;
Athirady Tamil News

புலி ஆதரவு, புலம் பெயர்ந்த தமிழர்களே; நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்க்கின்றேன்..!! (முகநூலில் இருந்து)

0


புலம்பெயர்ந்த தமிழர்களே; நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்க்கின்றேன்.

புலி ஆதரவு தளத்தில் இருந்து விலகி மனச்சாட்சியுடன் பதில் சொல்லுங்கள்.

புலம் பெயர்ந்த தமிழர் மாவீரர் மீது பற்றுக் கொண்டவர் போல் பெருந்தொகை பணம் செலவளித்து மாவீரர் தினம் நடத்துகின்றீர்கள்.

ஆனால் அந்த மாவீரரைப் பெற்ற தாய் தகப்பன்மார் உண்ண உணவின்றி வாழ வளியின்றி தவிக்கின்றது புலம் பெயர்ந்த தமிழருக்கு தெரியுமா? தெரியாதா?

உண்மையில் அந்த மாவீரர் மீது பற்று இருந்தால் அந்த வீரர்களது தாய்தகப்பனின் வாழ்வாதாரத்துக்கு புலம் பெயர்ந்த தமிழரால் உதவி செய்ய முடியுமா?முடியாதா?

அப்படி செய்திருந்தால் அதுவே மாவீரருக்கு புலம் பெயர்ந்தவர்கள் செய்யும் மகத்தான மரியாதை , மாவீரகளின் ஆன்மாவும் புலம் பெயர்ந்தவரை நினைத்து பெருமை கொள்ளும்.

செய்தீர்களா?

மாறாக மாவீரர்களது படத்துக்கு போடும்…
மாலைக்கு இவ்வளவு,
மண்டபத்துக்கு இவ்வளவு,
பூவுக்கு இவ்வளவு,
புத்தகத்துக்கு இவ்வளவு,
என்று வியாபாரம் தானே செய்தீர்கள்.

அவ்வாறே போராளிகளும்… போராளி குடும்பங்களும்..

இறுதி யுத்தத்தில் நின்று இனி எதுவுமே செய்ய முடியாது என்ற நிலை ஏற்ப்பட்ட பின் சரணடைந்து பல இன்னல்களை சந்தித்து எதிரியிடம் இருந்துகூட உயிர்வாழ அனுமதிக்கப்பட்டு எமது சமூகத்தின் மத்தியில் வாழ வழியில்லாமல் களத்திலிருந்து மீட்டு வந்த உயிரை தற்க்கொலை செய்து மாய்த்துக் கொண்ட முன்னாள் போராளிகள் எத்தனை பேர் என்று புலம்பெயர்ந்த தமிழருக்கு தெரியுமா? தெரியாதா?

தன்னுடன் சண்டையிட்டவனை எதிரிகூட வாழ விட்டு விட்டான். ஆனால் எமக்காக சண்டையிட்டவனை எம்மவரால் வாழ வைக்க முடியவில்லையே?

புலம்பெயர்ந்த தமிழர் நினைத்திருந்தால் இவர்களுடைய தற்க்கொலைகளை தடுத்திருக்க முடியுமா? முடியாதா?

சேய்தீர்களா?

மண்ணுக்காக போராடா போனதன் நிமித்தமாக சரியான கல்வித்தகமை
இல்லாத காரணத்தால் எந்த வேலைக்கும் விண்ணப்பிக்க முடியாத போராளிகள் எத்தனை பேர் உள்ளனர் என்று புலம் பெயர்ந்த தமிழருக்கு தெரியுமா?தெரியாதா?

போராளிகளாக இருந்த காரணத்தால் கட்டுப்பட்டு வேலை செய்யமாட்டார்கள் என்று கருதி சமூகத்தால் ஒரங்கட்டப்பட்ட போராளிகள் எத்தனை பேர் உள்ளனர் என்று புலம் பெயர்ந்த தமிழருக்கு தெரியுமா?தெரியாதா?

புலம் பெயர்ந்த தமிழர் நினைத்தால் இவர்களுக்கெல்லாம் ஒரு சுய தொழில் வாய்ப்பை உருவாக்கி அவர்களுடைய வறுமையை போக்க முடியுமா?முடியாதா?

செய்தீர்களா?

இன்று காயப்பட்டு அடுத்தவரின் உதவி இல்லாமல் மலம் களுவக் கூட இயலாத எத்தனை போராளிகள் உள்ளனர் என்று புலம் பெயர்ந்த தமிழருக்கு தெரியுமா?தெரியாதா?

புலம் பெயர்ந்த தமிழர் நினைத்தால் அவர்களுக்கு என்று ஒரு தனியான இடத்தை உருவாக்கி அவர்களை எல்லாம் பராமரிக்க முடியுமா?முடியாதா?

செய்தீர்களா?

சமூகத்தில் இணையவும் முடியாமல் பிரியவும் முடியாமல் தங்களது வாழ்விலும் ஏதாவது நல்லது நடக்காதா என்று திருமணம் கூட கட்ட யாரும் முன் வரவில்லையே என்று ஏங்கும் எத்தனை பெண் போராளிகள் உள்ளனர் என்று புலம் பெயர்ந்த தமிழருக்கு தெரியுமா?தெரியாதா?

இன்னும் சொல்ல முடியாத பலவிடயங்கள் உண்டு முன்னாள் போராளிகளின் வாழ்க்கையில்.

மனிதாபிமானம் கருதி நான் அதை பதிவிடவில்லை

ஆனால் அடுத்தவர்களின் அவமானத்தையே தலைப்பு செய்தியாக்கி வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல்.. சர்வதேசத்துக்கு சொல்லுகிறோம் சர்வதேசத்துக்கு காட்டுகிறோம் என்று பதாதைகளை தாங்கி சுயநல கொண்ட புலம் பெயர்ந்தவர்கள் வீரியத்துடன் செயல்ப்படுவதாக வியாபாரம் செய்கிறீர்கள்.

வெளிநாட்டில் இருந்து வீரியமாக செயல்ப்படுகிறீர்கள் என்பது உண்மைதான். அது இங்கு நிதி சேர்த்தர்களின் ஆடம்பர வாழ்க்கையே சான்று பகிர்கிறது எவ்வளவு வீரியத்துடன் செயல்ப்பட்டீர்கள் என்று.

புலம் பெயர்ந்த தமிழர், உண்மையிலேயே உணர்வு உள்ளவர்கள் என்றால் நான் மேற்க்குறிப்பிட்ட விடயங்களை செய்திருக்கலாம். செய்திருக்கவும் முடியும்.

ஒரு முறை ஜெனிவா சென்றுவர செலவாகும் செலவு, மாவீரர் நிகள்வு நடத்த செலவாகும் செலவு, விழையாட்டு போட்டி நடத்த செலவாகும் செலவு, எவ்வளவு என்று புலம் பெயர்ந்து இருக்கும் உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

அதை அங்குள் பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேருக்கு, என்ன செய்யலாம் என்றும் உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

இது இவ்வாறு இருக்க புலம்பெயர்ந்த தமிழராகிய நீங்கள் புலத்தில் புலிகள் புத்துயிருடன் இருப்பது போல் காட்ட முனைகிறீர்கள்.

புலம் பெயர்ந்த தமிழரை அரசாங்கம் புலிகளாக கருதுவதில் உங்களுக்கு நஷ்டம் இல்லை லாபம் என்பது எமக்கு தெரியும்.

புலம் பெயர்ந்தவர்களின் நடவெடிக்கையை காரணமாக வைத்தே தாயகத்தி தனது இறுக்கமான பிடியை தளர்த்தாமல் இருக்கும் அரசாங்கம்.

அதனால் அங்குள்ள மக்கள் தொடர்ந்தும் இன்னல் படுவார்கள். அதை வைத்து இங்கு குளிகாயலாம்.

அரசாங்கத்தை தூண்டி விடுவதும் நீங்கள்தான். அதைவைத்து ஆர்ப்பாட்டம் செய்து தேசியவாதிகள் என்று நல்ல பெயர் எடுப்பதும் நீங்கள்தான்.

ஆகவே புலம் பெயர்ந்தவர்களை அரசு புலிகளாக கருதுவாதால் நஷ்டமில்லை லாபமே.

என்னுடைய விமர்சனங்களின் உண்மைத்தன்மை புரிந்தும் புரியாத புதிர் என்று புலம் பெயர்ந்தவர் குறிப்பிட்டால் அவ்வாறு குறிப்பிடுவதில் ஆச்சிரியம் இல்லை.

உண்மைகளை ஏற்றுக்கொள்ளாமையை கொள்கைகளாக கொண்டு அதை சாதிப்பதில் பிடிவாத குணமுள்ளவர்கள் புலிகளும் அதன் ஆதரவாளர்களும் என்பதில் ஐயம் இல்லை.

அப்படி ஏற்க்கொண்டிருந்தால் இன்று முள்ளி வாய்க்காலை சந்தித்திருக்க வேண்டியிராது.

நீங்கள் உங்களுடைய இலக்குக்காக பயணியுங்கள்.

அதேவேளை மக்களுக்கு குறிப்பாக தாயக மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்கும் பணியை நாமும் தொடர்வோம்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 2 =

*