;
Athirady Tamil News

வடக்கில் கடலட்டைப் பண்ணைகளால் பட்டினிச் சாவில் மீனவர்கள்!! (கட்டுரை)

0

மீன்களின் இனப்பெருக்கம் தடைப்படுகிறது

வழிகள் மறிக்கப்பட்டதால் படகுகளை செலுத்த முடியாதுள்ளது.

பிரகாசமான மின்விளக்குகள் பயன்படுத்துவதால் மீன்கள் கரைக்கு வருவது தடுக்கப்படுகிறது

சிறிய குஞ்சு அட்டைகளை பொறுக்கி, கடலட்டையின் இனப்பெருக்கத்தை இல்லாமல் செய்கிறார்கள்

கறிக்குக்கூட மீன் இல்லாமல் சோயாமீற்றும் பருப்பும் சாப்பிடும் அவலம்

இலங்கையின் பொருளாதாரம் இந்தளவுக்கு பாதளத்தில் விழுந்தமைக்கு சீனாவின் திட்டங்களை பிரதான காரணங்களாக அமைந்துள்ளன என்றக் குற்றச்சாட்டை மறுதலிக்க முடியாது.

இந்நிலையில், வடக்கு மற்றும் கிழக்கில் சீன கடலட்டை உற்பத்தி திட்டங்களுக்கு அப்பகுதி மீனவர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.அவ்வானதொரு நிலையில் கடலை அண்மித்த 36,000 ஏக்கருக்கும் அதிகமான நில பரப்பில் பெரும் கடலட்டை பண்ணைகளை உருவாக்கும் திட்டம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் மீனவர்களிடையே தமது வாழ்வாதாரம் குறித்து அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் வணிகரீதியிலான மீன்வளர்ப்புக்கான உந்துதலைப் பயன்படுத்தி, சீனா அத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் திட்டத்தில் இறங்கியுள்ளது.பல்வேறு சீன நிறுவனங்களும் இலங்கை கடல் வளங்களை நீண்டகாலமாக கட்டுப்படுத்தும் நோக்கில் முன்மொழிவுகளை உறுதிப்படுத்தியுள்ளன.

குறிப்பாக கடலட்டை பண்ணைகள் பெய்ஜிங் கவனிக்கும் ஒரு முக்கிய பகுதியாகும். சில ஊடக செய்திகளின் பிரகாரம், 2021 ஆம் ஆண்டில் சீனா, சிங்கப்பூர் மற்றும் ஹொங்காங் ஆகிய நாடுகளுக்கு இலங்கை சுமார் 336 டொன் கடலட்டைகளை ஏற்றுமதி செய்துள்ளது.எனவே, இவ்வகையான கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வது இலாபகரமானது. இந்த துறையில் சீன வணிக நிறுவனங்கள் பல தற்போது இலங்கையில் செயற்படுகின்றன.

தென் சீனாவின் மக்காவ்வை தளமாகக் கொண்ட சுன்மான் கலாசார வணிகம் குழு என்ற நிறுவனம் (Chunmanm Cultural Business Group) புத்தளம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பாரிய அளவிலான கடலட்டை பண்ணை திட்டத்தை அமைக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

450 மில்லியன் டொலர் மதிப்புள்ள 8.6 மில்லியன் கிலோ கடலட்டை உற்பத்தி செய்ய முன்மொழியப்பட்ட திட்டம் 36000 ஏக்கருக்கும் அதிகமான கடலை உள்ளடக்கியது. 10 ஆண்டுகால இந்த திட்டமானது ஆண்டுக்கு 5000 ஏக்கர் மீன்வளர்ப்பு நீரைப் பயன்படுத்த கூடும் என்பதால் இது கடல் வளத்தை கடுமையாக பாதிக்கும் என சூழலியளாளர்கள் கூறுகின்றனர்.

இலங்கையின் வடகடல் பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் கடலட்டை பண்ணைகளால், அந்தந்தப் பிரதேசங்களில் சிறு கடற்றொழிலை பரம்பரை பரம்பரையாக வாழ்வாதாரமாக மேற்கொண்டு வந்த குடும்பங்கள், தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். அதேவேளை, கடலட்டைப் பண்ணைகளை அமைத்துள்ள பண்ணையாளர்கள் சிலர், இதனால் அதிக வருமானம் கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரியாலை, அல்லைப்பிட்டி, புங்குடுதீவு, மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி, இரணைதீவு, கிராஞ்சி, வலைப்பாடு, வேரவில், பள்ளிக்குடா, நாச்சிக்குடா போன்ற மீனவ கிராமங்களில் வாழும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் சிறுகடற்றொழிலாளர்கள், தமது வாழ்வாதாரத்தை இந்தக் கடலட்டைப் பண்ணைகள் ஆக்கிரமித்துள்ளன என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதேவேளை, கிராஞ்சி கிராமத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துத் தருமாறும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தும் வருகின்றார்கள்.

பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பாதிப்பு

அதாவது, கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டதால், தமது தொழில் முற்றாகப் பாதிக்கப்பட்டு விட்டதாக கிராஞ்சி, இலவங்குடா பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி முதல், குறித்த இறங்குதுறைப் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்துக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் (18) 50ஆவது நாளாக முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை, பல்வேறு தரப்பினரும் சந்தித்து கலந்துரையாடி வருவதுடன் தமது ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை சந்தித்து கலந்துரையாடிய போது, “நாங்கள் யாரும் கடலட்டைப் பண்ணைகளுக்கு எதிரானவர்களோ அல்லது அவர்களின் தொழில்களை வேண்டாமென்றோ சொல்லவில்லை. எங்களது தொழில்களை சுதந்திரமாக மேற்கொள்ள இடமளித்து விட்டு, அவர்கள் தங்களது பண்ணைகளை அமைக்கட்டும்” என்றனர்.

மேலும், அவர்கள் கூறும்போது, “கிராஞ்சி, இலவன்குடா கடற்பரப்பில் 45 வருடங்களுக்கு மேலாக, பாரம்பரியமாக சிறகுவலை மீன்பிடி முறையிலான தொழில்களை செய்து வருகின்றோம். அதேபோல், தற்போது இந்தப் பிரதேசத்தை சேர்ந்த 60 வரையான பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், இந்தக் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் இரவு, பகல் வேளைகளில் நண்டு, இறால், மீன், அட்டை போன்றவற்றைப் பிடிப்பதை அன்றாட வாழ்வாதாரமாக மேற் கொண்டு வந்திருந்தார்கள். இந்தப் பண்ணைகளை, இவர்களது தொழில் செய்யும் இடங்களில் அமைத்துள்ளதால், மேற்படி தொழில்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. இப்போது கறிக்குக்கூட மீன் பிடிக்க முடியாத நிலையில், சோயாமீற், பருப்பு என்பவற்றையே சாப்பிட வேண்டியுள்ளது” என்றும் கண்ணீர்மல்கத் தெரிவித்தார்கள்.

மீன் வளம் இல்லாமல் போகும் அபாயம்

கடலட்டைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ள இடங்களில், கடல் தாவரங்கள், கடல் பாசிகள் அதிகம் காணப்படுவதால், அந்த இடங்கள் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாகக் காணப்பட்டன. ஆனால், தற்போது குறித்த பகுதிகளில் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டதால், மீன் இனங்களுக்கும் கரைக்குமான தொடர்பு தடுக்கப்பட்டுள்ளது. மீன்களின் இனப்பெருக்கமும் இல்லாமல் போகின்றது. மேலும், இரவு நேரங்களில் பிரகாசமான மின்விளக்குகள் பயன்படுத்தப்படுவதால் மீன்கள் கரையை நோக்கி உணவு தேடி வரமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதியில் தொழில் செய்யும் மீனவர்களின் நிலை, பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது; இவர்கள் முழுமையாகத் தமது வாழ்வாதாரத்தை இழந்து, பட்டினி கிடக்கும் நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.ட

பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் அசண்டை

இதுதொடர்பாக, கடற்றொழிலாளர் சங்கம், கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம், பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் காரியாலயம் ஆகியோருக்கு பலமுறை கடிதம் மூலமாக அறிவிக்கப்பட்ட போதிலும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக, மேலும் பல கடலட்டைப் பண்ணைகள், இவ்வாறு மீனவர்கள் பாரம்பரியமாகத் ​ தொழில் புரியும் இடங்களில் அமைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.

மீன் பிடி படகுகள், சிறுவள்ளங்கள் கடலுக்குச் சென்று வரும் பாதையிலும் கரையில் தரித்து நிற்கும் துறைப்பகுதியிலும் இவற்றுக்கு அண்மையாகவும் கடலட்டைப் பண்ணை அமைக்கப்படுவதால், கடற்றொழிலாளர்களின் போக்குவரத்துக்கும் பெரிதும் இடையூறாக அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

“எங்களைத் தொழில் செய்யவிடாமல் தடுப்பது ஏன்”?

குறித்த பண்ணைகள், அமைக்ககூடிய வகையிலான, கடற்றொழில்கள் மேற்கொள்ளப்படாத இடங்கள் ஏராளம் உள்ளபோதும், தாம் தொழில் புரியும் பகுதிகளிலும் துறைமுகங்களிலும் பண்ணைகளை அமைந்திருப்பது ஏன் எனற நியாயமான கேள்வியையும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் எழுப்பியுள்ளனர்.

அத்துடன், ஆரம்பத்தில் குறித்த கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்படும் போது, பாரம்பரிய தொழில்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படும் வகையில் அமையாது எனக் கூறப்பட்டதற்கு மாறாக, பாரம்பரிய மீன்பிடிகளை மேற்கொள்ளும் இடங்களில் அத்துமீறி, இரவோடு இரவாக இந்தக் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு விடுகின்றன என்றும் மீனவர்கள் தெரிவித்தார்கள்.

நீதி கிடைக்குமா?

குறிப்பாக, ஒருசில முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்காக, ஒட்டுமொத்த மீனவர் சமூகத்தையும் பலிக்கடாவாக்கக் கூடாது என, கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் ​தெரிவித்ததுடன் இதற்கான நீதி கிடைக்க வேண்டுமெனக் கோரினர்.

கிராஞ்சி, இலவன்குடா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், ஆரம்பத்தில் அதாவது செப்டெம்பர் 30ஆம் திகதி, தமது தொழிலை மேற்கொள்ள இடமளிக்குமாறு கோரி, உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில், மூன்றாவது நாள், சம்பவ இடத்துக்குச் சென்ற மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) பிரதிநிதிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் அதற்கு தமது முழுமையான ஆதரவுகளையும் வழங்குவதாகவும் போராட்ட வடிவத்தை மற்றியமைத்து, போராட்டத்தை தொடருமாறும் கேட்டுக்கொண்டதை அடுத்து, மூன்றாவது நாள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டு, கவனயீர்ப்பு போரட்டமாக முன்னெடுக்கப்பட்டது. அன்று தொடங்கி, இன்று வரை போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தை கவனயீர்ப்புப் போராட்டமாக முன்னெடுத்து வருகின்றனர்.

பொதுவான பிரச்சினை

பூநகரி, இரணைதீவு, கிராஞ்சி, வலைப்பாடு, வேரவில், பள்ளிக்குடா, நாச்சிக்குடா போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்டிருக்கும் மீனவர்களுடன் உரையாடியபோது, அவர்களின் பொதுவான பிரச்சினை பின்வருமாறு காணப்பட்டது: “எமது பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளால், எங்களது படகுகளை, நாங்கள் சுதந்திரமாக ஓட்ட முடியாதுள்ளது. எமது வழிகளைக் கூட மறித்து விட்டார்கள். தவறுதலாக அவர்களது கடலட்டைப்பண்ணை வேலிகளுக்கு அண்மையாக நாங்கள் போனால் கூட, எங்களைத் திருடர்கள் போல நடத்துகின்றார்கள்; எங்களை விசாரிக்கின்றார்கள். நீதிமன்றம் வரையும் கடற்றொழில் அதிகாரிகள் எங்களை கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக, கடலில் உள்ள சிறிய குஞ்சு அட்டைகளை பொறுக்கி எடுக்கின்றார்கள். இதனால், இயற்கையான கடலட்டையின் இனப்பெருக்கும் இல்லாமல் செய்யப்படுகின்றது. ஒரு சில முதலாளிகளின் இலாபத்துக்காக நடத்தப்படும் இந்தப் பண்ணைத் திட்டங்கள், நிறுத்தப்பட வேண்டும். எந்தப் பாதிப்புகளும் இல்லாத எங்கள் பாரம்பரிய தொழில் முறைகளுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்” என்பதாகவே அமைந்திருக்கின்றது.

இது தொடர்பில், யாழ்ப்பானத்திலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு, இது தொடர்பிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளிலுள்ள முதலீட்டாளர்களுக்கும் சீன நிறுவனங்களுக்கும் இவ்வாறான கடலட்டைப் பண்ணைகள் அதிகளவில் வழங்கப்படுகின்றன என்ற குற்றச் சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளமை கவனத்தில் கொள்ளவேண்டியதாகும்.

கடற்றொழில் அமைச்சர் கூறுகிறார்…

இது தொடர்பாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவிக்கும்போது, “கடலட்டை பண்ணைகள் தொடர்பில், சிலர் அறிந்து பேசுகிறார்களோ அல்லது அறிந்தும் அறியாதவர்கள் போல் பேசுகிறார்களோ என எனக்குத் தெரியாது. வடக்கு மாகாணத்தில் சுமார் 5,000 ஏக்கரில் கடலட்டை பண்ணைகளை விரிவுபடுத்த ஏற்கெனவே திட்டங்கள் தீட்டப்பப்பட்டுள்ள நிலையில், சுமார் 1,150 ஏக்கரில் கடலட்டைப் பண்ணைகள் செயற்படுத்தப்படுகின்றன.

“நான் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னர், கிளிநொச்சி மாவட்டத்தில் 18 பண்ணைகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 11 பண்ணைகளும் மன்னார் மாவட்டத்தில் மூன்று பண்ணைகளுமாக 32 பண்ணைகள் காணப்பட்டன. நான் அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர், கிளிநொச்சி மாவட்டத்தில் 277 பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன் மேலும் 163 பண்ணைகள் அமைக்கப்படவுள்ளன. யாழ். மாவட்டத்தில் 245 பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன் மேலும் 176 பண்ணைகள் அமைக்கப்படவுள்ளதோடு மன்னார் மாவட்டத்தில் 78 பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன் இன்னும் பண்ணைகள் அமைக்கப்பட உள்ளன.

“பருத்தித்தீவு கடலட்டை பண்ணையில் சீன இராணுவத்தினர் இருப்பதாகவும் இதனால் இந்தியவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அந்தப் பண்ணைகளுக்கும் சீனர்களுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. நல்லாட்சி அரசாங்கத்தில், அரியாலையில் உள்ள கடலட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையத்தில், ஏற்கெனவே சீனர்கள் வந்தார்கள். அங்கு இருக்கின்ற சீனர்களை தவிர, வேறு யாரும் இதுவரை கடலட்டை பண்ணை செயற்பாடுகளில் வடக்கில் ஈடுபடவில்லை.

‘நாரா’ நிறுவனம் மற்றும் கடற்றொழில் திணைக்களம் போன்றவற்றால் ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகளில், தழுவல் அடிப்படையில் கடலட்டை பண்ணைகள் அமைக்கப்படுகின்றன. எனினும் தன்னிச்சையாக யாராவது அனுமதி இன்றி, கடலட்டை பண்ணைகளை அமைப்பார்களாயின் அவை அகற்றப்படும். தற்போது உருவாக்கப்பட்டுள்ள பண்ணைகளில் 95 சதவீதமானவை அந்தந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.

“ஆனால், இந்தியா, சீனா போன்ற நாடுகள், கடலட்டை பண்ணைகளில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் செலுத்தி வருகின்றன. யாராக இருந்தாலும், எமது மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் பட்சத்திலேயே அடுத்த கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

எது எவ்வாறு இருப்பினும், இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற படவேண்டுமென்பதுடன் பெண்களும் முதியவர்களும் தங்களது பாரம்பரிய முறையிலான வாழ்வாதாரத் தொழில்களை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்பதும் எல்லாவற்றையும் விட முக்கியமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.