;
Athirady Tamil News

கொள்கைப் பிரகடனம்: நடைமுறை திட்டமா, கனவா? (கட்டுரை)

0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கொள்கை விளக்க உரைகள், அவர் முக்கிய சந்தர்ப்பங்களில் நிகழ்த்திய உரைகள் ஆகியவற்றோடு ஒப்பிடும் போது, கடந்த மூன்றாம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தில் நிகழ்த்திய கொள்கை விளக்க உரை முற்போக்கானது.

குறிப்பாக, இனப்பிரச்சினை விடயத்தில் தமது கொள்கை, கோட்டாபயவின் கொள்கையைப் பார்க்கிலும் வேறுபட்டது என்று கூறுவதைப் போல், அது இருந்தது.

ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, அதேமாதம் 28ஆம் திகதி பாராளுமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைத்தார். புதிய கூட்டத் தொடர், ஓகஸ்ட் மூன்றாம் திகதி அவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டு, அன்று தமது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டு உரையாற்றினார்.

1972ஆம் ஆண்டுக்கு முன்னர், பாராளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர்கள், மகா தேசாதிபதியாலேயே (Governor General) ஆரம்பித்து வைக்கப்பட்டன. அப்போதும் தேசாதிபதி கொள்கை விளக்க உரையொன்றை நிகழ்த்தினார். அது, ‘சிம்மாசன உரை’ என்றே அழைக்கப்பட்டது. எனவே, இன்றும் சிலர் ஜனாதிபதிகளின் கொள்கை விளக்க உரையை ‘சிம்மாசன உரை’ என அழைக்கின்றனர்.

கோட்டாபய ராஜபக்‌ஷ, 2019ஆம் ஆண்டு அநுராதபுரத்தில் ‘ருவன்வெலிசாய’ என்னும் மன்னர் துட்டகைமுனுவால் கட்டப்பட்ட தூபியின் முன்னால், ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்துவிட்டு, அதன் பின்னர் பாராளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர்களை ஆரம்பித்து வைக்கும் போது நிகழ்த்திய உரைகளின் போதும், தாம் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளாலேயே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டேன் என்பதை கூறி வந்தார். இதன் மூலம் அவர், மேன்மேலும் இந்நாட்டு சிறுபான்மை மக்களிடமிருந்து, தம்மை அந்நியப்படுத்திக் கொண்டே வந்தார்.

ஆனால், ரணில் தமது முதலாவது கொள்கை விளக்க உரையின் ஆரம்பத்திலேயே, “நான், இந்நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் ஆகிய சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்தாலேயே தெரிவு செய்யப்பட்டேன்” என்று கூறினார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும், இனப்பிரச்சினை விடயத்தில் பொதுஜன பெரமுனவின் கொள்கையைத் தாம் பின்பற்றப் போவதில்லை என்பதைப் போல் அது அமைந்திருந்தது.

அத்துடன், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க, அரசியலமைப்பு ரீதியாகத் தாம் கட்டுப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு, ஏனைய சமயங்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் குறிப்பிட்டார். இதனை அவர், சட்டத்தில் இருப்பதால் குறிப்பிட்டாரா அல்லது உண்மையிலேயே அவரும், ‘சமயம்’ என்ற விடயத்தில் ஏனைய ஆட்சியாளர்களைப் போன்றவர் என்பதால் குறிப்பிட்டாரா என்பது தெளிவில்லை. அதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும்.

இலங்கை, வரலாறு காணாத பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், நிகழ்த்தப்பட்ட இந்தக் கொள்கை விளக்க உரையில், பொருளாதார விடயங்களே முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டன. தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுத்து, அபிவிருத்திப் பாதையில் பயணிப்பதற்கான தமது திட்டங்களை முன்வைத்தார்.

அதில் முதலாவதாக, உடனடிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டமாக, தற்போது முன்னெடுத்துச் செல்லப்படும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை விளக்கினார்.

“நான்காண்டுத் திட்டமாகவே, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாதத்திலிருந்து அப்பேச்சு வார்த்தைகள் மீண்டும் தொடரும். தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆளணி மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை, துரிதமாகவும் வெற்றிகரமாகவும் பூர்த்தி செய்வதே நோக்கமாக இருக்கிறது. சர்வதேச நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களான ‘லசார்ட்’, ‘கிளிபேர்ட் சான்ஸ்’ ஆகிய நிறுவனங்களின் உதவியுடன், சர்வதேச கடன்களை மறுசீரமைக்கும் திட்டப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்திட்டம் தயாரிக்கப்பட்டு பூர்த்தியானதன் பின்னர், அதனை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிப்போம். அதன் பின்னர் கடன் வழங்கிய நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம். பின்னர், தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம்” என ஜனாதிபதி கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள், தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுபடுவதை மட்டுமே இலக்காகக் கொண்டதாகும். ஆனால், அதன் மூலமும் நாட்டின் கடன் பழு மேலும் அதிகரிக்கும். எனவே, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான தமது கொள்கை அடிப்படையை அவர், பிரிதோர் இடத்தில் விளக்கினார்.

“அரசுக்கு சொந்தமான நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் மீது, நாம் தொடர்ந்தும் தங்கியிருந்தால் நாடு மேலும் பள்ளத்துக்கே சென்றுவிடும். எனவே, அவ்வாறான நிறுவனங்களை கைவிடுவது தொடர்பாக, கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுக்க வேண்டும். 21ஆம் நூற்றாண்டு முடிவடைவதற்கு முன்னர், இந்தோ-பசுபிக் பிராந்தியம் பொருளாதார ரீதியாக, உலகில் மிகவும் பலம் வாய்ந்த பிராந்தியமாகும் எனக் கருதுகிறேன். இந்தப் பின்னணியில் எமது நாடு, தந்திரோபாய ரீதியில் முக்கியமானதோர் இடத்தில் அமைந்திருப்பது மிகவும் பெறுமதி மிக்கதாகும். இந்த நிலைமையை நாம் அதிகூடிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில், எமது எதிர்கால வியாபார நிறுவனச் சட்டங்களை நாம், மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

நட்டமடைந்து வரும் நிறுவனங்களை கைவிட்டுவிடுவது என்பது, அனேகமாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையாக இருக்கலாம். அல்லது, ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் தனியார்துறை மீது நம்பிக்கை வைத்த கட்சி என்பதால், அவரது கருத்தாகவும் இருக்கலாம்.

அதன் பின்னர், மற்றோர் இடத்தில் தமது நீண்ட கால பொருளாதார திட்டத்தை விளக்கினார். “2025ஆம் ஆண்டு, மிகை வரவு செலவு திட்டமொன்றை முன்வைப்பதே எமது நோக்கமாகும். 2026ஆம் ஆண்டளவில், பலமான பொருளாதார அடித்தளமொன்றை அமைத்துக் கொள்ளும் வகையில், பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதே எமது முயற்சியாகும். தற்போது மொத்த தேசிய உற்பத்தியில் 140 சதவீதமாக இருக்கும் அரச கடன்களை, 2032ஆம் ஆண்டில் 100 சதவீதத்துக்கு குறைவானதொரு நிலைக்கு கொண்டு வருவது திட்டமாகும். இவ்வாறு நாட்டையும் தேசத்தையும் பொருளாதாரத்தையும் கட்டி எழுப்பினால், சுதந்திரத்துக்கு 100 வருடங்கள் பூர்த்தியாகும் 2048 ஆம் ஆண்டளவில், நாம் பூரண அபிவிருத்தி அடைந்த நாடாகலாம்”.

அவர் இவ்வாறு கூறினாலும், இவற்றை அடையும் வழிமுறைகளையும் தந்திரோபாயங்களையும் விளக்காத வரை, இவை அனைத்தும் கனவுகளாக அல்லது எதிர்ப்பார்ப்புகளாகவே இருப்பதாகவே தெரிகிறது.

உதாரணமாக, 2032ஆம் ஆண்டளவில் அரச கடன்களை தேசிய உற்பத்தியில் 100 சதவீதத்துக்கு குறைப்பது, எவ்வாறு என்பதை அவர் விளக்கவில்லை. இலங்கை அரசாங்கம், பொருளாதார கொள்கைத் திட்டமொன்றை முன்வைக்கும் வரை, இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் நோக்கம் எதுவும் இல்லை என உலக வங்கி மே மாதம் 24ஆம் திகதி கூறியிருந்தது. பின்னர் ஜூலை 28 ஆம் திகதியும் இதே கருத்தை அவ்வங்கி வெளியிட்டு இருந்தது. எனவே, இந்த உரையானது, அவரது ஆசையாகவேயன்றி, உரிய தந்திரோபாயங்களுடன் முறையாக திட்டமிடப்பட்ட ஒன்றல்ல என்றே தெரிகிறது.

இலங்கையின் தலைவர்கள், இதற்கு முன்னரும் இதுபோன்ற மிகவும் கவர்ச்சியான திட்டங்களை முன்வைத்துள்ளனர். ஆனால், அவை எதுவுமே நடைமுறைக்கு வரவில்லை. அதேவேளை, ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் திட்டங்களுக்கு, அவரை ஜனாதிபதியாக்கிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எந்தளவுக்கு உதவும் என்ற சந்தேகமும் எழாமலில்லை.

ஜனாதிபதியின் உரையை அடுத்து ஊடகவியலாளர்கள் பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கருத்துக் கேட்டபோது, அவர் ஏதோ முணுமுணுத்தபடி, முகத்தை திருப்பிக் கொண்டு போவதை, நாடே தொலைக்காட்சி மூலம் கண்டிருந்தது.

இந்த உரையில், பொதுஜன பெரமுனவை சினமூட்டக்கூடிய பல கருத்துகள் பொதிந்திருந்தன. டொலருக்கான ரூபாயின் பெறுமதியை, குறிப்பிட்டதொரு விலையில் வைத்துக் கொண்டும், ஜப்பான் உதவியில் ஆரம்பிக்கப்பட்ட ரயில் பாதை திட்டத்தை நிறுத்தியும் கோட்டாபயவின் அரசாங்கம், நாட்டில் வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினையை மோசமடையச் செய்ததை ரணில், தமது உரையில் குறிப்பிட்டார். ‘சுவசெரிய’ அம்புலன்ஸ் வண்டித் திட்டத்தை பொதுஜன பெரமுன எதிர்த்ததை நினைவூட்டினார். ஜனாதிபதியானவர் ஓர் அரசனோ, தெய்வமோ அல்ல எனக் குறிப்பிட்டார். மஹிந்த ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவரை, அவரது கட்சிக்காரர்கள் ஓர் அரசனாக சித்திரிக்க முயன்றதை இது நினைவூட்டுகிறது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு, அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கூறினார். இது பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு முரணான கூற்றாகும். எனவே, ஜனாதிபதியின் திட்டங்கள் கனவா, யதார்த்தமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.