;
Athirady Tamil News

அடுத்த வருடம் பெப்ரவரிக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு? (கட்டுரை)

0

நவம்பர் மாதம் 10ஆம் திகதி, பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “இலங்கையின் உள்விவகாரங்களில், வெளியார் தலையீடு தேவையில்லை. நாட்டின் தமிழ் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் நிலுவையில் உள்ள சில பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில், அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த, சிறுபான்மையின கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார்.

“அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தி, 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கு, நான் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்” என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.

பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற 75ஆவது ஆண்டு நிறைவை 2023 பெப்ரவரி நான்காம் திகதி கொண்டாடவுள்ள நிலையில்தான், ரணில் விக்கிரமசிங்க இந்த அழைப்பை விடுத்திருந்தார்.

அத்தோடு, “எங்கள் நாட்டின் விவகாரங்களில் மற்றவர்கள் தலையிடத் தேவையில்லை. எங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்க்க முடியும்; அதைத்தான் நாங்கள் நிறைவேற்ற முயலுகின்றோம்” என்று, எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமையும் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருந்தது.

“இனப்பிரச்சினையா… அப்படியென்றால் என்ன? அப்படியொன்று இருக்கிறதா? நாம் அனைவரும் ஒரு தேசம்; நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள். இங்கு சிறுபான்மையினர் என்று யாரும் கிடையாது. அகராதியில் சிறுபான்மையினர் என்ற சொல்லே கிடையாது” என்று பொய்க் கற்பிதங்களை பகட்டாரவாரமாகச் சொல்லும் இலங்கை அரசியல்வாதிகளிடையே, “இங்கு சிறுபான்மையினருக்கு பிரச்சினைகள் இருக்கின்றன. அவை தீர்க்கப்பட வேண்டும். அது, 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் அடையப்பட வேண்டும்” என்று இந்நாட்டின் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பேசியதும், தமிழர் தரப்புக் கட்சிகளை இதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்திருப்பதும் நல்ல மாற்றம்தான்.

இந்தப் பேச்சினூடாக, இலங்கையில் இனப்பிரச்சினை இருப்பதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ இலங்கையின் ஜனாதிபதி அங்கிகரித்துள்ளதுடன், அது விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.

இது மஹிந்த, கோட்டா, சஜித் ஏன் அநுர ஜனாதிபதியாகி இருந்தால் கூட இடம்பெற்றிருக்காது. மஹிந்தவும், கோட்டாவும் “இனப்பிரச்சினையா, அப்படியென்றால் என்ன? நாம் அனைவரும் இலங்கையர்கள்” என்பார்கள்.
சஜித், “என் அகராதியில் சிறுபான்மை என்ற சொல்லே இல்லை” என்பார்.

ஜே.வி.பி எனும் பெரும்பான்மையின இனவாதத்தை அடிநாதமாகக் கொண்ட இடதுசாரிக் கட்சியின் தலைவர் அநுர, “இங்கு இனவாதம் என்பது, முதலாளித்துவத்தின் வேலை; இங்கு இனங்கள் கிடையாது; வர்க்கங்கள்தான் இருக்கின்றன” என்பார்.

ஆகவே, இவர்கள் எவரும் இத்தனை காலத்தில் தாமாக முன்வந்து அங்கிகரிக்காத ஒரு பிரச்சினையின் இருப்பை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கிகரித்திருக்கிறார். நன்று!

இந்தப் பேச்சுவார்த்தைகள், தமிழர் தரப்புக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. இதனை தமிழர் தரப்பு மிகக்காத்திரமான வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு முதற்படியாக, தமிழர் தரப்பு, தமது கட்சி அடிபாடுகளைக் கடந்து, குறைந்தபட்ச கொள்கை அடிப்படைகளிலேனும் ஒன்றுபட்டு, ஒரு குரலாகப் பேச வேண்டியது காலத்தின் தேவையாகிறது.

இந்த இடத்தில், தமிழர் தரப்பும் ஒன்றை நினைவில் வைத்திருத்தல் அவசியமாகிறது. எப்படி மேற்சொன்னதைப்போல, மஹிந்த, சஜித், அநுர ஆகியோரது கருத்துகள் பகட்டாரவார அபத்தமான கருத்தாக தமிழர்களால் பார்க்கப்படுகிறதோ, அதைப்போல, தமிழர் தலைமைகளுக்கு பகட்டாரவார அபத்தங்களைத் தவிர்த்துவிட்டு, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சுமூகமாகதொரு தீர்வை எட்ட முயல வேண்டும்.

பேச்சுவார்த்தை மேசையென்பது, தேர்தல் மேடையல்ல. அது மக்களிடம் கைதட்டு வாங்குவதற்கான இடம் அல்ல. அது, தான் என்ற ஆணவமும் ‘ஈகோ’வும் ஆட்டம் போடும் இடமல்ல. அது வழக்காடும் இடமும் அல்ல. பேச்சுவார்த்தை மேசையென்பது காரியத்தை சாதிக்கும் இடம்; சமரசத்துக்கான இடம்.

இந்த இடத்தில் சௌமியமூர்த்தி தொண்டமான், வடக்கு-கிழக்கு தமிழர் தலைமைகளைப் பற்றி முன்னர் சொன்ன ஒரு விடயம் கவனத்தில் கொள்ளத்தக்கது. “பேச்சுவார்த்தைக் கலையானது, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தல்; அதில் ஒன்றை முழுமையாக வெற்றி கொள்ளுதல். இரண்டைப் பகுதியளவில் வெற்றி கொள்ளுதல். இரண்டைத் தற்காலிகமாக வேறொரு நாளுக்குக் கிடப்பில் வைத்தல்” என்று சொன்னார். “நாங்கள் தொழிற்சங்கவாதிகள்; ஆதலால் எமக்கு இந்தப் பேச்சுவார்த்தைக் கலை தெரியும். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களில் பெரும்பாலானோர் சட்டத்தரணிகள். அவர்களுக்கு வழக்கை மிகச் சிறப்பாக வாதாடத் தெரியுமே அன்றி, சலுகைகளைப் பெற்றுக்கொள்ளத் தெரியாது” என்று சொன்னார்.

“பயத்தின் காரணமாக ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம். ஆனால், பேச்சுவார்த்தைக்கு ஒருபோதும் பயப்பட வேண்டாம்” என்றார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜே.எப் கென்னடி.

தமிழர் தரப்பு இன்று எதற்கும் அஞ்சாமல், தமிழ் மக்களின் ஏகோபித்த நலனை மட்டும் முன்னிறுத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஒரு சந்தர்ப்பம் உருவாகியிருக்கிறது. அதைத் தமிழர் தரப்பு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளுதல் வேண்டும். தனிநபர் ஈகோக்களால், இந்நாட்டின் மக்கள் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதொரு நன்மை கிடைக்காது போய்விடக்கூடாது.

அதேவேளை இது, வரலாற்றில் இன்னோர் ஏமாற்றமாகவும் அமைந்துவிடக்கூடாது. ஆகவே, தமிழர் தரப்பு இதனை மிகச்சரியாகவும், மிக இலாவகமாகவும் கையாளுதல் அத்தியாவசியமாகிறது. கட்சி நலன், தனிநபர் நலன்கள் என்பவற்றைத்தாண்டி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சிந்திக்கவும், செயற்படவும் வேண்டிய தருணம் இது.

மேலும், இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அந்நியத் தலையீடு தேவையில்லை என்பதை ஜனாதிபதி தௌிவாக அழுத்திச் சொல்லவும் காரணம் இருக்கிறது. இலங்கையின் இனப்பிரச்சினை இலங்கையில் அந்நியர்கள் தலையீடு செய்வதற்கான துருப்புச் சீட்டாக மாறியிருக்கிறது.

குறிப்பாக, இந்தியாவானது, இலங்கையில் தலையீடு செய்வதற்கான துருப்புச் சீட்டாக இனப்பிரச்சினையைப் பயன்படுத்திய வரலாறு இன்னும் இந்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினராலும் மறக்கப்படவில்லை. இந்திய சமாதானப் படை, இந்த மண்ணில் கட்டவிழ்த்து விட்ட அட்டூழியங்களை மக்கள் மறக்கமாட்டார்கள். இன்றும் பிரதான தமிழ் அரசியல் கட்சிகளை இந்தியா ஆட்டுவித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு, பரகசியமான இரகசியமாக பேசப்படுகிற விடயம்.

பிரதான தமிழ்க் கட்சிகள் எந்தவொரு முக்கிய முடிவையும் இந்தியாவுடன் கலந்தாலோசிக்காது எடுப்பதில்லை என்பதும் பரகசியமான இரகசியமாகும். ஆகவேதான், ஜனாதிபதி தமிழ்த் தரப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது, அந்நியத் தலையீடு தேவையில்லை என்பதையும் அழுத்திச் சொல்லியிருக்கிறார்.

இலங்கைக்கு இந்தியா உதவி செய்திருக்கிறது. இந்தியா, தமிழ் மக்களுக்கு உதவி செய்திருக்கிறது. அது உண்மை. ஆனால், அந்த உதவிகளுக்குப் பின்னால் மனித நேயமும் தமிழ் மக்கள் மீதான பாசமும் அக்கறையும் மட்டும்தான் இருக்கிறது என்று எண்ணினால் அது தவறு.

‘இந்திய நலன்’ என்பதுதான் இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கியமான அடிப்படை. அந்த அடிப்படையை மறைமுகமாகப் பாதிக்கிற எந்த காரியத்தையும் இந்தியா செய்யாது. இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு, அதன் வழிமுறைகள் பற்றியெல்லாம் இந்தியாவுக்கு மிகுந்த அக்கறை இருப்பதற்கான முக்கிய காரணம், இலங்கையின் அமைவிடம்.

அதிலும், இலங்கையின் வடக்கு, இந்தியாவுக்கு அமைவிட ரீதியில் மிக நெருக்கமாக அமைந்துள்ளதோர் இடம். வடக்கின் மீது தன்னுடைய ஆதிக்கத்தை இந்தியா எப்போதும் வைத்திருக்கவே முனையும்.

அதேவேளை, தமிழ்த் தலைமைகள் இந்தியாவுடன் நல்லுறவைப் பேணலாம்; (பேண வேண்டும்!). ஆனால், சரணாகதி நிலையில் இருந்து இயங்கும் மனநிலையை மாற்ற வேண்டும். இந்திய நலனைத்தாண்டி, தாம் பிரதிநிதித்துவம் செய்கிற மக்களின் நலனை முன்னிறுத்தி, தமிழ்த் தலைமைகள் இயங்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக விடுத்திருக்கிற இந்த அழைப்பு, வரலாற்று முக்கியத்துவம் மிக்கது. இதனை வெற்று நடவடிக்கையாக அன்றி, சாதகமானதொரு முன்னெடுப்பாக மாற்ற வேண்டிய கடப்பாடு, தமிழ்த் தலைமைகளுக்கும் ஜனாதிபதிக்கும் உரியது. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது இன்னோர் ஏமாற்றமாக அமைந்துவிடக்கூடாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.