;
Athirady Tamil News

தாய்வான் முதல் இலங்கை வரை!! (கட்டுரை)

0

தாய்வான் பிரச்சினையில் சீன, அமொிக்க நாடுகளுக்கிடையில் முறுகல் நிலை நீடித்து வருகிறது. அமொிக்க பாராளுமன்ற சபாநாயகா் நான்சி பெலோசியின் தாய்வானுக்கான விஜயத்தை தொடா்ந்து இந்த இரண்டு நாடுகளுக்கிடையில் சச்சரவு தீவிரமடைந்து வருகிறது.

தாய்வான் விவகாரத்தில் தனது “ஒரே சீனா” கொள்கைக்கு எதிராக அமொிக்கா செயற்பட்டு வருவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல், அமொிக்கா நெருப்போடு விளையாடுவதாக கூறி எச்சரித்துள்ள சீனா, தாய்வான் கடற் பிராந்தியத்தில் தனது இராணுவ பலத்தையும் காட்டி எதிா்வினையாற்றியுள்ளது.

எதிரியை தனது நாட்டில் மட்டுமல்ல, தனது அயல் நாட்டில் கூட கால் வைக்க இடம் கொடுக்கக் கூடாது என்ற கொள்கையில் சீனா செயற்பட்டு வருகிறது. நான்சி பெலோசியின் வருகையைக் கண்டு கடுப்பேறுவதற்கு சீனாவுக்கு இதுவே காரணமாகியது.

ஆனால் சீனா பல நாடுகளில் கால் பதித்து அந்தந்த பிராந்தியங்களில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி வருகிறது. சீனாவின் ஒரு பட்டி ஒரு பாதை (BRI – Belt and Road Initiative) என்ற திட்டம், உலக நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட திட்டமே என்று வா்ணிக்கப்படுகிறது.

ரஷ்ய, உக்ரைன் யுத்தத்தின் பின்னணியிலும் இத்தகைய நிலைப்பாட்டையே காண முடிகிறது. உக்ரைன் நேட்டோ நாடுகளுடன் நட்புறவு கொண்டு, தன்னை நேட்டோ அணியில் இணைத்துக் கொள்ள எடுத்த முயற்சியை ரஷ்யா கடுமையாக கண்டித்து வந்தது.

தனது எதிரணியான நேட்டோவை தனது அயலில் கொண்டு வந்து உட்கார வைக்கும் உக்ரைனின் செயற்பாட்டை ரஷ்யா கடுமையாக எதிா்த்தும், எச்சாித்தும் வந்தது.

ரஷ்யாவின் வேண்டுகோளுக்கு இசைந்து கொடுக்காத உக்ரைன் தனது கொள்கையில் விடாப்பிடியாக இருந்தது. இறுதியில் ரஷ்யா உக்ரைனோடு யுத்தத்தை ஆரம்பித்தது. ரஷ்ய உக்ரைன் மோதலால் அந்த இரண்டு நாடுகள் மட்டுமல்லாது, உலகின் பல நாடுகள் அதன் பாதிப்பை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. பல நாடுகளின் பொருளாதாரம் சாிவடைந்து பாரிய வீழ்ச்சியை சந்திப்பதற்கு இந்த யுத்தம் காரணமாக அமைந்தது.

அமொிக்காவும், ரஷ்யாவும் இரு பெரும் வல்லரசுகளாக இருந்த காலப்பிாிவில் ரஷ்யாவின் அதிகார பலத்திற்கு முகம் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டதே இந்த நேட்டோ அமைப்பு.

இந்த நேட்டோவின் சவாலுக்கு முகம் கொடுப்பதற்காக ரஷ்யா வாா்சோ என்ற அமைப்பை உருவாக்கியது. எண்பதுகளின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு வாா்சோ அமைப்பு செயலிழந்து போனது.

சீன, தாய்வான் பிரச்சினை

தற்போது உருவாகியிருக்கும் தாய்வான் பிரச்சினையிலும் இதே பூகோள அரசியல் நிகழ்ச்சி நிரலே புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. கடந்த பல தசாப்தங்களாக “ஒரே சீனா” என்ற கொள்கையில் தாய்வானை தன்னோடு இணைத்துக் கொள்ள சீனா முயற்சி மேற்கொண்டும், உரிமை கொண்டாடியும் வருகிறது. இதற்கு தாய்வான் தொடா்ந்து மறுப்புத் தொிவித்து வருகிறது.

தாய்வான், கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு நாடாகும். அண்டை நாடுகளாக சீன மக்கள் குடியரசு, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகியவை அமைந்துள்ளன. இதன் தலை நகரமாக தாய்பே உள்ளது. தாய்பே நகரம் தாய்வானின் அரசியல், பொருளாதார மற்றும் கலாசார மையமாக உள்ளது. இது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும்.

பல தசாப்தங்களாக இருந்து வரும் சீன, தாய்வான் முரண்பாடுகளுக்கு மத்தியில் அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகா் நான்சி பெலோசி அண்மையில் தாய்வானுக்கு மேற்கொ்ணட விஜயம் ஒரு புதிய நெருக்கடியை பிராந்தியத்தில் தோற்றுவித்தது.

சீனா, தனது அயல் நாடான தாய்வான் நாட்டுக்குள் தனது அரசியல் எதிரியாக கருதப்படும் அமெரிக்காவை காலூன்ற விடாமல் தடுப்பதற்கு முயற்சி செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தனது இராணுவ பலத்தை வைத்து எதிர்வினையாற்றவும் ஆரம்பித்திருக்கிறது.

தனது ஏவுகணைகளை தாய்வான் கடற்பிராந்தியத்தில் வீசிய சீனா, தாய்வானின் அமெரிக்க நட்புக்கு பாடம் புகட்ட புறப்பட்டிருக்கிறது.

தனது அரசியல் பலத்தை ஏனைய நாடுகளிடம் தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்யும் இத்தகைய ஆதிக்க சக்திகளின் பலவந்தம் மற்றும் பலப் பரீட்சையால் பல நாடுகளில் பதற்றம் உருவாகி வருகிறது.

சீனா இலங்கையோடு வைத்துள்ள தொடா்பையும் இந்து மா கடல் பிராந்தியத்தில் அது செலுத்தும் ஆதிக்கத்தையும் இந்தியா மற்றும் அமொிக்கா போன்ற நாடுகள் ஓா் அச்சுறுத்தலாகவே பாா்க்கின்றன.

உக்ரைனுக்குள் ஊடுறுவும் நேட்டோவை ரஷ்யா தனக்கு வரும் அச்சுறுத்தலாக பாா்க்கிறது. தனது அண்டை நாடான தாய்வானுக்குள் ஊடுறுவும் அமெரிக்காவின் பிரசன்னத்தை தனது நாட்டுக்கு எதிராக வரும் அச்சுறுத்தலாக சீனா பாா்க்கிறது.

இலங்கைக்குள்ளும், இலங்கையை வைத்து இந்து மகா கடற் பிராந்தியத்திற்குள்ளும், ஊடுறுவும் சீனாவின் பிரசன்னத்தை இந்தியா தனக்கேற்பட்டுள்ள அச்சுறுத்தலாக பாா்க்கிறது.

இந்த அதிகார பலத்தைக் காட்டும் போட்டா போட்டி பல வடிவங்களில் அரங்கேறுகிறது. யுவான்வேங் 5 கப்பலின் வருகை கூட சீன ஆதிக்கத்தை நிலைநாட்டும் செயற்பாடுகளில் ஓர் அம்சமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இந்த விவகாரம் பிராந்தியத்தில் அமைதியின்மையை உருவாக்கியிருக்கிறது.

இலங்கை பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கியிருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் ரணில் விக்ரமசிங்கவின் இந்த அரசாங்கத்திற்கு விபரீதமான ஓர் அழுத்தத்தை சீனாவின் இந்தக் கப்பல் விவகாரம் வழங்கியிருக்கிறது.

எப்படியிருப்பினும், இந்திய அரசாங்கத்தின் அழுத்தத்தையடுத்து, இலங்கை வெளிவிவகார அமைச்சு சீன அரசாங்கத்தை அணுகி இந்தக் கப்பலின் பயணத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

குறித்த கப்பல் தொடா்பாக மேலும் ஆலோசனைகள் தேவைப்படுவதால், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு மேற்படி கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு, கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு தனது அமைச்சின் மூலம் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.

ஆனால் இந்தியாவின் குற்றச்சாட்டக்கு பதிலளித்துள்ள சீனா, இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல், சீனாவின் அறிவியல் ஆய்வுகளை நியாயமான முறையில், விவேகமான வழியில் பார்க்க வேண்டும் என்றும், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பு போன்ற செயற்பாடுகளுக்கு இடையூறு செய்வதை நிறுத்துமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்துவதாகவும் அந்த பதிலில் குறிப்பிட்டிருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில் இடம்பெற்ற அரசியல் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் சர்ச்சைக்குரிய சீன கப்பலின் வருகை திட்டமிட்டபடி நடக்காது என்று உறுதியளித்தாக இந்திய ஊடக செய்திகள் கூறுகின்றன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இடையிலான ஒரு சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது. கம்போடியாவின் தலைநகரில் இடம்பெற்ற ஆசியான் மாநாட்டின் போது இரு அமைச்சா்களும் சந்தித்து பேச்சுவாா்த்தை நடாத்தினா்.

இலங்கையின் நம்பிக்கையான நட்பு நாடான இந்தியா எப்போதும் இலங்கைக்கு கைகொடுக்குமெனவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுக்க ஈடுபாட்டுடன் இந்தியா செயற்படுமென்றும் இந்த சந்திப்பின் போது ஜெய்சங்கா் உறுதியளித்துள்ளாா்.

என்றாலும், இந்தியாவின் அழுத்தத்தினால் சீனாவின் மீது இலங்கை வைத்த கோரிக்கையை சீனா ஒரு பொருட்டாக எடுக்கவில்லை என்ற செய்திகளும் வெளியாகி வருகின்றன.

சீனாவின் யுவான்வேங் 5 கப்பல் ஹம்பாந்தோட்டையை நோக்கிய அதன் பயணத்தை தொடா்ந்துக் கொண்டிருப்பதை, கப்பல்களின் போக்குவரத்தைக் குறித்துக்காட்டும் vesselfinder.com இணைய தளத்தில் பாா்வையிடக் கூடியதாக இருக்கிறது.

இலங்கை வரும் பாகிஸ்தான் போா்க்கப்பல்

இதேவேளை, சீனாவில் கட்டமைக்கப்பட்ட பாகிஸ்தானின் ஏவுகணை வழிகாட்டல் திறன் கொண்ட, போர்க் கப்பலான பி.எஸ்.என். தைமூா் (PNS Taimur) என்ற கப்பலுக்கு இலங்கையில் தரித்து நிற்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

ஓகஸ்ட் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் இந்தக் கப்பல் தரித்து நிற்கவிருக்கிறது.

சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கப்பல்கள் ஒரே நேரத்தில் இலங்கைக்கு வருவது குறித்த செய்தி பிராந்திய அரசியலில் பேசு பொருளாகியிருக்கிறது.

பாகிஸ்தானின் போர்க்கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்ட இலங்கையின் இந்த வியூகத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் தைமூா் போர்க் கப்பல், சீனாவின் ஷாங்காய் நகாிலுள்ள ஹுடொங் சொங்ஹுவா (Hudong-Zhonghua) கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஒரு போர்க்கப்பலாகும்.

கம்போடிய மற்றும் மலேசிய கடற்படைகளுடன் பயிற்சியில் ஈடுபட்டதன் பின்னா் பாகிஸ்தான் திரும்பும் வழியில் இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகிறது.

பாகிஸ்தானின் இந்தப் போர்க்கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியிருந்த போதும், ஓகஸ்ட் 7 ஆம் திகதி முதல் 10ம் திகதி வரை சிட்டகொங் (Port of Chittagong) துறைமுகத்தில் தாித்து நிற்பதற்கு, இந்தக் கப்பலால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பங்களாதேஷ் அரசாங்கம் மறுப்புத் தொிவித்துள்ளது.

பங்களாதேஷில் எதிா்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் ஷேக் முஜீபுர் றஹ்மானின் நினைவு தினத்தின் பாதுகாப்பு கருதியே இந்த பாகிஸ்தானின் கப்பலுக்கு மறுப்பு தொிவித்ததாக அறிய வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.