;
Athirady Tamil News

அரசினால் ஏற்படுத்தப்பட வேண்டிய ஏனைய சீராக்கங்கள் !! (கட்டுரை)

0

நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள பொருளாதாரத்தை சீராக்கும் வகையில், நிதி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய வரிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனூடாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட வரிக் குறைப்புகளுக்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய வருமான வீதத்துக்கு நிகரான அரச வருமானத்தை ஈட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. நடப்பு ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நாடு திவாலாகியுள்ளதாக அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, வரி வருமான அதிகரிப்பு தவிர்க்கப்படமுடியாத விடயமாக மாறியிருந்தது. அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட சந்திப்புகளைத் தொடர்ந்து, இந்த வரிமறுசீரமைப்புகளினூடாக அரச வருமானத்தை அதிகரிக்கச் செய்வது பற்றிய நிபந்தனைகளும் கண்டிப்பாக முன்வைக்கப்பட்டிருக்கும்.

புதிய வரிக் கொள்கையின் பிரகாரம், மாதாந்தம் ரூ. 100,000 க்கு அதிகமான வருமானம் பெறும் எந்தவொரு நபரும் வரி செலுத்த வேண்டும். இதற்கு மேலதிகமாக, கூட்டாண்மை வரி ஆகக்குறைந்தது 24 சதவீதம் என்பதிலிருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கும் வரிக்குமிடையிலான விகிதம் 2019 ஆம் ஆண்டில் 12.7% ஆக காணப்பட்டது. இது 2021 ஆம் ஆண்டில் 8.7% ஆக வீழ்ச்சியடைந்தது. முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் வரிக் குறைப்புகள் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டதுடன், பொருளாதாரத்தின் சரிவும், தற்போதைய நெருக்கடி நிலையும் ஆரம்பமாகியது என்றே குறிப்பிடலாம்.

தற்போதைய தேவையாக அமைந்துள்ள அரச வருமானத்தை அதிகரிப்பது மற்றும் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய வரிக் கட்டமைப்பை மீள நிறுவுவது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய வரி முன்மொழிவுகள் அமைந்துள்ளன. ஆனாலும், 2019 ஆம் ஆண்டில் நிலவிய பொருளாதார, மக்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிடுகையில், தற்போது வரலாற்றில் இதுவரை காலமும் பதிவாகியிருக்காத மிகவும் மோசமான நிதி நெருக்கடிக்கு நாட்டு மக்கள் முகங்கொடுத்துள்ள நிலையில் பிரேரிக்கப்பட்டுள்ளன. செப்டெம்பர் மாதம் 69.8% ஆக பதிவாகியிருந்த நுகர்வோர் பணவீக்கச் சுட்டெண், நடப்பு ஆண்டில் முதன் முறையாக ஒக்டோபர் மாதத்தில் 66% ஆக வீழ்ச்சியடைந்திருந்தது. கடந்த மூன்று வருடங்களில் ராஜபக்சவின் நிர்வாகத்தில் நாணயமும் 100%க்கு மேலாக மதிப்பிறங்கியுள்ளது. இவ்வாறான அனைத்து காரணிகளும் முன்மொழியப்பட்டுள்ள இந்த வரி அதிகரிப்பை மக்களுக்கு அதிகளவு சுமையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்.

எவ்வாறாயினும், நாட்டுப் பொருளாதாரம் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது என்பது தற்போது பெரும்பாலான அனைவருக்கும் தெரிந்த விடயமாக அமைந்திருப்பதால், கடினமான இந்த வரி அறவீட்டை வெளிப்படையானதாகவும், அரசாங்கத்தின் எந்தப் பிரிவுகளில் செலவிடப்படுகின்றது என்பதை பொது மக்களுக்கு அறியப்படுத்துவதனூடாக அவர்களின் ஆதரவை ஓரளவேனும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அரச துறைகளில் கடந்த காலங்களில் அளவுக்கதிகமாக தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன. குறிப்பாக அரசியல் ஆதரவாளர்கள் பெருமளவில் அரச பணிகளில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர். தற்போது சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அரச நிறுவனங்களில் பணி புரிவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பெருமளவு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பல அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்கள் போன்றன, தாம் செலவிடும் பணத்துக்கு எவ்விதமான பெறுமதியையும் ஏற்படுத்துவதில்லை என்பதுடன், மாறாக பொது மக்கள் மீது மேலும் சுமையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. மேலும், நாட்டை ஆட்சி செய்வதற்காக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள், இந்த நெருக்கடியான காலப்பகுதியில் செலவைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் மக்களுக்கு முன்மாதிரியான எந்தவிதமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. ஒரு சிலர் மாத்திரம் தாம் அமைச்சுக்குரிய சம்பளமின்றி சேவையாற்றுவதாக கூறினாலும், அவற்றை உறுதி செய்யும் பொறிமுறை, வெளிப்படைத்தன்மை இல்லை.

அரசின் செலவில் பெருமளவு பங்கைக் கொண்டுள்ள பாதுகாப்புத் துறையினால், பொருளாதார ரீதியில் பங்களிப்புச் செய்வதில்லை. இந்தத் துறையின் மறுசீரமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். உலகின் 17ஆவது மிகப் பெரிய இராணுவப் படையணியை இலங்கை பேணி வருவதுடன், அதனூடாக இராணுவத்தின் தேவைகள் அல்லது நாட்டு மக்களின் பாதுகாப்புத் தேவைகள் முழுமையாக நிவர்த்தி செய்யப்படுகின்றனவா என்பது புலனாகவில்லை. குறிப்பாக, நாட்டில் குற்றச் செயல்களும், சட்ட விரோதச் செயற்பாடுகளும் நாளாந்தம் அதிகரித்த வண்ணமே உள்ளன. தொடர்ச்சியாக நஷ்டமீட்டி வரும் அரச நிறுவனங்கள் தொடர்பில் அவசரமாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவை போன்றன நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் அரச நிறுவனங்களாக அமைந்திருப்பதுடன், வரி செலுத்துவோரின் வரிப் பணத்தையும் விரயமாக்குவதாக அமைந்துள்ளன.

அரச நிறுவனங்களிலும், துறைகளிலும் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்துமானால் செலுத்தப்படும் வரிப் பணத்தை சரியான முறையில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். முன்னைய நிர்வாக காலப்பகுதியில் மோசடிகளிலும், குற்றச் செயல்களிலும் ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்பட்டவர்களும், அடையாளம் காணப்பட்டவர்களும், தற்போதும் அந்த பதவிகளில் பொறுப்பு வகிக்கின்றமை இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

நாளாந்தம் பணிபுரியும் மக்களிடமிருந்து அறவிடும் வரியை அதிகரிப்பது என்பது, அரசாங்கத்தின் செலவுகளை குறைப்பதுடனும், அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகளை தணிப்பதுடனும் இடம்பெற வேண்டும். அல்லாவிடின், அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு அவசியமான சரியான கொள்கைகளுக்கும் மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.