;
Athirady Tamil News

வன்முறையின் பின்னணி என்ன?: 22.02.2018. அன்று நடந்­தது என்ன..? -எம்.எப்.எம்.பஸீர் (சிறப்பு செய்தி) -VIDEO-

0

வன்முறையின் பின்னணி என்ன?: 2018.02.22 அன்று நடந்­தது என்ன? – எம்.எப்.எம்.பஸீர் (சிறப்பு செய்தி)

 

வலைத்தளங்கள் ஊடாக மெல்ல ஆரம்பித்து ஊரடங்கில் அடக்கப்பட்ட கலவரம்!

பாது­காப்புத் தரப்­பி­னரின் 24 மணிநேர கண்­கா­ணிப்பில் அவ்­வப்­போது தளர்த்­தப்­பட்டு பிறப்­பிக்­கப்­படும் ஊர­டங்­குச்சட்டத்துக்கு மத்­தியில் பரி­தா­ப­க­ர­மாக உள்­ளது.

இந் நிலை­மைக்கு மேல­தி­க­மாக முழு நாட்­டிலும் பொதுமக்கள் பாது­காப்பு கட்­டளைச் சட்­டத்தின் இரண்டாம் பிரிவு அமு­லுக்கு கொண்­டு­வ­ரப்பட்டு அவ­சரகால நிலை பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்­ளது.

இத்­த­னைக்கும் மேலாக, கண்டி மாவட்­டத்தின் பல கோடி ரூபா பெறு­ம­தி­யான வீடுகள், வர்த்­தக நிைல­­யங்கள் , 25 வரை­யி­லான பள்ளிவா­சல்கள் ( சிறு சேதங்­க­ளுக்கு உள்­ளா­ன­வையும் உள்­ள­டக்கம்) பலகோடி ரூபா பெறு­ம­தி­யான வாகனங்கள் என அனைத்தும் சேதமடைந்­துள்ள நிலையில் விலைமதிப்­பற்ற இரு மனித உயிர்­களும் வன்­மு­றை­களால் காவு­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இவற்றை விட இது­வரை தற்­போது கண்­டியில் வாழும் மக்கள் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் கண்­டி­ராத, அனு­ப­வித்­தி­ராத, அசா­தா­ரண, அச்­சத்­துடன் கூடிய நிலை­மைக்கு முகங்கொடுத்து வீடு­க­ளுக்குள் முடங்கிக் கிடக்குமள­வுக்கு நிலை­மைகள் மோச­மா­கி­யமை கவலைக்கு­ரி­யது.

உண்­மையில் இத்­த­கைய வன்­மத்­துக்கு, கொடு­மைக்கு காரணம் தான் என்ன?

பொலிஸ் உளவுத்துறை­யி­னரின் அறிக்­கை­களின் படியும் தற்­போது பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்­வாவின் கட்­டுப்­பாட்டில் அதன் பதில் பணிப்­பாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் ஜகத் விஷாந்த தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்ள தக­வல்­களின் படியும் இவ் வன்­மு­றைகள் மிகவும் திட்­ட­மி­டப்பட்டு, சதித்திட்டம் தீட்­டப்பட்டு, இன­வா­தி­களால் வழிநடத்­தப்பட்டு முன்­னெ­டுக்­கப்­பட்­டவை.

சிங்­கள சாரதி ஒரு­வரின் கொலையை மையப்­ப­டுத்தி வன்­மு­றைகள் ஆரம்­பிக்­கப்பட்­ட­தாக கூறப்­படும் போதும், இது­வ­ரை­யி­லான விசாரணை­களில் அச் சம்­ப­வ­மா­னது இன­வா­தி­களால் தமது வன்­முறை நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஆத­ரவு திரட்டும் நோக்­குடன் ஆயு­த­மாக பயன்­ப­டுத்­தப்பட்­டுள்­ளதே தவிர, அச் ­சம்­ப­வத்­துக்கும் வன்­மு­றை­க­ளுக்கும் தொடர்­பில்லை என்­பதும் கண்­ட­றி­யப்பட்­டுள்­ளது.

இந் நிலையில் கண்டி மாவட்­டத்தில் பர­விய வன்­மு­றைகள் தொடர்­பிலும் அதற்கு கார­ண­மாக வன்­மு­றை­யா­ளர்­களால் பயன்­ப­டுத்­தப்­பட்ட குற்றச்செயல்கள் தொடர்­பிலும் இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்­பிலும் நாம் ஆராய்ந்தோம்.

5a9ecb848d51c-IBCTAMIL வன்முறையின் பின்னணி என்ன?:  2018.02.22 அன்று நடந்­தது என்ன? -  எம்.எப்.எம்.பஸீர் (சிறப்பு செய்தி) வன்முறையின் பின்னணி என்ன?:  2018.02.22 அன்று நடந்­தது என்ன? -  எம்.எப்.எம்.பஸீர் (சிறப்பு செய்தி) 5a9ecb848d51c IBCTAMIL2018.02.22 அன்று நடந்­தது என்ன?

முஸ்லிம் இள­ஞர்கள் பய­ணித்த முச்­சக்­கர வண்டியொன்றும் சிங்­கள இன சாரதி ஒரு­வரால் செலுத்­தப்பட்ட லொறி­யொன்றும் பாதையில் வேக­மாக போட்டி போட்­டுக்­கொண்டு ஒன்றையொன்று முந்த முயற்­சித்து பய­ணித்­துள்­ளன.

இதன்­போது ஒரு கட்­டத்தில் லொறி முச்­சக்­கர வண்­டியை உரசிச் சென்ற போது முச்­சக்­கர வண்டி பக்கக் கண்ணாடியொன்று சேத­ம­டை­கின்­றது.

இது தொடர்பில் சம்­ப­வத்தின் போதே லொறி சார­தி­யினால் முச்­சக்­கர வண்­டியில் இருந்­தோ­ரிடம் நஷ்ட ஈடாக குறிப்­பிட்ட தொகை பணம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

எனினும் குறித்த லொறி சாரதி (பெரும்­பான்மை இளைஞன்) அம்­பல பகு­தியில் உள்ள தனது வீடு நோக்கி சென்­று­கொண்­டி­ருக்­கையில், அவரை பின்தொ­டர்ந்து விரட்டி குறித்த முஸ்லிம் இள­ஞர்கள் குழு சென்­றுள்­ளது.

அவர்கள் கண்டி–- திகன பகு­தியிலுள்ள எரி­பொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் அருகில் வைத்து லொறியை மடக்கி குறித்த சார­தியை லொறியில் இருந்து இறக்கி அவரை தாறு­மா­றாக தாக்­கி­யுள்­ளனர். தலைக்­க­வ­சங்கள், எரி­பொருள் நிரப்பு நிலையம் அருகிலிருந்த கதி­ரைகள், பியர் டின்­களால் இத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

இதனால் குறித்த சாரதி படு­கா­ய­ம­டைந்­துள்ளார்.படு­கா­ய­ம­டைந்த சாரதி கண்டி போதனா வைத்­தி­ய­சா­லையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்­துள்ளார்.

இந் நிலையில் சம்­பவம் தொடர்பில் தெல்­தெ­னிய பொலிஸார், சார­தியைத் தாக்­கி­ய­தாக கூறப்­படும் 4 முஸ்லிம் இளை­ஞர்­களை கைது செய்து தெல்­தெ­னிய நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்து விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்­ளனர்.

இத­னி­டையே கண்டி போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.குமா­ர­சிங்க என்னும் 41 வய­தான சாரதி கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி அதி­காலை சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்தார்.

குறித்த இைளஞன் உயி­ரி­ழந்­தமை தொடர்­பி­லான தகவல் பிர­தேசமெங்கும் அதற்­கான கார­ணத்­துடன் பர­வவே, பெரும்­பா­ன்மை இனக் கும்பல்­கள் ஆக்­ரோ­ஷத்தை வெளிப்­ப­டுத்தத் தொடங்­கின.

சமூக வலைத்­த­ளங்­களால்தூண்டப்­பட்ட வன்­முறை

இந் நிலையில் சிங்­கள இளை­ஞனை முஸ்­லிம்கள் அடித்து கொன்­ற­தாக கூறி அதற்கு எதி­ராக அணி திரள திட்­ட­மிட்ட இன­வா­திகள் சிலர் சமூக வலைத்­த­ளங்களூடாக தயார்­ப­டுத்­தல்­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இது தொடர்­பி­லான தக­வல்கள் தற்­போது பயங்­க­ர­வாத புல­ன­ாய்வுப் பிரிவு முன்­னெ­டுக்கும் சிறப்பு விசா­ர­ணை­களில் வெளி­ப்ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

உயி­ரி­ழந்த சிங்­கள இள­ஞ­ருக்கு அஞ்­சலி செலுத்­து­வ­தற்­காக எனக் கூறி வெளியிடங்­களிலி­ருந்து சூட்­சு­ம­மாக வன்­மு­றை­யா­ளர்கள் கண்டிக்குள் வர­வ­ழைக்­கப்பட்டு அங்கு பல இடங்­களில் முஸ்­லிம்கள் மீதான வன்­மு­றைக்கு வகுப்பு எடுக்­கப்பட்­டுள்­ளது.

இது தொடர்பில் தற்­போது கைதா­கி­யுள்ள பிர­தான சந்­தேக நப­ரான ‘‘மஹ­சொஹொன் பல­காய”என்னும் அமைப்பின் தலைவன் அமித் வீர­சிங்க, ”சிங்­கள தேசிய சக்தி” என்னும் அமைப்பின் தலை­வனும் அமித்தின் சகா­வு­மான சுரேந்ர சுர­வீர ஆகியோர் முன்­னின்று செயற்­பட்­டுள்­ளனர். இதற்­கான ஆதாரங்­களை பயங்­க­ர­வாத புல­னா­ய்வுப் பிரிவு திரட்­டி­யுள்­ளது.

5a9ecb848d51c-IBCTAMIL வன்முறையின் பின்னணி என்ன?:  2018.02.22 அன்று நடந்­தது என்ன? -  எம்.எப்.எம்.பஸீர் (சிறப்பு செய்தி) வன்முறையின் பின்னணி என்ன?:  2018.02.22 அன்று நடந்­தது என்ன? -  எம்.எப்.எம்.பஸீர் (சிறப்பு செய்தி) 5a9ecb848d51c IBCTAMIL12018.03.03, 2018.03.04 வன்­மு­றைகள் ஆரம்பம்

இந் நிலையில் 3 ஆம் திகதி சனிக் கிழமை முதல் திகன நகரில் பதற்­ற­மான சூழலொன்று நில­விய நிலையில், 4 ஆம் திகதி ஞாயி­ற்றுக்கிழமை அச்சூழல் வன்­மு­றை­யாக வெடித்­தது.

இவ்­வாறு வன்­முறை பரவும் அபாயம் இருப்­ப­தாக கண்டி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏக்­க­நா­யக்க உள்­ளிட்ட உயர்மட்ட தரப்­புக்கு முஸ்­லிம்கள் கொண்டு சென்ற போதும் முஸ்­லிம்­களின் பாது­காப்பை உறுதி செய்ய நட­வ­டிக்கை எடுக்­க­ப்படவில்லை என்­பது அல்­லது, அவர்­களால் இய­லாமல் போனது என்­பது கவ­லைக்­கு­ரிய விட­யமே.

அதன் பிர­தி­ப­ல­னாக மத்­திய கண்டி எனக் கூறப்­படும் திகன–- மொர­க­ஹ­முல்ல சந்­தியிலுள்ள முஸ்லிம் வர்த்­தகர் ஒருவ­ருக்கு சொந்­த­மான பல­ச­ரக்கு கடைக்கு 4 ஆம் திகதி இரவு பெரும்­பான்மை இனக் கும்­பலால் தீ வைக்­கப்பட்­டது. இதனால் குறித்த கடை முற்­றாக சேத­ம­டைந்­துள்­ளது.

இந் நிலையில் இவ் விடயம் தொடர்பில் உட­ன­டி­யாக செயற்­பட்ட பொலிஸார் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான அவ் வர்த்­தக நிலையம் மீது தீ வைத்த பெரும்­பா­ன்மை இனக் கும்­பலைச் சேர்ந்த 24 பேரை அன்­றைய தினமே கைது செய்­தி­ருந்­தனர்.

2018.03.05

அன்­றைய தினம் தாக்­குதல் கார­ண­மாக உயி­ரி­ழந்த பெரும்­பா­ன்மை இன இளை­ஞரின் இறுதிக் கிரி­யைகள் இடம்­பெற்ற நிலையில், அத­னூ­டாக வன்­மு­றை­க­ளுக்கு தூப­மிட திட்­ட­மி­டப்பட்­டுள்­ளது.

இந் நிலையில் கைது செய்­யப்பட்ட குறித்த 24 இளை­ஞர்­க­ளையும் உட­ன­டி­யாக விடு­விக்க வேண்டுமென வலி­யு­றுத்தி அன்­றைய தினம் திகன நகரில் பெரும் ­பா­ன்மை இனத்­த­வர்கள் ஒன்றுகூட­லா­யினர்.

இத­னி­டையே உயி­ரி­ழந்த பெரும்­பான்மை இன இளை­ஞரின் இறுதிக் கிரி­யைகள் இடம்­பெற்ற நிலையில், அந்த இறுதி ஊர்­வ­லத்தின் போது வன்­முறை ஏற்­பட வாய்ப்­புள்­ள­தாக பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்­தி­ருந்­தது.

இதனால் மத்­திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்கி­ர­ம­சிங்க, கண்டி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏக்­க­நா­யக்க ஆகி­யோரின் உத்­தரவு, நேரடி மேற்­பார்­வைக்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் சிசிர குமா­ரவின் நேரடி கட்­டுப்­பாட்டில் விசேட பாது­கா­ப்பு நிலை­மைகள் அமுல் செய்­யப்பட்­டன.

பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வதைத் தடுக்க திகன நக­ருக்குள் பூத­வு­டலை ஊர்­வ­ல­மாக கொண்­டு­வ­ரு­வதை தடுத்து நீதி­மன்ற உத்­தர­வையும் பொலிஸார் பெற்­றனர்.

எவ்­வா­றா­யினும் நீதி­மன்ற உத்­தர­வையும் மீறி அம்­பிட்­டிய சும­ன­ரத்ன தேரர் உள்­ளிட்ட 50 இற்கும் அதி­க­மான தேரர்கள் மற்றும் பெரும்பா­ன்மை இனத்­த­வர்கள் தெல்­தெ­னிய பொலிஸ் நிலை­யத்தை முற்­று­கை­யிட்டும் திகன நக­ருக்குள் நுழைந்தும் அட்­ட­கா­சத்தில் ஈடு­பட்­டனர்.

குறிப்­பாக தெல்­தெ­னிய பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட கடை எரிப்பு சந்­தேக நபர்கள் 24 பேரையும் விடு­விக்கக் கோரி அவர்கள் இந்த முற்­றுகை நடவ­டிக்­கை­யினை முன்­னெ­டுத்­தனர்.

தெல்­தெ­னிய பொலிஸ் நிலை­யத்தை முற்­று­கை­யிட்டும் திகன நக­ரில் வன்­மு­றையை தூண்டும் வண்ணமும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் நடந்­து­கொண்ட நிலையில் அவர்­களைக் கலைக்க பொலிஸார் கண்­ணீர்ப்­புகைக் குண்டுத் தாக்­குதல், நீர்த்­தாரை பிர­யோ­கம் ஆகியவற்றைப் பயன்­ப­டுத்­தினர்.

முஸ்­லிம்­களின் சொத்­துக்­களை இலக்கு வைத்த திட்­ட­மிட்ட தாக்­குதல்

இந் நிலையில் நகரின் பாது­க­ாப்பை உறுதி செய்ய பொலிஸார் இவ்வாறான நடவடிக்கைகளை முன்­னெ­டுக்­கவே, திகன நகரிலுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான பல வர்த்­தக நிலை­யங்கள் மீதும் திகன ஜும் ஆப்பள்­ளி­வாசல் மீதும் தாக்­குதல் நடத்­தப்பட்­டுள்­ள­துடன் அதன் வளா­கத்­திலும் தீ வைக்­கப்பட்­டுள்­ளது.

திக­னவில் மட்­டு­மன்றி அன்­றைய தினமே அவ் வன்­மு­றைகள் தெல்­தெ­னிய, அம்­ப­தென்ன உள்­ளிட்ட பகு­தி­களை நோக்­கியும் பர­வ­ல­டைந்­துள்­ளன.

இந் நிலையில் இவ் ­வன்­மு­றைகள் திகனவுக்கு அப்­பாலும் பரவும் அபாயம் காணப்­பட்ட நிலையில், மத்­திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்கி­ர­ம­சிங்­கவின் ஆலோ­ச­னைக்கமை­வாக உட­ன­டி­யாக ஊர­டங்குச்சட்டம் பிறப்­பிக்­கப்­பட்­டது.

ஊர­டங்­கிலும் தொடர்ந்த வன்­மு­றைகள்

எனினும் பொலிஸ் ஊர­டங்கால் வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் போனது. ஊரடங்கு இருந்த போதே, 5 ஆம் திகதி இரவு வன்­மு­றைகள் தலை­வி­ரித்­தாட ஆரம்­பித்­தன. திகன, அளுத்­வத்த, ஹிஜ்­ரா­புர பகுதி முஸ்­லிம்கள் இதனால் பெரிதும் பாதிக்­கப்பட்டு தமது உற­வி­னர்கள் வீடு­க­ளுக்குள் தஞ்­ச­ம­டையும் நிலைக்கு நிலைமை மோச­மா­னது.

அத­னுடன் வன்­முறை ஓய­வில்லை

கொங்­கல்ல, அம்­பத்­தென்ன, கும்­புக்­கந்­தர, தென்­ன­கும்­பர, உள்­ளிட்ட தெல்­தெ­னிய, பல்­லே­கலை பொலிஸ் பிரி­வு­களிலுள்ள அனைத்து முஸ்லிம் கிரா­மங்­களும் வன்­மு­றை­யா­ளர்­களின் இலக்­குக்குள்­ளா­கின.

2018.03.06 அவ­சரகால நிலை பிர­க­டனம்

பொலிஸ், பொலிஸ் விசேட அதி­ர­டிப்­படை, இரா­ணுவம் என்பன பாது­கா­ப்­புக்கு அழைக்­கப்பட்டும் பொலிஸ் ஊர­டங்ைகத் தாண்­டியும் வன்­மு­றைகள் தீவி­ர­மான நிலையில் பாது­க­ாப்புக் குழுக்கூட்டம் உடன் கூட்­டப்பட்டு நிலைமை ஆரா­யப்­பட்­டது.

அதன் பிர­தி­ப­ல­னாக ஜனா­தி­பதி தனக்­குள்ள அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி பொது மக்கள் பாது­க­ாப்பு கட்­டளைச் சட்­டத்தின் இரண்டாம் பிரிவை அமு­லுக்கு கொண் டுவ­ரு­வ­தாக அறி­வித்து வர்த்­த­மானி வெளி­யிட்டார். இத­னூ­டாக நாட்டில் அவ­ச­ர­கால நிலைமை அன்ைறய தினம் பிற்­பகல் 2.45 முதல் பிர­க­ட­ன­மா­னது.

அதன்­படி உயி­ரி­ழப்­புக்­களை ஏற்­ப­டுத்தல், காயங்­களை ஏற்­ப­டுத்தல், சொத்து சேதங்­களை ஏற்­ப­டுத்தல், பாலியல் ரீதி­யி­லான வன்­மத்தில் ஈடு­படல், கொள்­ளை­ய­டித்தல், இனங்­க­ளுக்கிடையே முறுகல்நிலையை தோற்­று­வித்தல், இனமுறு­கலை தூண்டும் வண்ணம் கட்­டு­ரைகள், எழுத்­துக்­களை சமூக வலைத்­த­ளங்கள் உள்­ளிட்­ட­வற்றில் பதிவு செய்தல், அவற்றை பகிர்தல் உள்­ளிட்ட நட­வ­டிக்­கைகள் பாரிய குற்­ற­ங்களாக அறி­விக்­கப்பட்­டுள்­ளன.

இந் நிலையில் அவை தொடர்பில் அவ­ச­ர­காலச் சட்ட விதி­களின் பிர­காரம் 20 வருட சிறைத் தண்­ட­னையோ ஆயுள் தண்­ட­னையோ பெற்­றுக்­கொ­டுக்க முடியுெமன பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர நாட்டு மக்­க­ளுக்கு அறி­வித்தார்.

அவ­சரகாலச் சட்­டமும் அதன் வர­லாறும்

இலங்கை வர­லாற்றில் சுதந்­தி­ரத்­துக்கு பின்னர் 1953 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி 10561 இலக்க வர்த்­த­மானியூடாக முதன்முதலாக அவ­ச­ர­காலச் சட்டம் பிர­க­டனம் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அக்­கா­லப்­ப­கு­தியில் இடம்­பெற்ற ஹர்த்தால் நட­வ­டிக்­கையை மையப்­ப­டுத்தி 29 நாட்­க­ளுக்கு அந்த அவ­சரகாலச் சட்டம் அமுலில் இருந்­த­துடன் 1953 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 11 ஆம் திகதி அச்­சட்டம் நீக்­கப்­பட்­டது.

இறு­தி­யாக 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் லக் ஷ்மன் கதிர்­கா­மரின் படு­கொ­லையையடுத்து, அப்­போ­தைய ஜன­ாதி­பதி சந்­திரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஊடாக அவ­சரகாலச் சட்டம் பிர­க­டனம் செய்­யப்பட்ட நிலையில், அச்­சட்­ட­மா­னது பின்னர் யுத்தம் முடிந்து இரு வரு­டங்கள் கழிந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திக­தி வரை நீக்­கப்பட்­டி­ருந்­தது.1953, 2011 ஆம் ஆண்­டுக்கு இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் மட்டும் அவ்­வப்­போது ஏற்­பட்ட அவ­சி­யத்­துக்கு அமை­வாக சுமார் 26 தட­வைகள் அவ­சரகாலச் சட்டம் பிர­க­டனம் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

2011 ஆம் ஆண்டு அவ­சரகாலச் சட்டம் நீக்­கப்பட்ட பின்னர் நாட்டில் அச் சட்­ட­மா­னது 6 வரு­டங்­களின் பின்னர் தற்­போதே அமுல் செய்­யப்­ப­டு­கின்­றது.

அவ­சரகால நிலை­மை­யிலும் தொடர்ந்த வன்­முறை

அவ­சரகால நிலை பிர­க­டனம் செய்த போதும் கண்­டியில் நிலைமை மாற­வில்லை. 6 ஆம் திகதி கொங்­கல்ல பகு­தியில் அப்துல் பாஸித் என்னும் 26 வயது முஸ்லிம் இைள­ஞனின் சடலம் எரிந்த அவ­ரது வீட்­டுக்குள்ளிருந்து மீட்­கப்பட்­டது.

இந் நிலையில் அது தொடர்­பி­லான சந்­தேக நபர்­களைக் கைது செய்ய தற்­போது தனி­யான குற்றப் புல­னா­ய்வுப் பிரிவுக்குழு அங்கு விசா­ர­ணை­களை செய்­கிறது.

2018.03.06 இரவு மற்றும் 2018.03.07 ஆம் நாள்

இந்த திக­தி­க­ளுக்கும் உட்­பட்ட 36 மணி நேரத்­தி­லேயே கல­வரம் தீவி­ர­மா­னது எனலாம். மெனிக்­ஹின்ன, ெதன்­ன­கும்­பர, ஆகிய பகு­தி­களில் பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடத்­தப்பட்­ட­துடன் அஹ­தியா அறநெறிப் பாட­சாலை ஒன்றும் தீக்­கி­ரை­யா­க்கப்பட்­டது. அத்­துடன் அப்­ப­கு­தியில் முஸ்­லிம்­களின் வாகனங்கள் பலவும் சேத­ப்ப­டுத்­தப்பட்­டி­ருந்­தன.

தென்­ன­கும்­பர பகு­தியில் இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் நாம் அப்­ப­கு­திக்கு சென்­றி­ருந்த போது, பலர் கவ­லை­களை வெளி­ப்­படுத்­தினர்.

தென்­ன­கும்­பர அஹ­தியா பாட­சா­லையின் செய­லாளர் கே.எம்.ரிஸ்வான் கூறு­கை­யில்,

இங்கு 60 வரையிலான முஸ்லிம் குடும்­பங்கள் வாழ்­கிறோம். அஹ­தியா பாட­சா­லையில் 150 மாண­வர்கள் வரை கற்­கின்­றனர். சிங்­க­ள­வர்­க­ளுடன் இது­வரை எந்த சின்ன சச்­ச­ரவு கூட வந்­ததில்லை. இப்­போது தான் இத்­த­கைய நிலை­மையை உணர்­கின்றோம். இதன்­பின்னர் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வதை தடுக்க வேண்டும் என்றார்.

அப்­ப­கு­தியில் சேத­மாக்­கப்­பட்ட வீடொன்றின் உரி­மை­யாளர் மொஹம்மட் கலீல் இவ்­வாறு கூறினார்.

மாலை 7 மணியிருக்கும். 600 பேருக்கும் அதி­க­மானோர் ஊர­டங்கு உத்­தரவு இருந்த போதும் கூட்­ட­மாக வந்­தனர். அப்போது நாம் உயிரைக் கையில் பிடித்­துக் கொண்டு­ வீட்­டி­ற்குள் ஒரு மூலையில் முடங்­கிக்­கி­டந்தோம் என்றார்.

தென்­ன­கும்­ப­ரவின் நிலைமை இவ்­வாறு இருக்க, ஒரு உயிர் காவு­கொள்­ளப்பட்ட கெங்­கல்ல பகு­தியில் வைத்து அதிர்ச்­சி­க­ர­மான சில தக­வல்கள் எமக்குக் கிடைத்­தன.

உயி­ரி­ழந்த இள­ஞனின் வீட்­டுக்கருகில் வர்த்­தக நிலை­யத்தை வன்­மு­றை­யா­ளர்கள் பற்­ற­வைத்த போது, அங்கு காவல் கட­மையில் பொலிஸார் இ­ருந்­த­தா­கவும் எனினும் அவற்றை அவர்கள் தடுக்­க­வில்லையெனவும் வன்­மு­றை­ய­ா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வாக அவர்கள் செயற்­பட்­ட­தா­கவும் அந்த வர்த்­தக நிலை­யத்தின் உரி­மை­ய­ாளர் தெரி­வித்தார்.

இத­னை­விட உயி­ரி­ழந்த இளைஞன் பாஸித்தின் சகோ­தரர் ஒருவர் எம்­மிடம் பேசும் போது, பாஸித்தின் மற்­றொரு சகோ­தரர் வன்­மு­றையில் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லைக்கு கொன்டு செல்­லப்பட்ட போது, தாம் பொலி­ஸா­ருக்கு எரியும் வீட்­டினுள் பாஸித் இருப்­ப­தாக எவ்­வ­ளவோ கூறி­யும் அவர்கள் அதனை கருத்தில் எடுக்­க­வில்லையென குற்றம் சுமத்­தினார்.

இதே போன்றே மற்­றொரு வர்த்­தக நிலைய உரி­மை­யா­ள­ரான மொஹம்மட் பெரோஸ் என்­ப­வரை நாம் சந்­தித்த போது, அவ­ரது கடை கொள்ளையி­டப்பட்ட பின்­ன­ரேயே தீக்­கி­ரை­யாக்­கப்பட்­ட­தாக சி.சி.ரி.வி. ஆதா­ரங்­க­ளுடன் கூறினார்.

இவ்­வா­றான சூழலில் இந்த வன்­மு­றைகள் வெறும் திக­னயில் மட்­டு­மல்­ல, ரங்­கல, கட்­டு­கஸ்­தோட்டை, மெனிக்­ஹின்ன, பள்ளே­கல, தெல்­தெ­னிய, பூஜா­பிட்­டிய, வத்­தே­கம மற்றும் கண்டி, அல­வத்­து­கொட ஆகிய பொலிஸ் பிரி­வு­களிலும் பெரு­வா­ரி­யான வன்­மு­றைகள் பதி­வா­கின.

சமூக வலைத்­த­ளங்கள் முடக்கம்

இந் நிலையில் வன்­மு­றைகள் கட்­டுக்­க­டங்காமல் தொடர்ந்த நிலையில் பாது­க­ாப்பு தரப்­பி­னரின் ஆலோ­ச­னைக்கமைய பேஸ்புக், வட்ஸ் அப், வைபர் ஆகிய சமூக வலைத்­த­ளங்கள் முடக்­கப்­பட்­டன. காரணம், அந்த சமூக வலைத்­த­ளங்கள் ஊடா­கவே வன்­முறைத் திட்­டங்கள் தொடர்பில் அனை­வரும் ஒன்று சேர்ந்­தமை தொடர்பில் விசா­ர­ணை­யா­ளர்கள் அடை­யாளம் கண்ட நிலை­யி­லேயே அவை முடக்கப்பட்டன.

அதன் பிர­தி­ப­ல­னாக வன்­மு­றையை 7 ஆம் திகதி இர­வுடன் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வர முடிந்­தது.

சூத்­தி­ர­தா­ரிகள் பலர் கைது

இந் நிலையில் கண்டி மாவட்­டத்தின் பல பகு­தி­க­ளிலும் இந்த வாரத்தில் மூன்று நாட்­க­ளாக இடம்­பெற்ற இனரீதி­யி­லான வன்­மு­றை­க­ளுக்கு சதித்திட்டம் தீட்டி, இன­வா­தத்தை தூண்டி வழிநடத்­திய பிர­தான சந்­தேக நப­ரான, ”மக­சொஹொன் பல­காய” என்னும் அமைப்பின் தலை­வ­னாக கரு­தப்­படும் அமித் வீர­சிங்க, அவ­னது சகா சுரேந்ர சுர­வீர உள்­ளிட்ட 10 பேரை பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் கைது செய்­தனர்.

கொழும்­பி­லி­ருந்து நேற்று முன்தினம் காலை சென்ற பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தலை­மை­யி­லான, அதன் பதில் பணிப்­பாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் ஜகத் விஷாந்த உள்­ளிட்ட குழு­வினர் இவர்­களை பூஜா­பிட்­டிய மற்றும் திகன பகு­தி­களில் வைத்து கைது செய்­தனர்.

கைது செய்­யப்­பட்ட 10 பேரில் இருவர் மட்­டுமே அப் பகு­தி­களைச் சேர்ந்­த­வர்கள் எனவும் ஏனையோர் வெளியிடங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் 10 ேபரும் கைது செய்யப்படும் போதும் வன்முறைகளுக்கு சதித்திட்டம் தீட்டிய வண்ணம் அவர்கள் இருந்துள்ளதாகவும் அவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் குறிபிட்டார்.

இந் நிலையில் கண்டி வன்முறைகள் தொடர்பில் சதித்திட்டம் தீட்டியமை, வன்முறைகளை வழிநடத்தியமை, இனவாதத்தை தூண்டியமை, அது தொடர்பில் உபதேசம் செய்தமை, சமூக வலைத்தளங்களூடாக வன்முறைகளுக்கு தூபமிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த 10 பேரையும் கைது செய்துள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், நேற்று முன்தினம் இரவு அவர்களை கொழும்புக்கு அழைத்து வந்தனர்.

இவ்வாறு கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட 10 பேரும், 2018 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவசரகால சட்டத்தின் விடயதானங்களுக்கு அமைவாக பிரதிப் பொலிஸ் மா அதிபருக்குள்ள அதிகாரத்தின் கீழ், 14 நாட்கள் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்குட் படுத்தப்படவுள்ளனர்.

இந்த விசாரணைகளூடாக இந்த வன்முறைகளின் பின்னணியிலிருந்த ஏனையோரையும் கைது செய்ய முடியும் என நம்பும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், வன்முறைகளின் பின்னணியில் அரசியல் தொடர்புகள் இருக்கிறனவா எனவும் ஆராய்கின்றனர்.

எது எப்படியோ, நேற்று கண்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இனவாதம் தலைதூக்காவண்ணம் பாதுகாப்பு போடப்­பட்டே முஸ்லிம்களின் புனித ஜும் ஆ கடமைகள் நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொரு நாளும் இப்படி பாதுகாப்புக்கு மத்தியில் தமது அன்றாட நடவடிக்கைகளை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடக் கூடாது.

எனவே உடனடியாக நல்லிணக்கம், சகவாழ்வு தொடர் பிலான கட்ட மைப்புக்கள் சீர் செய்யப்பட்டு, அமைதியான இலங்கையை கட்டியெழுப்ப இலங்கையர்கள் என்னும் கொடியின் கீழ் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

எம்.எப்.எம்.பஸீர்

https://www.youtube.com/watch?v=0prAiFUVPHY

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*