;
Athirady Tamil News

புலிகளின் (முன்னாள்) முக்கியஸ்தரின் இல்ல நிகழ்வில், ஒன்றிணைந்த “தமிழ் அரசியல் தலைவர்கள்”.. நடந்தது என்ன? (சுவாரசியமான படங்கள்)

0

புலிகளின் (முன்னாள்) முக்கியஸ்தரின் இல்ல நிகழ்வில், ஒன்றிணைந்த “தமிழ் அரசியல் தலைவர்கள்”.. நடந்தது என்ன? (சுவாரசியமான படங்கள்)

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய போராளியொருவரது குழந்தையின் பிறந்த தினத்தன்று முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களின் தலைவர்கள் ஒன்று திரண்டு பங்கெடுத்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதிலும் விடுதலைப்புலிகள் அமைப்பின் மத்தியகுழு பிரமுகரும் பங்கெடுத்தமை சிறப்பு கவனத்தை பெற்றுள்ளது. அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக உள்ள அனைத்து தரப்புக்களும் இணைந்து குழந்தையின் பிறந்ததின நிகழ்வில் பங்கெடுத்தது போன்று, அரசியல் விடயங்களிலும் இணைந்து செயற்பட வேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான “வழுதி” என அழைக்கப்படும் திரு.பரந்தாமன் (பரன்) தற்போது புளொட் அமைப்புடன் நெருக்கமாகியுள்ளார்.

அவ்வகையில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் மத்தியகுழு உறுப்பினர் ஆர்.ஆர் எனப்படும் இராகவன், அவ்வமைப்பின் (புளொட்) மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்டோர் விழாவில் பங்கெடுத்திருந்தனர்.

இதேவேளை பிளவுண்ட ஈபிஆர்எல்எவ் கட்சியின் அனைத்து தலைவர்களும் நீண்ட இடைவெளியின் பின்னர் ஒரே வைபவத்தில் பங்கெடுத்துமுள்ளனர்.

சுரேஸ்பிறேமசந்திரன், வரதராஜப்பெருமாள், சுகு எனும் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் ஈபிஆர்எல்எவ் இராணுவத்தளபதியும், தற்போதைய ஈபிடிபி செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா, அதிலிருந்து வெளியேறிய வடமாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவராசா என அனைவரும் வருகை தந்திருந்தனர்.

இதேவேளை விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரான பசீர் காக்கா போன்றவர்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

அதேபோன்று உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட கூட்டமைப்பின் இளைஞர்கள் சிலரும் பங்கெடுத்திருந்தனர்.

டெலோ சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரும், தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வருகை தந்திருந்தார்.

முன்னாள் வடமாகாண அமைச்சர் பொ.ஜங்கரநேசனும் பங்கெடுத்திருந்தார்.

தென்னிலங்கையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் குடும்ப நிகழ்வுகளில் மனக்கசப்புக்களை தாண்டி கலந்து கொள்வது வழமையாகும்.

எனினும் தமிழ் அரசியல் தலைவர்களோ, யுத்தகள எதிரிகள் போன்று முகங்களை பொது நிகழ்வுகளில் திருப்பி கொள்வது வழமையாகும்.

இந்நிலையில் பொது அரங்கில் தமது முரண்பாடுகளை தாண்டி அரசியலில் முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களது பிரமுகர்கள் பங்கெடுத்திருந்தமை கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிலும் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியினது நிகழ்வினில் பங்கெடுத்திருந்தமை கவனத்தை ஈர்த்திருந்தது.

இதனிடையே தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதும் பங்கெடுத்திருக்கவில்லையென கூறப்படுகின்றது.

இதுகுறித்து புலிகளின் முன்னாள் தளபதியும், தற்போது “புளொட்” அமைப்பில் நெருக்கமாக இருக்கும் “வழுதி” என அழைக்கப்படும் திரு.பரந்தாமன் (பரன்) கருத்துத் தெரிவிக்கையில்..

“எனது மகனின் பிறந்த நாள் நிகழ்வு ஓர் செய்தியாக ஆகியுள்ளது. சில தகவற் பிழைகள் இருப்பினும், ஆக்கபூர்வமாகவே எழுதப்பட்டுள்ளது. ஆனால் , அது ஓர் அரசியல் நிகழ்வு அல்ல…

எமது மகனிலும், எமது குடும்பத்திலும், என்னிலும் அன்பாயிருப்பவர்களும், மதிப்பாயிருப்பவர்களும் எமது மகனை வாழ்த்த வேண்டும் என நாம் விரும்பினோம்.

அவர்களில் பலர் அரசியலில் இருப்பது தற்செயலானதே அல்லாமல், அரசியலில் இருப்பவர்களை அழைத்து ஆசிகள் பெற வேண்டும் என்பது எமது நோக்கமாக இருக்கவில்லை.

எம்மில் அன்பாயிருக்கும் ஒவ்வொருவரையும் அழைக்க என்னால் முடிந்திருக்கவில்லையே அல்லாமல், நான் அழைத்திருந்தவர்களில் — தவிர்க்க முடியாத காரணங்களால் தம்மால் வர முடியாதிருக்கும் என முன்னரே கூறிய — ஓரிருவர் தவிர, வேறு யாருமே நேரில் எனது மகனை வாழ்த்த தவறவில்லை. எல்லோருக்கும் நன்றிகள்!” என தெரிவித்து உள்ளார்.

இதேவேளை “புளொட்” அமைப்பை சேர்ந்த சிலர் கருத்துத் தெரிவிக்கையில், “எமது தலைவர் திரு.சித்தார்த்தன் அவர்கள், விட்டகுறை, தொட்டகுறை போன்று தனது ஆரம்பகால புலி விசுவாசத்தை வெளிக்காட்ட முனைந்துள்ளாரென” அங்கலாய்த்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × five =

*