;
Athirady Tamil News

மாறுகிறதா இந்தியா ? (கட்டுரை)

0

“சீனாவும் ரஷ்யாவும் தன் பக்கத்தில் இருக்கும் வரை பொறுப்புக்கூறல் குறித்த அழுத்தங்களை பாதுகாப்புச் சபைக்கு நகர்த்த முடியாதென்று கொழும்பின் ஆட்சியாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள்”

“போர் முடிவுக்கு வந்த பின்னர், 13 ஆவது திருத்த அமுலாக்கம், மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குதல் போன்ற விடயங்களை இந்தியா பலமுறை வலியுறுத்தியிருந்தாலும், இப்போது, தொனியை மாற்றி அரசியல் தீர்வு விடயத்தில் முன்னேற்றங்கள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி அதிருப்தியைப் பதிவு செய்திருக்கிறது”

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில், இந்தியாவின் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே நிகழ்த்திய உரை, இதற்கு முன்னைய காலகட்டங்களில் இந்தியப் பிரதிநிதிகள் வெளியிட்ட கருத்துக்களில் இருந்து சற்று வேறுபட்டிருந்ததை பலரும் உணர்ந்துள்ளனர்.

இந்தியத் தரப்பு பொறுப்புக்கூறலை வழக்கம் போலவே இம்முறையும் முக்கியமான விவகாரமாக எடுத்துக் கொள்ளாத போதும், நல்லிணக்கம், நிலையான அரசியல் தீர்வு என்பதற்கு அதிக முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

2012ஆம் ஆண்டு தொடக்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பங்களில், ஒரு முறை மாத்திரமே, தி.மு.க. அரசின் அழுத்தங்களால், அப்போது ஆட்சியில் இருந்து காங்கிரஸ் அரசாங்கம், ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.

அதற்குப் பின்னர் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் அனைத்திலும் இந்தியா நடுநிலை வகித்து வந்திருக்கிறது.

அதாவது பொறுப்புக்கூறல் சார்ந்த அழுத்தங்களைக் கொடுப்பதற்கு இந்தியா எப்போதும் தயாராக இருந்ததில்லை.

போருடன் தொடர்புபட்ட மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை இலங்கைக்குள் முன்னெடுப்பதற்கு மட்டுமே இந்தியா அதரவளித்தது.

பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றாத போதும், நிறைவேற்றக் கூடிய வாய்ப்புகள் இல்லை என்பதை உறுதி செய்த போதும், இந்தியா தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.

இலங்கையின் இறைமை, சுதந்திரம் ஆகியவற்றின் மீதான தலையீடாக மாத்திரம் இந்தியா அதனை அணுகவில்லை.

பொறுப்புக்கூறலுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வெளியகத் தலையீடுகளை இந்தியா எதிர்த்தமைக்கு இரண்டு முக்கியமான காரணிகள் இருந்தன.

குறிப்பாக இறுதிக்கட்டப் போரின் போது, இந்தியாவும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு தரப்பாக இருந்தது. சில விடயங்ளில் நேரடியாகவும், பல விடயங்களில் மறைமுகமாகவும் இந்தியா அந்தப் போரில் பங்களித்திருந்தது.

பொறுப்புக்கூறல் என்று வரும் போது, அதில் தனது பெயரும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருந்தது.

இரண்டாவதாக, பொறுப்புக்கூறலுக்கான வெளியகத் தலையீடுகளை அனுமதிக்கும் போது அல்லது ஆதரிக்கும் போது, இலங்கை தனது பக்கத்தில் இருந்து விலகிச் சென்று விடும் என்ற அச்சமும் புது டில்லிக்கு இருக்கிறது.

போருக்கு ஆதரவளிக்க சீனா முன்வந்த பின்னர் தான், மெதுமெதுவாக இலங்கையில் அதன் பொருளாதார ஆதிக்கம் அதிகரித்தது.

போரின் தொடர்ச்சியான விளைவுகளைப் பயன்படுத்தி இலங்கைக்குள் ஊடுருவுகின்ற வாய்ப்பை சீனா பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க கூடாது என்று இந்தியா கருதியது.

ஆனால் அந்த முயற்சியில் இந்தியாவினால் இன்று வரை வெற்றிபெற முடியவில்லை. பொறுப்புக்கூறல் அழுத்தங்களையும் கொழும்புக்கு கொடுக்க முடியவில்லை. சீன ஆதிக்கத்தையும் தடுக்க முடியவில்லை.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் முன்வைக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், சீனா வலுவான ஆதரவை வழங்கி வந்திருக்கிறது.

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான பொறிமுறை விடயம் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்லப்படாது என்ற உறுதியான நம்பிக்கையை இலங்கைக்கு கொடுத்திருப்பது சீனாவும் ரஷ்யாவும் தான்.

இந்த இரண்டு நாடுகளும் தன் பக்கத்தில் இருக்கும் வரை பொறுப்புக்கூறல் குறித்த அழுத்தங்களை பாதுகாப்புச் சபைக்கு நகர்த்த முடியாதென்று கொழும்பின் ஆட்சியாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

சீனா இலங்கையை வலுவாக ஆதரிக்கும் நிலையில், பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் தீர்மானங்களுக்கு இந்தியா ஆதரவு வழங்கினால், அது இலங்கை- சீன நெருக்கத்தை மேலும் அதிகப்படுத்தி விடும் என்ற அச்சம் புது டில்லி கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் உள்ளது.

இது பொறுப்புக்கூறல் விவகாரத்தை இந்தியா தவிர்த்து அல்லது அதிலிருந்து நழுவி வந்துள்ளமைக்கு முக்கிய காரணம்.

ஆனால் வெளியக பொறுப்புக்கூறல் செயல்முறைகள் இலங்கையின் இறைமை, சுதந்திரத்தின் மீதான தலையீடாக இருக்க கூடாது என்றே இந்தியா வலியுறுத்தி வந்திருக்கிறது.

என்னதான் இந்தியா, சீனா விடயத்தில் இத்தகைய கணக்குப் போட்டிருந்தாலும், பொறுப்புக்கூறல் அழுத்தங்களையும் கொடுக்க முடியாமல், சீனா ஆதிக்கத்தை தடுக்க முடியாமல் தான் இருந்து கொண்டிருக்கிறது.

இப்போதும் கூட இந்தியப் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தனது உரையில் பொறுப்புக்கூறலை தவிர்த்து விட்டு, நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு போன்ற விடயங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்க முற்பட்டிருக்கிறார்.

அவர் தனது உரையில், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்த தமது அர்ப்பணிப்புகளில் இலங்கை அரசாங்கத்தினால் குறிப்பிடக் கூடிய முன்னேற்றங்கள் இல்லாமை குறித்து இந்தியா கவலை கொள்வதாக குறிப்பிட்டிருக்கிறார்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குதல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துதல் ஆகிய மூன்று விடயங்களையும் அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்வுக்கான முக்கிய விடயங்களாகவும் அவர் முன்மொழிந்திருக்கிறார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், 13 ஆவது திருத்த அமுலாக்கம், மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குதல் போன்ற விடயங்களை இந்தியா பலமுறை வலியுறுத்தியிருந்தாலும், இப்போது, அதன் தொனியில் மாற்றம் காணப்படுகிறது.

அரசியல் தீர்வு விடயத்தில் முன்னேற்றங்கள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி கவலை வெளியிட்டு அதிருப்தியைப் பதிவு செய்திருக்கிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் வகையிலான, ஐக்கிய இலங்கை கட்டமைப்பிற்குட்பட்ட அரசியல் தீர்வே இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த இந்தியாவின் நிலையான நோக்கம் என்றும் இந்தியப் பிரதிநிதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

விரைவாக தேர்தல்களை நடத்துவதன் மூலம் மாகாண சபைகளை செயற்படுத்துவது, இலங்கையின் அனைத்து பிரஜைகளும் வளமான எதிர்காலத்திற்கான அவர்களின் அபிலாஷைகளை அடைய உதவும் என்றும், இது தொடர்பாக இலங்கை உடனடி மற்றும் நம்பகமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பிரதிநிதி பாண்டே வலியுறுத்தியிருந்தார்.

இந்தியா இந்த முறை அழுத்தங்களை சற்று தீவிரப்படுத்தியுள்ளதான தோற்றத்தை அவரது உரையின் சொல்லாடல்கள் வெளிப்படுத்துகின்றன.

இது அண்மைக்காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் காணப்படும் சிக்கல்கள் மற்றும், சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள உறவு என்பவற்றைப் பிரதிபலிப்பதாக இருக்க கூடும்.

சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் அம்பாந்தோட்டையில் நங்கூரமிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட விவகாரம் இந்தியாவைக் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

இந்தியாவின் நலன்களை இலங்கை முழுமையாகப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை அது தகர்த்து விட்டது.

இதனை இந்தியா தமக்கான அச்சுறுத்தலாக பார்க்கின்ற போதும், அதற்கெதிராக கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்க முற்படவில்லை.

பொறுமையாகவே இந்தியா காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. அவசரப்பட்டால், சீனாவிடம் இலங்கையை இழந்து விட நேரிடும் என்பது இந்தியாவுக்குத் தெரியும்.

அதனால் தான், ஜெனிவாவிலும் கூட இந்தியா இப்போதும் பொறுமையாகவும் நிதானமாகவும் செயற்பட முனைகிறது. சீனாவை மனதில் வைத்தே இந்தியா முடிவுகளை எடுக்கிறதே தவிர, தமிழர்களை அடிப்படையாக வைத்து அல்ல.

அதனால், இந்தியா எடுக்கின்ற முடிவுகள் தமிழர் தரப்பை திருப்திப்படுத்தக் கூடியனவாக இல்லாதிருப்பது ஆச்சரியமில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.