்டாட்சியின் உச்சத்தில் இருந்த தருணத்தில் ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்ட நல்லாட்சியானது மக்களுக்கு வெள்ளைவான் கடத்தல் கொலைகளின் அச்சத்தை இல்லாது போக்கியிருந்தது.

மகிந்த ராஜபக்சே மற்றும் கோட்டாபே இராஜபக்சேக்களின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல் காரணமாக இலங்கை நாடு திவாலடைந்துள்ளது. திட்டமிடாத பொருளாதாரக்கொள்கைகள் மக்களை மீளமுடியாத பெரும் துண்பத்திற்குள் தள்ளியுள்ளது. இலவச கல்வி, சுகாதாரம், போக்குவரத்து என்பன பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு தனது இயல்புவாழக்கையை இழந்து முடங்கும் நிலைமையை நோக்கி பயணித்துக்கொண்டுள்ளது.

நாட்டு மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அலைந்துகொண்டிருக்கும் நிலையில் அரசியல் மாற்றம் மற்றும் அரசியல் தலைவர் மாற்றம் பெரும் எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 45 வருடங்களாக மக்கள் சேவையாற்றிய ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவும் ஆற்றலும் மக்களை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுவரை நாடளுமன்றத்தில் தொடர்ந்துவரும்’ கட்டமைப்புக்களான, அரச வாகனம், அரச பங்களா, இலவச பயணம், மற்றும் கொந்தராத்து மோசடிகள் பேன்றவற்றை தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க அனுமதிப்பாராகில் எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு நாட்டை மீட்டெடுக்க முடியாமலே போய்விடும் ஏற்படாமலே போய்விடும்.

இலங்கை ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கும் ஜனாதிபதிக்கு முன்னால் பெரும் சவால் ஒன்று உள்ளது, இலங்கை அரசியலில் இருந்து இராஜபக்சக்களை வெளியேற்றிய போராட்டக்காரர்கள் ரணில் விக்கிரமசிங்கவையும் வீட்டுக்கு அனுப்புவோம் என்று சூழுரைத்துள்ளனர்.

அதற்கான சிறிய ஆரம்ப பொறிகளை தற்போது காணக்கூடியதாக உள்ளது. போராட்டக்காரர்களின் போராட்டங்கள் வலுவிழக்க செய்யப்படவேண்டுமானால் மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தீர்க்கப்பட வேண்டும்.
அதற்கான தெளிவான திட்டமிடல் உருவாக்கப்பட்டு மக்கள் முன் வைக்கபபடும் போது நாட்டை மீட்அடடுக்கும் கால அவகாசம் கிடைக்கபெறும், அதிகாரத்தை பயன்படுத்தி கைதுகளும் சிறை அடைப்புக்களும், மக்களை தொடர்ந்து பட்டினி சாவிற்கு வழி நடத்தும் , எனவே மக்களின் எதிர்பார்ப்புக்களை புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடிபிடித்தறிந்து செயற்படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி கட்டிலேறியிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிருக்கும் இன்னொரு சவால் மக்கள் பிரச்சனைகளுக்கு முடிவு கட்டி மக்கள் மனங்களை வென்று நாட்டை மீட்டெடுத்த எமது இலங்கை நாட்டின் எட்டாவது தலைவன் (ஜனாதிபதி) என மக்களின் மனங்களில் ஆதரவை பெற வேண்டும் என்பதே.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் அனுபவத்தையும், மேற்கத்தைய நாடுகளின் ஆதரவையும் இலங்கை மக்களின் நலனுக்கு பயன்படுத்த முன்வரவேண்டும். அரசியல் நலன்களை பின் தள்ளி மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அழிக்காத பட்சத்தில் மக்களின் கோபத்திற்கு ஆளானால் அரசியல்வாதிகளின் கட்டியிருக்கும் கோமணமும் பறிபோய்விடும்.

-எம்.ஜி.ரெட்னகாந்தன்–

You might also like

Leave A Reply

Your email address will not be published.