27 September 2017 0 Comments Report

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு: வித்தியா – ”மரணம் முதல் தீர்ப்பு வரை”? (படங்கள் & வீடியோ) -முழுமையான தொகுப்பு-


13.05.2015. –
காலை பாடசாலைக்கு சென்ற மாணவி வித்தியா மாலை வரை வீடு திரும்பவில்லை.

இரவிரவாக உறவினர்கள் மாணவியை தேடினார்கள்.

14.05.2015. –

காலையிலும் வித்தியாவின் சகோதரன், வித்தியா வளர்த்த நாய் மற்றும் ஊரவர்கள் தேடுகின்றார்கள்.

வித்தியா பாடசாலை செல்லும் பாதையில் உள்ள பாழடைந்த வீடொன்றின் பின் புறமாக கைகள் கால்கள் கட்டப்பட்டு வாய்க்குள் துணி அடையப்பட்ட நிலையில் வித்தியா சடலமாக மீட்கப்படுகின்றாள்.

14.05.2015. –

மதியம். புங்குடுதீவில் உள்ள 9 பாடசாலைகளையும் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள், பிரதேச சபை மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் புங்குடுதீவு மகாவித்தியாலய மைதானத்தில் கூடி ஆர்ப்பாட்டம்..

14.05.2015. –

9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பூபாலசிங்கம் இந்திரகுமார் (வயது 40), பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 34), பூபாலசிங்கம் தவக்குமார் (வயது 32) ஆகிய மூவரும் கைது.

15.05.2015. –

வாய்க்குள் துணி அடைந்தமையால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, தலை கல்லில் அடிபட்டதில் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு மாணவி வித்தியா உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனைகளில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.

வித்தியாவின் உடற்பாகம் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

15.05.2015. –

வித்தியாவின் இறுதிக் கிரியை.. புங்குடுதீவில் கடையடைப்பு.. தீவகத்திற்கான போக்குவரத்தும் இடைநிறுத்தம்..

17.05.2015 –

வித்தியா கொலை தொடர்பில் மேலும் 5 பேர் கைது.

சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி, குறிகட்டுவான் பகுதியில் உள்ள ஊர்காவற்துறை போலிஸ் காவலரணை முற்றுகையிட்டு மக்கள் இரவிரவாகப் போராட்டம்.

சில மணி நேரத்தில் சந்தேகநபர்களை பொலிஸார் கடற்படையின் உதவியுடன் யாழ்ப்பணத்திற்கு கடல் வழியாக கொண்டு சென்றனர். மக்கள் ஆத்திரமுற்று காவலரணை தாக்கினார்கள்.

கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களுடன் தொடர்புடையவர் என சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து மக்கள் தாக்கினார்கள்.

அவ்விடத்திற்கு சென்ற தற்போதைய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறித்த நபரை பொலிசாரிடம் ஒப்படைக்குமாறு அங்கிருந்தவர்களிடம் கூறியதை அடுத்து அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

18.05.2015 –

கைதான 05 சந்தேக நபர்களையும் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது பொதுமக்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டு அவர்களைத் தாக்கினார்கள்.

19.05.2015. –

சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எனும் நபர் ஒன்பதாவது சந்தேக நபராக கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து கைது. (குறித்த நபர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸில் 17 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டு, யாழ்ப்பாண பொலிசாரால் விடுவிக்கப்பட்ட பின்னர் 19 ஆம் திகதி வெள்ளவத்தையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்)

மாலை. புங்குடுதீவுக்கு சென்ற சட்டத்தரணியும் கொழும்பு பல்கலைகழக சட்டத்துறை விரிவுரையாளருமான வி.ரி.தமிழ்மாறனே, சுவிஸ் குமார் தப்பி செல்ல உதவினார் எனக் கூறி ஊரவர்கள், அவரை சுமார் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக பொலிஸ் வாகனத்திற்குள் முடக்கினர்.

பின்னர் கடற்படையின் உதவியுடன் பொலிஸார் தமிழ்மாறனை ஊரவர்களிடம் இருந்து பாதுகாப்பாக மீட்டனர்.

20.05.2015. –

மாணவிக்கு நீதி கோரி ஹர்த்தால். அன்றைய தினம் சந்தேக நபர்களை யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை.

நீதிமன்ற கட்டட தொகுதியைச் சுற்றி பெருமளவான மக்கள் கூடி நின்றனர். மதியம் 11. 30 மணி. மக்கள் திடீரென வன்முறையில் இறங்கினர்.

நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது கல் வீசி தாக்குதல்.

சட்டத்தரணிகளின் வாகனங்கள், சிறைச்சாலை வாகனம் மற்றும் அங்கிருந்த ஏனைய வாகனங்கள் மீதும் தாக்குதல்.

கலகம் அடக்கும் பொலிஸார் கண்ணீர் குண்டு வீசி போராட்டகாரர்களை துரத்தினர்.

வன்முறையில் ஈடுபட்டனர் எனக்கூறி 132 பேர் கைது செய்யப்பட்டனர்.

20.05.2015. –

மாணவியின் குடும்பத்தின் சார்பில் இலவசமாக முன்னிலை ஆவோம் என்றும், சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையாக மாட்டோம் எனவும் யாழ். சட்டத்தரணிகள் கூட்டாக அறிவிப்பு.

26.05.2016 –

வித்தியாவின் தாய், சகோதரனை சந்தித்து ஜனாதிபதி ஆறுதல். “விசேட நீதிமன்றம் மூலம் விரைவான விசாரணை, வித்தியா குடும்பத்துக்கு வீடு” என்னும் வாக்குறுதிகளை வழங்கினார்.
(இன்னும் விசாரணை முடியவில்லை. வீடும்.. ஒன்றரை வருடங்களின் பின்னர் வவுனியா இராணுவக் குடியிருப்பில் வழங்கப்பட்டது)

15.12.2015 –

பத்தாவது சந்தேக நபராக ஜெயவர்த்தன ராஜ்குமார் (வயது 26) எனும் நபரை ஊர்காவற்துறை பொலிஸார் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள்.

குறித்த சந்தேக நபர் பஸ்ஸில் தப்பி செல்ல முற்படுகையில் பஸ்ஸினை துரத்தி சென்று அராலி சந்தியில் வைத்து அவரைப் பொலிஸார் கைது செய்தனர்.

25.01.2016.-

மகளின் கிரியைகளை செய்வதற்காக வழக்கினை துரிகதியில் முன்னெடுக்குமாறு புங்குடுதீவு மாணவியின் தாயார் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் கோரிக்கை.

உடல் புதைக்கப்பட்டதனால் இந்து சமய முறைப்படியான கிரியைகளை முன்னெடுக்க முடியவில்லை எனத் தெரிவித்தார்.

25.01.2016 –

“விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகள் என இனம் கண்டால் எம்மை தூக்கிலிடுங்கள்” என புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்கள் கூட்டாகக் கோரிக்கை.

19.02.2016 –

குற்றப்புலனாய்வு துறையினரால் மரபணு சோதனை அறிக்கை உட்பட எந்த அறிக்கையும் மன்றில் சமர்ப்பிக்கவில்லை.

அறிக்கைகளை விரைவில் சமர்பிக்க வேண்டும் என கடும் தொனியில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவு

(வழக்கு தொடர்பான சான்றுப் பொருட்களின் அறிக்கைகள், டீ.என்.ஏ பரிசோதனை அறிக்கைகள் என 12 அறிக்கைகளில் எவையும் எட்டு மாதத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை)

04.03.2016 –

வித்தியாவின் கொலைக்கான காரணத்தை குற்றப்புலனாய்வு துறையினர் ஊர்காவற்துறை நீதிமன்றில் வெளியிட்டனர்.

“வித்தியாவை புங்குடுதீவை சேர்ந்த சிவதேவன் துஷாந்த் ஒரு தலையாக காதலித்தார். ஆனால் வித்தியா சம்மதிக்கவில்லை.

வித்தியாவைப் பழிவாங்க, தன் நண்பரான தில்லைநாதன் சந்திரஹாசனுடன் கூட்டு சேர்ந்து மாணவியை கடத்த திட்டமிட்டார்.

திட்டத்தின் சூத்திரதாரியாக மாறினார் சுவிஸ் குமார்.இன்னும் இருவர் துணைக்கு சேர்க்கப்பட்டனர்.

அப்படிச் சேர்க்கப்பட்டவர்களுக்கும் வித்தியா குடும்பத்துக்கும் முன்பகை இருந்தது. அவர்களுக்கு எதிராக களவு வழக்கில் வித்தியாவின் தாயார் சாட்சி சொல்லி இருந்தார்.

திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. வித்தியா கடத்தப்பட்டு கோரமாக கூட்டு வன்புணர்வின் பொன் கொல்லப்பட்டார்.

துசாந்த், சந்திரஹாசன் ஆகிய இருவருமே கொலை செய்தவர்கள்” -இதுவே குற்றப்புலனாய்வாளர்களின் அறிக்கை.

03.03.2016. –

11ஆவது சந்தேக நபரான உதயசூரியன் சுரேஷ்கரன் கைது.

18.03.2016. –

வழக்கு ஒரு சில மாதங்களில் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படும் என ஊர்காவற்துறை நீதிமன்று அறிவிப்பு.

18.03.2016. –

புங்குடுதீவு மற்றும் ஊர்காவற்துறை பிரதேசங்களில் காணப்படும் பாழடைந்த வீடுகள் பற்றைகளை அழிக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்று உத்தரவு.

01.04.2016 –

பன்னிரண்டாவது சந்தேக நபராக தர்மலிங்கம் ரவீந்திரன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

20.04.2016. –

மரபணு பரிசோதனை அறிக்கையை தம்மிடம் ஜின்ரேக் நிறுவனம் இதுவரை கையளிக்கவில்லை என பொலிஸார் மன்றில் தெரிவிப்பு.

ஜின்ரேக் நிறுவன அதிகாரியை நீதிமன்றில் முன்னிலை ஆகுமாறு உத்தரவு.

20.04.2016. –

பொதுமக்களால் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுவிஸ் குமார், எவ்வாறு பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்றார் என்பது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவு.

04.05.2016. –

வித்தியா கொலை வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கை தாமதமாக கராணம் பணம் செலுத்தப்படாமையே என ஜின்டேக் நிறுவனம் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு.

04.05.2016. –

ஊர்காவற்துறை நீதிமன்றுக்கு வெளியில் வைத்து சுவிஸ் குமாரின் தாய் மற்றும் துஷாந்தனின் தாய் ஆகிய இருவரும் தன்னை மிரட்டியதாக வித்தியாவின் தாய் ஊர்காவற்றுறை பொலிஸில் முறைப்பாடு.

09.05.2016. –

வித்தியா கொலை வழக்கின் ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ் குமாருடன் தொடர்புகளை பேணியவர்கள், தப்பி செல்வதற்கு உதவியவர்கள், போன்றவர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என குற்ற புலனாய்வு பிரிவு பணிப்பாளருக்கு ஊர்காவற் துறை நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவு.

17.05.2016 –

வித்தியாவின் தாயாரை மிரட்டிய இருவரிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றனர்.

18.05.2016. –

வித்தியா கொலை வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கையை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு ஊர்காவற்றுறை நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.

18.07.2016.-
வித்தியாவின் தாயை மிரட்டிய குற்றத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்த சுவிஸ் குமாரின் தாயாரான மகாலிங்கம் தயாநிதி சிறைச்சாலையில் சுகவீனம் காரணமாக உயிரிழப்பு.

18.07.2016. –

வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ள சுவிஸ் குமாரும், அவரது தம்பி மகாலிங்கம் சசீந்திரன் ஆகிய இருவரும் தாயாரின் இறுதி கிரியைகளில் கலந்து கொள்ள ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ. சபேசன் அனுமதி.

13.07.2016. –

வித்தியா கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தி உள்ளதாக குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் தெரிவிப்பு.

10.08.2016. –

வித்தியா கொலை வழக்கின் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவின் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்து விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டு உள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி யாழ்.மேல் நீதிமன்றில் தெரிவிப்பு.

20.09.2016. –

வித்தியா கொலை வழக்கின் குற்றவாளிகள், இனம் காணப்பட கூடிய நிலையில் குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கை உள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் மன்றில் தெரிவிப்பு.

09.11.2016 –

வித்தியா கொலை வழக்கு தொடர்பில் மிக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் சட்டமா அதிபருக்கு பணிப்புரை.

02.02.2017.-

வித்தியா கொலை வழக்கின் விசாரணைகள் முடிவுறும் தருவாயில் உள்ளதாகவும் விரைவில் நீதிமன்றில் குற்றபகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்படும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவிப்பு.

22.02.2017 –

வித்தியா கொலை வழக்கின் 11 ஆவது சந்தேகநபர் அரச தரப்பு சாட்சியமாக மாறுவதற்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் ஒப்புதல்.

22.02.2017. –

வித்தியா கொலை வழக்கு 98 சதவீத விசாரணைகள் முடிவடைந்து விட்டதாக ஊர்காவற்துறை நீதிவான் எம்.எம். றியாழ் தெரிவிப்பு.

28.04.2017.-

வித்தியா வழக்கின் 10 ஆவது சந்தேகநபரான ஜெயவர்த்தனா ராஜ்குமார் மற்றும் 12 ஆவது சந்தேகநபரான ரவீந்திரன் ஆகியோர் சாட்சியங்கள் இல்லாமையால் வழக்கில் இருந்து விடுதலை.

04.04.2017. –

வித்தியா கொலை வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பரிசீலனையில் உள்ளது. இறுதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவிப்பு.

05.05.2017. –

வித்தியா கொலை வழக்கின் குற்ற பகிர்வு பத்திரம் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் யாழ்.மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்படும் என அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் மேல் நீதிமன்றில் தெரிவிப்பு.

10.05. 2017. –

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை கொழும்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் ‘ட்ரயல் அட் பார்’ முறையில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

11.05.2017. –

வித்தியா கொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றிலையே நடைபெற வேண்டும் என கோரி மாணவியின் தாய் உட்பட புங்குடுதீவு மக்கள் போராட்டம்.

12.05.2017. –

வித்தியா கொலை வழக்கு குற்றபகிர்வு பத்திர வழக்கெடுகள் யாழ். மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டது.

அதனை அடுத்து குறித்த வழக்கெடுகளை இரும்பு பொட்டகத்தில் வைத்து பாதுகாக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பதிவாளருக்கு பணிப்புரை.

13.05.2017
. –
வித்தியா கொலையுண்டு இரண்டாம் ஆண்டு நினைவு தினம்.

29.05.2017.

வடமாகணத்தில் முதலாவது ” ரயலட் பார் ” தீர்ப்பாய முறைமையிலான நீதிமன்ற அமர்வு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் சமாதன அறையில் கூடியது.

அன்றைய தினம் எதிர்வரும் 12 ஆம் திகதி மாணவி கொலை வழக்கின் ஒன்பது எதிரிகளையும் யாழ்.மேல் நீதிமன்றில் முற்படுத்துமாறு அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவு இட்டனர்.

12.06.2017.

மாணவி கொலை வழக்கின் ஒன்பது எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்த், பழனி ரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன், மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் மன்றில் ஆரம்பமானது, அதன் போது குற்றப்பத்திரிக்கை தனித்தனியாக எதிரிகள் ஒன்பது பேருக்கும் கையளிக்கப்பட்டது.

அதையடுத்து எதிரிகளுக்கு எதிராக கடத்தல் , பாலியல் வன்புணர்வு, கொலை, இக் குற்றங்களுக்கு திட்டம் தீட்டியமை, உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 41 குற்றங்கள் சுமத்தப்பட்டு எதிரிகளுக்கு திறந்த நீதிமன்றில் தமிழ் மொழியில் வாசித்து காண்பிக்கப்பட்டது.

அதன் போது எதிரிகள் தம் மீதான 41 குற்றசாட்டையும் மறுத்து தாம் சுற்றவாளி என மன்றுரைத்தனர்.

கடத்தல் , பாலியல் வன்புணர்வு , கொலை உள்ளிட்ட குற்ற சாட்டுக்கள் 1ஆம், 2ஆம், 3ஆம், 5ஆம், மற்றும் 6ஆம் எதிரிகள் மீது சுமத்தப்பட்டன.

ஏனைய 4ஆம் , 7ஆம் 8ஆம் மற்றும் 9ஆம் எதிரிகள் மீது இக் குற்றத்திற்கு திட்டம் தீட்டியமை, குற்றத்திற்கு உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

28.06.2017
.
யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் மூன்றாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் முதல் நாள் சாட்சி பதிவுகள் ஆரம்பமானது.

அதன் போது 1ம், 2ம், 3ம், 5ம் மற்றும் 6ம் எதிரிகளுக்கு எதிராக மாணவியை பலவந்தமாக கடத்தியமை, வன்புணர்வுக்கு உட்படுத்தியமை மற்றும் கொலை செய்தமை ஆகிய குற்றசாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.

ஏனைய 4ம், 7ம், 8ம் மற்றும் 9ம் எதிரிகள் மீது குறித்த குற்ற சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 41 குற்ற சாட்டுக்கள் எதிரிகள் மீது முன் வைக்கப்பட்டன. 53 சாட்சியங்கள் அணைக்கப்பட்டன.

அத்தனை குற்றசாட்டுக்களும் எதிரிகளுக்கு தனித்தனியே மன்றில் உரத்த குரலில் வாசித்துக்காட்டப்பட்டது.

அத்தனை குற்றசாட்டுக்களையும் எதிரிகள் தனித்தனியே மறுத்தனர்.

பதில் சட்டமா அதிபர் தொடக்கவுரை.

அன்றைய தினம் பதில் சட்டமா அதிபர் W.D. லிவேரா மன்றில் முன்னிலையாகி முன் உரை நிகழ்த்தினார்.

அதன் போது , இந்த வழக்கின் 2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகளே மாணவியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.

இவர்கள் நால்வரும் மாறி மாறி மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.

கொடூர சம்பவமானது சாதாரண கடத்தல், வன்புணர்வு, கொலை போன்றது அல்ல. இது முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு நடாத்தப்பட்ட குற்றம்.

இதற்கு சர்வதேச ரீதியில் திட்டம் வகுக்கபப்ட்டு உள்ளது. அதனால் இது சர்வதேச குற்றம் என்று கூட சொல்லலாம்.

இதன் பின்னணியில் இந்த நாட்டின் நற்பெயருக்கும் கீர்த்திக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும். என திட்டமிட்டு சர்வதேச ரீதியில் செயற்பட்டு உள்ளனர்.

இந்த குற்றசெயலின் பிரதான சூத்திரதாரி ஒன்பதாம் எதிரி ஆவார்.

குறித்த எதிரி கூட்டு பாலியல் வன்புணர்வினை நேரடியாக வீடியோ ஒளிப்பதிவு செய்து சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய முயன்று உள்ளார்.

ஒன்பதாம் எதிரி இலங்கையில் பிறந்திருந்தாலும் சுவிஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவர். அவர் சுவிஸ் நாட்டில் இருந்து அடிக்கடி இலங்கைக்கு வந்து செல்பவர். அந்த நிலையில் அவர் சுவிஸ் நாட்டில் இருந்து 6 எதிரியுடன் தொடர்பு கொண்டு அது பற்றி பேசியுள்ளார்.

சர்வதேச சந்தையில் தெற்காசிய நாட்டை சேர்ந்த இளம் பெண்களை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவதனை நேரடி காட்சியாக வீடியோ ஒளிப்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியும். இதனை ஒன்பதாவது சந்தேகநபர் தன்னுடன் சிறையில் இருந்த சக பாடிக்கு சொல்லி இருக்கின்றார்.

அதேவேளை ஒன்பதாவது சந்தேக நபர் தன்னை இந்த குற்ற செயலில் இருந்து தப்பிக்க உதவுமாறு கோரி போலிஸ் அதிகாரி ஒருவருக்கு 20மில்லியன் ரூபாய் பணம் கைமாற்றம் செய்யவும் முயன்று உள்ளார்.

ஏனைய 4ஆம் 7ஆம் மற்றும் 8ஆம் எதிரிகள் இந்த குற்ற செயலுக்கு உடந்தை அளித்தத்துடன், திட்டம் தீட்டியுள்ளனர்.

இந்த ஒன்பது எதிரிகளுக்கும் எதிராக முன் வைக்கபப்ட்டு உள்ள 41 குற்றசாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படும் என தெரிவித்தார்.

மாணவியின் தாயின் சாட்சியம்.

அன்றயை தினம் தாய் சாட்சியம் அளிக்கையில், எமது வீட்டில் இருந்து எனது மகள் தினமும் பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் தான் செல்வார்.

சம்பவ தினத்தன்று (13.05.2015) காலை 7.30 மணிக்கு வித்தியா பாடசாலை செல்ல புறப்பட்டாள் நானே வீடு கேற் வரையில் சென்று வழியனுப்பி வைத்தேன்.

அன்றைய தினம் வித்தியா கூட படிக்கும் மாணவியுடன் செல்வதாக கூறி சென்றால், ஆனால் அன்றைய தினம் அந்த மாணவி பாடசாலை செல்லாத காரணத்தால் வித்தியா தனியாகவே பாடசாலை நோக்கி சென்றாள்.

பாடசாலை சென்ற வித்தியா பாடசாலை நேரம் முடிவடைந்து வீட்டுக்கு வரும் நேரத்தை கடந்தும் வராததினால் வித்தியாவை பார்த்து வருமாறு எனது மகனை பாடசாலைக்கு அனுப்பினேன்.

அவன் அங்கு சென்று பார்த்து விட்டு பாடசாலை பூட்டி உள்ளதாக தொலைபேசியில் சொன்னான்.

அதன் பின்னர் பாடசாலை மாணவர்களிடம் விசாரித்த போது வித்தியா இன்றைய தினம் பாடசாலைக்கு வரவில்லை என கூறினார்கள்.

அதன் பின்னர் நானும் எனது மகனும் வித்தியாவை தேடி அலைந்தோம். அந்நேரம் ஊரவர்கள் இது தொடர்பில் போலீசில் முறைப்பாடு செய்யுங்கள் என சொன்னார்கள்.

அதனால் மாலை 6.30 மணியளவில் குறிகட்டுவான் போலிஸ் காவலரணில் முறைப்பாடு செய்ய சென்றோம். அங்கு அவர்கள் இந்த முறைப்பாட்டை ஏற்க முடியாது. நீங்கள் ஊர்காவற்துறை போலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்யுங்கள் என தெரிவித்தனர்.

பின்னர் இரவு 8 மணியளவில் ஊர்காவற்துறை போலிஸ் நிலையத்திற்கு சென்ற முறைப்பாடு கொடுக்க முற்பட்ட போது “இந்த வயது பிள்ளைகளை எங்கேனும் போயிருக்குங்கள் திரும்பி வாருங்கள்” என போலீசார் சொன்னார்கள்.

அதற்கு நாம் “எங்கள் பிள்ளை அப்படி பட்டவள் இல்லை” என கூறியதும் பின்னர் எமது முறைப்பாட்டை ஏற்று கொண்டார்கள்.

அன்றைய தினம் இரவு மழை பெய்து கொண்டு இருந்ததால், அன்றைய தினம் இரவு பிள்ளையை தேடவில்லை.

மீண்டும் மறுநாள் (14ஆம் திகதி) காலை 6.30 மணியளவில் நானும் மகனும் அயலவர்களுடன் வித்தியவை தேடி சென்றோம்.

அதன் போது வீதியின் இரு மருங்கிலும் இருவர் வீதம் பிரிந்து தேடி சென்றோம். எம்முடன் வித்தியா வளர்த்த நாயும் வந்து இருந்தது.

திடீரென எனது மகனும் அயலவரும் கத்தும் சத்தம் கேட்டு நானும் என்னுடன் கூட வந்தவரும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடி சென்றோம்.

அப்போது என் மகன் ஓடிவந்து “அம்மா வித்தியா” என கத்திக்கொண்டு மயக்கமுற்று வீழ்ந்தான். அதன் பின்னர் நானும் சுயநினைவின்றி போனேன்.

எம்முடன் வந்தவர்கள் தான் ஓடி சென்று வேறு ஆட்களை அழைத்து வந்தனர்.

நான் நினைவுக்கு வந்து வித்தியாவின் சடலம் இருந்த இடத்திற்கு சுமார் 20அடி தூரத்தில் இருந்தே சடலத்தை பார்த்தேன். கிட்ட செல்லவில்லை, மகன் மயக்கமுற்று வீழ்ந்தமையால் மகனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று விட்டார்கள்.

பின்னர் காலை 10 மணியளவில் ஊர்காவற்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை செய்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் கொண்டு சென்றனர்”. என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

சுரேஷ்கரனின் சாட்சியம்…

ஐந்தாவது சாட்சியும், சட்டமா அதிபரினால் நிபந்தனைகளுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கப்பட்ட அரச தரப்பு (கண்கண்ட) சாட்சியுமான உதயசூரியன் சுரேஷ்கரன் சாட்சியம் அளிக்கும் போது ,

கொலை செய்யப்பட்ட வித்தியாவை எனக்கு தெரியும். அவரது குடும்பத்தினரையும் எனக்கு நன்கு தெரியும்.

வித்தியா எவரையும் காதலித்தாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் பெரியம்பி என அழைக்கப்படும் துஷந்த் (6ஆவது எதிரியான சிவதேவன் துஷந்த்) என்பவர் வித்தியாவை காதலிப்பதாக கூறினார்.

அதனால் நானும் பெரியம்பியும் வித்தியா பாடசாலை செல்லும் நேரம் பாடசாலையால் வீடு திரும்பும் நேரங்களில் தினமும் வித்தியாவின் பின்னால் பெரியம்பியின் மோட்டார் சைக்கிளில் சென்று வருவோம்.

அவ்வேளைகளில் வித்தியாவுடன் பெரியம்பி கதைக்க முற்படுவர் ஆனால் வித்தியா கதைக்க மாட்டார்.

வித்தியா சில வேளைகளில் அவரின் அண்ணாவுடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலை சென்று வருவார். அண்ணா இல்லை என்றால் சைக்கிளில் சென்று வருவார்.

பெரியம்பியும் நானும் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வித்தியாவின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று வந்தோம்.

அவ்வேளைகளில் அவருடன் கதைக்க முற்பட்டால் அவர் கதைப்பதில்லை. ஒரு நாள் தன்னுடன் கதைக்க வேண்டாம் எனவும் கூறி இருந்தார்.

கொலை செய்யப்படுவதற்கு ஒன்று, ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஒருநாள் வித்தியா பெரியம்பிக்கு செருப்பால் எறிந்து பேசி இருந்தார்.

நாங்கள் புங்குடுதீவில் மாப்பிள்ளை என்பவர் வீட்டில் கள்ளு குடிப்போம், அங்கே ரவியிடம் வித்தியாவை தூக்கி தர சொல்லி பெரியம்பி கேட்டான்.

அப்போது அந்த இடத்தில் நானும், (5ஆம் எதிரி) பெரியம்பி, (2ஆம் எதிரி) ரவி, (6ஆம் எதிரி) சந்திரஹாசன் மற்றும் (3ஆம் எதிரி) தவக்குமார் ஆகியோர் இருந்தோம்.

வித்தியாவை தூக்கி தாறது என்றால் எனக்கு 20 – 23 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என ரவி பெரியம்பிக்கு கூறினான்.

அதற்கு பெரியம்பி தான் சம்பளம் எடுத்த உடனே பணத்தை தருகிறேன் என கூறினான்.

அதன்படி ரவிக்கு பெரியம்பி பணம் கொடுத்தான்” என சுரேஷ்கரன் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

அதனை தொடர்ந்து மேலும் சாட்சியம் அளிப்பதனால் தனது அல்லது தனது குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் , அதனால் தான் ரகசியமான முறையில் சாட்சியம் அளிக்க போவதாகவும் மன்றில் கூறினார்.

அதனை அடுத்து மன்றில் இருந்த பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் வெளியே செல்ல மன்று அறிவித்தது.

அதனை அடுத்து அவர் தனது மேலதிக சாட்சியங்களை மன்றில் பதிவு செய்தார்.

மாப்பிள்ளையின் சாட்சியம்.

வழக்கின் மூன்றாவது சாட்சியமான மாப்பிள்ளை என்று அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் அன்றைய தினம் (29ஆம் திகதி) மாலை 4 மணியளவில் தனது சாட்சியத்தை அளித்தார்.
அதில்..,

நான் சீவல் தொழில் செய்கிறவன். பெரியாம்பியும் சுரேஷ்கரன் ஆகிய இருவரும் வழமையாக என் வீட்டுக்கு வந்து கள்ளு வாங்கி குடிக்கிறவர்கள்.

ஒருநாள் தான் வித்தியாவை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்ய போவதாகவும் பெரியாம்பி என்னிடம் கூறினார்.

சம்பவ தினத்திற்கு முதல் நாள் 12ஆம் திகதி என்னை வித்தியா பாடசாலை செல்லும் வழிக்கு பெரியாம்பியும், சந்திரஹாசனும் அழைத்து சென்றனர்.

அன்றைய தினம் வித்தியா வேறு ஒரு மாணவியுடன் வந்ததால் ஒன்றும் கதைக்கவில்லை.

மறுநாள் 13ஆம் திகதி (சம்பவ தினத்தன்று) மீண்டும் வித்தியா பாடசாலை செல்லும் வழியில் ஆலடி சந்திக்கு அருகில் வித்தியாவுக்காக காத்திருந்தோம்.

வித்தியா வரும் வேளை என்னையும் சுரேஷ்கரனையும் அருகில் இருந்த பற்றைக்குள் ஒளிந்து இருக்குமாறு பெரியாம்பியும் சந்திரஹாசனும் கூறினார்கள். நாமும் பற்றைக்குள் மறைந்து இருந்தோம்.

அவ்வேளை அந்த இடத்திற்கு ரவியும், தவக்குமார் வந்திருந்தார்கள்.

அந்நேரம் வித்தியா பாடசாலை சீருடையுடன் காலில் சப்பாத்துடன் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அவருடைய சைக்கிள் முன் கூடைக்குள் குடை ஒன்றும் இருந்தது.

சைக்கிளில் வந்த வித்தியா அவர்கள் அருகில் வந்ததும் சந்திரஹாசனும், பெரியாம்பியும் மறித்தனர்.

பின்னர் சந்திரஹாசன் பெரியாம்பி, ரவி, மற்றும் தவக்குமார் ஆகிய நால்வரும் வித்தியாவை பிடித்து இழுத்து சென்றனர்.

அப்போது வித்தியா கத்தினர். உடனே பெரியாம்பி வாயை பொத்தினார். வித்தியாவின் மூக்கு கண்ணாடியையும் பெரியாம்பியே கழட்டி எடுத்தான்.

பின்னர் நால்வருமாக வித்தியாவை பற்றைகள் ஊடாக பாழடைந்த வீட்டுக்குள் இழுத்து சென்றனர்.

பின்னர் அதனை பெரியாம்பியும் சந்திரஹாசனும் மாறி மாறி வீடியோ எடுத்தனர். அவர்கள் பெரிய டச் மொடல் போனில தான் வீடியோ எடுத்தனர்.

அந்த வீடியோவை சுவிஸ்குமாருக்கு கொடுக்க வேண்டும். அவர் இதனை வெளிநாட்டுக்கு கொண்டு போக போகிறார் என பேசிக்கொண்டார்கள்.

பின்னர் வித்தியா மயங்கிய நிலையில் அவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய (பாழடைந்த வீடு) இடத்தில் இருந்து கைத்தாங்கலாக நால்வரும் தூக்கி வந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள அலரி மரம் ஒன்றில் வித்தியாவை கட்டினார்கள்.

அவரின் ஆடைகளை அவரின் உடலின் மீது போட்டார்கள். பின்னர் பாடசாலை சீருடையின் இடுப்பு பட்டியினால் கைகள் இரண்டையும் ஒன்றாக கழுத்துக்கு பின்னால் வைத்து கட்டினார்கள்.

பாடசாலை பையின் நாடாவால் ஒரு காலை இழுத்து மரத்துடன் கட்டினார்கள். சப்பாத்து நூல்களினாலும் கட்டினார்கள்.

இவ்வளவு சம்பவமும் ஒன்று, ஒன்றேகால் மணித்தியாலங்கள் நடைபெற்றது.

அதன் பின்னர் நான் 8.30 மணியளவில் சீவல் தொழிலுக்காக சென்று விட்டேன். என சாட்சியம் அளித்தார்.

முஹமட் இப்ரான் சாட்சியம். 30.06.2017.

ஆறாவது சாட்சியான முஹமட் இப்ரான் சாட்சியம் அளிக்கையில், வவுனியா சிறைச்சாலையில் சுவிஸ் குமார் என்னை சந்தித்து கேட்டார் “தொலைபேசியில் அழிக்கப்பட்ட தரவுகளை மீள எடுக்க முடியுமா? என, நான் ஆம் என்றேன்.

அப்போது திரும்ப கேட்டார் மென்பொருளினை பயன்படுத்தி அழிக்கப்பட்ட தரவுகளையும் எடுக்க முடியுமா? என, அதற்கு நாம் ஆம் என்னால் முடியும் என்றேன்.

சாதரணமாக தொலைபேசி பாவிக்கின்றவர்கள். அதில் உள்ள தரவுகளை அழிப்பது என்றால் சாதரணமாக தான் அழிப்பார்கள். மென்பொருள் ஊடாக அழிப்பது என்றால் அதில் எதோ பிரச்சனை இருப்பதாக புரிந்து கொண்டேன்.

மறுநாள் சுவிஸ் குமாரை நான் தனியாக சந்தித்த போது, அவர் என்னிடம் கேட்டார் IP நிஷாந்த சில்வாவின் பலவீனம் என்ன? என, அதற்கு நான் அது தெரியாது உங்களுக்கு அவரிடம் என்ன வேண்டும் என கேட்டேன்.

வித்தியா வழக்கில் நாங்கள் மூன்று பேர் சகோதர்கள் நாம் அரச சாட்சியாக மாற வேண்டும் அதற்கு IP நிஷாந்த சில்வாவுடன் கதைத்து ஏற்பாடு செய்து தருமாறு சுவிஸ் குமார் கேட்டார்.

அவ்வாறு செய்தால் IP நிஷாந்த சில்வாவுக்கு என்ன கொடுப்பீர்கள்? என கேட்டேன். 2 கோடி ரூபாய் பணம் கொடுக்க முடியும் என தெரிவித்தார்.

பின்னர் ஒரு நாள் “நான் சுவிஸ் நாட்டில் இருந்தேன். அங்குள்ள மாபியா குழு ஒன்று தெற்காசிய நாட்டு இளம் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்வதனை வீடியோ எடுத்து தருமாறு என்னுடன் ஒப்பந்தம் செய்திருந்தனர்.

அதனை தொடர்ந்து நான் இலங்கையில் உள்ள ஒருவருடன் தொடர்பு கொண்டு அது பற்றி கூறினேன். 20 வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளை ஒருவர் தேவை என சொன்னேன்.

அவர் ஒரு பெண்ணின் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைத்தார். அந்த பெண் ஓகே என்றேன். என சுவிஸ் குமார் என்னிடம் கூறினார்.

நான் யாருடன் இலங்கையில் உள்ள நபருடன் தொடர்பு கொண்டீர்? என கேட்டதற்கு இங்கு எதிரி கூண்டில் ஆறாவது நபராக உள்ளவரை (சிவதேவன் துஷாந்தன் ) சுவிஸ் குமார் எனக்கு காட்டி இருந்தார்.

இதில் ஆறாவதாக உள்ள நபருடன் சேர்ந்து இலங்கையில் உள்ள ஏனையவர்கள் ஏற்பாடு செய்தனர்.

அதற்காக அந்த பெண்ணின் தாயாருடன் பெரிதொரு வழக்கில் தொடர்புடைய ஏனைய மூன்று பேரையும் தம்முடன் கூட்டு சேர்ந்தனர். என சுவிஸ் குமார் என்னிடம் கூறினார்.

சுவிஸ் குமாருக்கு வித்தியாவை வன்புணர்வு செய்வதை எடுத்த வீடியோவை தொலை பேசி ஊடாக அனுப்பியுள்ளார்கள். அவர் அதனை கூகிள் டிரைவ் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளார்.

அத்துடன் வித்தியாவை வன்புணர்வு செய்த நேரத்தில் நான் அங்கு இருந்து இருந்தால் நான் தான் முதலில் வன்புணர்ந்து இருப்பேன். அவரின் உடலை பார்க்கும் போது ஆசையாக இருக்கின்றது எனவும் என்னிடம் சுவிஸ் குமார் தெரிவித்து இருந்தார். என சாட்சியம் அளித்தார்.

தனுராம் சாட்சியம்.. 03.07.2017.

09ஆவது சாட்சியமான, மணிவண்ணன் தனுராம் சாட்சியம் அளிக்கையில், புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கிறேன். நான் தினமும் வீட்டில் இருந்து சின்ன ஆலடி பகுதி (மாணவி படுகொலை செய்யபப்ட்ட இடத்திற்கு அருகில் உள்ள பகுதி ) ஊடாக தான் பாடசாலை செல்வேன்.

சம்பவ தினம் நானும் என்னுடன் ஒரே வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவனான தனுஜனும் துவிச்சக்கர வண்டியில் சென்றோம். அது தனுஜனின் சைக்கிள். அவன் தான் ஓடினான். நான் பின்னால் இருந்து சென்றேன்.

செல்லும் போது சின்ன ஆலடிக்கு அருகில் தனுஜனின் செருப்பு கழன்று வீதியில் வீழ்ந்து விட்டது. அவன் சிறிது தூரம் சென்று சைக்கிளை நிறுத்தினான். நான் பின்னால் இருந்து இறங்கி சென்று செருப்பை எடுத்து வர சென்றேன்.

அந்த நேரம் வீதி ஓரமாக அலரி மரங்கள் உள்ள பகுதியில் ரவிமாமா (இரண்டாம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார்) மஞ்சள் கலர் ரீ.சேர்ட்டுடன் நின்றார்.

அப்போது “ம் .. ம் .. ” என சத்தம் கேட்டது நான் முதலில் பேய் என்று பயந்தேன். ஏனெனில் அந்த வீதியில் சனநடமாட்டம் இருப்பதில்லை. வழமையாக பாடசாலை செல்லும் போது, சின்ன ஆலடி பகுதிக்கு கிட்ட வந்ததும் வேகமாகவே செல்வோம்.

அன்றும் அந்த சத்தத்தை பேய் என்று பயந்தாலும், அது மாடு கத்தும் சத்தம் போன்று இருந்தது. மனபயம் இருந்ததினால் செருப்பை எடுத்து தனுஜனிடம் கொடுத்ததும் அவன் போட்டுக்கொண்டு நாங்கள் இருவரும் அந்த இடத்தில் இருந்து பாடசாலைக்கு சென்று விட்டோம்.என சாட்சியம் அளித்தான்.

தனுஜன் சாட்சியம்..

அதனை தொடர்ந்து பத்தாவது சாட்சியான இலங்கேஸ்வரன் தனுஜன் சாட்சியம் அளிக்கையில்,

நானும் தனுராமும் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தோம். எனது சைக்கிளில் நான் தான் அவனை பின்னுக்கு ஏற்றிக்கொண்டு சென்றேன்.

சின்ன ஆலடி எனும் பகுதியில் , சைக்கிள் பெடல் கட்டை இல்லாததால் அது சறுக்கி எனது செருப்பு கழன்று விழுந்து விட்டது.

நான் சைக்கிளை நிறுத்தி, சைக்கிளை பிடித்துக்கொண்டு இருந்த போது , தனுராம் தான் சென்று செருப்பை எடுத்து வந்தான்.

பின்னர் நாங்கள் செருப்பை போட்டுக்கொண்டு பாடசாலைக்கு சென்று விட்டோம். என சாட்சியம் அளித்தான்.

பாலசந்திரன் சாட்சியம்.

அதனை தொடர்ந்து 04 ஆவது சாட்சியான, பாலசிங்கம் பாலசந்திரன் சாட்சியம் அளிக்கையில் ,

நான் 13ஆம் திகதி காலை 8.47 மணியளவில் கடைக்கு சென்ற போது வித்தியா கொலை நடந்த இடத்திற்கு அருகில், பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய இருவரும் நின்று கொண்டு இருந்தனர்.

அதில் ரவி என்று அழைக்கபப்டும் பூபாலசிங்கம் ஜெயக்குமார் எனது தங்கையின் கணவன். மற்றையவரான பூபாலசிங்கம் தவக்குமார் , ஜெயக்குமாரின் சகோதரன்.

மறுநாள் 14 ஆம் திகதி தான் வித்தியா இறந்த செய்தி தெரியும். வித்தியா எனக்கு கிட்டத்து சொந்தமும் கூட, வித்தியாவின் உடல் மீட்கப்பட்ட இடத்திற்கு சுமார் 15 அடி தூரத்தில் தான் முதல்நாள் ஜெயக்குமார் மற்றும் தவக்குமார் ஆகியோரை கண்டேன். என சாட்சியம் அளித்தார்.

இலங்கேஸ்வரன் சாட்சியம்.

அதனை தொடர்ந்து வழக்கின் 07ஆவது சாட்சியமான ஞானேஸ்வரன் இலங்கேஸ்வரன் சாட்சியம் அளிக்கையில்,

நான் வித்தியா வீட்டுக்கு அருகில் தான் வசிக்கிறேன். 14ஆம் திகதி காலை வித்தியாவின் அம்மாவும், சகோதரனும், வித்தியாவை நேற்றில் இருந்து காணவில்லை. என தெரிவித்து தேடி பார்க்க சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன்.

வித்தியா பாடசாலை செல்லும் வழியில் உள்ள கிணறுகள், கேணிகளில் தாய் தேடிக்கொண்டு வந்தார். நான் வீதியோரமாக பற்றைகளுக்குள் தேடி சென்றேன்.

வித்தியாவின் அண்ணா ஆட்கள் அற்ற வீட்டு பகுதிகளை தேடி சென்றோம். அப்போது திடீரென்று வித்தியாவின் அண்ணா “ஐயோ வித்தியா வித்தியா” என கத்தினான்.

அந்த இடத்திற்கு நான் சென்றேன். அப்போது வித்தியாவின் அம்மாவும் அங்கு வந்து விட்டார்.

அவர் உடனே என்னிடம், வித்தியாவின் சடலம் கிடக்கிறது தொடர்பில் ஊருக்குள் சென்று செல்லுமாறு கூறினார். நான் சென்று ஊரில் உள்ளவர்களை அழைத்து வந்தேன்.

வித்தியாவை சம்பவ தினத்திற்கு முதல் நாள் 12ஆம் திகதி (மாணவி கொலை செய்யபப்ட்டது 13ஆம் திகதி சடலம் மீட்கப்பட்டது 14 ஆம் திகதி) ஆலடி சந்தியில் கண்டேன்.

அன்றைய தினம் வீட்டு தேவைக்கு பொருட்கள் வாங்க என ஆலடி சந்தியில் உள்ள கடைக்கு சென்று இருந்தேன்.

அப்போது வித்தியா பஞ்சாபியுடன் பஸ்ஸில் இருந்து இறங்கி வந்து கடைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றார்.

அந்த நேரம் கடைக்கு எதிரே வீதியின் மறுபுறத்தில், டொல்பீன் ரக வாகனத்தில், முன் ஆசனத்தில் (சாரதி ஆசனத்திற்கு அருகில்) 09 ஆம் எதிரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் கறுத்த கண்ணாடி அணிந்தவாறு இருந்தார்.

மற்றைய ஆசனங்களில் 04ஆம் எதிரியான மகாலிங்கம் சசிதரன் , 05ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திரஹாசன் மற்றும் 08ஆம் எதிரியான கண்ணன் என அழைக்கபப்டும் ஜெயதரன் கோகுலன் ஆகியோருடன் மேலும் இருவரும் இருந்தனர்.

அவர்களை யார் என்று தெரியாது. மொத்தமாக வாகனத்தில் ஆறு பேர் இருந்தனர்.

அவர்கள் அனைவரும் பஸ்சினால் வந்து இறங்கி சைக்கிள் எடுத்துகொண்டு சென்று வித்தியாவையே பார்த்துக்கொண்டு இருந்தனர். என சாட்சியம் அளித்தார்.

சதானந்தரூபிணி சாட்சியம்..

15 ஆவது சாட்சியான செல்வராசா சதானந்தரூபிணி சாட்சியம் அளிக்கையில் ,

நான் சம்பவ தினமான 13ஆம் திகதி காலை 7.30 மணிக்கும் 8 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் எனது சைக்கிளில் வேலணை பிரதேச செயலகத்திற்கு சென்று கொண்டு இருந்தேன்.

அப்போது நான் சென்று கொண்டிருந்த வீதியில் ஒரு இடத்தில் உள்ள ஒற்றையடி பாதை ஊடக, சந்திரஹாசன் சரம் ஒன்றினை மடித்துக்கட்டியவாறு வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவர் போய் கொண்டிருந்த தூரம் எனக்கும் அவருக்கும் இடையில் ” தம்பி ” என கூப்பிட்டால் கேட்கும் தூரம் தான் அப்போது இருந்தது.

அவர் சென்ற ஒற்றையடி பாதை ஊடாக சுமார் 200 மீற்றர் தூரம் சென்றால், வித்தியாவின் சடலம் கிடந்த இடத்திற்கு செல்ல முடியும். அதற்காக அவர் அங்கு தான் சென்றார் என நான் உறுதியாக சொல்ல மாட்டேன்.

பின்னர் மறுநாள் வித்தியாவின் சடலம் கிடக்கின்றது என்ற செய்தி அறிந்து நானும் அயலவர்கள் சுமார் 10 பேரும் சடலம் கிடந்த இடத்திற்கு சென்றோம்.

அப்போது அந்த இடத்திற்கு சந்திரஹாசனும் வந்திருந்தார். அவர் அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்கள் நின்று விட்டு சென்று விட்டார் என சாட்சியம் அளித்தார்.

குயிண்டஸ் குணால் பெரேரா சாட்சியம். 04.07.2017.

வழக்கின் 19 ஆவது சாட்சியமாக சம்பவம் நடைபெற்ற கால பகுதியில் ஊர்காவற்துறை போலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த குயிண்டஸ் குணால் பெரேரா சாட்சியம் அளிக்கையில் ,

மாணவியின் தாயின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் 14 ஆம் திகதி மாலை புங்குடுதீவை சேர்ந்த பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய மூவரையும் கைது செய்தேன்.

தான் போது அவர்களது வீட்டில் மேற்கொண்ட தேடுதல்களின் போது ஜெயக்குமார் என்பவரின் வீட்டில் இருந்து மஞ்சள் கறுப்பு நிற ரீ. சேர்ட் ஒன்றினை கண்டெடுத்தோம்.

அதில் தோள் பட்டை பகுதியில் இரத்த கறையை ஒத்த கறையும் , சேறும் காணப்பட்டது. அதனால் அதனை சந்தேகத்தில் சான்று பொருளாக மீட்டோம்.

அதேபோன்று தவக்குமார் என்பவரை கைது செய்யும் போது அவரது வீட்டில் இருந்து சேர்ட் ஒன்றினையும் மீட்டோம் அதிலும் கறைகள் காணப்பட்டன.

கைது செய்யபப்ட்ட மூன்று சந்தேகநபர்களையும் மறுநாள் 15 ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினோம்.

இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட மேலும் ஐந்து சந்தேக நபர்கள் உள்ளனர் எனும் தகவல் எனக்கு கிடைத்தது.

அதன் அடிப்படையில் 17ஆம் திகதி மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்த், பழனி ரூபசிங்கம் குகநாதன் மற்றும் ஜெயதரன் கோகிலன் ஆகிய ஐவரையும் கைது செய்தேன்.

கைது செய்யப்பட்டவர்களை குறிகட்டுவான் போலிஸ் காவலரணில் வைத்து அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டிருந்த வேளை ஊரவர்கள் ஒன்று கூடி தடிகள் பொல்லுகளுடன் காவலரணை சுற்றி வளைத்து சந்தேக நபர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறும் அவர்களை தாங்கள் கொல்ல வேண்டும் எனவும் கோரினார்கள்.

அதனால் நாம் காரைநகர் கடற்படை கட்டளையிடும் அதிகாரியுடன் தொடர்பு கொண்டு அதிவிரைவு படகு (வேட்டர் ஜெட்) ஒன்றில் சந்தேக நபர்களை ஏற்றி கொண்டு ஊர்காவற்துறை போலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முயன்ற வேளை எனக்கு தகவல் கிடைத்தது,

ஊர்காவற்துறை போலிஸ் நிலையத்தை முற்றுகையிட மக்கள் சென்று கொண்டிருப்பதாக அதனால் நாம் உடனடியாக சந்தேக நபர்களை காரைநகர் கடற்படை தளத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து வட்டுக்கோட்டை பொலிசாரின் உதவியுடன் யாழ்ப்பாண போலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு வைத்து சந்தேக நபர்களின் வாக்கு மூலத்தை பதிவு செய்தேன். என சாட்சியம் அளித்தார்.

V.T. தமிழ்மாறன் சாட்சியம்.

25ஆவது சாட்சியமான சட்டத்தரணியும் , சிரேஸ்ட சட்டவிரிவுரையாளருமான V.T. தமிழ்மாறன் சாட்சியம் அளிக்கையில்,

17ஆம் திகதி இரவு நான் யாழ்ப்பாணம் வந்து இருந்தேன். 18ஆம் திகதி நான் அப்போதைய வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை சந்தித்து, புங்குடுதீவில் அப்போது நிலவிய நிலைமைகள் தொடர்பிலும், புங்குடுதீவில் இனிவரும் காலத்தில் இவ்வாறான குற்ற செயல்களை தடுக்க அப்பகுதியில் பொலிஸ் காவலரண் அல்லது உப பொலிஸ் நிலையம் ஒன்றினை அமைக்க வேண்டும் எனவும் பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் நல்லுறவை வளர்க்க வேண்டும் எனவும் கூறினேன்.

அத்துடன், இந்த வழக்கு தொடர்பில் ஒரு நபர் இருப்பதாகவும், அவரே இந்த குற்றசெயலுக்கு பிரதான சூத்திரதாரி என சிலர் எனக்கு தெரிவித்ததாக கூறி அவரை ஏன் கைது செய்யவில்லை என வினாவினேன்.

அதற்கு அவர் கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர் விபரங்களை எனக்கு கூறினார். அதில் எனக்கு வழங்கப்பட்ட தகவலில் பிரதான சூத்திர தாரி என குறிப்பிடப்பட்ட நபரின் பெயர் இல்லை. அதனை அவரிடம் கூறினேன்.

பின்னர் புங்குடுதீவில் மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் சந்திப்பு ஒன்றினை நடாத்துவது தொடர்பில் புங்குடுதீவு மக்களுடன் பேசுவதற்காக புங்குடுதீவு சென்றேன்.

அப்போது என் கூட யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் என்பவரையும் இன்னுமொரு பொலிஸ் உத்தியோகச்தரையும் சிவில் உடையில் அழைத்து செல்லுமாறு வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் கூறியதை அடுத்து அவர்களையும் என்னுடன் அழைத்து சென்றேன்.

என்னுடன் வந்த ஸ்ரீகஜன் என்பவர் வெளியில் நின்று யாருடனோ தொலைபேசியில் கதைத்துக்கொண்டு இருந்தார்.

நான் அருகில் சென்றதும் இந்த வழக்குடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி சரணடைய தயாராக இருக்கின்றார்.

அவரின் மனைவி, கைக்குழந்தை, மற்றும் அவரின் தயார் ஆகியோருக்கு பாதுக்காப்பு வழங்கினால் அவர்கள் சரணடைய தயாராக இருக்கின்றார். என என்னிடம் கூறினார்.

நான் உடனே பொலிஸ் வாகனத்தை அழைத்து போலீசாரிடம் ஒப்படைப்போம். என கூறினேன்.

அதற்கு அவர் பொலிஸ் வரும் வரையில் அவர்களை நாங்கள் பாதுகாப்பில் வைத்திருப்பது புத்திசாலித்தனம் இல்லை. அதனால் அவர்களை எமது வாகனத்தில் ஏற்றி செல்வோம் என கூறினார்.

நானும் அதற்கு சம்மதித்து பொலீசாருக்கு உதவும் நோக்குடன், சரணடைந்தவர்களை எனது உத்தியோகபூர்வ வாகனத்தில் ஏற்றி சென்று யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இறக்கி விட்டேன்.

எனது வாகனத்தால் இறங்கிய இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் சரணடைந்த சந்தேகநபரையும் அவரின் மனைவி, குழந்தை மற்றும் அவரின் தாயாரையும் பொலிஸ் நிலையம் உள்ளே அழைத்து சென்று உள்ளே இருந்த வாங்கு ஒன்றில் அமர வைத்தனர். அது வரையில் நான் அந்த இடத்திலே நின்றேன். பின்னர் நான் சென்று விட்டேன்.

மறுநாள் 19ஆம் திகதி காலை புங்குடுதீவில் மக்களுக்கும் பொலீசாருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. மதியம் 12 மணி வரையில் சுமூகமான முறையில் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டு இருந்தது.

அந்த நேரம் அங்கு வந்த சிலர், பொலீசாரிடம் சரணடைந்த சுவிஸ் குமார் என்பவர் பொலீசில் இருந்து தப்பி சென்று, கொழும்பில் தங்கி உள்ளதகாவும், கூறினார்கள் அதனை அடுத்து அங்குள்ள மக்களை சிலர் எனக்கு எதிராக தூண்டி விட்டார்கள்.

அந்த மக்கள் சொல்லும் வரையில் எனக்கு சுவிஸ் குமார் கொழும்பு போன விடயம் தெரியாது.

அதேவேளை சுவிஸ் குமார் என்பவர் சரணடையும் வரையில் எனக்கு சுவிஸ் குமார் என்பவர் யார் என்றே தெரியாது. அன்றைய தினமே நான் அவரை கண்டேன்.

எனக்கு எதிராக மக்களை தூண்டி விட்டதனால் எம்மை மக்களை சுற்றி வளைத்து சுவிஸ் குமாரை கைது செய்தால் தான் விடுவோம் என கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதனால் பொலிசார் கடற்படையின் உதவியை நாடி எம்மை கடற்படையினர் பொது மக்கள் மத்தியில் இருந்து மீட்டு கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று எம்மை பின்னர் யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தனர். என சாட்சியம் அளித்தார்.

தடயவியல் பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் சாட்சியம்.. 05.07.2017.

22 ஆவது சாட்சியமான யாழ்ப்பாண பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் தடயவியல் பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் ரொஷான் சந்தனகுமார சாட்சியம் அளிக்கையில் ,

கடந்த 2015. 05.14 ஆம் திகதி ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

புங்குடுதீவு ஆலடி சந்திக்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் கிடப்பதாகவும் , அது தொடர்பில் தடயவியல் பரிசோதனைகளை மேற்கொள்ள வருமாறு எமது பிரிவுக்கு அந்த தொலைபேசி அழைப்பின் மூலம் தெரியப்படுத்தப்பட்டு நாம் அந்த இடத்திற்கு சென்று இருந்தோம்.

சடலம் இருந்த பகுதியானது சன நடமாட்டம் இல்லாத பகுதியாகும். ஒரு பாழடைந்த வீட்டின் பின் பகுதியில் தான் சடலம் கிடந்தது. சடலம் கிடந்த இடத்திற்கு நாம் நிமிர்ந்த நிலையில் செல்ல முடியாத அளவுக்கு அலரி மரங்களும் பூவரசு மரங்களும் காணப்பட்டன.

என்னுடன் வந்த எனது சக உத்தியோகஸ்தர்களுடன் சூழலை அவதானித்தேன். என்னுடன் வந்த சக உத்தியோகஸ்தர் புகைப்படங்களை எடுத்தார்.

பின்னர் சட்ட வைத்திய அதிகாரி அந்த இடத்திற்கு வந்த பின்னர் சடலத்தை பார்வையிட்டோம்.

சடலத்தின் மூக்கினால் இரத்த வடிந்து உறைந்து காணப்பட்டது. இடது பக்க காது பக்கமாகவும் இரத்தம் வடிந்து உறைந்து காணப்பட்டது.இடது பக்க கண் பகுதியிலும் ஏதோ ஒரு திரவம் காணப்பட்டது.

சடலத்தில் , கண் , மூக்கு வாய் , காது, போன்ற இடங்களில் எறும்புகள் மொய்த்து கொண்டு இருந்தன. அருகில் பாடசாலை சீருடை கிழிந்த நிலையில் காணப்பட்டது.

அதன் பின்னர் சடலம் கிடந்த இடத்தில் நிலத்தினை அவதானித்து அந்த இடத்தை பரிசோதித்தோம். சந்தேகத்திற்கு இடமான எந்த தடய பொருட்களையும் மீட்கவில்லை.

பின்னர் சட்ட வைத்திய அதிகாரி கொண்டு வந்த வெள்ளை நிற பையில் சடலத்தை பொதி செய்து பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்தோம். என சாட்சியம் அளித்தார்.

அன்றைய தினம் (05.07) ஜின்டேக் நிறுவனத்தால் மன்றுக்கு பாரப்படுத்தப்பட்ட மரபணு பரிசோதனை அறிக்கை உட்பட்ட அறிக்கைகள் உள்ளடங்கிய பொதியினை திறந்த மன்றில் திறக்கப்பட்டது.

சட்டவைத்திய அதிகாரி உருத்திர பசுபதி மயூரதன் சாட்சியம்.

வழக்கின் 23 ஆவது சாட்சியமான சட்டவைத்திய அதிகாரி உருத்திர பசுபதி மயூரதன் சாட்சியமளிக்கையில் ,

சடலத்தை அவதானித்த போது , இரண்டு கைகளின் பெருவிரல்களும் ஒன்றாக சேர்த்து கட்டப்பட்டு தலையில் பின் பகுதியில் கட்டப்பட்டு இருந்தது.

கால்கள் இரண்டும் 180 பாகைக்கும் அதிகமாக விரித்து கட்டப்பட்டு இருந்தது. கண்கள் வீங்கி இருந்தன. காதின் ஒரு பகுதி மூக்கு போன்ற இடத்தில் இருந்து இரத்த கசிவுகள் காணப்பட்டன.

உடலில் இரண்டு முடிகள் காணப்பட்டன அவற்றை தடயவியல் பிரிவினர் சேகரித்துக்கொண்டார்கள். பெண் உறுப்பில் இருந்து வடிந்த ஓட்டும் தன்மை உள்ள திரவத்தை சேகரித்து கொண்டேன்.

பின்னர் சடலத்தின் கட்டுக்களை தடயவியல் பிரிவினரின் உதவியுடன் அவிழ்த்தேன் அப்போது சடலத்தின் கழுத்து பகுதியில் பாடசாலை கழுத்துப்பட்டியால் கழுத்து இறுக்கி கட்டபட்டு நிலத்தில் இருந்து சுமார் இரண்டு அடி உயரத்தில் உள்ள மரத்தில் கட்டப்பட்டு இருந்தது.

அக்கட்டுகளை அவிழ்த்து சடலத்தை திருப்பி பார்த்த போது பிட்ட பகுதியில் காயங்கள் இருந்ததை அவதானித்தேன்.

அதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்து வந்தோம். அன்றைய தினம் (14 ஆம் திகதி ) மாலை 5 மணியளவில் பிரேத பரிசோதனையை மேற்கொண்டேன்.

சடலத்தில் 8 காயங்களை அவதானித்தேன். தலையின் வலது பகுதியில் தோள் பக்கத்திற்கு மேல் பகுதியில் 16 தர 8 CM அளவில் உள் காயம் காணப்பட்டது. மண்டையோட்டில் உள்ள எழும்புகள் முறியவில்லை.

இரத்த கசிவுகள் ஏற்பட்டு இருந்தது. அந்த காயம் மொட்டையான விசை பாவிக்க்கப்படும் போதே தட்டையான கடினமான இடத்தில் தலை தாக்க படும் போதோ அவ்வாறன காயம் ஏற்படலாம். இது விழுந்த காயமாக இருப்பதற்கு சந்தர்ப்பம் குறைவு.

விழுந்து இருந்தால் மண்டையோடு உடைந்து இருக்கும். இது தாக்கப்பட்ட காயமாகவே இருக்கும். என தெரிவித்தார்.

அதன் போது, தட்டையான கடினமான இடம் என சொன்ன இடத்திற்கு உதாரணம் சொல்ல முடியுமா? என மன்று வினாவியது, அதற்கு ஆம். தார் வீதிகள் சீமெந்து பூசபப்ட்ட சமாந்தரமான நிலம் ஆகிய இடங்கள் என பதிலளித்தார்.

இரண்டாவது காயம் தலையின் உச்சி பகுதியில் 12 தர 10 CM அளவில் 7 இடங்களில் இந்த காயங்கள் காணப்பட்டன. இவை பெரும்பாலும் தலைமுடியினை அதிக விசையினை கொண்டு இழுக்கும் போது ஏற்பட்டு இருக்க கூடிய காயங்களாகும்.

மூனறாவது காயம் வலது பக்க கன்னத்தில் ஏற்பட்ட கண்டல் காயம். இது தக்கப்பட்டதாலோ அல்லது அதிக விசை கொண்டு அழுத்தியதாலோ ஏற்பட்டு இருக்கலாம்.

நான்காவது மேல் உதட்டின் உட்புறம் ஏற்பட்ட கண்டல் காயம். இது தாக்கப்பட்டதாலோ அதிக அழுத்தம் கொடுத்தமையாலோ ஏற்பட்ட காயமாக இருக்கலாம்.

ஐந்தாவது காயம் கழுத்து பட்டியினால் கழுத்தினை இறுக்கியமையால் கழுத்து பகுதியில் 35 தர 1 CM அளவுக்கு கழுத்தை சுற்றி கண்டல் காயம் ஏற்பட்டு உள்ளது.

ஆறாவது காயம் கண்டல் காயம். இது இடுப்பு பகுதியின் பின்புறமாக வலது பக்க இடுப்பு பகுதியில் 18 தர 2 அளவில் காணப்படுகின்றது. இது மென்மையாக தாக்கும் போது ஏற்படும் காயமாகும்.

ஏழாவது உராய்வு காயம் இது வலது பிட்டத்தில் 17 தர 7, இடது பிட்டத்தில் 7 தர 5 எனும் அளவில் காணப்பட்டது.

எட்டாவது காயம் வலது காலில் கணுக்காலுக்கு சற்று மேல் முள் குத்திய காயம். அந்த காயத்தினுள் முள் ஒன்று முறிந்த நிலையில் கிடந்தது.

கண் மூடி இருந்தது. மூடிய கண்ணை திறந்து பார்த்த வேளை கண்ணினுள் இரத்த கசிவு காணப்பட்டது. அவை பெரும்பாலும் மூச்சு திணறலால் ஏற்பட்ட மரணத்தின் போது அவ்வாறு கண்ணில் இரத்த கசிவு ஏற்பட சந்தர்ப்பம் உண்டு.

இரைப்பையில் மஞ்சள் நிற திரவம் இருந்தது. அது 100மில்லி லீட்டர் அளவில் காணப்பட்டது. அதை வைத்து பார்க்கும் போது மரணமானது தேநீர் குடித்து 2 மணி நேரத்திற்குள் சம்பவித்துள்ளது எனும் முடிவுக்கு வரலாம்.

சடலம் கிடந்த இடத்தில் பாலியல் வன்புணர்வு ஏற்பட்டவில்லை என அனுமானிக்க முடியும். ஏனெனில் நான் சடலத்தினை பார்வையிட்ட வேளை அதன் போது நிலத்தில் இருந்த சறுகுகள், அந்த இடம் என்பன சாதரணமாகவே இருந்தது.

அந்த பகுதி சாதாரணமாக இருக்காது. அதனால் சடலம் கிடந்த இடத்தில் வன்புணர்வு நடைபெற்று இருக்க சாத்தியம் குறைவு. அதேபோன்று சடலம் கிடந்த இடத்திலும் மரணம் ஏற்படுத்தபட்டு இருக்கவில்லை என சாட்சியம் அளித்தார்.

—(Thanks… மயூரப்பிரியன்)–

வித்தியா படுகொலை வழக்கின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

மாணவியைக் கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, கொலை செய்தமை தொடர்பில் 7 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பிரதான எதிரியான சுவிஸ்குமார் மற்றும் 02, 03, 04, 05, 06, 08 ஆம் இலக்க பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 7 குற்றவாளிகளுக்கும் தலா 30 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 02, 03, 05, 06, 08 ஆம் இலக்க குற்றவாளிகள் தலா 40,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில், மேலதிகமாக நான்கு மாத சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 04, 09ஆம் இலக்க குற்றவாளிகள் 70,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், வித்தியாவின் குடும்பத்தினருக்கு, குற்றவாளிகள் தலா ஒரு மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.

இதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் இரண்டு வருட சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வழக்கின் முதலாம் மற்றும் ஏழாம் இலக்க சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமை காரணமாக அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழு தீர்ப்பாயத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரச தரப்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குமார் இரத்தினம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிசாந்த் நாகரட்ணம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இன்று காலை 8.20 தொடக்கம் 8.28 வரையான நேரத்திற்குள் நீதிபதிகள் மேல் நீதிமன்ற வளாகத்தை சென்றடைந்தனர்.

நீதிபதி மா.இளஞ்செழியன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.

நீதிபதி மா.இளஞ்செழியனின் வீடு மற்றும் அதனை அண்மித்த பகுதியிலும் நேற்றிரவு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

காலை 8.31-க்கு எதிரிகள் 9 பேரும் விசேட பாதுகாப்பிற்கு மத்தியில் சிறைச்சாலைகள் அதிகாரிகளால் யாழ். மேல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குமார் இரத்தினம் தனது குழுவினருடன் காலை 9.50 அளவில் மன்றுக்கு சென்றுள்ளார்.

இதனை அடுத்து காலை 10.05 க்கு தீர்பாயம் கூடியது.

தீர்ப்பாயத்தின் தலைவரான வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், எதிரிகளுக்கு எதிரான 41 குற்றச்சாட்டுக்களையும் வாசித்து அவை தொடர்பில் தமது விளகத்தையும் வழங்கியுள்ளார்.

2015 மே மாதம் 13 ஆம் திகதி மாணவி வித்தியா காலை 6 மணிக்கு பாடசாலைக்கு சென்ற போது கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள் குறித்து நீதிபதி விளக்கமளித்துள்ளார்.

வழக்கு தொடர்பில் 53 சாட்சியங்கள் நெறிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த சாட்சியங்கள் மற்றும் தீர்ப்பு தொடர்பில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனும் இணங்குவதாக நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

விருப்பத்திற்கு மாறாக பாலியல் வல்லுறவு, கூட்டு வன்புணர்வு , கொலை, கூட்டு எண்ணம் ஆகிய குற்றச்சாட்டுக்கள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

இந்த கொலைச் சம்பவத்தின் கதாநாயகனாக சுவிஸ் குமார் இருந்துள்ளதாக நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவிஸ் குமாரை கட்டிவைத்து மக்கள் தாக்குதல் நடத்திய போது, இரவு 11 மணியளவில் அங்கு சென்ற இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ”நீங்கள் சசியின் சகோதரனா” என சுவிஸ் குமாரிடம் வினவியதும், பின்னர் அவரை விடுவிக்குமாறு கூறியதும் நல்ல விடயம் என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நகைப்பாகக் கூறியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வருகை தந்து தன்னைக் காப்பாற்றியமை தொடர்பில் சுவிஸ் குமார் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளமையையும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்துறை விரிவுரையாளர் தமிழ் மாறனுடன் சுவிஸ் குமார் சென்று பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீகஜன் முன்னிலையில் ஆஜராகியதாகவும் பின்னர் பொலிஸாரின் துர்நடத்தையால் அவர் விடுவிக்கப்பட்டமையும் சாட்சியங்களூடாகத் தெரியவந்துள்ளதாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமக்கு எதிரான மென்பொருள் பொறியியலாளரின் சாட்சியத்தை சுவிஸ் குமார் மறுதலிக்கவில்லை என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சுவிஸ் குமாரின் மனைவியின் சாட்சியங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், முதலாம் மற்றும் ஏழாம் இலக்க சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் என பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மன்றில் கோரிக்கை விடுத்தமையையும் நீதிபதி நினைவுபடுத்தியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர்கள் செய்திகளை வௌிக்கொணர்ந்த போது, 10 மாதம் இருண்டு கிடந்த வழக்கை வௌிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் விசாரணை அதிகாரியான நிசாந்த சில்வா எனவும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி குயிண்டஸ் பெரேரா உள்ளிட்ட சில பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளே வழக்கின் இழுத்தடிப்பிற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பிரதிவாதிகளுக்கு கருத்து தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதன்போது, ஒவ்வொரு பிரதிவாதிகளும் தனித்தனியாக தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பிரதிவாதிகளுக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு தண்டனைகள் அறிவிக்கப்பட்டன.

**** தொடர்புபட்ட செய்திகளை பார்வையிட, கீழே உள்ள செய்திகளை “லிங்குகளை” அமுக்கி பார்வையிடலாம்… ****

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு; எதிரிகளுக்கு எதிராக 41 குற்றச்சாட்டு.. 28, 29, 30, 3, 4, 5 ஆம் திகதிகளில் தொடர் விசாரணை.. (முழுமையான விபரம், மற்றும் “அதிரடி”யின் படங்கள் & வீடியோக்கள்)

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு; எதிரிகளுக்கு எதிராக 41 குற்றச்சாட்டு.. 28, 29, 30, 3, 4, 5 ஆம் திகதிகளில் தொடர் விசாரணை.. (முழுமையான விபரம், மற்றும் “அதிரடி”யின் படங்கள் & வீடியோக்கள்)

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை; “உண்மையான குற்றவாளிகள் யார்?”.. -அரச தரப்பு சட்டத்தரணியின் முழுமையான தொகுப்புரை…

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை; “உண்மையான குற்றவாளிகள் யார்?”.. -அரச தரப்பு சட்டத்தரணியின் முழுமையான தொகுப்புரை…

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: “உண்மைக் குற்றவாளிகள் தப்பி விட்டனர்?”.. சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் தெரிவித்தது என்ன?? (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: “உண்மைக் குற்றவாளிகள் தப்பி விட்டனர்?”.. சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் தெரிவித்தது என்ன?? (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவு மாணவி வித்தியாவை, படுகொலை செய்தது யார்?.. சந்தேகநபர்களின் பரபரப்பு வாக்குமூலம்.. (“அதிரடி”யின் படங்கள் & விடியோக்கள்)

புங்குடுதீவு மாணவி வித்தியாவை, படுகொலை செய்தது யார்?… சந்தேகநபர்களின் பரபரப்பு வாக்குமூலம்.. (“அதிரடி”யின் படங்கள் & விடியோக்கள்)

புங்குடுதீவு மாணவி கொலை: சுவிஸ் நாட்டில் மாபியா கும்பல் உள்ளதா..? சுவிஸ் குமார் மன்றில் கேள்வி.. சந்தேகநபர்களின் பரபரப்பு வாக்குமூலம்-2

புங்குடுதீவு மாணவி கொலை: சுவிஸ் நாட்டில் மாபியா கும்பல் உள்ளதா..? சுவிஸ் குமார் மன்றில் கேள்வி.. சந்தேகநபர்களின் பரபரப்பு வாக்குமூலம்-2

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு: சற்றுமுன் வாசிக்க ஆரம்பிக்கப்பட்ட தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்..!! (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு: சற்றுமுன் வாசிக்க ஆரம்பிக்கப்பட்ட தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்..!! (படங்கள் & வீடியோ)

வித்தியா கொலை! தீர்ப்பு சற்றுமுன் வெளியானது.. ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து இளஞ்செழியன் அதிரடி..!!

வித்தியா கொலை தீர்ப்பு சற்றுமுன் வெளியானது.. ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து இளஞ்செழியன் அதிரடி..!! (வீடியோ)

வித்தியா படுகொலை: சுவிஸ் குமார் உள்ளிட்ட எழுவருக்கு மரண தண்டனை..!! (முழுமையான விபரங்கள் வீடியோ)

வித்தியா படுகொலை: சுவிஸ் குமார் உள்ளிட்ட எழுவருக்கு மரண தண்டனை..!! (முழுமையான விபரங்கள் வீடியோ)

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு குற்றவாளிகள் போகம்பரை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்…!! (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு குற்றவாளிகள் போகம்பரை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்…!! (படங்கள் & வீடியோ)

வித்தியா கொலை வழக்கு! தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்த சுவிஸ் குமார்..!!

வித்தியா கொலை வழக்கு! தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்த சுவிஸ் குமார்..!!

வித்தியா வழக்கு: தீர்ப்புக்கு எதிராக 14 நாட்களுக்குள் மேன் முறையீடு..!!

வித்தியா வழக்கு: தீர்ப்புக்கு எதிராக 14 நாட்களுக்குள் மேன் முறையீடு..!!


Post a Comment

*