;
Athirady Tamil News

ஆட்சியைப் பிடிக்கும் மகுட வாசகம் ‘சிஸ்டம் சேஞ்ச்’ !! (கட்டுரை)

0

‘சிஸ்டம் சேஞ்ச்’ (கட்டமைப்பு மாற்றம்) என்ற சொற்றொடர், சஜித் பிரேமதாஸ முதல் அநுர குமார திஸாநாயக்க வரை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும், உச்சரிக்கும் மந்திரமாக மாறியுள்ளது.

ஆனால், இது ஆட்சியைப் பிடிக்க விரும்பும் அரசியல்வாதிகள் மட்டும் சொல்லும் வார்த்தை அல்ல! பொதுவாகவே சமகால யதார்த்தத்தில், அதிருப்தி கொண்டுள்ள பலரும், ‘சிஸ்டத்தின்’ மீது பழிபோடுவது என்பது, சர்வசாதாரணமான விடயமாகிவிட்டது.

ஜனநாயகம் என்பது, ஆட்சியைத் தீர்மானிக்கும் பலத்தை மக்களிடம் கொடுத்திருக்கிறது. இன்று, நாம் அனுபவிக்கும் ஜனநாயகக் கட்டமைப்பும் மனித உரிமைகள் தரும் பாதுகாப்பும், மனித சமூகத்தின் பல நூற்றாண்டு போராட்டத்தின் பலனாகும்.

ஜனநாயகம் என்பது, ஓர் இரவில் உருவாகவில்லை. ஜனநாயகம், காலவோட்டத்தில் பல மாறுதல்களை தன்னகத்தே ஏற்றுக்கொண்டுள்ளது. உலக வரலாற்றில், ஜனநாயகத்துக்கு மாற்றாக, பல ‘சிஸ்டங்கள்’ பரீட்சிக்கப்பட்டன; இன்றும் பரீட்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஜனநாயகம் என்பதும், கூர்ப்படைந்துகொண்டேதான் வருகிறது. அதுதான் இந்த ஜனநாயக ‘சிஸ்டத்தின்’ சிறப்பு.

ஆனால், இந்த ஜனநாயகக் கட்டமைப்புகள் மீது கூட, மக்களுக்கு அதிருப்தி ஏற்படுவது ஆச்சரியப்படும் விடயமல்ல! ஏனென்றால், ஜனநாயகம் என்பது குறைகளற்ற, முழுத் திருப்திதரும் கட்டமைப்பு அல்ல; அப்படியொரு கட்டமைப்பு இருக்கவும் முடியாது.

பல காரணங்களுக்காக மக்கள், தங்கள் நாடுகளில் ஜனநாயகத்தின் செயற்பாட்டில் அதிருப்தி அடைந்துள்ளனர். உதாரணமாக, அரசியல்வாதிகள், ஊழல்வாதிகள் அல்லது, தங்கள் நாட்டில் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது என்று நினைப்பவர்கள், ஜனநாயகத்தின் மீது அதிருப்தி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மாறாக, தங்கள் நாடுகளில் உள்ள முக்கிய அரசியல் நிறுவனங்கள், போதுமான அளவில் செயற்படுவதைப் பார்ப்பவர்கள் – உதாரணமாக, நீதிமன்றங்கள் அனைவரையும் நியாயமாகவும் சமமாகவும் நடத்துகின்றன; அல்லது, மக்கள், தங்கள் கருத்துகளைப் பொதுவில் வெளிப்படுத்தலாம் என்று நினைப்பவர்கள் – ஜனநாயகம் செயற்படும் விதத்தில், அதிக திருப்தி அடைகிறார்கள்.

இந்த இடத்தில், ஒரு விடயத்தை கவனித்தல் முக்கியமாகிறது. இலங்கை பின்பற்றும் அரசியலமைப்பு ரீதியிலான பிரதிநிதித்துவ ஜனநாயகம் நடைமுறையிலுள்ள ஒரு நாட்டில், அந்த மக்களில் பெரும்பான்மையொன்றுதான், அந்த நாட்டை ஆளப்போகும் தரப்பைத் தேர்ந்தெடுக்கிறது. அந்தத் தேர்ந்தெடுத்தலானது, குறித்த தரப்பினது கொள்கை, நிலைப்பாடு சார்ந்து அமைகிறது.

இலங்கையை பொறுத்தவரையில், இலங்கையின் பெரும்பான்மை என்பது கிட்டத்தட்ட ஏழு தசாப்த காலமாகவே சிங்கள-பௌத்த பேரினவாதத்தையே ஆதரித்து வந்திருக்கிறது. பொருளாதாரக் கொள்கைகள் மாறியிருக்கின்றன; சமூகக் கொள்கைகள் மாறியிருக்கின்றன. ஆனால், பேரினவாதம் மட்டும் தொடர்ந்தும் இலங்கை அரசியலின் அடிநாதமாக இருந்துகொண்டுதான் இருக்கிறது.

இடதுசாரிகளோடு ஆட்சியமைத்து, இலங்கையின் முதலாவது குடியரசுயாப்பைக் கொண்டுவந்த, ஒரு மூடிய பொருளாதாரத்துக்குள் இலங்கையை தள்ளிய சிறிமாவோவுக்கும், “சிறிமாவோவின் இன்னல்மிகு ஆட்சியிலிருந்து மக்களை மீட்பேன்” என்று சொல்லி பதவிக்கு வந்து, இரண்டாவது குடியரசு யாப்பை அறிமுகப்படுத்தி, திறந்தபொருளாதாரத்தை இலங்கைக்கு தந்த ஜே.ஆருக்கும், பொதுவாக இருந்த கொள்கை ‘சிங்கள-பௌத்த’ பேரினவாதம் ஆகும்.

இலங்கை, ஒற்றையாட்சி நாடு; இலங்கையின் ஒரே உத்தியோகபூர்வமொழி சிங்களம்; இலங்கை அரசு, பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் என்பதோடு அதனைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும் என்பனவெல்லம், முதலாம் மற்றும் இரண்டாம் குடியரசு யாப்புகளில் மாறாமல் தொடர்ந்த விடயங்கள். இவைதான் அவர்களுக்கு வாக்குப்பெற்றுக்கொடுத்த விடயங்களுமாகும்.

அன்று ஜே.ஆர் தந்த ‘சிஸ்டம் சேன்ஞ்’ என்பது, பொருளாதாரத்தைத் திறந்ததோடு, நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையை ஸ்தாபித்ததாகும். ஆனால், இது பொருளாதாரம் இயங்கும் முறையையும் ஆட்சி அதிகாரம் குவிந்த இடத்தையும் மாற்றியதே தவிர, இலங்கையின் அரசியல் கலாசாரத்தை மாற்றவில்லை; அரசியல் கொள்கைகளை மாற்றவில்லை. பேரினவாதமே இலங்கையின் அரசியல் கொள்கையாகத் தொடர்ந்தது; இன்றும் தொடர்கிறது.

சரி! இன்றைக்கு ‘சிஸ்டம் சேன்ஞ்’ என்று சஜித் பிரேமதாஸ சொல்கிறார்; சம்பிக்க ரணவக சொல்கிறார்; அநுர குமார திஸாநாயக்க சொல்கிறார்; இவ்வளவும் ஏன், தன்னை அரசியல்வாதியாக நினைத்துக்கொள்பவர்கள் பலரும் சொல்லிக்கொள்கிறார்கள்.

ஆனால், இவர்களில் எவரேனும் பேரினவாத அரசியலை கைவிடத்தயாரா? ‘சிங்கள-பௌத்த’ முன்னுரிமைவாதத்தை கைவிடத்தயாரா?
இலங்கை ஒரு பன்மைத் தேச நாடு என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாரா?
ஒற்றையாட்சியைத் தாண்டிய ஆட்சிமுறை ஒன்றுக்குத் தயாரா?
மொழிச் சமத்துவத்துக்கும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் தயாரா?

மதச்சார்பற்ற அரசாக இலங்கையை அங்கிகரிக்க தயாரா?
இவற்றைச் சாதிக்கத்தக்க வகையில் அரசியலமைப்பு மாற்றமொன்றைக் கொண்டுவரத் தயாரா? அப்படி இல்லையென்றால் இவர்கள் சொல்லும் ‘சிஸ்டம் சேன்ஞ்’ என்பது வெறும் ஏமாற்று வேலையில்லையா?

சிறிமாவோ காலத்தில் சர்வ அதிகாரமும் ‘தேசிய அரச சபை’ எனும் சட்டவாக்க சபையிடம் குவிந்திருந்தது, ஜே.ஆர், அந்தச் சர்வ அதிகாரத்தை, அங்கிருந்து ஜனாதிபதியிடம் மாற்றினார். அதன் பின்னர், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கொஞ்சமாகக் குறைப்பதும் கூட்டுவதும், மீண்டும் குறைப்பதும் என சந்திரிகா, மஹிந்த, மைத்ரி, கோட்டா காலங்களில் அரசியல் விளையாட்டுகள் விளையாடப்பட்டன.

இன்று, இதைப்போன்றதோர் அதிகாரம் குவியும் புள்ளியைப் பரவலாக்கும் விடயத்தைத்தான் ‘சிஸ்டம் சேன்ஞ்’ என்று சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பலரும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். அரசியல் சந்தர்ப்பவாதத்தில் திழைத்தவர்கள், தமக்கு வாய்ப்பான காலத்தில் அதற்கு ஆதரவும், தமக்கு வாயக்காத காலத்தில் எதிர்த்தும் வருகிறார்கள். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை, பெரும் சாதனையான மாற்றமாக முன்வைத்தோர்தான், இன்று கிட்டத்தட்ட அதே திருத்தங்கள் மீள முன்வைக்கப்படும்போது விமர்சிக்கிறார்கள். ஏனென்றால், அன்று அவர்கள் அரசியலமைப்பு திருத்தம் செய்யும் தரப்பின் பக்கம் நின்றார்கள்; இன்று எதிர்த்தரப்பில் நிற்கிறார்கள்.

இந்த வகையறா ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் இன்னும் தாம் கைவிடமுடியாது தவிர்க்கின்ற கம்யுனிஸக் கனவில், இன்னொரு வடகொரியாவாக இலங்கையை மாற்ற ‘சிஸ்டம் சேன்ஞ்’ என்பதை கையிலெடுத்த அநுர குமார, குமார் குணரட்ணம் ஆகிய இடதுசாரி தீவிரவாத சக்திகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

இவர்களின் நோக்கம், ஜனநாயகக் கட்டமைப்பை சரிசெய்வதல்ல; மாறாக, ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்டமைப்பையும் தகர்த்துவிட்டு, வடகொரியாவைப் போல ‘கம்யுனிஸத்தின்’ பெயரிலான தமது சர்வாதிகார ஆட்சியை ஸ்தாபிப்பது. இதற்காக இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி நிலையையும் அதனால் மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியையும், மேலும் நீண்டகாலமாக இலங்கையின் அரசியலால் மக்களடைந்துள்ள அயர்ச்சியையும் தமக்கு சாதகமாக்க, இந்த இடதுசாரி சர்வாதிகாரக் கூட்டம் முயற்சி செய்துகொண்டிருக்கிறது.

ஜே.வி.பிதான், கடந்த இரண்டரை தசாப்தங்களில் இலங்கை கண்ட மிகப்பெரிய பேரினவாத சக்தி. தமது அரசியல் இருப்பைக் காப்பாற்றிக்கொள்ள, இனவாதத்தை கையிலெடுத்து, தமிழர்களை அதற்குப் பலிகடாக்களாக்கியவர்கள் இந்த ஜே.வி.பியினர். ஜே.ஆர், இந்தியாவின் அழுத்தத்தால், ஒன்று சேர்த்த வடக்கு-கிழக்கை, வழக்குப் போட்டு பிரிக்க வைத்த இனவாதிகள் ஜே.வி.பியினர் என்ற வரலாறு, தமிழ் மக்கள் மறக்கக்கூடாத வரலாறு. இன்றும்கூட, ஒரு பொய்யான தாராளவாத முகமூடிக்குள் ஒளிந்துகொண்டிருந்தாலும் கூட, அநுர குமாரவாலோ ஜே.வி.பியினாலோ தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், ஜே.வி.பி என்பது வெறும் இடதுசாரி கம்யுனிஸக் கட்சி மட்டுமல்ல; அதனோடு பேரினவாதத்தையும் தனது அடிப்படைகளிலேயே கொண்டுள்ள கட்சியாகும்.

பேரினவாதம் என்பது மாறும் வரை, இலங்கையின் ‘சிஸ்டம் சேன்ஞ்’ என்று சொல்லப்படுவதெல்லாம் வெறுமனே ஒரு தரப்பு, ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றுவதற்கான ‘கண்துடைப்பு நாடகங்கள்’ மட்டுமே!

You might also like

Leave A Reply

Your email address will not be published.