;
Athirady Tamil News

உள்ளூராட்சி சபைகளும் காணாமற்போகுமா? (கட்டுரை)

0

பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றம் ஆகியவற்றின் தேர்தல் முறைகளில், முக்கிய மாற்றங்கள் பலவற்றை ஏற்படுத்தப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஞாயிற்றுக்கிழமை (09) கூறியிருந்தார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தொழிற்றுறைசார் நிபுணர்களுக்கான கூட்டமொன்றின் போதே, அவர் இதைக் கூறியிருந்தார்.

ஆனால், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைகளின் தேர்தல்களை நடத்த முடியாத நிலை, தற்போது ஏற்பட்டு இருப்பதைப் போல், பாராளுமன்றம், உள்ளூராட்சி மன்றம் ஆகியவற்றின் தேர்தல்களையும் நடத்த முடியாத நிலையை ஏற்படுத்தவே, ஜனாதிபதி முயல்வதாகவே எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நாட்டில் உள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களில், தற்போது 8,700க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். அந்த எண்ணிக்கையை 4,000 வரை குறைப்பது, ஜனாதிபதியின் ஆலோசனைகளில் ஒன்றாகும்.

அத்தோடு, பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டுவர, பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க இருப்பதாகவும் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு முன்னர், அந்தக்குழு பொருத்தமான ஆலோசனைகளை முன்வைக்கத் தவறினால், அந்த விடயத்துக்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.

விருப்புவாக்கு முறை, தேர்தல்களின் போது ஊழல்கள் இடம்பெறுவதற்கு பிரதான காரணமாக இருப்பதால், அம்முறையை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுப்பது, அவரது மற்றோர் ஆலோசனையாகும்.

அதேவேளை, அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தேர்தல்களின் போது செலவிடும் பணத்தொகையும், ஊழல்களுக்கு இட்டுச் செல்வதாகவும் அதேபோல், அதன் மூலம் சில வேட்பாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்தச் செலவுக்கு வரம்புகளை நிர்ணயிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது, இந்த ஆலோசனைகள் மிகச் சிறந்வையாகவே தெரிகிறது. ஆனால், நாடு பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், திடீரென ஜனாதிபதி இவ்வாறான ஆலோசனைகளை முன்வைப்பதை, எதிர்க்கட்சிகள் சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றன.

இவற்றில், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை குறைப்பது மட்டுமே, தற்போதைய நிலையில் அவசரமான ஆலோசனையாகத் தெரிகிறது. ஆனால், அதிலும் வேறு உள்நோக்கம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சந்தேகிக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, இந்த ஆலோனைகளை சட்டங்களாக நிறைவேற்றுவதிலும் தற்போதைய நிலையில் நடைமுறை பிரச்சினைகள் பல இருக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஜூலை மாதத்தில், பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தெரிவின் போது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வாக்குப் பலத்தாலேயே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்த ஆலோசனைகளை பொதுஜன பெரமுன ஆதரித்தால் மட்டுமே, நிறைவேற்ற முடியும்.

எந்தவொரு கட்சிக்கும் பிரதேச மட்ட அரசியல்வாதிகளின் உதவியின்றி, பிரதேச மட்டத்தில் அரசியல் பணிகளை மேற்கொள்ள முடியாது. தற்போதைய நிலையில், 8,700 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4,000 ஆகக் குறைக்க முற்படும் போது, அதற்கு பிரதேச மட்ட அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் சாத்தியம் அதிகம். எனவே, இது எவ்வளவு நல்ல ஆலோசனையாக இருந்தாலும், இதை ஆதரிக்கும் போது, எந்தவொரு கட்சியும் இரண்டு முறை சிந்திக்கும்.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாத தற்போதைய நிலையை, 2017ஆம் ஆண்டு, வேண்டுமென்றே ரணில் விக்கிரமசிங்க உருவாக்கினார் என்றே எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. அன்று நடந்ததை, மீண்டும் மீளாய்வு செய்து பார்த்தால் அந்தக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கவும் முடியாது.

2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், அப்போதைய நல்லாட்சி அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்தும் வகையில், புதிய சட்ட வரைவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அது, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் என்று அப்போது அழைக்கப்பட்டது. அதை எவரும் எதிர்க்கவில்லை.

ஆனால், அச்சட்டமூலம் நிறைவேறினால் சில மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைக்க நேரிடும் என்றும், அது சட்ட விரோதம் என்றும் சட்டத்தில் உள்ள வேறு சில பிரமாணங்கள் மூலமும் மாகாண சபைகளின் உரிமைகள் பாதிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதையடுத்து, அரசாங்கம் அந்த அரசியலமைப்புத் திருத்தத்தை கைவிட்டுவிட்டு, மாகாண சபைத் தேர்தல் சட்டத்துக்கு திருத்தம் ஒன்றை முன்வைத்தது. மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள், தத்தமது வேட்பாளர் பட்டியல்களில் 30 சதவீதம் பெண்களை உள்ளடக்க வேண்டும் என்பதே திருத்தத்தின் நோக்கமாகும். அதையும் எவரும் எதிர்க்கவில்லை.

சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் போது, அதற்கான விவாதத்தின் குழுநிலையின் போது, ஆளும் கட்சியும் ஏனைய கட்சிகளும் அதற்கு திருத்தங்களை சேர்க்க நடவடிக்கை எடுப்பது வழக்கமாகும். அதேபோல், இந்தச் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் குழுநிலையின் போதும், அரசாங்கம் ஒரு திருத்தத்தை முன்வைத்தது.

வழமையாக குழுநிலை விவாதத்தின் போது சமர்ப்பிக்கப்படும் திருத்தங்கள், விவாதிக்கப்படும் விடயத்துக்கு உரியதாகவே இருக்கும். ஆனால், இந்தத் திருத்தம், விவாதிக்கப்பட்ட விடயத்தோடு சம்பந்தமே இல்லாத ஒன்றாக இருந்தது.

விவாதிக்கப்பட்ட விடயம், பெண் வேட்பாளர்கள் தொடர்பானதாகும். ஆனால், சமர்ப்பிக்கப்பட்ட திருத்தம், கலப்புத் தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பானதாகும். கலப்புத் தேர்தல் முறையையும் அப்போது எவரும் எதிர்க்காத போதிலும், இந்தத் திருத்தம் சம்பந்தமே இல்லாத ஒரு விடயத்தோடு, முடிச்சுப் போட்டு சமர்ப்பித்தலானது சந்தேகத்துக்கு உரியதாக இருந்தது.

முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் மூலம், மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைக்க முடியாமல் போனதால், இந்தத் திருத்தத்தின் மூலம், தேர்தல்களை ஒத்திவைக்க அரசாங்கம் முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

அவர்களது குற்றச்சாட்டை நிரூபிப்பதைப் போல், அடுத்தடுத்த நடவடிக்கைகள் அமைந்தன. இத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அடுத்த கட்டமாக கே. தவலிங்கத்தின் தலைமையில், எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டது. அக்குழு விரைவில், தமது அறிக்கையை சமர்ப்பித்த போதிலும், நாடாளுமன்றம் அதை ஏற்கவில்லை.

அதையடுத்து, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், மீளாய்வுக் குழு நியமிக்கப்பட்டது. அக்குழு, தனது அறிக்கையை உரிய நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை. விடயம், அத்தோடு கிடப்பில் போடப்பட்டது. இன்றுவரை அந்தத் தேர்தல்கள் நடைபெறவிலலை.

உண்மையிலேயே, இந்தத் திருத்தத்தை தனியான ஒரு சட்ட மூலமாக சமர்ப்பித்து இருந்தால், அதுவும் உயர்நீதிமன்றத்தால் ஆராயப்பட்டு இருக்கும். அப்போது, மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப்போடும் பிரச்சினை மீண்டும் எழுந்திருக்கும். ஏனெனில், மாகாண சபைகளுக்கான பிரதேசங்களில், புதிதாக தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயித்தே கலப்புத் முறையில் தேர்தல்களை நடத்த முடியும். அதற்கு நீண்ட காலம் எடுக்கும். மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப்போடும் நோக்கத்திலேயே, அரசாங்கம் அத்திருத்தத்தை குறுக்கு வழியில் கொண்டு வந்தது என்பது தெளிவாகியது.

அரசாங்கம் இப்போதும், அதே தந்திரத்தைத்தான் கையாள்கிறது என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. கலப்புத் தேர்தல் முறையை மாற்றாமல், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை 8,700இல் இருந்து 4,000 ஆக குறைப்பதாயின், அதற்காக மீண்டும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். அதற்காக, மீண்டும் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதற்கு குறைந்தபட்சம், மூன்று வருடங்கள் தேவைப்படும் என அநுரகுமார திஸாநாயக்க கூறுகிறார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை, கலப்பு முறையில் நடத்துவதற்கான சட்டம், 2012ஆம் ஆண்டே நிறைவேற்றப்பட்டது. ஆனால், அம்முறைக்குரிய எல்லை நிர்ணய பணிகள், 2016ஆம் ஆண்டு வரை நீடித்தன. எனவேதான் அரசாங்கம், தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கிலேயே, இந்தத் திட்டத்தை தீட்டுகிறது என குற்றஞ்சாட்டப்படுகிறது.

பொதுத் தேர்தல் சட்டம் தொடர்பாகவும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதாக ஜனாதிபதி கூறுகிறார். ஆளும்கட்சி, மக்கள் ஆணையை இழந்துவிட்டதால், பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரும்போது, தற்போதைய பொருளாதார நிலைமையின் கீழ், தேர்தல் நடத்த முடியாது என்று ஆளும் கட்சியினர் கூறுகின்றனர். அவ்வாறாயின், சர்வஜன வாக்கடுப்பை எவ்வாறு நடத்தலாம்?

அதேவேளை, அவ்வாறு வாக்கெடுப்பை நடத்தினாலும் ஒரு தேர்தல் முறையை மக்கள் முன்வைத்து அதனை ஆதரிக்கிறீர்களா இல்லையா என்று தான் கேட்க வேண்டும். அந்தத் தேர்தல் முறையை தயாரிப்பது யார்? வாக்கெடுப்பு நடந்தாலும் மக்கள் அறிவுபூர்வமாக வாக்களிப்பார்களா?

எனவே, ஜனாதிபதியின் இந்தப் புதிய ஆலோசனைகள், தற்போதைய பொருளாதார நிலையில், மக்களுக்கு முன்னால் செல்வதற்கு அரசாங்கத்துக்கு இருக்கும் அச்சத்தின் வெளிப்பாடாகத் தான் தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.