;
Athirady Tamil News

நுரைச்சோலை அனல் மின் நிலையம்: தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடையாதா? (கட்டுரை)

0

அனல் மின் நிலையங்கள், மண்ணையும், காற்றையும், கடலையும், அதைச் சுற்றியுள்ள மக்களின் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கின்றன. இவை மக்களின் வாழ்வாதாரத்தில் கடுமையான தாக்கத்தை நிகழ்த்துவதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

அனல்மின் நிலையங்கள் நிலக்கரியை எரிப்பதன் மூலம் சாம்பலை கழிவுகளாக உருவாக்குகின்றன. இந்த சாம்பலில் பாதரசம் போன்ற கனதியான உலோகங்கள் அடங்கியிருக்கின்றன. அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் இத்தகைய கழிவுகள் மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகவும் ஆபத்தானவைகளாக மாறிவிடுகின்றன.

அனல் மின் நிலைய கழிவுகளின் விளைவாக வெளியேறும் பாதரசம் என்ற உலோகம், இந்த பூமியில் ஏற்படுத்திவரும் பாதிப்புகள் அளவிட முடியாதவையாகும். வெறும் 0.6 கிராம் பாதரசத்தால், சுமார் 20 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியை மாசுபடுத்தி விட முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.பாதரசம் என்ற உலோகம் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் மிகப்பொிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

உலகின் மிக முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள பருவநிலை மாற்றத்துக்கு நிலக்கரியை எரிப்பது முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றங்கள் உலகில் பாரிய அழிவுகளை நிகழ்த்தி வருகின்றன. அண்மையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ள அனா்த்தம் இதற்கு சிறந்த சான்றாகும். நிலக்காியை எாிப்பதால் ஏற்படும் விளைவுகள் மிகப்பொிய இயற்கை அனா்த்தங்களுக்கு காரணிகளாக அமைகின்றன.

‘ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம்’ வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதை முற்றாக குறைக்க வேண்டும் என்று அது உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

நிலக் கரியை பயன்படுத்தும் அனல் மின் உற்பத்தி நிலையங்கள், உலகில் சுற்றுச் சூழலை மாசடைய செய்வதிலும், மனிதா்களுக்கு சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துவதிலும் முன்னணியில் நிற்கின்றன.

மேற் கூறப்பட்ட ஆபத்துக்கள், அச்சுறுத்தல்கள், விபரீதங்கள் அனைத்தையும் அரவணைத்துக் கொண்டுதான் எமது நாட்டில் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் 2006ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

சீன அரசின் கடன் உதவியுடன் புத்தளம் மாவட்டத்தின் நுரைச்சோலையில் இந்த அனல் மின் நிலையம் கட்டமைக்கப்பட்டது. நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையம் என அழைக்கப்படும் இது இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையமாகும்.

இலங்கையில் நிலக்கரி அனல் மின் நிலையம் ஒன்றை அமைப்பதற்கு முதலில் திருகோணமலை பிரதேசமே தொிவாகியிருந்தது. இந்தத் திட்டத்தை, மக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் வேறு இடங்களுக்கு மாற்றவேண்டிய நிா்ப்பந்தம் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டது.

இதற்கு மாற்றீடாக, நாட்டின் பல பிரதேசங்களுக்கு இந்த திட்டத்தை நகர்த்துவதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டது. இருந்த போதிலும், இடைவிடாத மக்களின் எதிர்ப்பின் காரணமாக இலங்கை மின்சார சபை, சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் தனது திட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டது.

1995 ஆம் ஆண்டளவில், சந்திாிகா அம்மையாாின் ஆட்சிக் காலத்தில் குறித்த அனல் மின் நிலையத்தை நுரைச்சோலை பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த அனல் மின் நிலையத்திற்கு எதிராக பொதுமக்களின் எதிர்ப்புகள் மிகப் பாாிய அளவில் எழுந்ததைத் தொடா்ந்து சந்திரிகா அரசு இதிலிருந்து பின்வாங்கியது.

2006ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மீண்டும் நுரைச்சோலையில் அனல் மின் நிலையத்தை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

எதிா்ப்புகள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், மக்களின் சுகாதாரப் பிரச்சினைகள் என எதையும் கருத்தில் கொள்ளாமல் அரசியல் அதிகாரத்தையும், அடக்குமுறையையும் பயன்படுத்தி அனல் மின் நிலைய வேலைகளை மஹிந்த அரசசாங்கம் ஆரம்பித்தது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு எதிரான அன்றைய போராட்டம் மூா்க்கத்தனமாக அடக்கப்பட்டது. பொலிஸாா் நடாத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய ஏ.டபிள்யூ. சோமசிறி என்பவா் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனா். சோமசிறியின் சடலத்தை பொறுப்பேற்க மருத்துவமனைக்கு சென்ற பத்து பேரையும் மஹிந்த அரசு அன்று கைது செய்து தனது மூா்க்கத்தனத்தை மக்களுக்குக் காட்டியது.

மக்களின் போராட்டத்தையும்,எதிா்ப்புக் குரலையும் நசுக்கி நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஆரம்பக் கட்டுமானப் பணிகளை அரசாங்கம், சீன நிறுவனமான China Machinery Engineering Corporation (CMEC), உடன் இணைந்து செய்து முடித்தது.

வளமான மண்ணையும், சுத்தமான நிலத்தடி நீரையும் கொண்ட நுரைச்சோலை பிரதேச மக்களின் வாழ்வாதாரமும், பசுமை சூழலும் இந்த அனல் மின் நிலையத்தின் உருவாக்கத்தின் மூலம் கேள்விக் குறியாகின.
மக்களின் வாழ்வாதாரத்தில், சுகாதாரத்தில், சூழலில் பிரச்சினைகளை உருவாக்கிய இந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தால், இலங்கை எதிா்ப்பாா்த்த தனது இலக்குகளை எட்டியதா? நாட்டின் மின்சார தேவைகள் நிறைவு பெற்றதா? என்ற கேள்விகள் மட்டுமே ஒரு தசாப்த காலமாக எஞ்சி நிற்கின்றன.

இந்த அனல் மின் நிலையம், இலங்கையின் பொருளாதாரத்தால் ஈடு கொடுக்க முடியாத, தொழில் நுட்ப கோளாறுகள் அதிகம் கொண்ட, பராமாிக்க முடியாத, ஒரு “வெள்ளை யானையாக” உருவெடுத்துள்ளது.
சீனாவின் உதவியுடன் நிா்மாணிக்கப்பட்ட இந்த அனல் மின் நிலையம் அதன் இலக்கை அடையாமல் தினமும் திணறிக்கொண்டிருக்கிறது.

நிறைவடையாத நாட்டின் மின்சார தேவைகளும், அடைய முடியாத இலக்குகளும், அடிக்கடி அதில் இடம்பெற்று வரும் தொழில் நுட்ப கோளாறுகளும், சூழல் மற்றும் சுகாதார பிரச்சினைகளும் விடை கிடைக்காத விசயங்களாகவே தொடா்ந்து இருந்து வருகின்றன.

இந்த அனல் மின் நிலையம் உருவாக்கப்பட்டதில் இருந்தே, அதன் தொழில் நுட்ப செயற்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வந்திருக்கின்றன.ஆரம்பத்திலிருந்தே, நாட்டின் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், இது செயலிழப்புகளுக்கு உட்பட்டு வந்திருக்கிறது.

2010ம் ஆண்டு ஒக்டோபர் மாதம், அனல் மின் நிலையத்தின் கட்டமைப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், இதில் முதலாவது தீ விபத்து ஏற்பட்டது. நிலக்கரி எரிப்பதில் இருந்து கழிவுகள் வெளியேறும் புகைபோக்கியில் அடைப்பு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஜூலை 22, 2012 அன்று , கொதிகலன்களுக்கு இடையே தண்ணீர் செல்லும் குழாய் ஒன்றில் கசிவு ஏற்பட்டதால் மின் நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.

2012 ஆகஸ்ட் 8ல் தொழில் நுட்ப கோளாறு காரணமாக மின் நிலையத்தின் செயல்பாடு முற்றாக நிறுத்தப்பட்டது.
ஜனவரி 29, 2013 அன்று, மின் உற்பத்தி நிலையம் அதன் வடிவமைக்கப்பட்ட 300 மெகாவாட் கொள்ளளவைத் தாண்டியதால், முழுமையாக செயலிழந்தது.

ஜனவரி 12, 2014 அன்று, நீராவி கசிவு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மின் உற்பத்தி நிலையம் ஆறு நாட்களுக்கு மூடப்பட்டது. மீண்டும் செயற்பட ஆரம்பித்த மறு நாள், ஏற்கனவே பழுதுபார்க்கப்பட்ட மின்தேக்கியில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின் நிலையம் 26-வது முறையாக மூடப்பட்டது.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 69 கோடி ரூபாய் செலவில் மின் நிலையம் மூன்று மாத காலமாக தொடராக பழுதுபார்க்கப்பட்டது. மீண்டும் மின் உற்பத்தி ஆரம்பித்து 10 நாட்களில் மறுபடியும் முடங்கியது.

இந்த அனல் மின் நிலையத்தை உருவாக்கிய சீன நிறுவனம், குறைபாடுகள் நிறைந்த மற்றும் தரமற்ற உபகரணங்களால் இந்த அனல் மின் நிலையத்தை உருவாக்கியிருப்பதே இத்தகைய இடையூறுகளுக்கு காரணம் என்று துறைசாா் நிபுணா்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனா்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை நிர்மாணித்த சைனா மெஷினரி இன்ஜினியரிங் கோபரேஷன் (China Machinery Engineering Corporation – CMEC), என்ற நிறுவனம், உரிய முறையில் கட்டமைக்கவில்லையென்று மின்சார தொழிற் சங்கங்கள் கூறி வருகின்றன.

அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டதன் பின்னா், அதன் செயற்பாட்டை உறுதிப்படுத்திய சான்றுகளுடன் அரசிடம் முறையாக ஒப்படைப்பது வழக்கமாகும். அவ்வாறான சம்பவங்கள் இங்கு நடைபெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது. முறையான தரத்துடன் மின் உற்பத்தி நிலையம் கட்டமைக்கப்பட்டிருந்தால், அடிக்கடி பழுதடைந்து செயலிழக்கும் நிலைக்கு செல்லாது என்பதே துறைசாா் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

நுரைச்சோலை அனல் மின் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை, 57 தடவைகளுக்கும் அதிகமாக செயலிழந்து மின் உற்பத்தி நிறுத்தப் பட்டதாக அறிய வருகிறது. இதன் விளைவாக இலங்கைக்கு நிதி மற்றும் பாரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

சைனா மெஷினரி இன்ஜினியரிங் கோபரேஷன் (China Machinery Engineering Corporation – CMEC), நிறுவனம், இந்த அனல் மின் நிலைய உருவாக்கத்தில் மோசமான மற்றும் தரம் குறைந்த பொருட்களைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

மின் உற்பத்தி நிலையம் பல சந்தர்ப்பங்களில் செயலிழந்து போவதற்கு இதுவே காரணமாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரம, குறித்த சீன நிறுவனம் தரமற்ற உபகரணங்களைப் பயன்படுத்தி நுரைச்சோலை மின் நிலையத்தை நிர்மாணித்ததாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

2014 ஆம் ஆண்டு வரை, சீன நிறுவனம் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களுக்கு தொழில்நுட்பத்தை முறையாக வழங்கவில்லை என்று இலங்கை மின்சார ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியது. அது மட்டுமல்லாமல், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்கும் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள், மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

2013ம் ஆண்டு டிசம்பா் மாதம், தேசிய மின்சார நுகர்வோர் இயக்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் இணைந்து நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதல் கட்டத்தில் மீண்டும் மீண்டும் ஏற்படும் செயலிழப்புகளை விசாரிக்க பாராளுமன்றத் தெரிவுக்குழு (Parliamentary Select Committee) ஒன்றை அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்தன.

இலங்கை மின்சார சபையின் உயா் அதிகாரிகள், குறித்த சீன நிறுவனத்தோடு இணைந்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

குறித்த அதிகாரிகள், மின் நிலையம் தொடா்பாக தொழில்நுட்ப மதிப்பீடுகளை, பிற செயல்பாடுகளை ஒழுங்காக செய்யவில்லை என்று குற்றம் சுமத்திய தொழிற் சங்கங்கள், சில மின்சார சபை அதிகாரிகள் தங்கள் குடும்பத்துடன் சீனாவுக்குச் சுற்றுலா சென்றதாகவும், அவர்கள் தங்கள் கடமையை ஒழுங்காக நிறைவேற்றவில்லை என்பதற்கு இது சிறந்த சான்று என்றும், இந்த மோசடிகள் தொடா்பாக அரசாங்கம் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனா்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறுகளுக்கு சீன நிறுவனம் எந்தளவு பொறுப்பாக உள்ளதோ, அதே போல இந்த அதிகாரிகளும் குறித்த பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் கூறியிருந்தாா்.

சீனாவில் நிறுவப்பட்டுள்ள அனல் மின் நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், நுரைச்சோலை அனல் மின் நிலையம் வருடத்திற்கு பல முறை செயலிழந்து விடும் நிலையில் செயற்படுகிறது. சீனாவில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்ட மின்உற்பத்தி நிலையத்தின் உபகரணங்களையே இலங்கைக்கு கொண்டு வந்து மீள் பயன்பாட்டுக்கு உட்படுத்தியதான சந்தேகத்தை மின்சார தொழிற்சங்கங்கள் ஏற்கனவே கிளப்பியிருந்தன.

இந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை தொடா்பாக விசாரணைகளை மேற்கொள்ள அதிகாரிகள் இன்றுவரை முன்வரவில்லை. ஆரம்பம் முதலே இந்த மின் நிலையம் தொடா்பான செயற்பாடுகள் கேள்விக் குறியாகவே இருந்து வந்திருக்கின்றன.

இந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரி இந்தோனேசியா, ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நிலக்கரி இறக்குமதியில் அதிக அளவில் ஊழல்கள் இடம்பெற்றதாக கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாகின.

ராஜபக்ஷா்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களும், சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளும் நிலக்கரி விநியோகம் செய்து பலகோடி வருமானம் ஈட்டியதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

எது எப்படியோ, இலங்கையின் ரம்யமான சூழலுக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும், சுகாதார நலத்திற்கும் குறிப்பாக இலங்கையின் பொருளாதாரத்திற்கும், அபிவிருத்திக்கும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை பொதுமக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி தொடா்ந்து நடாத்திச் செல்ல வேண்டிய துா்ப்பாக்கிய நிலை எமது நாட்டுக்கு ஏற்பட்டிருக்கிறது.

மண்ணையும், மக்களையும், காற்றையும் மாசு படுத்தும் அனல் மின் நிலையங்களை இனி அமைக்கப்போவதில்லை என்று அரசாங்கம் 2016ம் ஆண்டு, உயா் நீதிமன்றத்திற்கு வாக்குறுதி அளித்திருக்கிறது.
சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் எந்தத் திட்டங்களையும், அதாவது அனல் மின் நிலையங்களை வெளிநாடுகளில் அமைக்கப்போவதில்லை என்று கடந்த வருடம் (2021) சீனா அறிவித்தது.

சுற்றுச் சூழல் மாசடைவதற்கு மிகப்பொிய பங்கை வழங்குகின்ற இந்த அனல் மின் நிலைய திட்டங்களை சீனா கைவிடுவதற்கு காலம் கடந்து முடிவெடுத்துள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 21ம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் முன் பதிவு செய்யப்பட்ட வீடியோ உரையின் மூலம் உலகிற்கு அந்த செய்தியை அறிவித்திருந்தாா்.

சீனா அனல் மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதை நிறுத்தியிருக்கிறது. என்றாலும், நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளிவரும் கழிவுகள் இந்த மண்ணையும், காற்றையும், மனிதா்களையும் அணுவணுவாக அாித்துக் கொண்டிருப்பதை நிறுத்தவா போகிறது?

You might also like

Leave A Reply

Your email address will not be published.