;
Athirady Tamil News

“ஐ.பி.சி.”யின் மறுமுகம்…!! “ஊடக அற மீறல்”.. (முகநூலில் இருந்து)

0

ஊடக அற மீறல்.

ஒரு அமைப்பின் (PLOTE) ஆரம்பகாலப் பயிற்சிமுகாம் காட்சிகளை YouTube தளத்தில் மிக அண்மையில் பார்த்திருந்தேன். அதிலிருக்கும் சில பயிற்சிக் காட்சிகள், IBC தொலைக்காட்சி யின் நிகழ்ச்சியொன்றில் (‘தமிழர்களை அழிக்க பிரித்தானியா செய்த உதவிகள்! – வெளிவரும் அதிர்ச்சிகரமான ஆதாரங்கள்’) பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மூலக் காட்சிகளில் ‘Swiss Ranjan PLOTE’ என்று பதிக்கப்பட்டிருந்த எழுத்துகள், IBC தொலைக்காட்சி யில் பயன்படுத்தும் போது அழிக்கப்பட்டிருப்பது ஊடக தர்மத்தின் அடிப்படையில் நியாயமானதல்ல.

இரண்டையும் YouTube மூலம் அண்மையில் நான் அடுத்தடுத்துப் பார்க்க முடிந்தமையால் இதனைக் கண்டுபிடிக்க முடிந்தது. இப்படியான காரியங்களில் சில ‘ஊடகங்கள்’ அவ்வப்போது செயற்பட்டு வருவது புதிதல்ல என்றாலும், இப்போது ஆதாரபூர்வமாக அறிந்த இதனைப் பதிவுசெய்யத் தோன்றியது. ஒருவேளை, சம்மந்தப்பட்டவர்களிடம் முறையான அனுமதி பெற்று எழுத்துகள் அழிக்கப்பட்டிருந்தால், அது ஊடக தர்மத்துக்கு உட்பட்டதாக அமைந்திருக்கக் கூடும்.

சுவிஸ் ரஞ்சன் என்பவரோ, புளொட் அமைப்பினரோ என்னுடன் தொடர்பில் உள்ளவர்களல்ல. IBC தொலைக்காட்சி மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை. ஒரு சுயாதீன ஊடகராக, எனது ஊடகவியல் அனுபவ அறிவின் அடிப்படையில் எனது ‘பார்வையினை’ இங்கு பதிவுசெய்கிறேன். அவ்வளவு தான். இது, கடந்து போய்விடக்கூடிய ‘சிறிய’ விடயமாகப் பலருக்கும் தோன்றக் கூடும். ஆனால், இத்தகைய விடயங்களை ஊடக உலகத்தில் ‘அனுமதிப்பது’ ஆபத்தானதாகும்.

வரலாற்று ஆதாரங்களை, தகவல்களை, படங்களை எங்கிருந்தும் யாராலும் பெற முடியும். அவற்றின் உண்மைத்தன்மையினையோ பின்னணித்தகவல்களையோ மறைக்க முயல்வது ஊடக தர்மத்தின் அடிப்படையில் இழுக்கான காரியமாகும். அது அறமற்றது. ஒருவருக்கு உரித்துடைய ஆவணம் ஒன்று, நல்ல நோக்கத்திற்காக எடுத்தாளப்படும் போது, உரித்துடையவரின் ‘பெயர்’ திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்படுவது அறமல்ல.

ஒரு இடத்தில் இருந்து ஒன்றைப் பெறுவது விருப்பமில்லையெனில் அல்லது பெறுவதில் உடன்பாடில்லையெனில், அதைப் பெறாமலேயே இருந்து விடலாமே… இன்னொருவரினதோ இன்னொரு அமைப்பினதோ ஆவணத்தின் உண்மைத்தன்மையை மறைக்க முயல்வது மோசமான ஊடக ஊழலாகும். தயவுசெய்து இத்தகைய ஊழலை ஊடகங்களும் தனிமனிதர்களும் இனியாவது செய்யாமலிருக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்தினருக்கும் இடையிலான மோதல் இடம்பெற்ற காலத்தில், விடுதலைப் புலிகள் வளர்த்த சிறுத்தை ஒன்று கைவிடப்பட்டது பற்றி, நேற்று ஒருவர் தனது முகநூலில் பதிவுசெய்திருந்தார். அந்தப் பதிவினை, இன்று இரண்டு நபர்கள் தமது முகநூலில் எழுதியவரின் பெயர் போடாமல் அப்படியே மீள்பதிவு செய்திருந்தார்கள். இத்தகைய பொறுப்பற்ற செயல்களை முகநூலிலும் அடிக்கடி காண முடிகிறது. முகநூலும் அடிப்படையில் ஒரு ஊடகமாகும். அதனாலேயே அது சமூக வலைத்தளம் என்று சொல்லப்படுகிறது.

2018-06-22

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − eight =

*