;
Athirady Tamil News

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் !! (கட்டுரை)

0

புவிசார் அரசியல் காற்று எந்த வழியில் எப்படி வீசுகிறது? என்பதை கூர்மையாக அவதானிப்பதற்கான ஒரு சந்தா்ப்பத்தை அண்மையில் நடந்து முடிந்த ஜி20 உச்சி மாநாடு வழங்கியிருக்கிறது.

முரண்பாடுகளால் மோதிக் கொண்டிருக்கும் புவியரசியலை இந்த உச்சி மாநாடு மேடையேற்றியிருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீன- அமெரிக்க ஜனாதிபதிகளின் சந்திப்பு, சீன ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமருடனான சந்திப்பு, ரஷ்யாவின் பிரசன்னம் போன்றவை 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய முரண்பட்ட உறவுகளை பிரதிநிதித்துவம் செய்த நிகழ்வாக இந்த மாநாட்டை மாற்றியது. புவியரசியலில் பிளவுண்டு போயிருக்கும் தேசங்களின் மனோபாவத்தை மேடையேற்றும் அரங்காக இந்த மாநாடு அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த ஆண்டுக்கான G20இன் 17 ஆவது மாநாட்டின் தலைமைத்துவத்தை இந்தோனேசியா பெற்றிருந்தது. G20 கூட்டணியின் அடுத்த தலைமைத்துவம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த மாநாட்டில், முரண்பாடுகளுக்குள் உடன்பாட்டை எட்டுவதற்காக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வார்த்தைகளைக் கண்டறிய இந்தோனேசியாவும் இந்தியாவும் மிகவும் கடினமாக உழைத்ததாக ஊடக செய்திகள் கூறுகின்றன.

G20 நாடுகளின் கூட்டணி உலகப் பொருளாதார நெருக்கடிகளுக்குப் தீர்வு காணும் நோக்கில் 1999ம் ஆண்டு நிறுவப்பட்டது. 2008 ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒரு தடவை இந்த உச்சி மாநாடு இடம்பெற்று வருகிறது. ஒவ்வொரு உறுப்பு நாடுகளின் ஆட்சித் தலைவர், நிதியமைச்சர், அல்லது வெளியுறவு அமைச்சர் மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகளை உள்ளடக்கியதாக இந்த மாநாடு ஆண்டுக்கு ஒரு முறை கூட்டப் படுகிறது.

கடந்த 14 ஆண்டுகளில், ஜி20 உச்சிமாநாட்டில் பொருளாதாரம் மற்றும் அதன் மேம்பாடு முதன்மையான கருப் பொருளாக இருந்து வருகிறது. இவ்வமைப்பில் உலகின் 19 வளர்ச்சியடைந்த நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்புரிமை பெற்றுள்ளன.

ஆா்ஜன்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மன், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆபிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌ன‌ இணைந்த கூட்ட‌மைப்பாக இது செயற்பட்டு வருகிறது.

ஜி- 20 கூட்டு நாடுகளின் பொருளாதாரம் மொத்த உலக உற்பத்தியில் 85% வீதத்தையும், உலக வணிகத்தில் 80% வீதத்தையும், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் கொண்டுள்ளது.

இந்த வருடத்திற்கான ஜி 20 நாடுகளின் 17வது உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் நவம்பா் மாதம் 14ம் திகதி முதல் 16ம் திகதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜொகோ விடாடோ (Joko Widodo) தலைமை தாங்கினாா்.

இவ்வருட உச்சி மாநாடு, “ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்றது. G20 உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுகாதாரம், டிஜிட்டல் பரிமாற்றம் என மூன்று அமர்வுகளாக இடம்பெற்றுள்ளது.

நாடுகளின் பொருளாதார வளா்ச்சியை மட்டும் இலக்காக கொள்ளாமல், காலநிலை மாற்றம், நாடுகளுக்கிடையிலான கடன் பிரச்சினைகள், நாடுகளுக்குத் தேவையான மின் ஆற்றல் தொடர்பான வேலைத் திட்டங்களும் இந்தக் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்படுகின்றன.

கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் மாநாட்டை தலைமை தாங்கும் பொறுப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இவ்வாண்டு 17-வது மாநாட்டை இந்தோனேசியா நடத்தி முடித்திருக்கிறது.

அடுத்த ஆண்டிற்கான ஜி20 கூட்டமைப்பின் 18 வது மாநாட்டிற்கான தலைமை இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ விடாடோவினால் அடுத்த உச்சிமாநாட்டிற்கான தலைமைப் பொறுப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அடையாள பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எதிா்வரும் 2022 டிசம்பர் 1ம் திகதி முதல் ஜி-20 தலைமையை இந்தியா முறைப்படி ஏற்கவிருக்கிறது.

இம்முறை இந்தோனேசியா பாலி நகரில் நடந்து முடிந்த உச்சிமாநாட்டில் உக்ரைன் போரின் நீண்ட விளைவுகள் தொடா்பாகவும் பேசப்பட்டுள்ளது. இந்த உச்சிமாநாட்டில் பாதுகாப்புப் பிரச்சினைகள் விவாதிக்கப்படக் கூடாது என்ற நிலையிருந்த போதும், உக்ரைன் விவகாரம், போரின் விளைவுகளால் உலக நாடுகளில் ஏற்பட்ட பொருதாளாத வீழ்ச்சி போன்ற வெவ்வேறு வழிகளில் விவாதங்களில் நுழைந்திருக்கிறது.

உணவுப் பாதுகாப்பு, விநியோகச் சங்கிலி சீர்குலைவு, பொருளாதாரச் சரிவு மற்றும் அமைதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் போன்ற விடயங்கள் தொடா்பாக அனைத்து நாடுகளும் தங்கள் கருத்துக்களை முன் வைத்திருந்தன.

உலக தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் அளவுக்கு உக்ரைன் போர் பற்றிய வலுவான அறிக்கையை மாநாட்டில் வெளியிட்டதில் அமெரிக்கா மகிழ்ச்சியடைந்துள்ளது.

ஜி20 மாநாட்டில் நேரடியான கண்டனம் சாத்தியமற்றது என்பதால், ஐ.நாவின் நீண்ட அறிக்கையை அமெரிக்க முன்வைத்து தனது கருத்தாடலை தொடங்கியது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கடுமையாக கண்டித்தது மட்டுமல்லாமல், உக்ரைன் பிரதேசத்தில் இருந்து அது முழுமையாகவும், நிபந்தனையின்றியும் பின்வாங்க வேண்டும் என்ற கருத்தை அமெரிக்கா முன் வைத்தது.

அமெரிக்கா தலைமையிலான சில மேற்கத்திய நாடுகள், மாநாட்டின் “தலைப்பை” திசைமாற்ற முயன்றதாக சீனா குற்றம் சாட்டியதோடு, இது ஜி 20 மாநாட்டின் பொருளாதார ஒத்துழைப்பை மையப்படுத்திய கொள்கைக்கு பொருத்தமற்றது என்றும் விமா்சித்திருக்கிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் நெருக்கடியால் உருவாகிய பொருளாதார காரணிகள், விநியோகச் சங்கிலி இடையூறுகள் மற்றும் ஏழைகள் மீது போா் ஏற்படுத்திய தாக்கம் பற்றி குறிப்பிட்டார்.

உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் அறுந்துவிட்ட நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் நெருக்கடி உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து வருவதாக மோடி சுட்டிக் காட்டினார்.

“ஒவ்வொரு நாட்டின் ஏழை குடிமக்களுக்கும் உள்ள சவால் மிகவும் கடுமையானது. அன்றாட வாழ்க்கை அவர்களுக்கு ஏற்கனவே ஒரு போராட்டமாக இருந்தது” என்று கூறிய மோடி, “இன்றைய உரத் தட்டுப்பாடு என்பது, நாளைய உணவு நெருக்கடிக்கு உலகை இட்டுச் செல்லும்” என்று வலியுறுத்திக் கூறினாா்.

உச்சிமாநாட்டின் முதல் நாள் இரவு விருந்தில், இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி சீஜின்பிங் உடனான சிறிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த கருத்துப் பரிமாற்றத்தின் போது, இந்தியா- சீனா நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளை மிகக் கவனமாகத் தவிர்த்து, உணவுப் பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் மாத்திரம் கவனத்தை செலுத்திய மோடி, அமைதி நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து அடுத்த ஜி20 உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கான அடித்தளத்தை அமைத்திருக்கிறாா்..

அதாவது, அடுத்த ஆண்டு G20 மாநாடு தொடங்குவதற்கு முன்னா், அடிவானத்தில் கூடிவரும் போர் மேகங்களை சிதறடிக்கச் செய்வதற்கு, திறமையான இராஜதந்திரத்தைப் பயன்படுத்த அவா் திட்டமிட்டிருக்கிறாா்.

இந்தியப் பிரதமா் ஏற்கனவே உக்ரைன் பிரச்சினையில் தனது கருத்தை பதித்துள்ளார். இது போருக்கான நேரம் அல்ல என்றும் இன்றைய சகாப்தம் போராக இருக்கக்கூடாது என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

அடுத்த ஆண்டு ஜி-20 அமைப்பிற்கு இந்தியா தலைமை வகிக்கவிருக்கும் நிலையில் மோடி முன்வைத்தள்ள கருத்தாடல் “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற கருப்பொருளில் அமையவிருக்கிறது.

நாடுகளுக்கிடையில் உள்ள முரண்பாடுகளைக் களைந்து, உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்துவதற்கான வழியாகவும், உலக அமைதிக்கு முக்கியத்துவம் வழங்கும் அணியாகவும் ஜி20 கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற இந்தியாவின் அவாவை “ ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற கருப்பொருள் அடிக்கோடிட்டு காட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.