;
Athirady Tamil News

வழமைக்கு திரும்பிய தென்இலங்கை அரசியல் !! (கட்டுரை)

0

மக்கள் போராட்டத்துக்குப் பயந்து, நாட்டை விட்டுத் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, கடந்த வார இறுதியில் நாடு திரும்பி இருக்கிறார். அவரை, விமான நிலையத்தில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் வரவேற்றனர்.

கோட்டாவை மீண்டும் அரசியலுக்கு அழைத்து வந்து, ‘மக்களால் துரத்தியடிக்கப்பட்ட ஜனாதிபதி’ என்ற பெயரைக் களைய வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் ஒருதரப்பினர் நினைக்கிறார்கள். மக்கள் போராட்டங்களால், பாரம்பரிய அரசியல்வாதிகளின் சிந்தனையையும் நிலைப்பாடுகளையும் மாற்ற முடியாது என்று நிறுவ நினைக்கிறார்கள். அதன்மூலமே, சம்பாதிப்பதற்கான தெரிவாக அரசியலைக் கொண்டிருக்கின்ற தங்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்பது அவர்களின் எண்ணம்.

ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மக்களின் போராட்டங்களால், ஆட்சியில் தலைமை மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. கோட்டா இருந்த இடத்தில் ரணில் விக்கிரமசிங்கவும் மஹிந்த ராஜபக்‌ஷவின் இடத்தில் தினேஷ் குணவர்தனவும் அமர்ந்திருக்கிறார்கள்.

அதைத்தாண்டி ஆட்சியின் போக்கு, அதன் எதிர்கால நோக்கு என்பவற்றில், பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதுபோல, ஆட்சியின் இயல்பு என்பது, ராஜபக்‌ஷர்களின் அரசியல் நிலைப்பாடுகளில் இருந்து, பாரிய மாற்றங்கள் இன்றி, அதன் தொடர்ச்சியைப் பிரதிபலிக்கத் தொடங்கி இருக்கின்றது. பெயரளவில் ராஜபக்‌ஷர்கள் ஆட்சியில் இல்லை; ஆனால், அவர்கள்தான் தீர்மானிக்கும் சக்தியாக இன்னமும் இருக்கிறார்கள்.

ரணிலைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தோடு ராஜபக்‌ஷர்கள் இருக்கிறார்கள். அதனால்தான், தேசிய அரசாங்கத்தை அமைக்க நினைக்கும் ரணிலின் விரும்பம் நிறைவேறாமல் இருக்கின்றது. தேசிய அரசாங்கத்தை அமைப்பதன் மூலம், தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ரணில் சிந்திக்கிறார்.

ஆனால், ராஜபக்‌ஷர்களோ தேசிய அரசாங்கத்துக்கான வாய்ப்பு உருவானால், ரணிலையோ அவர் தலைமையிலான ஆட்சியையோ தங்களால் கையாள முடியாது போகலாம் என்று நினைத்து, தேசிய அரசாங்கத்துக்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்வதில் குறியாக இருக்கிறார்கள். அதன் ஒருகட்டமாகவே, ராஜபக்‌ஷர்களால் ஜோன்சன் பெர்ணான்டோ, நாமல் ராஜபக்‌ஷ போன்றோர் மீண்டும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று கோரப்படுகின்றது.

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டும் என்றால், ராஜபக்‌ஷர்களின் ஒட்டுறவு இல்லாத அமைச்சரவை உருவாக்கப்பட வேண்டும் என்பது, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாகும். அப்படியான நிலையில், ராஜபக்‌ஷர்களின் ஆட்சியில் ஊழல் பெருச்சாளிகளாகவும் மக்கள் விரோத நடவடிக்கைகளின் காரணகர்த்தாக்களாகவும் இருந்த ஜோன்சன் பெர்ணான்டோ, நாமல் ராஜபக்‌ஷ போன்றோரை, தேசிய அரசாங்க அமைச்சரவைக்குள் உள்வாங்க வேண்டும் என்று ரணிலிடம் ராஜபக்‌ஷ தரப்பு கோரிக்கை விடுக்கின்றது என்றால், அதன் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தேசிய அரசாங்கம் அமைந்தால், பொதுஜன பெரமுனவின் தயவில் ஆட்சி நடத்தும் ரணில், அதிலிருந்து கொஞ்சம் வெளிவரக் கூடியதாக இருக்கும். அதன்மூலம், ராஜபக்‌ஷர்களின் தலையீடுகள் அற்ற சுதந்திரமான தலைவராக, ஆட்சியை நடத்த முடியும். ஆனால், அதற்கான சூழலை இல்லாமல் செய்வதுதான், தங்களின் எதிர்கால அரசியலுக்கான வழித்தடத்தை காத்துத் தரும் என்பது, ராஜபக்‌ஷர்களின் நிலைப்பாடு. அதற்காக அவர்கள் அனைத்து வகையிலான ‘திகிடு தத்தம்’களையும் அரங்கேற்றி வருகிறார்கள்.

கடந்த காலங்களில், ராஜபக்‌ஷர்களை வீராதி வீரர்களாக தென்இலங்கை பூராவும் முழங்கிய விமல் வீரவங்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உள்ளிட்ட தரப்பு, தங்களுக்கும் ராஜபக்‌ஷர்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்ற மாதிரியான உணர்நிலையோடு, புதிய கூட்டணியை ஆரம்பித்திருக்கின்றது.

கோட்டாவை, சிங்கப்பூரின் லி குவான் யூ, மலேசியாவின் மஹாதிர் முஹமட், இந்தியாவின் நேரு, தென்ஆபிரிக்காவின் நெல்சன் மண்டேலா ஆகியோரோடு ஒப்பிட்டு, தேர்தல் மேடைகளில் முழங்கியவர்களும் இவர்கள்தான். “கோட்டாவை ஜனாதிபதியாக சிங்கள மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், பௌத்தத்தையும் சிங்களத்தையும் காப்பாற்ற முடியாது” என்று, நாடு பூராவும் இனவாதத்தீயை வளர்த்தவர்களும் இவர்கள்தான்; அதன் மூலம், இனவாத ஆட்சியொன்றை உருவாக்கியிருந்தார்கள். தமிழர்கள், முஸ்லிம்கள் அங்கம் வகிக்காத ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற ஒற்றை நிலைப்பாட்டோடு இயங்கியிருந்தார்கள்.

ஆனால், ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக, தென்இலங்கை மக்கள் கிளர்ந்தெழத் தொடங்கியதும், ராஜபக்‌ஷர்களின் சீர்கெட்ட ஆட்சிக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்ற மாதிரி நடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

இந்த இனவாதக் குழுவினர், இன்றைக்கும் புதிய கூட்டணியை அமைத்துக் கொண்டு, எதிர்வரும் பொதுத் தேர்தல் வரைக்கும் நாடகமாடுவார்கள். பொதுத் தேர்தல் வந்ததும், மீண்டும் ராஜபக்‌ஷர்களோடு அல்லது அவர்களின் தொடுப்புள்ள தரப்போடு இணைந்து தேர்தலில் போட்டியிடுவார்கள். அவர்களுக்கும் வெட்கமில்லை; அவர்களைத் தேர்தெடுக்கும் மக்களுக்கு வெட்கமுமில்லை; அறிவும் இல்லை.

ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போராட்டம் என்பது, ‘ராஜபக்‌ஷர்கள்’ என்ற ஒற்றைக் குடும்பத்துக்கு எதிரான போராட்டமல்ல. அது, ராஜபக்‌ஷர்களின் சிந்தனைக்கும் ஆட்சி முறைக்கும் எதிரானது. அதில், ராஜபக்‌ஷ குடும்பமும் அவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்கு உதவிய தரப்பினரும் உள்ளடங்குவார்கள்.

அந்தவகையில், விமல் வீரவங்ச குழுவும் ராஜபக்‌ஷர்கள் கூட்டம்தான். அவர்களையும் வெளியேறுமாறுதான் மக்கள் வலியுறுத்தினார்கள். மக்களின் போராட்டம் எழுச்சியாக நடைபெற்ற தருணத்தில், இந்தக் கூட்டமும் ஒளிந்து வாழ வேண்டியிருந்தது. நிலைமை சற்று சுமூகமானதும், தங்களை வெள்ளையடிக்கும் வேலையைச் செய்து வருகிறார்கள்.

இன்னொரு பக்கம், ராஜபக்‌ஷர்களும் அவர்களின் ஆட்சியில் பிரதான அமைச்சர்களாக, பங்காளிகளாக இருந்தவர்களும், நாட்டின் பொருளாதார சீரழிவுக்குத் தாங்கள் காரணமல்ல என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். கோட்டாவின் அமைச்சரவையில் விவசாய அமைச்சராக இருந்து, அவரின் தூரநோக்கற்ற முடிவுகளுக்கு ஒத்தூதிய மஹிந்தானந்த அளுத்கமகே, “நாட்டின் விவசாயத்துறை வீழ்ச்சிக்கு நான் பொறுப்பில்லை“ என்கிறார்.

கோட்டாவும் அளுத்கமகேயும் தான், உர இறக்குமதியைத் தடை செய்துவிட்டு, சீனாவில் இருந்து உயிர்க்கொல்லி உரத்தை நாட்டுக்கு கொண்டுவர முயன்றவர்கள். சீனாவின் உரம், பாதுகாப்பில்லாதது என்று தெரிய வந்ததும் எதிர்ப்புகளைக் கண்டு பின்வாங்கினார்கள். அதனால், உரத்தைப் பெற்றுக்கொள்ளாமலேயே, மக்களின் பல மில்லியன் பணத்தை, சீனாவுக்கு தாரைவார்த்தார்கள். ஆனால், இன்றைக்கு அதற்கும் தங்களுக்கும் பொறுப்பில்லை என்ற நிலையைக் காட்டுகிறார்கள். மக்கள் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்த சில நாள்களுக்குள்ளேயே, இந்தக் கூத்துகளை எல்லாம் இந்த அரசியல்வாதிகளால் செய்ய முடிகின்றது.

தென்இலங்கையில்தான் இவ்வாறான நிகழ்வுகள் என்றால், கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தங்களின் தேசிய மாநாட்டுக்காக நாமல் ராஜபக்‌ஷவை பிரதான விருந்தினராக அழைத்து நடத்தி இருக்கின்றது.

மக்கள் போராட்டம் எழுச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில், ‘பிள்ளையான்’ என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தனும்கூட பதுங்கி வாழும் நிலை இருந்தது. அவரைப் பொது வெளியில் காணக் கிடைக்கவில்லை. எப்போதாவது பொது வெளிக்கு வந்தாலும், போராடும் மக்களை ஆதரிக்கும் நிலையே இருந்தது.

ஆனால், அந்தப் போராட்டம் முடிக்கு வந்த சில காலத்துக்குள்ளேயே அதன் நோக்கங்களுக்கு எதிராக, கட்சியின் தேசிய மாநாட்டை ராஜபக்‌ஷர்கள் இன்றி நடத்துவதற்கு அவர் தயாராக இல்லை. அதுவும், சிறுவர், சிறுமியரை அழைத்து வந்து, அவர்களை நாமலின் விசிறிகளாகக் காட்டி, தேசிய மாநாட்டின் பெருமை பீத்தல்களை, சமூக ஊடகங்களில் பிள்ளையான் தரப்பு செய்து கொண்டிருக்கின்றது.

மக்களின் எதிர்பார்ப்பு, நியாயமான கோரிக்கைகள் குறித்தெல்லாம் பிள்ளையானோ, அவரின் கட்சியோ அக்கறை கொண்டது மாதிரி தெரியவில்லை. மாறாக, ராஜபக்‌ஷர்களுக்கு ‘குடைபிடித்து’, ஏதாவது ஆதாயங்களை அடைந்தால் போதுமென்பதுதான், ஒற்றை நிலைப்பாடாக அவரிடம் இருக்கின்றது.

மாபெரும் மக்கள் போராட்டத்தால் ஆட்சியில் தலைமை மாற்றம் என்ற ஒன்றைத் தவிர, வேறு எதையும் செய்து விட முடியவில்லை. குறிப்பாக, அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளில் சின்ன மாற்றத்தைக் கூட செய்ய முடியவில்லை.

அப்படியான நிலையில், மக்களின் போராட்டமும் அதற்கான அர்ப்பணிப்பும் காற்றில் பறந்து போய்க் கொண்டிருக்கின்றது. இலங்கை, வழக்கமான தன்னுடைய அரசியலுக்குத் திரும்பி இருக்கின்றது. அவ்வளவுதான்! அதற்கு மேலாக எதுவுமே இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.