;
Athirady Tamil News

அஷ்ரப்புக்குப் பிறகு நீங்கள் சாதித்தது என்ன? (கட்டுரை)

0

தந்தை ஒருவர் தன்னுடைய மகனிடம் “ஆப்ரகாம் லிங்கன், வீதி விளக்கின் கீழ் இருந்து படித்துத்தான் பின்னாளில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வந்தார்” என்ற வரலாற்றுக் கதையைச் சொன்னாராம். சற்று குறும்புத்தனமான அந்த மகன் திடீரென, “அப்படியென்றால், நீங்கள் அவ்வாறு படிக்காமல் அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்”? என்று தந்தையைப் பார்த்துக் கேட்டானாம்.

முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியல் முன்னோடியாகத் திகழ்ந்த மர்ஹூம் எம். எச். எம் அஷ்ரப் மரணித்த பிறகு, அவரைக் கொண்டாடுகின்ற, அவரை நினைத்து கண்ணீர் வடிக்கின்ற இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும், இதுபோன்ற கேள்வி ஒன்றைக் கேட்கத் தோன்றுகின்றது.

மறைந்த தலைவர் அஷ்ரப், முஸ்லிம் சமூகத்துக்காகப் போராடினார்; உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தார்; பாரிய அபிவிருத்திகளைச் செய்தார்; சமூகத்துக்காக நெஞ்சை நிமிர்த்தி நின்றார் என்று சொல்லிக் கொண்டே, காலத்தைக் கழிக்கும் முஸ்லிம் தலைவர்களும் எம்.பிக்களும் அவரது மறைவுக்கு பின்னரான காலப்பகுதியில், எதைச் சாதித்துள்ளார்கள் என்று கேட்க வேண்டியுள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை, அஷ்ரபுக்கு முன் – அஷ்ரபுக்கு பின் என நோக்கலாம். அவரை விடுத்து, முஸ்லிம் அரசியல் வரலாற்றை இனி எழுதவியலாத அளவுக்கு, குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளார். அத்துடன் அவர் விட்டுச் சென்ற ‘தலைவர்’ என்ற இடம், இன்று வரை காலியாகவே உள்ளது.

அந்த வகையில், மர்ஹூம் அஷ்ரப் கொண்டாடப்பட வேண்டியவர்; அவரது கொள்கைகளும் சேவைகளும், காலகாலத்துக்கும் நினைவூட்டப்பட வேண்டியவை. தற்காலத் தலைவர்களைப் பார்த்து, ‘இதுதான் சரியான தலைமைத்துவம்’ என்று நம்பிக் கொண்டிருக்கின்ற இளைய சமூதாயத்துக்கு ‘உண்மையான தலைமைத்துவம் எது’ என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவும் அவரது ஆளுமைகளைப் பேச வேண்டியுள்ளது.

ஆனால், 11 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும் சுமார் ஆறு வருடங்கள் மட்டுமே ஓர் அமைச்சராகவும் பதவி வகித்த மர்ஹூம் அஷ்ரப், அதனைச் செய்தார், இதனைச் செய்தார், அப்படி இருந்தார், இப்படி இருந்தார் என்று புகழ்பாடுகின்ற அவரது அரசியல் வாரிசுகள், இந்த 22 வருட காலத்திலும் முஸ்லிம் சமூகத்துக்காக எதைச் செய்துள்ளார்கள்?

மறைந்த தலைவரின் கொள்கைகளையும் அவர் காட்டித் தந்த வழிமுறைகளையும் பின்பற்றாமல், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வெறுமனே அவற்றைப் பற்றிப் பெருமை பேசுவதற்கும் நினைவுகூருவதற்கும் என்ன தார்மிக அருகதை இருக்கின்றது என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது.

எம். எச். எம் அஷ்ரப், தனது அரசியல் நண்பர்களுடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார். தெற்கில் அரசாங்கத்துடனும் வடக்கு, கிழக்கில் தமிழர்களுடனும் ஒரு மிதமான உறவைப் பேணிக் கொண்டார். ஆனால், அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்க்கும் துணிச்சல் அவருக்கு இருந்தது.

இது, பெருந்தேசிய அரசியலில் அவரை ஒரு சிம்மசொப்பனமாக ஆக்கியிருந்தது எனலாம். அதுமட்டுமன்றி, கிழக்கில் இருந்து அஷ்ரப் பெருவளர்ச்சி கண்டு வருவது, தென்னிலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு கூட வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தது.

அவர் முஸ்லிம் காங்கிரஸை தீர்மானிக்கும் சக்தியாக உயர்த்தி, பேரம்பேசும் அரசியலின் ஊடாக பலவற்றைச் சாதித்தார். பாராளுமன்ற உறுப்புரிமைக்கான மாவட்ட வெட்டுப்புள்ளியின் எல்லையைக் குறைக்க வழிகோலியமை இதில் முக்கியமானது. அதனாலேயே பலருக்கு எம்.பியாகும் வாய்ப்புக் கிடைத்தது.

இதைத் தவிர, தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுக வேலைத்திட்டம், இனபேதமின்றி பல நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மேலும் பல அபிவிருத்தித் திட்டங்கள் என அவரது சேவைகள் தொடர்ந்தன. அவர் காலகாலமும் பேசப்படக் கூடியளவுக்கான ஓர் அரசியலை, மிக குறுகிய காலத்துக்குள் செய்து விட்டுப் போயிருக்கின்றார் என்பது கண்கூடு.

ஆனால், அவரை விட அதிகப்படியான அமைச்சுகளையும் அதிகாரங்களையும் ஒப்பீட்டளவில் அதிக காலம் வகித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா மற்றும் ஹசன்அலி, பசீர் சேகுதாவூத். ஹரீஸ் புதிதாக எம்.பியாக தெரிவான முஷாரப் வரை (கடந்தகால, தற்கால) சுமார் 30 -40 வரையிலான முஸ்லிம் எம்.பிக்கள் என்ன செய்திருக்கின்றார்கள்?

வீதி செப்பனிடுதல், கட்டடம் கட்டுதல் போன்றவற்றை மையமாகக் கொண்ட அபிவிருத்தி அரசியலை, ஓரிரு முஸ்லிம் எம்.பிக்கள் கொஞ்சம் செய்திருக்கிறார்கள். அதைவிடுத்து, முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் உள்ளடங்கலாக நீண்டகாலப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதா? அபிலாஷைகள் முன்கொண்டு செல்லப்பட்டுள்ளதா? இல்லையே!

மாறாக, பேரம் பேசும் அரசியல் என்பது பதவிக்காக, பணத்துக்காக சோரம்போகும் அரசியலாக ஆகியிருக்கின்றது. இணக்க அரசியல் முட்டுக் கொடுக்கும் அரசியலாக உருமாற்றப்பட்டு இருக்கின்றது.

மறைந்த அஷ்ரப் தொடர்பிலும் பல விமர்சனக் கண்ணோட்டங்கள் இருக்கின்றன. அவர் தவறுகளுக்கு அப்பாற்பட்டவரும் அல்ல. அவர் செய்தது எல்லாம் சரி என்று கூறுவதற்கும் இல்லை. ஆனால், இப்போதிருக்கின்ற தலைவர்கள், எம்.பிக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், அவர் மிக உயரத்தில் இருக்கின்றார் என்பதுதான் கவனிப்புக்கு உரியது.

இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது விடயம், எம். எச். எம் அஷ்ரப் தானாகவே ஒரு சமூக உணர்வால் உந்தப்பட்டு அரசியலுக்கு வந்தார். முஸ்லிம் சமூகத்துக்கு விடிவு கிடைக்க வேண்டும் என்ற வேட்கை, அவர் ஹெலி விபத்தில் கொல்லப்பட்ட அந்த நொடி வரைக்கும் இருந்தது.

மக்களை நேசித்தார்; கட்சியின் ஒவ்வோர் உறுப்பினரையும் மதிப்பவராக இருந்தார். ஆயிரம் பேர் நிறைந்த கூட்டத்திலும், யார் கட்சிக்காரர் என்பதை சரியாக அடையாளம் காணும் ஆற்றல் அவருக்கு இருந்தது. எல்லா வகையான ஆளுமைகளும் இருந்தன. நேரகாலத்துடன் எழுந்து மக்களுக்காக வேலை செய்பவராக இருந்தார்.
மக்கள் அவரைச் சந்திப்பது, கடினமான காரியமாக இருக்கவில்லை. முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம், இன்னும் 20 வருடங்களுக்குப் பின்னர் எப்படி இருக்க வேண்டும் எனத் தூரநோக்கத்துடன் சிந்தித்தார். அவரது மரணம், ஒரு திட்டமிட்ட சதி என்றால், இவைதான் அதற்கான காரணமாகக் கூட இருக்கலாம்.

ஆனால், அவருக்குப் பின்வந்த தலைவர்கள், தளபதிகளிடத்தில் இந்தப் பண்புகள் அறவே இருக்கவில்லை. சிலரிடம் இருந்த அஷ்ரபின் சாயல்களும் இரண்டொரு வருடங்களில் இருந்த இடம் தெரியாமல் போயின.
முஸ்லிம் சமூகமும் அப்படித்தான் மாறிப் போயுள்ளது. நல்லவர்களைத் தலைவர்களாகத் தெரிவு செய்வதை விடுத்து பதவி, பணம் உள்ளவர்களுக்குப் பின்னால் போவதற்கே பெரும்பாலான முஸ்லிம்கள் விரும்புகின்றனர். கட்சிகளுக்கு உண்மைப் போராளிகள் இருந்த காலம் போய், இன்று ‘பேஸ்புக்’கை மையமாகக் கொண்ட அறிவிலித்தனமான, ‘எடுபிடிகள்’ உருவாகியுள்ளனர்.

இந்தப் பின்னணியில், மறைந்த தலைவர் அஷ்ரப் இரண்டு சந்தர்ப்பந்தங்களில் நினைவுகூரப்படுகின்றார். ஒன்று, தேர்தல் மேடைகளிலும் போஸ்டர்களிலும் பிரசாரப்படுத்தப்படுகின்றார். அடுத்ததாக, அவர் மரணித்த செப்டெம்பர் 16 இல் நினைவு கூரப்படுகின்றார்.

இம்முறையும்,அங்குமிங்குமாக முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மறைந்த தலைவருக்கான நினைவு நிகழ்வுகளை நடத்தின. அவரது கொள்கைகள் தூசு தட்டப்பட்டன; அவரது பெருமைகள் பேசப்பட்டன. தேர்தல் நெருங்க நெருங்க இந்தப் போக்கு இன்னும் தீவிரமாக இருக்கும்.

முஸ்லிம்களால், அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்வோரால் மர்ஹூம் அஷ்ரபின் இடைவெளி இன்றும் உணரப்படுகின்றது. ‘அவர் போன்ற ஒரு தலைமைத்துவம் இல்லாது போய்விட்டதே’ என்று அங்கலாய்க்கின்றனர்.

ஆனால், நல்ல மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கும் மக்களை ஏமாற்றும் பேர்வழிகளை வீட்டுக்கு அனுப்புவதற்கும் முஸ்லிம் சமூகம் துணியவில்லை. மீண்டும் மீண்டும் அரசியல் வியாபாரிகளைத்தான் மக்கள் தெரிவு செய்து கொண்டிருக்கின்றனர்.

இருப்பினும், தலைமைத்துவ இடைவெளியை இன்றுவரை முஸ்லிம் சமூகம் உணர்கின்றது என்றால், அதன் அர்த்தம், இத்தனை கட்சிகளாலும் முஸ்லிம் தலைவர்கள், எம்.பிக்களாலும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ அஷ்ரபின் இடத்தை ஒரு இம்மியளவு கூட நிரப்ப முடியவில்லை என்பதுதான்!

அஷ்ரப் செய்த அரசியலைத் தாண்டியும் சமூக அரசியலைக் கொண்டு செல்வதற்கு இன்னும் இடமிருக்கின்றது. அதற்கான காலத்தின் தேவையும் முஸ்லிம் சமூகத்துக்கு உள்ளது. ஆனால், 1970களில் பெருந்தேசிய கட்சிகளின் ஓர் அங்கமாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இருந்ததைப் போன்றதொரு நிலையிலேயே, இப்போது மீண்டும் ‘மறைமுக முகவர்களாக’ முஸ்லிம் அரசியல் அணிகள் மாறியிருக்கின்றன.

இந்த இலட்சணத்தில், முஸ்லிம் சமூக விடுதலை என்றும் நாங்கள் அஷ்ரபின் அரசியல் பாதையில் பயணிக்கின்றோம் என்றும் கூறுவது முரண் நகையான போக்காகும். நாங்கள் செல்வதுதான் அவரது வழிமுறை என்ற தோரணையில் மக்களை ஏமாற்றுவது அதைவிடப் பெரிய சமூகத் துரோகமாகமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.