;
Athirady Tamil News

புங்குடுதீவை உள்ளடக்கிய, வேலணை பிரதேச சபை “ஈபிடிபி வசம்”.. மஹிந்த அணி உபதலைவர் பதவியை கைப்பற்றியது… (நடந்தது என்ன?)

0


புங்குடுதீவை உள்ளடக்கிய, வேலணை பிரதேச சபை “ஈபிடிபி வசம்”.. மஹிந்த அணி உபதலைவர் பதவியை கைப்பற்றியது… (நடந்தது என்ன?)

பிரதேச சபைகள் எங்கும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள கூட்டமைப்பும், ஈபிடிபியும் கூட்டாக இணைந்து செயல்பட்டதினால், யாழ் மாநகரசபை, சாவகச்சேரி நகரசபை மற்றும் பருத்தித்துறை நகரசபைகளில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருந்தன.

ஆனால் இன்றையதினம் வேலணை பிரதேசசபையின் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள கூட்டமைப்பும் ஈபிடிபியும் எதிர் எதிராக முட்டிமோதிக் கொண்டன.

இதேவேளை 20 உறுப்பினர்களைக் கொண்ட இச் சபையில் கூட்டமைப்பு 8 உறுப்பினர்களையும், ஈபிடிபி 6 உறுப்பினர்களையும், பொதுஐன பெரமுன (மஹிந்த அணி) 2 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன தலா ஒரு உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

தமிழ்தேசியக் கூடடமைப்பின் எட்டு உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவருமாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தவிசாளராக முன்மொழியப்பட்ட திரு.நாவலனுக்கு வாக்களிக்க…,

ஈபிடிபியின் ஆறு உறுப்பினர்கள் மற்றும் மஹிந்த அணியின் (மொட்டு அணியின்) இரண்டு உறுப்பினர் மற்றும் உதய சூரியன் சின்னத்தில் வெற்றியீட்டிய ஒருவராக மொத்தம் ஒன்பது உறுப்பினர்கள் ஈபிடிபியால் தவிசாளராக முன்மொழியப்பட்ட திரு.மோகனுக்கு வாக்களிக்க…,

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புங்குடுதீவு வல்லன் பிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய திரு. செந்தூரன் என்பவர் வாக்களிக்க காலம்தாழ்த்தி வந்த காரணத்தினால் வாக்களிக்க முடியவில்லை. அதேபோல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள்) நடுநிலைமை வகித்தது..

பரஸ்பரம் இரண்டு தரப்புக்களும் இன்றைய வாக்கெடுப்பில் தலா 9 ஆசனங்களை பெற்றுக் கொண்டதையடுத்து குலுக்கல் முறையில் ஆட்சியாளரை தெரிவு செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட குலுக்கலில் ஈபிடிபி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வேலணை பிரதேசசபையின் தலைவராக ஈபிடிபியை சேர்ந்த திரு.நமசிவாயம் கருணாகரமூர்த்தி (மோகன் -நயினாதீவு) தெரிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் வேலணை பிரதேசசபையின் உபதலைவராக மஹிந்த அணியின் (மொட்டு அணியின்) திரு.சிவராசா (போல் -வேலணை) அவர்களுக்கு ஈபிடிபி ஆறு உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கடசியில் புங்குடுதீவு வல்லன் பிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய திரு.செந்தூரன், மற்றும் மஹிந்த அணியின் (மொட்டு அணியின்) இரண்டு உறுப்பினர் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் வெற்றியீட்டிய ஒருவராக மொத்தம் பத்து உறுப்பினர்கள் வாக்களிக்க,

இதனையடுத்து வேலணை பிரதேசசபையின் உபதலைவராக மஹிந்த அணியின் (மொட்டு அணியின்) திரு.சிவராசா (போல் -வேலணை) தெரிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.தீவகத்தின் ஊர்காவற்துறை பிரதேசசபையினை ஏற்கனவே ஈபிடிபி கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது மற்றொரு பிரதேச சபையான வேலணையும் இக்கட்சியிடம் சென்றுள்ளது. அதேபோன்று நெடுந்தீவு பிரதேச சபையினையும் ஈபிடிபியே கைப்பற்றுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுகுறித்து “அதிரடி” இணையம், ஈபிடிபி முக்கியஸ்தர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு “அனைத்து பிரதேச சபைகளிலும் ஈபிடிபி, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது, வேலணை பிரதேச சபையில் மட்டும் எதிர்ப்பதன் காரணம் என்ன?” என வினவிய போது,..

“தமிழ் தேசியக் கூடடமைப்பு, ஈபிடிபி போன்றவற்றின் தலைமைக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்பு இருந்தது. ஆயினும் வேலணை பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவாளர்கள் என்போர் முகநூல்கள் மூலம் வைத்த மிகக் கேவலமான எழுத்துக்கள் எமக்கு விட்டுக் கொடுப்பை தர மனம் வரவில்லை.. நாம் எதை இழந்தாலும், நமது தன்மானத்தை இழக்க முடியாது. தவிசாளரை தெரிவு செய்ய முதலே குறிப்பிட்ட ஒருவரை தவிசாளர் எனக் குறிப்பிட்டு செய்த “அளப்பறைக்கே” நல்ல நீதி கிடைத்து உள்ளது.. எமது நோக்கம் யாரையும் பழிவாங்க வேண்டும் என்பது இல்லை, “தீவகத்தை” முன்னேற்ற வேண்டும் என்பது தான்” எனவும் தெரிவித்தார்….

இதேவேளை இதுகுறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளில் ஒருவரிடம், “அதிரடி” இணையம் தொடர்பு கொண்டு கேட்ட போது,

“வேட்ப்பாளர் தெரிவின் போதே நடந்த சச்சரவுகள், வேட்ப்பாளர் தெரிவாளர் என இருவர் நடந்த சர்வாதிகார போக்கு, ஆகியவற்றுடன், வெற்றி பெற்ற எமது வேட்ப்பாளர்களில் பெரும்பான்மையானவர்களிடையே கூட்டமைப்பின் சார்பில் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டவருக்கு எதிரான மனநிலையே காணப்பட்டது. ஆயினும் தலைமைக்கு கட்டுப்பட்டு அவருக்கு வாக்களித்தனரே தவிர, இதைவிட கூடுதலாக எம்மால் எதுவும் செய்ய முடியாது” என்றார்.

இதேவேளை இதுகுறித்து “புங்குடுதீவை சேர்ந்த” முக்கியஸ்தரிடம், “அதிரடி” இணையம் தொடர்பு கொண்டு கேட்ட போது,

“தீவுப் பகுதியின் முன்னேற்றத்தில் ஈபிடிபி யின் பங்களிப்பும் உண்டு, ஆகவே அவர்கள் வெற்றியீட்டியது சந்தோசம் தான்.. அத்துடன் கூட்டமைப்பின் சார்பில் புங்குடுதீவில் வெற்றியீட்டிய மூவரில், மற்ற இருவர்கள் உட்பட பெரும்பாலானோர், கூட்டமைப்பின் தவிசாளரென முன்மொழியப்பட்டவருக்கு எதிரான மனநிலையிலேயே இருந்தனர். இதேவேளை இந்த தெரிவு கூட, குலுக்கல் முறையிலேயே நிகழ்த்தப்பட்ட்து. அப்படி இருக்க இப்போது மீண்டும் முகநூலகள் மூலம் தமது தெரிவாளர்களில் ஒருவரை தூற்றுவதன் காரணம் என்ன? இனியாவது ஒற்றுமையுடன் எமது ஊரின் தேவை கருதி சிந்தித்து செயல்பட வேண்டும்” என்றார்.

இதேவேளை இதுகுறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளில் ஒருவரான ரெலோ அமைப்பை சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர் திரு.விந்தன் கனகரத்தினம் அவர்களிடம், “அதிரடி” இணையம் தொடர்பு கொண்டு கேட்ட போது,

யாழ் மாநகரசபை, சாவகச்சேரி நகரசபை மற்றும் பருத்தித்துறை நகரசபைகளில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஈபிடிபியுடன் ஏற்க்கனவே பேச்சுவார்த்தை நடத்திய தலைமைகள், குறிப்பாக தமிழரசுக் கட்சி) ஏன் வேலணையில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவினைக் கோரவில்லை? வேலணை பிரதேச சபைக்கும் பேச்சுவார்த்தை நடாத்ததன் காரணமென்ன? எனக் கேடடதுடன்,

வேலணை பிரதேசபையில் மொத்தமாகவுள்ள 20 ஆசங்களில் கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சி 6 ஆசனங்களையும் ரெலோ 2 ஆசனங்களையும் பெற்றிருந்தது. ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை இல்லாவிட்டாலூம் பல கட்சிகளுள் பெரும்பான்மையைப் பெற்ற கட்சி என்ற வகையில் ஈபிடிபி அல்லது ஏனைய கட்சிகளுடன் பேசி ஆதரவினைப் பெற்றிருக்கலாம்.

இன்று நடந்த தவிசாளர் தெரிவு வாக்கெடுப்பில் ரெலோவைச் சேர்ந்த இரு உறுப்பினர்களும் நாவலனுக்குத் தான் வாக்களித்துள்ளார்கள். அத்தோடு ஐ.தே.கட்சியும் அவருக்கு சார்பாகவே வாக்களித்துள்ளனர். 9 // 9 ஆக சமநிலையில் வாக்குகள் அமைந்ததனால் குலுக்கல் முறை தெரிவிலேயே தவிசாளர் தெரிவாகியுள்ளார்.

அப்படி இருக்கும் நிலையில் புங்குடுதீவில் உள்ள ஓரிருவர், தமது முகநூலில் என்னைக் குறித்து மிகவும் தரக்குறைவாக எழுதி வருகிறார்கள். இதன் காரணம் என்ன என்பதை எனக்கு புரியல.. இவர்கள் தமது விரக்தியினால் எழுதுவது, எதிர்கால அரசியலுக்கு ஆரோக்கியமானது இல்லை” எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 20 =

*