;
Athirady Tamil News

ஐரோப்பிய மின்சார நெருக்கடி: இலங்கைக்கான படிப்பினைகள்!! (கட்டுரை)

0

இலங்கை மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு, முக்கிய பங்களித்தவற்றில் ஒன்று மின்சார நெருக்கடி. இலங்கையின் மின்சார நெருக்கடிக்கு, தற்காலிகமான தீர்வு எட்டப்பட்டுள்ள போதும், இது நிரந்தரமானதோ நீண்டகாலத்துக்கு நிலைக்கக்கூடியதோ அல்ல; எப்போது வேண்டுமானாலும் இன்னொரு மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் எனும் நிலையிலேயே, நாடு இயங்குகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஒரு சரணாகதிப் பொருளாதார மாதிரியை நோக்கியே, இலங்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. தனியார் மயமாக்கலை உந்தித் தள்ளுகின்ற நவதாராளவாத பொருளாதார அடிப்படைகள் குறிவைக்கின்ற துறைகளில், மின்சாரம் முதன்மையானது.

தொழில்நுட்பம் சார்ந்த தேவைகளின் பெருக்கம், அன்றாட வாழ்வில் அதிகரித்துள்ள மின்சாரப் பாவனை, பொருளாதார வளர்ச்சி கோருகின்ற மின்சாரத்தின் தேவை என்பன, நாட்டின் பொருளாதாரத்தோடு மின்சாரத்தைப் பின்னிப் பிணைந்ததாக மாற்றியுள்ளன.

இலங்கையில் இப்போது அதிகரித்துள்ள இன்னும் அதிகரிக்கும் மின்சாரத் தேவையானது, மின்சாரத்தை மிகைஇலாபம் உழைக்கக்கூடிய ஒரு சரக்காக (commodity) மாற்றியுள்ளது. இதைச் சந்தைப் பொருளாதாரமும் அதன் அரங்காடிகளும் நன்கறிவர்.

மின்சாரத்தைத் தனியார் மயமாக்குவது, மின்சாரத்துக்கான மானியங்களை நிறுத்துவது, போட்டிச் சந்தையின் பகுதியாக மின்சாரத்தை மாற்றுவது போன்றன, இப்போது பிரதான பேசுபொருளாகி உள்ளன. இன்று உலகளாவிய ரீதியில், மின்சார நெருக்கடி நிலவுகின்றது. மின்சாரத்தை மக்களின் தேவைக்கு உரியதாகவன்றி, சரக்காக மாற்றியதன் விளைவை ஐரோப்பியர்கள் இன்று அனுபவிக்க நேர்ந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், ஐரோப்பாவில் மின்சாரத்தின் விலை வானளவு மோசமாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டுகளை விட, நான்கு மடங்காகவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 மடங்காகவும் இது உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில், எரிவாயுவின் விலை அதிகரிப்பு, போதுமான எரிவாயுவை ரஷ்யா வழங்காதது போன்ற காரணங்களால், இந்த விலையுயர்வு ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. இது, முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. இரண்டு உதாரணங்களின் ஊடு, இதை நாம் நோக்கவியலும்.
ஜேர்மனியின் மின்சார உற்பத்தியில் ஏழில் ஒரு பங்கை மட்டுமே, இயற்கை எரிவாயு பங்களிக்கும் போது, ஜேர்மனியின் மின்சார விலை ஏன் நான்கு மடங்கு உயர வேண்டும்?

பிரித்தானியா புதுப்பிக்கத்தக்க மற்றும் அணுமின் நிலையங்களில் இருந்து, 40 சதவீத மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. தான் பயன்படுத்தும் இயற்கை எரிவாயுவில் இருந்து, பாதியை உற்பத்தி செய்கிறது. இங்கிலாந்து, மின்சாரத்தின் விலையில் கடுமையான உயர்வை ஏன் காண்கிறது?

எரிவாயு விலையில் சமீபத்திய அதிகரிப்புக்கு, ரஷ்யாவைக் குற்றம் சாட்டுவது பற்றிய இந்தப் பேச்சுகள் அனைத்தும், மின்சார உற்பத்தியாளர்கள் உண்மையில் மிக அதிகளவான இலாபத்தை ஈட்டுகிறார்கள் என்ற யதார்த்தத்தை மறைக்கிறது.

ஏற்கெனவே, கொரோனா வைரஸ் தொற்றால், மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட ஏழை நுகர்வோர், மிகக் கொடூரமான இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறார்கள். குளிர்காலத்தில், தங்கள் வீட்டு பட்ஜட்டில் 30-50 சதவிகிதம் மின்சார கட்டணமாக இருக்கும் என்பதால், அவர்கள் உணவை வாங்குவதா அல்லது தங்கள் வீட்டை சூடாக வைத்திருப்பதா என்ற முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

மின்சாரத் துறையில், கடந்த 30 ஆண்டுகளாக நிகழ்ந்த சந்தைச் சீர்திருத்தங்கள் என்று சொல்லப்படும் கதையின் மறுபக்கமே, இப்போது ஐரோப்பா எதிர்நோக்குகின்ற மின்சார விலை உயர்வின் அடிப்படை ஆகும்.

தினசரி மற்றும் மணிநேர ஏலங்களில் மின்கட்டணமானது, விலையுயர்ந்த விநியோகத்திற்குரிய மின்சாரத்தின் விலையுடன் சமப்படுத்தப்படுகிறது. எனவே, மின்சாரத்தை விநியோகிக்கும் நிறுவனங்கள், குறைவான விலைக்கு மின்சாரத்தைப் பெற்றாலும், விநியோகத்தில் அதியுயர்ந்த விலைக்குள்ள மின்சார விலையையே வாடிக்கையாளருக்கு வழங்குகிறார்கள்.

இப்போது, அதியுயர்ந்த மின்சார விலையை நிர்ணயிப்பதாக இயற்கை எரிவாயு இருக்கிறது. மின்கட்டணத்துக்கு மின்சாரம் வழங்குவதற்கான முக்கிய ஆதாரமாக எரிவாயு இல்லாவிட்டாலும், சந்தையில் அதிகரித்துள்ள எரிவாயுவின் விலையின் காரணமாக, மின்சார விலை தொடர்ச்சியாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இது சந்தை அடிப்படைவாதம் என்று அழைக்கப்படுகிறது. இதை நவதாராளவாதப் பொருளாதார வல்லுநர்கள், ‘விளிம்புப் பயன்பாட்டுக் கோட்பாடு’ (marginal utility theory) என்று அழைக்கின்றனர்.

இது, 1973 முதல் 1990 வரை அகஸ்டோ பினோஷேவின் இராணுவ சர்வாதிகாரத்தின் போது, சிலியில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சாரத்துறைச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாகும். இந்த ‘பினோஷே’ சீர்திருத்தங்களின் மூலாதாரம், மில்டன் ப்ரீட்மன் ஆவார். ப்ரீட்மனும் அவரது பொருளாதார அடியாட்களும் எவ்வாறு சிலியைச் சுரண்டிக் கொழுத்தார்கள் என்பது தனிக்கதை. (இக்கதை இலங்கையுடன் பல வகைகளில் ஒத்தது).

சிலியில், 1980ஆம் ஆண்டு பினோஷேயின் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக, மின்சார விலை அதன் ‘சிறிதளவு விலையை’ (marginal price) அடிப்படையாகக் கொண்டது. சிலியின் இச்சீர்திருத்தங்கள் நாட்டின் மின்சாரத் துறையை தனியார் மயமாக்க வழிவகுத்தது. காலப்போக்கில், சாதாரணமான எளிய சிலி மக்களுக்கு, மின்சாரம் பெறுவது அரியதொன்றாகியது.

சிலியின் மாதிரியை மார்கரெட் தட்சர், பிரித்தானியாவுக்காக நகலெடுத்தார். பின்னர், அதை ஐரோப்பிய ஒன்றியம் நகலெடுத்தது. பிரித்தானியா, அதன் மத்திய மின்சார உற்பத்தி சபையை அகற்றியது. அச்சபையே அதுவரை நாட்டின் உற்பத்தி, பரிமாற்றம், மொத்த விநியோகம் என முழு மின்சார உட்கட்டமைப்பை இயக்கியது. இச்சபை அகற்றப்பட்டமையினூடு மின்சாரத்தின் முழுமையான கட்டுப்பாடு தனியாரின் கைகளுக்குச் சென்றது.

ஐரோப்பிய ஒன்றியம், அதன் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்க அதன் விருப்பமான எரிபொருளாக இயற்கை எரிவாயுவை பெரிதும் பயன்படுத்தியது. இது புதுப்பிக்கத்தக்க சக்தியை (சூரியகலம் மற்றும் காற்றாலை) மேலும் அதிகரித்து, கரியமில வாயுக்களை உமிழும் லிக்னைட் மற்றும் நிலக்கரியின் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்தது.

இயற்கை எரிவாயுவே, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவற்றின் பிரதானமான சக்தி மூலமாகும். இந்நிலையிலேயே, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளை விதித்தது. மேலும், ஐரோப்பிய ஒன்றிய வங்கிகளில் இருந்த ரஷ்யாவின் கையிருப்பான சுமார் 300 பில்லியன் யூரோக்களை கைப்பற்றியது.

ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை குறைப்பதாக எதிர்வினையாற்றியது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கான எரிவாயு விநியோகத்தை, ரஷ்யா கடுமையாகக் குறைத்ததில் ஆச்சரியமில்லை.

மேற்குலகம் தனது நிதி சக்தியை ஆயுதமாக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால், ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதன் மூலம், பதிலடி கொடுக்காது என்று எவ்வாறு நினைக்க முடியும்?
மேற்கு ஐரோப்பாவுக்கான ரஷ்யாவின் இயற்கை எரிவாயு விநியோகம் வீழ்ச்சியடைந்ததால், சர்வதேச சந்தையில் திரவப் பெற்றோலிய வாயுவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலையில், ரஷ்யா தவிர்த்து பிறநாடுகளிடம் வாங்குவதற்குப் போதுமானளவு திரவப் பெற்றோலிய வாயு யாரிடமும் இல்லை. ரஷ்யா சர்வதேச சந்தையில் வழங்கிவந்த இயற்கை எரிவாயுவுக்கு மாற்றேதுமில்லை.

கடந்த சில மாதங்களில் எரிவாயு விலை, நான்கிலிருந்து ஆறு மடங்கு உயர்ந்துள்ள நிலையில், மின்சாரத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

ஆனால், மின்சாரத்தின் ஒரு பகுதியே எரிவாயு மூலம் இயக்கப்படுகிறது என்ற உண்மை மறைக்கப்பட்டு, நுகர்வோர் மீது அதிக மின்சார விலையின் சுமையை அரசுகளின் ஆதரவுடன் தனியார் மின்சார நிறுவனங்கள் சுமத்தியுள்ளன.

இதனால், ஐரோப்பிய நாடுகளில் நுகர்வோர் மட்டும் மோசமாக பாதிக்கப்படவில்லை. தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வேலையிழப்புகள், பொருளாதார நட்டங்கள் என இந்நெருக்கடி பல்பரிமாணம் உடையதாய் மாறியுள்ளது.

முன்னாள் கிரேக்க நிதியமைச்சர் யானிஸ் வரூஃபாகிஸ், ‘மின்சாரச் சந்தைகளை அழித்தொழிப்பதற்கான நேரம்’ என்ற தனது கட்டுரையில் பின்வருமாறு எழுதுகிறார்:

‘ஐரோப்பிய ஒன்றியத்தின் மின்சாரத்துறையின் சந்தை அடிப்படைவாதம், உலகெங்கிலும் உள்ள மின்சார விநியோகத்துக்கு என்ன செய்திருக்கிறது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். சந்தைகள் மின்சார உற்பத்தியையும் விலையையும் விநியோகத்தையும் தீர்மானிப்பதை நிறுத்த வேண்டிய நேரம் இது’ என்கின்றார்.

இலங்கை இதற்கு எதிர்த்திசையில் நகருகிறது. மின்சாரத்தின் முழுமையான தனியார் மயமாக்கலை, சர்வதேச நாணய நிதியம் உட்படப் பலர் வேண்டி நிற்கிறார்கள். இலங்கை மின்சார சபை, மிகுந்த கோளாறானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், மின்சாரத்தை முழுமையாகத் தனியாரின் கரங்களில் கொடுப்பதன் ஆபத்தை, இப்போதைய ஐரோப்பிய மின்சார நெருக்கடி தெளிவாகக் காட்டியுள்ளது. இதிலிருந்து கற்பதா இல்லையா என்ற தெரிவு எம்முடையது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.