;
Athirady Tamil News

வெளியுறவு கொள்கை திறம்பட கையாளும் இந்தியா !! (கட்டுரை)

0

ஒவ்வொரு நாடுகளிலும் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும் போது, அந்தந்த அரசாங்கங்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் வெளிநாட்டு கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்கின்றன. ஆனால், இந்தியாவின் வெளியுறவு கொள்கை சற்று வித்தியாசமானதாகவே இன்றும் இருந்துவருகின்றது.

இந்திய பிரதமர்கள் அனைவரும் அமைத்த வலிமையான அடித்தளத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி வெளியுறவுக் கொள்கையைக் கட்டமைத்து வருகிறார். இவரது வெளியுறவுக் கொள்கை, வெளிநாடுகளைத் திறம்படக் கையாளுவதை மையமாகக் கொண்டிருக்கிறது. தனது முதல் பதவியேற்பு விழாவுக்கு அண்டை நாடுகளின் ஆட்சியாளா்களை அழைத்தபோதே அவரது வெளியுறவு நாட்டம் வெளிப்பட்டது.

வெளியுறவு அமைச்சகம் எனப்படும் இந்திய வெளிவிவகார அமைச்சரவை இந்திய அரசின் ஓர் அங்கமாக இருந்து நாட்டின் வெளியுறவுகளைப் பொறுப்பேற்று நடத்துகின்றது. 1986 ஆம் ஆண்டு புதுடெ்லியின் நிறுவப்பட்ட இந்திய வெளிநாட்டுச் சேவை பயிற்சி நிறுவனம் இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரிகளுக்கு (IFS) பயிற்சி அளிக்கிறது.

வெளியுறவுக் கொள்கை என்பது மற்ற நாடுகளுடன் உறவைப் பேணுவதற்காக ஒரு நாட்டால் கவனமாக வடிவமைக்கப்பட்ட உத்திகின் கலவையாயும். இராஜதந்திரம் என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையை சூழலுக்குத் தகுந்தாற்போல் செயல்படுத்துவத்றகான கருவி ஆகும்.

வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்:
1. உடன்படிக்கைகள்
2. நிர்வாக ஒப்பந்தங்கள்
3. தூதுவர்களை நியமித்தல்
4. வெளிநாட்டு உதவி
5. சர்வதேச வணிகம்
6. ஆயுதப்படைகள்
3. வெளியுறவுக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள்:
1. தேசியப் பாதுகாப்பு.
2. தேசிய வளமை.
3. நட்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
4. உலக அமைதி அடைதல் மற்றும் ஒவ்வொரு நாட்டுடனும் அமைதியுடன் சேர்ந்திருத்தல்.
5. பொருளாதார வளர்ச்சி.

கடந்த 75 ஆண்டுகளில், எண்ணற்ற வேற்றுமைகள், முரண்பாடுகளைத் தாண்டி இந்தியா அற்புதமான வளா்ச்சி அடைந்திருக்கிறது; மக்களாட்சி முறையும் மெருகேறி இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையிலும், பல்வேறு உலகளாவிய அமைப்புகளிலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.

பொருளாதார வளம் நிறைந்த நாடுகள் இணைந்த ஜி20 கூட்டமைப்பில் இந்தியா உறுப்பு நாடாக உள்ளது. இந்த அமைப்பின் மாநாடு இந்தியாவில் அடுத்த ஆண்டு நடத்தப்பட இருக்கிறது. உலகம் தற்போது சிக்கலான காலகட்டத்தைக் கடந்து கொண்டுள்ளது. உலகின் பல பகுதிகளில் சா்வாதிகாரமும் போலி ஜனநாயகமும் வலுவடைந்து வருகின்றன.

பஞ்சீலக் கொள்கையை மிகச் சரியாக இந்தியா கடைப்பிடித்து வருகின்றது என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

பஞ்சசீலக் கொள்கை :

1. ஒவ்வொரு நாட்டின் எல்லையையும் இறையாண்மையையும் பரஸ்பரம் மதித்தல்.
2. பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை.
3. பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்.
4. பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல்.
5. அமைதியாக சேர்ந்திருத்தல்.

ஒருவரை ஒருவா் சாா்ந்து வாழும் உலகில் வெளியுறவு தொடா்பான காரணிகள் முதன்மை பெறுகின்றன. உலக பொருளாதார மாற்றங்கள், உணவுப் பொருள் தட்டுப்பாடு, கச்சா எண்ணெய் விலையேற்றம், பருவநிலை மாற்றங்கள், தொற்றுநோய் பரவல், நிலையற்ற அரசியல் சூழல் போன்ற காரணிகள் நமது வாழ்க்கையை நேரடியாக பாதிக்கின்றன.

தேசப்பிரிவினைக்கும் மதக்கலவரங்களுக்கும் இடையேதான் இந்தியா உதயமானது. அப்போது நாட்டு மக்களில் பெரும்பாலோா் கல்வியறிவு அற்றவா்களாகவும் வறுமை மிகுந்தவா்களாகவும் இருந்தனா். ஆரம்ப நாட்களில் நமது ஜனநாயகம் தவழும் நிலையில் தத்தளித்தது; நமது தொழில்துறையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அக்காலத்தில் உணவுப் பொருள் இறக்குமதியை நாம் சாா்ந்திருந்தோம். இவையல்லாது பாகிஸ்தானுடனான மோதலும் பெரும் நாசத்தை விளைவித்து வருகிறது.

தேசப்பிரிவினையைத் தொடா்ந்து லட்சக்கணக்கான அகதிகள் இந்தியாவுக்கு வந்தனர் . அரசு, இராணுவம், எல்லைகள் ஆகியவற்றை பாகிஸ்தானுடன் இந்தியா பகிா்ந்துகொண்ட நிலையில், சுதந்திரம் அடைந்த சில வாரங்களிலேயே காஷ்மீருக்காக இரு நாடுகளும் மோதிக் கொண்டன. அந்த மோதலின் பாதிப்புகள் இன்றும் தொடர்கின்றன.

இவை தவிர, நாட்டை விட்டு வெளியேறிய ஆங்கிலேயர் ஏற்படுத்திய சிக்கல் முதன்மையானது. தனது ஆளுகையில் இருந்த நாட்டை இந்தியா- பாகிஸ்தான் என்று பிரித்ததுடன், 565 சமஸ்தானங்களுக்கும் விடுதலை அளித்த பிரிட்டிஷ் அரசு, அந்த சமஸ்தானங்கள் தாங்கள் விரும்பும் நாட்டுடன் இணையலாம், அல்லது தனிநாடாக இயங்கலாம் என்று அறிவித்தது. அதனை இந்தியா வெற்றிகரமாக சமாளித்து ஒரே நாடாக இணைந்தது.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேரு வெளியுறவுத் துறைக்கும் பொறுப்பு வகித்தார். அவரது உலகளாவிய கண்ணோட்டமே அன்று குழப்பங்களிலிருந்தும் இடையூறுகளிலிருந்தும் நாட்டைக் காத்தன. நாட்டின் சுதந்திரம், சர்வ தேசியம், உலக அமைதி, சர்ச்சைகளுக்கு நிதானமான தீர்வு ஆகியவற்றை இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைகளாக்கினார் நேருஜி.

மேலும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அங்கமாகவும் இருந்தவர் நேரு. எனவே காலனி ஆதிக்கத்துக்கு எதிரான செயல்பாடு, மனித உரிமைகளுக்கான குரல், நிறவெறிக்கும் இனவெறிக்கும் எதிரான நிலைப்பாடு, வளரும் நாடுகளுடன் இணக்கமான ஒற்றுமை ஆகியவற்றை நமது வெளியுறவுக் கொள்கையில் புகுத்தினார் அவர்.

ஐ.நா. சபையிலும் உலக அமைப்புகளிலும் இந்தியா பங்குபெற்று தீவிரமாக செயல்பட முடியும் என நேரு நம்பினார். அதனால்தான் உலக வங்கி, சா்வதேச நிதியம் ஆகியவற்றில் இந்தியா நிறுவன உறுப்பினரானது. அது மட்டுமல்ல, மூன்றாம் உலக நாடுகளின் தலைமை நாடாகவும் மிளிர்ந்தது.

1947, 1949 ஆகிய ஆண்டுகளில் புதுடெல்லியில் ஆப்ரோ – ஆசிய மாநாட்டை இந்தியா நடத்தியது. 1955-இல் இந்தோனேசியாவுடன் இணைந்து பாண்டுங் உச்சி மாநாட்டை நடத்தியது. இறுதியாக, 1961-இல் பெல்கிரேடில் அணிசேரா நாடுகளின் இயக்கம் உருவானது.

தற்போதைய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் அணிசேராக் கொள்கையும் வேறு வேறு என்பது நாம் அறிந்ததே. தற்போதைய இந்தியா வியூகம் மிகுந்த தன்னாட்சியும், ஒரே சமயத்தில் பல தரப்பினருடன் இணைந்து பணியாற்றும் தன்மையும் கொண்டு விளங்குகிறது. நேருவால் வடிவமைக்கப்பட்ட வியூகம் மிகுந்த சுயநிா்ணயத் தன்மையில்தான் தற்போதைய வெளியுறவுக் கொள்கையும் வேர் கொண்டிருக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது உலகம் மேற்கு, கிழக்கு என இருகூறுகளாகப் பிரிந்தது; பனிப்போர் காலமும் அப்போது தொடங்கியது. அச்சமயத்தில் தென்கிழக்காசிய நாடுகளும் பாகிஸ்தானும் சோவியத் யூனியனுக்கு எதிரான அமெரிக்க அணியில் இணைந்திருந்தன. 1947, 1965 ஆண்டுகளில் பாகிஸ்தானுடன் இந்தியா வலுக்கட்டாயமாக போரை சந்தித்தாலும், அவற்றில் வென்றது. 1962-இல் சீனாவுடன் போரிட்டு, இந்தியா தோல்வியுற்றது. அப்போதெல்லாம் இந்தியாவின் அணிசேராக் கொள்கையை அமெரிக்கா வன்மையாகக் கண்டித்து வந்தது. ஆயினும் எந்த நிா்ப்பந்தத்துக்கும் இரையாகாமல், தன்னிச்சையான வெளியுறவுக் கொள்கையை இந்தியா கடைப்பிடித்து வந்தது.

வல்லரசு நாடுகளுக்கிடையேயான பனிப்போரில் பங்கேற்பதில்லை என்று அன்றைய பிரதமர் நேரு தொடா்ந்து கூறி வந்தார் அக்காலத்தில் பொருளாதார, ராணுவ பலமே நாடுகளின் செல்வாக்கை வெளிப்படுத்தி வந்தது. ஆனால், இந்தியா தனது குறைந்த ராணுவ, பொருளாதார வலிமையைக் கொண்டே செல்வாக்கைத் தக்கவைத்துக் கொண்டதற்கு, நேருவின் நேரிய தலைமையே காரணம்.

இந்தியா அணிசேரா நாடுகளுக்குத் தலைமை வகித்தது, அமெரிக்காவுடனோ, சோவியத் யூனியனுடனோ நெருங்கிய நட்புறவு கொள்வதைத் தடுக்கவில்லை. இந்தியாவின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு இவ்விரு நாடுகளும் உதவி செய்துள்ளன. பிரிட்டன் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட நாடுகளின் கூட்டமைப்பான பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் சேரவும் இந்தியா தயங்கவில்லை. பிரிட்டனுடனும் முன்னாள் காலனி நாடுகளுடனும் நட்புறவு கொண்டிருப்பது நமது பொருளாதார வளா்ச்சிக்கு முக்கியம் என அப்போது இந்தியா முடிவெடுத்தது.

இந்தியாவின் தொடக்ககால வெளியுறவுக் கொள்கை லட்சியவாதத்தையும் நடைமுறை யதார்த்தத்தையும் இரு கண்களாகக் கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில் நாட்டின் வேளாண்மை வளர்ச்சி, தொழில்துறை கட்டமைப்பு, உயர்கல்வி மேம்பாடு, அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமே இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை என்பதை மறுக்க முடியாது.

இந்தியாவின் அணுசக்தி முகமையும் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பும் நேருவின் முயற்சியால் தொடங்கப்பட்டவை. அவற்றின் மூலமாகவே அணு ஆயுத வலிமை வாய்ந்ததாகவும் ஏவுகணைத் திறன் கொண்டதாகவும் இந்தியா எழுச்சி பெற்றது.

உலக அரங்கில் இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்திய முதல் பிரதமர் நேரு போலவே, இதுவரை நாட்டை ஆண்ட அனைத்து பிரதமர்களும் நாட்டின் வளா்ச்சியையும் செல்வாக்கையும் வலுப்படுத்தியுள்ளர். நேருவுக்குப் பிறகு பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியின் காலத்தில் இந்தியா, பாகிஸ்தானுடன் இரண்டாவது போரை எதிா்கொண்டது. அப்போது சோவியத் யூனியனுடன் அவர் கொண்டிருந்த நல்லுறவால்தான், பாகிஸ்தானுடனான தாஷ்கண்ட் ஒப்பந்தம் சாத்தியமானது.

சாஸ்திரிக்குப் பிறகு பிரதமரான இந்திரா காந்தியின் காலம் இந்திய வெளியுறவுத் துறையின் பொற்காலம். 1971-இல் நிகழ்ந்த பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற்றதும், வங்கதேச விடுதலைக்கு இந்தியா உதவியதும் வரலாற்று சாதனைகள். அப்போது, நிக்ஸன் தலைமையிலான அமெரிக்க அரசு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக தனது ஏழாவது கடற்படையை வங்காள விரிகுடாவுக்கு அனுப்பி, போரை நிறுத்துமாறு மிரட்டியது. ஆனால், சோவியத் யூனியனுடன் இந்திரா காந்தி கொண்டிருந்த நட்புறவு, அமெரிக்க மிரட்டலை தவிடுபொடியாக்கிது.

தந்தை நேருவால் கடைப்பிடிக்கப்பட்ட சர்வதேச நல்லுறவுக் கொள்கைகளை இந்திரா காந்தி தொடர்ந்தார். அணிசேரா நாடுகளின் மாநாடு, காமன்வெல்த் உச்சி மாநாடு ஆகியவற்றை தில்லியில் நடத்தியதன் மூலம், உலகத் தலைவா்களைக் கவர்ந்தார். தவிர, பொக்ரானில் நடத்தப்பட்ட முதல் அணுவெடிச் சோதனை மூலம், இந்தியாவின் ஆயுத வலிமை பறைசாற்றப்பட்டது.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, நாட்டை நவீனமயமாக்குவதும், தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிப்பதும் வெளியுறவுக் கொள்கையின் இலக்குகளாக மாறின. அதற்காக அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்த அவர் முனைந்தார். பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, உலக பொருளாதாரத்துடன் இயைந்து செல்லும் வகையில், இந்தியாவில் பொருளாதார சீா்திருத்தங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

அடல் பிகாரி வாஜ்பாய் காலத்தில் அணு ஆயுதத் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மன்மோகன் சிங் காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் அதுவரை காணாத வளா்ச்சி விகிதத்தை எட்டியது. இவ்விரு அம்சங்களால் இந்தியாவை உலக நாடுகள் மிகுந்த மரியாதையுடன் கவனிக்கத் தொடங்கின.

மேற்கண்ட பிரதமர்கள் அனைவரும் அமைத்த வலிமையான அடித்தளத்தின் மீது பிரதமா் நரேந்திர மோடி வெளியுறவுக் கொள்கையைக் கட்டமைத்து வருகிறார். இவரது வெளியுறவுக் கொள்கை, வெளிநாடுகளைத் திறம்படக் கையாளுவதை மையமாகக் கொண்டிருக்கிறது. தனது முதல் பதவியேற்பு விழாவுக்கு அண்டை நாடுகளின் ஆட்சியாளா்களை அழைத்தபோதே அவரது வெளியுறவு நாட்டம் வெளிப்பட்டது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பேத்தி திருமணத்தில் பங்கேற்றது, சீன அதிபா் ஜி ஜின்பிங்கை அகமதாபாத்திற்கும் மாமல்லபுரத்திற்கும் வரவழைத்தது, வெளிநாடுகளுக்குச் செல்லும்போது இந்திய வம்சாவளியினருடனும், வெளிநாடு வாழ் இந்தியா்களுடனும் சந்திப்புகளில் பங்கேற்பது, அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப்புடன் மேடையைப் பகிா்ந்து கொண்டது என மோடியின் வெளியுறவு நிகழ்வுகள் ஏராளம்.

எனினும், நமது 75 ஆண்டுக் காலத்தில் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனான உறவு மேம்படாமல் இருப்பது நெருடலாகவே உள்ளது. பாகிஸ்தானுடனான நட்புறவு கிட்டத்தட்ட சீா்குலைந்துவிட்டது. சீனாவுடனான உறவோ எல்லையில் மோதலாக நீடிக்கிறது. காஷ்மீா் பிரச்னைக்கோ, சீனாவுடனான எல்லைத் தகராறுக்கோ தீா்வு காணும் வாய்ப்பு அண்மையில் தென்படவில்லை.

அண்டைநாடுகளான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருப்பதும், இலங்கையில் நிலையற்ற அரசியல் சூழல் ஏற்பட்டிருப்பதும் நமக்கு நல்லதல்ல. மாலத்தீவு, நேபாளம், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளும் இலங்கையில் நேரிட்ட பொருளாதார வீழ்ச்சியைப் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகலாம் என்று பலரும் அஞ்சுகின்றனர்.

அண்டைநாடுகளில் நிலையற்ற தன்மை நிலவும்போது, பயங்கரவாதம் பெருகவும், அகதிகள் வருகை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் ஏற்கெனவே கச்சா எண்ணெய் விலை உயா்வு, உணவுப்பொருட்கள் பற்றாக்குறை, பணவீக்க உயர்வு போன்ற பிரச்னைகள் நிலவுகின்றன. தொலைதூர நாடுகளின் விவகாரங்களால் நாமும் பாதிப்புக்குள்ளாவோம் என்பதற்கு இது உதாரணம்.

அதே போல, பருவம் தவறிய மழைப்பொழிவு, புயல், வெள்ளச்சேதம், கடல்மட்டம் உயருதல், வெப்ப அலைகளின் தாக்கம் போன்ற பருவநிலை மாற்றக் கோளாறுகளையும் உலகம் சந்திக்கிறது. கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமி எவ்வாறு உலக பொருளாதாரத்தை சீா்குலையச் செய்தது என்பதை அண்மையில் நாம் கண்டோம்.

நமது நாட்டிலும் உலக அளவிலும் பரவலாகிவரும் தாராளமயமாக்கம் குறித்தும் நாம் கவலை கொண்டாக வேண்டும். பிற நாடுகளில் செயல்படும் இஸ்லாமியா்களுக்கு எதிரான, அந்நியா்களுக்கு எதிரான வலதுசாரி சக்திகள் நம் நாட்டின்மீதும் கண் வைக்கலாம். நமது நாட்டிலும் இதே எண்ணத்துடன் நிகழும் செயல்பாடுகளால், நமது ஜனநாயகம் மீதான மரியாதை குறையக்கூடும்.

அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா நம் நாட்டிற்கு வந்திருந்தபோது, ‘இந்தியாவில் சமத்துவம், மத சுதந்திரம், கருத்துரிமை ஆகியவை பேணப்படும் வரை மட்டுமே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவு கிடைக்கும்’ என்று சொன்னதை நினைவில் கொள்ள வேண்டும்.

வருங்காலத்தில் உலகம் நிலையற்ற தன்மையைச் சந்திக்கும். அதனை எதிா்கொள்ள நாம் ஒற்றுமையாக இருப்பது அவசியம். கடந்த கால சாதனைகளைக் கொண்டாடும் அதே நேரத்தில், இதுவரை நாம் செய்துள்ள தவறுகள் என்னென்ன, இப்போது எங்கே தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பவற்றை சீா்தூக்கிப் பாா்ப்பது நல்லது.

புதுடெல்லியில் ஒரு புதுமை நிறுவனம்

அணிசேரா இயக்க இந்திய ஆய்வு நிறுவனத்துக்கு (Indian Institute for Non-Aligned Studies) விருந்தினர் அந்தஸ்து (Guest member) கிடைத்திருப்பதால், அது 1980ம் ஆண்டு புதுடில்லியில் தோற்று விக்கப் பட்டதில் இருந்து தொடர்ந்து அணி சேரா இயக்க மாநாடுகளில் பங்குபெற்று வருகிறது. இதன் நிறுவனரும், தலைவருமான வாழப்பாடி ராமமூர்த்தி இருந்து வந்தது தமிழகத்திற்கு பெருமை தேடித்தருவதாக அமைந்தது.

1983ம் ஆண்டு அணிசேரா இயக்கத்தின் 7வது மாநாடு டில்லியில் நடைபெற்றது. முந்தைய நாடுகளைவிட அதிக அளவில் உறுப்பினர் நாடுகள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில்தான், இந்திரா காந்தி அம்மையார் அணிசேரா இயக்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்த மாநாட்டுக்கு முன்னும், பின்னும் குறிப்பிடத்தங்க பங்காற்றியுள்ளது இந்த ஆய்வு நிறுவனம்.

அணிசேரா நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் லட்சியக் குரலை எழுப்பும் உயர்மேடையாக திகழ்ந்து வருகிறது இந்த ஆய்வு நிறுவனம். 21ம் ஆண்டு நூற்றாண்டை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கும் வேளையில், சுரண்டல் மற்றும் மேலாதிக்க பேராசையையும் அடியோடு அகற்றுவது காலத்தின் கட்டாயம் ஆகிறது. எதிர்கால தலைமுறையினரை அச்சத் திலும், அவ நம்பிக்கையிலும், வறுமையிலும் விட்டுவிட முடியுமா? பரஸ்பர பகைமையும், பாதுகாப்பு இன்மையும் இல்லாத புதிய உலகத்தை அவர்களக்கு ஏற்படுத்திக் கொடுப்பது நமது தலைமுறையின் கடமை அல்லவா. இந்த விழுமிய நோக்கங்களை எய்துவதற்காக அவர்களுக்கு உலக நிலைமைகள் பற்றிய சரியான தகவல்களையும், அறிவாற்றலையும் வழங்குகிற அரிய பணியிலே தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது இந்த ஆய்வு நிறுவனம்.

1961ம் ஆண்டு பெல்கிரேட் பிரகடனத்தில் வேரூன்றியுள்ள அணிசேரா இயக்க கோட்பாடுகள் காலத்திற்கேற்ப இடையறாது வளர்ந்து வலுப்பெற்று வந்துள்ளது. நமது காலத்தின் புதிய போக்குகளையும் ஆர்வங்களையும் அணிசேரா இயக்கம் நன்கு பிரதிபலிக்கிறது. அணிசேரா இயக்கத்தின் தந்தை ஜவஹர்லால் நேருவின் இதயச் சோலையில் மலர்ந்த லட்சியக் கருத்து, மலர்களில் இனிய மணத்தை சுமந்து செல்லும் தென்றலாக இந்த ஆய்வு நிறுவனம் இடையறாது செயல்பட்டு வருகிறது.

ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளிடம் மிகப்பெரிய அளவுக்கு விழிப்புணர்வை அணிசேரா இயக்கம் ஏற்படுத்தி உள்ளது. அந்த விழிப்புணர்வின் மூலம் அணிசேரா இயக்கத்தின் முக்கிய பாத்திரத்தைப் புரிந்துகொள்ளலாம்… பல சர்வதேச விவகாரங்களில் அது குறிப்பிடத்தக்க பெரும் பங்காற்றியுள்ளது.

உலக அரசியல் சூழல் இப்போது முற்றிலுமாக குறிப்பிடத்தக்க அளவில் மாறிப் போய் உள்ளது. அமெரிக்க – சோவியத் கெடுபிடிப் போர் மறைந்த விட்டது. சோவியத் யூனியன் சிதறி விட்டது, கிழக்கு ஐரோப்பிய சோசலிச முகாம் வீழ்ச்சி அடைந்து விட்டது. பாலஸ்தீன பிரச்சினை உள்பட உலக அரங்கில் முட்டி மோதிக் கொண்டிருந்த பல தகராறுகள் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படும் ஆக்கப்பூர்வமான சூழல் ஏற்பட்டுள்ளது.

உலகப்பொருளாதார நிலவரமானது முன்பைவிட இப்போது பரபஸ்பரம் ஒருங்கிணைப்பும், சார்பும் மிகுந்ததாக மாறி உள்ளது. சமத்துவம் சகோதரத்துவம், பரஸ்பர ஒத்துழைப்பு, தலையிடாமை போன்ற உயரிய கண்ணோட் டங்களின் அடிப்படையில், புதிய உலக முறைமையை தோற்றுவிக்கும் கடமை அணிசேரா இயக்கத்திற்கு உள்ளது.

அணிசேரா இயக்கம் ஆற்றியுள்ள பணியை உலகின் சமாதான சக்திகள் ஒருபோதும் மறக்கவே முடியாது. அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்கள் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் அதனை உருவாக்கினார்கள். அதே பார்வையோடு இந்த இயக்கத்தை வளர்க்கவும், வலுப்படுத்தவும் 1980ம் ஆண்டு செப்டம்பர் 19ம் திகதி
அணிசேரா இயக்க இந்திய ஆய்வு நிறுவனம் பிறந்தது.

அணிசேரா இயக்கத்தின் பல்வேறு அம்சங்களை, பிரச்சினைகளை, போக்குகளை இந்த நிறு வனம் ஆராய்ந்து வருகிறது. அணிசேரா நாடுகளுக்கிடையே ஒருங்கிணைப்பாளராக இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அணிசேரா இயக்கத்தின் பல அம்சங்களை விளக்கி பல நூல்களை இந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்டநூல்கள் வெளி யிடப்பட்டு உள்ளன. அணிசேரா இயக்கத்தின் லட்சியங்களை, நோக்கங்களை மக்களிடம் எடுத்துரைப்பதற்காக, நன்கு பிரசாரம் செய்வதற்காக படிப்பாராய்ச்சியாளர்கள் பலரும் இந்த ஆய்வு நிறுவனம் பயிற்சி அளிக்கிறது. உலக நாடுகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், பத்தி ரிகையாளர்கள், பாராளுளமன்ற உறுப்பினர்கள், சமூக சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், ராஜதந்திரிகள், இந்த இந்திய ஆராயச்சி நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பல தரப்பினரிடும் அணிசேரா இயக்கம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச அளவில் எழும் பிரச்சினைகளை ஆய்வு பொருளாக்கி சர்வதேச கருத்தரங்குகள் மூலம் இடையறாதுஇந்த நிறுவனம் விவாதித்து வந்துள்ள அணிசேரா நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் முன்னர் எழுந்துள்ள பரபரப்பான பிரச்சினைகள் குறித்தும், அதுகுறித்து உலக மக்களின் கருத்தைத் திரட்டவும், அதன் மூலம் மக்களின் பிரச்சினையை தீர்ப்பிதில் கணிசமான செல்வாக்கு செலுத்துவதிலும் இந்த ஆய்வு நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. சர்வதேச உறவுகளில் ஜனநாயகத்தன்மை ஏற்பட வேண்டுமெனவும் இந்நிறுவனம் விரும்புகிறது.

வளர்ச்சி நோக்கங்களுக்காக தகவல்களையும், மூலாதாரங்களையும் பகிர்ந்து கெள்ளும் விஷயத்தில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு மத்தியில், அதிக அளவில் ஒத்துழைப்பு நிலவ வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. இம்மாதிரி சூழலில் அணிசேரா இயக்கத்தின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஆய்வு நிறுவனத்தின் கடமையும் அதிகரிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.