15 April 2017 0 Comments Report

கூட்டமைப்பின் தற்போதைய சூழ்நிலை: “கூட்டமைப்பு VS ஈ.பி.ஆர்.எல்.எப்” (கட்டுரை)

கூட்டமைப்பு VS ஈ.பி.ஆர்.எல்.எப்

2009 முள்ளியவாய்க்கால் பேரவலம் முடிந்த பின்பு தமிழ் மக்கள் தமக்கான ஒரு தலைமைத்துவத்தை இன்று வரை தேட வேண்டிய ஒரு துப்பாக்கிய நிலை தொடரவே செய்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒரு ஜனநாயக நீரோட்டத்திற்கான அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை என்கின்ற வெற்றிடத்தை சரியாக பூர்த்தி செய்யவில்லை.

யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்துள்ள போதும் தமிழ் தேசிய இனம் இந்த நாட்டில் சமத்துவத்துடன் வாழ தமது நியாயமான, அபிலாசைகளையும், கோரிக்கைகளையும் தொடர்ந்து முன்வைத்தே வருகின்றது.

ஆனால் அதனை காத்திரமாக கொண்டு செல்லக் கூடிய ஒரு ஜனநாயக கட்சிக் கட்டமைப்போ அல்லது தலைமைத்துவமோ தற்போது இல்லை.

இதன் காரணமாகவே தமிழ் மக்களின் ஒரு பகுதியினரும், புலம்பெயர் தேசத்தில் வாழும் பெருமளவான தமிழ் மக்களும் மாற்றுத் தலைமை ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றார்கள்.

இது தற்போதைய தலைமை மீது மக்களுக்கு வெறுப்பு அல்லது சந்தேகம் ஏற்பட்டுள்ளதை படம்போட்டு காட்டுவதாகவுள்ளது.

தமிழ் மக்கள் என்பதற்கு அப்பால் குறைந்த பட்சம் கட்சிக்குள் கூட ஜனநாயக கட்மைப்போ, ஓருமித்த கொள்கையோ எடுக்கப்படுவதில்லை.

அதனை அண்மைய சம்பவங்கள் தெளிவாக புடம்போட்டு காட்டியுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தற்போது நான்கு கட்சிகளின் கூட்டாகவுள்ளது.

2010 ஆம் ஆண்டு வரை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகளின் கூட்டாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்குள் ஏற்பட்ட கொள்கை முரண்பாடு காரணமாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதில் இருந்து வெளியேறி இன்று சைக்கிள் குரூப்பாக (தமிழ் தேசிய மக்கள் முன்னனி) தனித்துவமாக தமது அரசியல் பயணத்தை தொடர்கிறது.

 

அதன் பின்னர் கூட்டமைப்புக்குள் புளொட் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டனி என்பன உள்வாங்கப்பட்டிருந்தது. 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டனி வெளியேற்றப்பட்டது.

இது கடந்த கால வரலாறு. தற்போது தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகளின் கூட்டாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இயங்கி வருகின்றது. ஆனாலும் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கமே இங்கு அதிகம்.

கூட்டமைப்பின் தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கின்ற போது அது விரைவில் மூன்று கட்சிகளின் கூட்டாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் அல்லது இரண்டு கட்சி கூட்டாக இருப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம் என அரசியல் அவதானிகள் பலரும் கருதுகின்றார்கள்.

கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் அதிகாரத்தையும், அதன் ஆதிக்கத்தையும், கூட்டமைப்பின் பெயரால் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான முடிவுகளையும் வெளிப்படையாக விமர்சித்து வருவது அதில் உள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியே (ஈபிஆர்எல்எப்).

இதன் காரணமாக ஈபிஆர்எல்எப் கட்சிக்கு எதிரான ஒரு நிலைப்பாடு தமிழரசுக் கட்சி தலைமையிடம் ஏற்பட்டுள்ளதை யாரும் மறுத்துவிட முடியாது.

Mr.Sureshpiremachchanththiran-press-meet-25-09-2013-026  கூட்டமைப்பு VS ஈ.பி.ஆர்.எல்.எப் Mr2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவரும் அப்போதைய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களை தோல்வியடைய வைக்க வேண்டும் என்பதற்காகவே ஓரு அணி செயற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

 

அதன் அடிப்படையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.

 

இதனைத்தொடர்ந்தும் ஈபிஆர்எல்எப் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பெயரால் தமிழரசுக் கட்சி தலைமையால் மேற்கொள்ளப்பட்டு வரும் சில செயற்பாடுகளை பகிரங்கமாகவே கேள்விக்குட்படுத்தி வருகின்றது. ஈபிஆர்எல்எப் தொடர்பாக தமிழரசுக் கட்சியும், தலைமையும் தற்போது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், கல்வி மான்கள், பொது அமைப்புக்கள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள் எனப் பல்வேறு தரப்பினரையும் உள்வாங்கி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் இணைத்தலைமையில் உருவாகிய தமிழ் மக்கள் பேரவையிலும், ஈபிஆர்எல்எப் இணைந்து கொண்டது.

இதனுன் புளொட் அமைப்பும் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.   தமிழ் மக்கள் பேரவை என்பது கட்சி அல்ல. அது ஒரு மக்கள் இயங்கமாக செயற்படப்போவதாக தெரிவித்து வருகின்ற போதும் அதன் செயற்பாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு குறிப்பாக தமிழரசுக் கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுப்பதாகவே அமைந்திருக்கின்றது.

கூட்டமைப்பு புதிய நல்லாட்சி அரசாங்கத்தில் அரசாங்கத்தின் ஆதரவு சார் நிலையில் எதிர்கட்சியாக செயற்பட்டு வருகின்றது.

எதிர்கட்சித் தலைவர், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு உப குழுக்களில் எனப் பல்வேறு பதவி நிலைக்களைக் பெற்றுள்ளது.

ஆனாலும் இந்த பதவி நிலைகளில் ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் புறக்கணிக்கப்பட்டிந்தார்.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இந்தப் பதவிகள் கூட்டமைப்பு தலைமையின் ஆதரவுடன் அவர்களின் தெரிவுடனேயே வழங்கப்பட்டிருந்தது.

adaikalanatham  கூட்டமைப்பு VS ஈ.பி.ஆர்.எல்.எப் adaikalanathamவன்னித் தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத்தில் சிவசக்தி ஆனந்தன் அவர்களே நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற போதும் மன்னாரை மையாக கொண்டிருந்த செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு பாராளுமன்ற குழுக்களின் தலைவர் பதவியுடன் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆக தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல் கட்சியை ஓரம் கட்ட முயல்கின்றது என்றே எண்ணவேண்டியுள்ளது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டுவதற்கும் ஈபிஆர்எல்எப்பே தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றது.

அவ்வாறு அந்தக் கட்சி கோருவதற்கு ஒரு காரணமும் உண்டு. ஏனைய பங்காளிக் கட்சித் தலைவர்கள் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

இதனால் அந்தக் கூட்டத்தை கூட்டினால் அவர்களுடன் பேச முடியும் என்பது தலைமையின் நிலைப்பாடு. ஆனால் ஈபிஆர்எல்எப் கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாமையால் அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை.

இதனால் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டுவதன் மூலமே அவர் கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் கலந்து கொள்ள முடியும். இவ்வாறான முரண்நிலை அரசியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அண்மையில் இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா மனிதவுரிமை பேரவையில் கால அவகாசம் வழங்க கூடாது என கூட்டமைப்பு பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களில் சிலர் கடிதம் அனுப்பியமைக்கு ஈபிஆர்எல்எப் கட்சியின் பங்கு காத்திரமானதே.

அந்த நிலைப்பாட்டில் கூட்டமைப்பு பங்காளிக்கட்சிகள் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்ற போதும் ஈபிஆர்எல்எப் மட்டும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.

வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு இடையிலான ஒரு அவசர சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது ஜெனீவாவில் அரசாங்கத்திற்னு கால அவகாசம் வழங்குவதா, இல்லையா என்பது முக்கிய பேசு பொருளாக இருந்தது. ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ மற்றும் தமிழரசுக் கட்சியின் சில உறுப்பினர்கள் கால அவகாசம் வழங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தெளிவாக இருந்துள்ளார்கள் .

அதனை அவர்கள் அங்கு வலியுறுத்தியுள்ளார்கள். அதன் பின் கூட்டைமைப்பின் தலைமை மற்றும் பேச்சாளர் ஆகியோர் காலஅவகாசம் என்ற ஒரு பதத்தை சேர்க்காது கால அவகாசம் வழங்குவதற்கு அங்கு முரண்பட்டு ஒற்றைக்காலில் நின்ற பலரையும் சரணாகதி ஆக செய்திருந்தனர்.

 

கூட்டமைப்பின் தலைமை ஏற்கனவே கால அவகாசம் வழங்க ஓப்புதல் அளித்து விட்டதாக இராஜதந்திரிகள் தெரிவித்தாக வடமாகாண முதலமைச்சர் அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் வெளியாகியிருந்தமை கவனிக்கத்தக்கது.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையால் 2015 ஐப்பசி முதலாம் திகதி இலங்கை அரசாங்கத்தின் இணை அணுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட எச்ஆர்சி 30- 1 என்ற தீர்மானத்தில் இலங்கை நிறைவேற்றவேண்டும் என்று கூறப்பட்ட அத்தனை விடயங்களும் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

இவை கடுமையான நிபந்தனையின் கீழ் நிறைவேற்றப்படுவதை ஐக்கிய நாடுகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கையில் நிறுவப்பட்டு மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கம் மேற்சொன்ன விடயங்களை தகுந்த பொறிமுறைகளின் மூலம் நிறைவேற்றத் தவறினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த தீர்மானத்தின் மூலம் கிடைக்க வேண்டிய அனைத்து பெறுபேறுகளும் கிடைக்கும் வண்ணமாக அதற்குரிய பெறுபேறுகளை ஐக்கிய நாடுகள் பேரவை உறுதிசெய்ய வேண்டும் என அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது கால அவகாசம் வழங்குதற்கான ஒரு ஏற்பாடு என்பதை அவதானிகள் பலரும் கூறுயிருந்தார்கள். இறுதியில் அதுவே நடந்தது. ஐ.நாவில் வழங்கப்பட்ட கால அவகாசத்தை கூட்டமைப்பு வரவேற்றும் இருந்தது.

கூட்டமைப்பு எடுத்த தீர்மானம் காலஅவகாசம் வழங்குதற்கான ஒரு தீர்மானம் என்பதை சுட்டிக்காட்டி ஈபிஆர்எல்எப் கட்சி அதனை புறக்கணித்திருந்தது.

அதனை உடனடியாகவே ஊடகசந்திப்பு வைத்து ஈபிஆர்எல்எப் கட்சி செயலாளர் வெளிப்படுத்தி இருந்தார். அந்தக் கட்சியின் அரசியல் குழுவும் கூடி ஆராய்ந்து கூட்டமைப்பின் முடிவை ஏற்க மறுத்திருந்தன.

தற்போது கிழக்கு மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் மக்கள் சந்திப்புக்கள் அதிகரித்துள்ளன.

அதில் ஈபிஆர்எல்எப் கூட்டமைப்பின் பெயரால் தமிழரசுக் கட்சி மற்றும் தலைமை செய்யும் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகிறது.

தமிழரசுகட்சியினரும் ஈபிஆர்எல்எப் தொடர்பில் தமது கருத்துக்களை வெளிப்படுத்த தொடங்கிவிட்டனர். அறிக்கை போர் இப்போது இடம்பெறுகிறது.

ஆக, தற்போது கூட்டமைப்பின் நிலமையை அவதானிக்கின்ற போது ஈபிஆர்எல்எப் கட்சி கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புக்களே அதிகரித்து வருகிறது.

இதன்காரணமாக கட்சி ஒற்றுமை என்பது கேள்விக்குள்ளாகியுள்ளதுடன், மாற்றுத் தலைமை பற்றிய சிந்தனைகள் மேலும் அதிகரித்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகள் வடமாகாண முதலமைச்சர் அவர்களின் தலைமைத்துவத்தை ஏற்க தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றன. புளொட் அமைப்பும் பச்சைக் கொடி காட்டக் கூடும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் கூட்மைப்புக்குள் உள்ள முரண்பாடு ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்குமா என்பது பலரிடமும் உள்ள கேள்வியாக உள்ளது.

அது தமிழ் தேசிய அரசியலுக்கு ஆரோக்கியமானதா அல்லது இந்த தலைமை தான் பொருத்தமானதா என்பதை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

–சிவ.கிருஸ்ணா


Post a Comment

*