;
Athirady Tamil News

சம்பந்தனின் பதவி வெறியைத் தணிக்குமா தமிழரசின் குழு? (கட்டுரை)

0

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை, அவர் வகித்து வரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு கோருவதற்காக, சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவை இலங்கை தமிழரசுக் கட்சி அமைத்திருக்கின்றது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சி. வி. கே சிவஞானம், எம். ஏ சுமந்திரன் உள்ளிட்டவர்கள் அடங்கிய அந்தக் குழு, எதிர்வரும் நாள்களில் சம்பந்தனை நேரில் சந்தித்து, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யுமாறு ‘பக்குவமாக’க் கோரும். வவுனியாவில், ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டது.

வயது மூப்பு காரணமாக ஏற்படும் உடல்நலக் குறைவால் சம்பந்தன், கடந்த சில ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரால் உதவியாளர்கள் இன்றி எந்தக் காரியத்தையும் ஆற்ற முடியாத நிலை தொடர்கிறது. அவர் முக்கிய கலந்துரையாடல்கள், சந்திப்புகளில் கூட, என்ன பேசுகிறார் என்பதை மற்றவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக சுமந்திரன் தேவைப்படுகிறார். தந்தை செல்வா உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போது, அமிர்தலிங்கம் எப்படி செல்வாவின் குரலாக நோக்கப்பட்டாரோ, அதுபோலத்தான் சம்பந்தனின் குரலாக இன்றைக்கு சுமந்திரன் அடையாளப்படுத்தப்படுகின்றார்.

இவ்வாறான நிலை நீடிப்பதை, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் விரும்பவில்லை. அதனால், சம்பந்தனை, கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் இருந்து விலக வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கோரி வருகின்றன. அத்தோடு, கூட்டமைப்புக்கு கூட்டுத்தலைமை உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.

கூட்டமைப்பின் தலைவராகவும் பாராளுமன்றக் குழுவின் தலைவராகவும் இருக்கும் சம்பந்தன், தற்போதைய பாராளுமன்றத்தின் அமர்வுகளில் சொற்ப நாள்கள் மாத்திரமே கலந்து கொண்டிருக்கின்றார். அவர், வைத்திய விடுப்பு என்கிற பெயரில், அமர்வுகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வருகிறார். அதனால் ஏற்படும் பாராளுமன்றக் குழுத் தலைவர் என்கிற வெற்றிடத்தையும் சுமந்திரன் பிரதியீடு செய்து வருகிறார். இதனால், தமிழரசுக் கட்சிக்குள்ளும் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளுக்குள்ளும் குழப்பம் நீடிக்கின்றது.

முக்கிய அரசியல் முடிவுகள், கிட்டத்தட்ட சுமந்திரனின் கைகளுக்குள் சென்று சேர்ந்துவிட்டதான நிலை உருவாகியிருக்கிறது. ஏனெனில், ஏற்கெனவே தந்தை செல்வாவின் இறுதிக் காலங்களில், அமிர்தலிங்கம் தன்னுடைய அரசியல் முடிவுகளை எல்லாம் செல்வாவின் பெயரால் முன்மொழிந்தார் என்பது, தமிழ்த் தேசிய அரசியலில் நீடிக்கும் உணர்நிலை.

அப்படியான நிலை, இன்னொரு சந்தர்ப்பத்தில் தொடர்வதை யாரும் விரும்ப மாட்டார். அதனால், சம்பந்தனின் பதவி விலகல் அல்லது அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டிய நிலை என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.

இவற்றையெல்லாம் விட முக்கியமான விடயம், திருகோணமலையில் தற்போது அரங்கேறி வரும் தமிழ் பாரம்பரிய நில ஆக்கிரமிப்பை களத்தில் இருந்து எதிர்ப்பதற்கும், செயற்றிறனுடன் இயங்குவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அவசியம் காணப்படுகின்றது. சம்பந்தனால் செயற்பட முடியாத நிலையில், அவர் தன்னுடைய இடத்தை, தனக்கு அடுத்த நிலையில் உள்ளவரிடம் விட்டுக் கொடுப்பதுதான் அவர் தமிழ்ச் சமூகத்துக்கு செய்யும் நல்ல காரியமாகும்.

வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சி கூட்டத்தில், திருகோணமலையில் இருந்து செயற்பாட்டாளர் குழுவொன்று, சம்பந்தனின் பதவி விலகல் தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று வாதிட்டு இருக்கின்றது. அந்தச் செயற்பாட்டாளர்கள், திருகோணமலையில் தமிழரசுக் கட்சியை புனரமைப்புச் செய்த குகதாசனால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்பது செய்தி.

சம்பந்தன் பதவி விலகினால், அந்த இடத்துக்கு குகதாசன் வருவார். அவரும் இளையவர் அல்ல; அவ்வளவு வேகமாகச் செயற்படக் கூடியவர் என்று கருத முடியாது. ஆனாலும், இருந்தும் இல்லாமல் இருப்பதற்கு, களத்தில் செயற்படுவதற்கான ஒருவராக குகதாசனின் இடத்தை ஏற்றுக் கொள்ள முடியும்.

தமிழ்த் தேசிய அரசியல் என்பது, தொடர் செயற்பாடு மற்றும் இராஜதந்திர அணுகுமுறை என்கிற கட்டங்களில் இருந்து அணுப்பட வேண்டியது. அதனால், களத்தில் இயங்குபவர்கள் ஓய்வின்றி உழைத்தாக வேண்டும். அதற்கு வயது மூப்பு, உடல்நலக் குறைவு போன்ற தொல்லைகள் இல்லாதவர்களின் வருகை அவசியமானது. அதுதான், மக்களையும் தமிழ்த் தேசிய அரசியலில் தொடர்ச்சியாக இணைத்துக் கொண்டிருக்கும்.

மாறாக, வீடுகளில் ஓய்வெடுக்க வேண்டியவர்கள், கட்சிகளையும் பதவிகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தால், தமிழ்த் தேசிய அரசியல், சாய்வு நாற்காலிகளில் சாய்ந்திருக்க தொடங்கிவிடும். கூட்டமைப்புக்குள், குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள் ஓய்வுபெற வேண்டிய மூத்தவர்கள் பலர், இளையவர்களுக்கு இடம் வழங்காமல், நந்திகளாக இடைமறித்து நிற்கிறார்கள்.

கடந்த பொதுத் தேர்தலின் போது, மூத்தவர்கள் ஒதுங்கிக் கொண்டு இளையவர்களுக்கு வழிவிடவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அந்தக் கோரிக்கைகளின் போக்கில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடாது, அந்த இடத்தில் குகதாசனை முன்னிறுத்தும் முடிவுக்கு சம்பந்தன் வந்திருந்தார். அவர், தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வருவாக கூறினார்.

ஆனால், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவோ, சம்பந்தன் போட்டியிடாது விட்டால் தானும் போட்டியிட முடியாது போகும்; அதனால், எப்படியாவது சம்பந்தனை போட்டியிட வைத்துவிட வேண்டும் என்று குறியாக இருந்தார். அதில் அவர் வெற்றியும் பெற்றார். ஆனால், அவரால் தேர்தலில் வெற்றியடைய முடியவில்லை என்பது வேறு கதை!

கடந்த பொதுத் தேர்தலில், கூட்டமைப்பின் தோல்வி என்பது, தமிழரசுக் கட்சியாலேயே பெரும்பாலும் நிகழ்ந்தது. வேட்பாளர்கள் தனித்துத் தனித்தே விருப்பு வாக்குகளைக் கோரினார்களே அன்றி, கட்சிக்காக வாக்குகளைக் கோரவில்லை. தாங்கள் வென்றால் போதுமென்பதுதான் அவர்களின் நிலைப்பாடாக இருந்தது.

அத்தோடு, கட்சியின் இளையோரும் ஆதரவாளர்களும் கூட சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள் போட்டியிட்டதால் எரிச்சல் அடைந்தார்கள். கட்சிக்காக வாக்குச் சேகரிப்பதற்குப் பதிலாக, தங்களுக்குள் பிரிந்து நின்று சண்டையிடுவதற்காகவே நேரத்தைச் செலவிட்டார்கள். தேர்தலில் இளையோருக்கு இடம் வழங்காது போட்டியிட்டு தோற்ற மாவை, அதன்பின்னர், தேசிய பட்டியலுக்காக சிவஞானம் உள்ளிட்டவர்களை தூது அனுப்பி, ‘அழிச்சாட்டியம்’ பண்ணிய காட்சிகளை எல்லாம் தமிழ் மக்கள் காண வேண்டிய அவலம் ஏற்பட்டது.

இப்போது, சம்பந்தனை பதவி விலகக் கோருவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் உள்ள மாவை சேனாதிராஜா, சிவஞானம் உள்ளிட்டவர்களும் வயது மூப்போடு இருப்பவர்கள். அந்த வயதுக்குரிய உடல்நல பிரச்சினைகளோடு அல்லாடுபவர்கள். ஆனால், அவர்கள் தொடர்ந்தும் கட்சியையும் அதன் மூலம் அடையக் கூடிய பதவிகளுக்காகவும் கழுகுகள் போல காத்திருப்பவர்கள். காலம், இவர்களிடமே சம்பந்தனை பதவி விலகுமாறு ‘பக்குவமாக’ கோரும் பொறுப்பை வழங்கி இருக்கின்றது.

சம்பந்தனிடம் பதவி விலகுமாறு பக்குவமாகக் கோருவதற்கு முன்னர் மாவை, சிவஞானம் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் பதவி ஆக்கிரமிப்பாளர்கள், அந்த இடங்களை இளையோரிடம் கையளிப்பது தொடர்பில் சிந்திப்பது நல்லது. இல்லையென்றால், கூட்டமைப்பின் அழிவையும் தமிழரசுக் கட்சியின் தோல்வியையும் தவிர்க்கவே முடியாது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நிலை நிறுத்துவதற்காகவே, தமிழ்த் தேசிய அரசியல் தோற்றம் பெற்றது. ஆனால், இன்றைக்கு அந்த அரசியல் அரங்கை, பதவி வெறியர்களும் சுயநலமிகளும் ஆக்கிரமித்து விட்டார்கள். அது, தமிழ் மக்களை தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகிச் செல்வதற்கான சூழல்களை ஏற்படுகின்றது.

அதுதான், வடக்கு – கிழக்கில் தமிழ்த் தேசிய கட்சிகளைத் தாண்டி, பௌத்த சிங்களக் கட்சிகள் மற்றும் ஒத்தோடிக் கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் வெற்றிபெறும் நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. ஒலிவாங்கிகளுக்கு முன்னால் தமிழ்த் தேசியம் என்று வாய்கிழியக் கத்தி, மக்களை வெறுப்பேற்றுவதற்கு முன்னர், தமிழ்த் தேசிய கட்சிகளில் அசையாத நந்திகளாக இருப்பவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
அவர்கள், பதவிகளில் இருந்து விலகி, கட்சியின் போசகர்கள் என்கிற நிலைக்கு நகர வேண்டும். இல்லையென்றால், தமிழ்த் தேசிய கட்சிகளின் வீழ்ச்சி இன்னும் மோசமாக இருக்கும்.

சம்பந்தனை பதவி விலகக் கோருவதற்காக, தமிழரசுக் கட்சி குழுவை அமைத்திருக்கின்றது என்கிற விடயம், மேலோட்டமாக பார்த்தால் நகைப்புக்குரியதுதான். ஆனால், பதவிகளில் இறுதிக் காலம் வரையில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கும் அது ஒரு விதத்தில் நெருக்கடியை ஏற்படுத்தும்.

இன்றைய சூழலில், சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், அவர் பதவி விலகுவாரா என்றால், அந்தச் சிந்தனை அவருக்கு இருப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. ஏனெனில், அவர் அதிகார அரசியலில் திளைத்த ஒருவர். இறுதிக் காலம் வரையில் பதவியை பற்றிப் பிடித்திருப்பதே அவரின் இறுதி விரும்பமாகவும் இருக்கும்.

ஆனால், நெருக்கடிகள் வழங்கப்பட்டு அவர் பதவி விலகினால், தமிழரசுக் கட்சிக்குள் நந்திகளாக வீற்றிருக்கும் பலருக்குமான ஆப்பாக அது இருக்கும். அவ்வாறான நிலை உருவாகுவதே, தமிழ் மக்களுக்கு சிறிதளவேனும் நன்மை பயக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.