;
Athirady Tamil News

சீனாவின் பிடியில் சிக்கி வரும் நேபாளம் !! (கட்டுரை)

0

ஒரு பட்டி ஒரு பாதை என்ற திட்டத்தின் மூலம் சீனா தனது பொருளாதார வல்லமையைப் பயன்படுத்தி உலகின் பல நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது.

தேசங்கள் எல்லைகள் என்று மட்டுமில்லாமல், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்பரப்புகளை கூட தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் முத்துக்களின் சரம் என்ற கடலாதிக்க திட்டமொன்றையும் சீனா செயற்படுத்தி வருகிறது.

தனது அண்டை நாடுகளான இந்தியா, பூடான், தாய்வான் உள்ளிட்ட நாடுகளோடு எல்லைத் தகராறுகளை உருவாக்கி, அத்துமீறல்களை நடாத்தி வருவதாக சீனாவின் மீது அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு படலத்திற்கு இரையாகியுள்ள மற்றுமொரு நாடுதான் நேபாளம்.

சுமார் 29 மில்லியன் மக்களைக் கொண்ட நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாடுதான் நேபாளம். இது சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு மாபெரும் பொருளாதார ஜாம்பவான்களுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு நாடு.

புவியியல் ரீதியிலான நேபாளத்தின் மூலோபாய இருப்பிடம் காரணமாக சீனா இந்த தேசத்தின் மீது தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் , நேபாளமும் சீனாவும் ஒரு பட்டி ஒரு பாதை (Belt and Road Initiative – BRI) என்ற மேம்பாட்டுத் திட்டத்திற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. நேபாளத்தின் அப்போதைய பிரதமா் புஷ்பா கமல் தஹால் Pushpa Kamal Dahal தலைமையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த இருதரப்பு ஒப்பந்தம், நேபாள நாட்டிற்கு விரைவான உள்கட்டமைப்பு வளர்ச்சியைக் கொண்டுவரும் என்று அந்நாட்டு மக்களால் எதிா்பாா்க்கப்பட்டபோதும், எந்த திட்டத்தையும் சீனா உடனடியாக நடைமுறைப்படுத்தவில்லை.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், எந்த திட்டத்தையும் சீனா நேபாளத்தில் முன்னெடுக்கவில்லை.

இருந்த போதும், 2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், ஒரு பட்டி ஒரு பாதை திட்டத்தின் கீழ் செயற்படுத்துவதற்காக ஒன்பது வெவ்வேறு திட்டங்களை நேபாளம், சீனாவிடம் முன்வைத்தது.

ஹிமாலய புகையிரத பாதை இணைப்பு, 400 கி.வோ மின்சாரம் விரிவாக்கத் திட்டம், ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை அமைக்கும் திட்டம், புதிய வீதிகள் நிா்மாணப் பணி, சுரங்கங்கள் மற்றும் நீர்மின் அணைகளை நிா்மாணித்தல் போன்றவை இந்த திட்டத்தில் அடங்கியிருந்தன.

சீன நிதியுதவியிலுள்ள வெளிப்படைத்தன்மை குறித்து அதிகரித்து வரும் சந்தேகங்களின் காரணத்தினால், இந்தத் திட்டங்கள் இருட்டடிப்புக்கு உள்ளாக்கியுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த நிலையில், நேபாளத்தில், சீனா தனது மறைமுக தந்திரோபாயங்களில் இடைவிடாமல் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

சீனப் பிரஜைகள் அதிகம் போ் நேபாள தலைநகா் காத்மண்டுவில் வணிக ரீதியிலான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களில் பலா் சீனாவின் அரச முகவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை நேபாளத்தின் எதிா்க்கட்சிகள் அடிக்கடி எழுப்பி வந்திருக்கின்றன.

அண்மைய காலங்களில் நேபாளத்தில், சீனர்களால் இடம்பெறும் குற்றவியல் செயற்பாடுகள், மோசடிகள் அதிகாித்துள்ளதாகவும், சட்டவிரோத வர்த்தகம் மற்றும் வனவிலங்கு கடத்தல் போன்றவை விரைவான வளா்ச்சியைக் கண்டுள்ளதாகவும் புகாரளிக்கப்பட்டு வருகிறது.

சீனா்களின் இத்தகைய செயற்பாடுகள், நேபாள நாட்டுக்குள் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கிறது. நேபாளத்தோடு 1,087 மைல் நீள எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்தியாவின் பாதுகாப்புக்கும் இது அச்சுறுத்தலாக இருப்பதாக இந்தியாவால் விசனம் தொிவிக்கப்படுகிறது. இதேவேளை சீனாவுடனும் நேபாளம் சுமார் 1,400 கி.மீட்டர் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது.

சீனா்களின் இத்தகைய குற்றச் செயல்கள் நேபாள காவல்துறைக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளது. அது மட்டுமின்றி, சீன அரசியல் நிகழ்ச்சி நிரலொன்றுக்கான கள நிலவரத்தை நேபாளத்தில் உருவாக்கும் சதித்திட்டமாக இது இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

சீனா மீதான இத்தகையை சந்தேகத்தை அந்நாட்டின் மூத்த பத்தாிகையாளா்களில் ஒருவரான மனோஜ் ஜோஷியும் வெளிப்படுத்தியுள்ளாா்.

நேபாளத்தில் வளா்ந்து வரும் சீனாவின் அரசியல், பொருளாதார செல்வாக்கு அமெரிக்காவையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக அவா் மேலும் கூறியுள்ளாா்.

மிகக் குறுகிய காலத்தில் நேபாளத்தில் அதிகமான சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை சீனா செய்திருப்பதாக நேபாள விவசாயத்துறை அமைச்சும் குற்றம் சுமத்தியிருந்தது.

சீனா தனது கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத் பகுதியில் வீதி நிா்மாணப் பணிகளை செய்வதற்காக, நேபாள நாட்டின் எல்லையோரத்தில் பாயும் நதிகளின் திசையைக் கூட மாற்றியுள்ளதாகவும், இத்தகைய செயற்பாடுகளின் மூலம் சீனா தனது எல்லையை விரிவுபடுத்திக் கொண்டிருப்பதாகவும், சீனாவின் இந்த நடவடிக்கைகளால் நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ள ஏழு மாவட்டங்களில் உள்ள சுமார் பத்துக்கும் அதிகமான இடங்கள் இதுவரை சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும் நேபாள விவசாயத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் இத்தகைய ஆக்கிரமிப்பை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினா்கள் நேபாள பாராளுமன்றத்தை முடக்கியதோடு, #GoBackChina என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தை தொடங்கினர்.

நேபாள எல்லைக் கிராமங்களில் இடம்பெற்று வரும் சீனாவின் அத்துமீறல் குறித்து எழுதி வந்த மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான பல்ராம் பணியா, மர்மமான முறையில் கொல்லப்பட்ட விவகாரம் சீன ஆக்கிரமிப்பிற்கு எதிரான மக்களின் உணா்வலைகள் மேலும் அதிகாிக்க காரணமாகியது.

எதிா்க் கட்சிகள் முன் வைத்த சீனாவின் ஆக்கிரமிப்பு தொடா்பான குற்றச்சாட்டுகளை அப்போதைய பிரதமா் ஷா்மா ஒலி மறுத்து வந்தாா். கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவரான ஷா்மா ஒலி, சீன ஜனாதிபதி சீஜிங்பிங்கின் தீவிர ஆதரவாளராக செயற்பட்டு வந்தவராவாா்.

ஷா்மா ஒலியின் செயற்பாடுகளும், அவா் அடிக்கடி வெளியிட்டு வந்த கருத்துகளும் இந்தியாவிற்கும் நேபாளத்திற்குமிடையிலான விாிசலை ஏற்படுத்தியது.

இந்தியாவை அடிக்கடி விமா்சனம் செய்து வந்த ஷா்மா ஒலி இந்தியாவை கடுப்பேற்றியும் வந்தாா் . அவாின் இத்தகைய செயற்பாடுகளின் பின்னணியில் சீனாவின் தூண்டுதலே இருந்ததாக இந்திய அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டும் வந்தது.

சீனாவின் இத்தகைய தலையீடு, பிராந்தியங்களில் மட்டுமல்ல, பல நாடுகளில் அரசியல் மற்றும் பொருளாதார கொந்தளிப்புகளை ஏற்படுத்தி வந்திருக்கிறது.

நேபாளத்திற்கும் இது விதிவிலக்காக இருக்கவில்லை. அங்கும் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இறுதியில் நீதிமன்ற உத்தரவின் படி கடந்த 2021 ஜுலை மாதம் 12ம் திகதி பிரதமராக கடமையாற்றிய ஷா்மா ஒலி பதவி நீக்கம் செய்யப்பட்டு ஷோ் பகதூா் தியூபா புதிய பிரதமராக பதவியேற்றாா்.

கடந்த பெப்ரவாி மாதம், நேபாளத்தின் எல்லைகளை ஆக்கிரமித்து சீனா தனது தேசத்தின் மீது ஊடுருவலில் ஈடுபட்டுள்ளதாக நேபாள அரசு முதல்முறையாக அறிவித்தது.

இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான எல்லை இருக்கும் நிலையில், சீனாவின் அத்துமீறல் குறித்த நேபாள அரசின் குற்றச்சாட்டு அடங்கிய அறிக்கையை பிபிசி வெளியிட்டது. .

மேற்கு நேபாளத்தின் ஹூம்லா மாவட்டத்தில் சீனா அத்துமீறுவதாக கூறப்பட்டதை தொடா்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த அறிக்கையை தயாரிப்பதற்கு நேபாள அரசு ஒரு குழுவை நியமித்தது.

ஆனால், நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் இந்த ஊடுருவல் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதாகவும், இது தொடா்பாக பிபிசி வேண்டி நின்ற விளக்கங்களுக்கு நேபாள அரசு எந்த பதிலும் அளிக்கவில்லையென்றும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

இது இப்படியிருக்க, நேபாளத்தில் சீனாவின் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகாித்து வருவதாக, அண்மையில் அந்நாட்டின் சுற்றுலாத்துறையும் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளது.

நேபாளத்தின் காத்மண்டு உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் 400க்கும் மேற்பட்ட சுற்றுலா மற்றும் ஆடம்பர விடுதிகளை சீனா்கள் நடாத்தி வருவதாகவும், சிறிய அளவில் ஆரம்பிக்கப் பட்ட இந்த வணிக நடவடிக்கைகள், மிகப் பாரிய அளவில் வளா்ச்சியுற்று அந்நாட்டின் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையாக மாற்றம் பெற்றிருப்பதாகவும், சீனா்களின் இத்தகைய செயற்பாடுகள் நேபாள சுற்றுலாத்துறையின் விதிகளுக்கு முற்றிலும் மாற்றமானது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேபாளத்தில் சீனாவின் திட்டங்களை எதிர்கொள்ளும் அதிரடி நடவடிக்கையாக, அமெரிக்கா தனது திட்டங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளது. கடந்த மே மாதம் நேபாளமும் அமொிக்காவும் ஒரு புதிய மேம்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகாமை நிறுவனம் ( US Agency for International Development) மூலம் அமெரிக்கா, ஐந்தாண்டு காலத் திட்ட அடிப்படையில் 659 மில்லியன் அமெரிக்க டொலர்களைநேபாளத்திற்கு வழங்கியுள்ளது.

நேபாளம் ஒரு நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாறுவதற்கான இலக்கை அடைவதற்கு அமொிக்காவின் ஆதரவு இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், அண்மையில் நேபாள வெளியுறவு அமைச்சா் நாராயண் கட்கா சீன வெளியுறவு அமைச்சா் வாங்யீ உடன் விாிவான பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளாா்.

சீன, நேபாள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்த ஆண்டு பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யும் நோக்கில் நேபாளத்திற்கு பல பில்லியன் ரூபாய்களை வழங்க சீனா உறுதியளித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒருபுறம் சீனா தனது நாட்டை ஆக்கிரமிப்பதாக அறிக்கை விடும் நேபாளம், மறுபுறம் சீனாவின் உதவிக்காக கையேந்தி நிற்கிறது. ஆதிக்க அரசியல் சக்திகளிடமிருந்து விலகுவதும், புவியரசியல் நீரோட்டத்திலிருந்து எதிா் நீச்சல் போடுவதும் அவ்வளவு இலகுவான காாியமல்ல. இது நேபாளத்திற்கு மட்டுமல்ல, எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.