;
Athirady Tamil News

இயக்கத்துக்குப் போக, எனக்கென்ன விசரே? (உண்மைகள் பலதை உரக்க சொல்லும் “ஆழமான வரிகள்”..) இது எப்படி இருக்கு??

0

இயக்கத்துக்குப் போக, எனக்கென்ன விசரே? (உண்மைகள் பலதை உரக்க சொல்லும் ஆழமான வரிகள்..) இது எப்படி இருக்கு??

இயக்கத்துக்குப் போக எனக்கென்ன விசரே?
இப்பிடித்தான் ஊர்முழுக்க
ஒட்டிக்கிடந்த ஞாபகம்
எப்பிடியெண்டாலும் நான்
மசிஞ்சு குடுக்கேல்ல..

இயக்கத்துக்குப் போக எனக்கென்ன விசரே?
90இல் வந்தினம் வரியோட-அது
சரியாக எனக்குப் படவில்லை
95இல் கூட்டமாய் செம்மணி
கடந்தும் சுரணை வரவில்லை,

இயக்கத்துக்குப் போக எனக்கென்ன விசரே?
வன்னிக்காட்டுக்க போயும்
வீட்டுக்கு ஒராள் வாவெண்டினம்
வேட்டுக்குப் பயந்த நான்
கூட்டுக்குள் கோழியாய் பதுங்கினேன்,

இயக்கத்துக்குப் போக எனக்கென்ன விசரே?
2000 த்தில் பெருவெற்றி ஆனையிறவு
எல்லைப்படை திரட்டி, வாவெண்டினம்
கொல்லைக்கே போகப் பயந்தனான்
எல்லைக்கு எப்பிடிப் போவேன்?!

இயக்கத்துக்குப் போக எனக்கென்ன விசரே?
2006இல் கும்பிடாக் குறையாய்
கூப்பிட்டீனம் இறுதிப் போருக்கு,
சீதனும் கொஞ்சம் வாங்கி -மாவீரர்
குடும்பத்தில் மாலையிட்டு
மயிரிழையில் உயிர் பிழைத்தேன்.,

இயக்கத்துக்குப் போக எனக்கென்ன விசரே?
2009இல் “வீழுமுன் எழுங்கோ” எண்டீனம்
சேலையில் மண்நிரப்பி-நான்
பதுங்குகுழி அமைத்த களைப்பில்-மீதி
நாள்முழுதும் பள்ளி கொண்டேன்,

இயக்கத்துக்குப் போக எனக்கென்ன விசரே?
ஆமியும் வந்தான், ஐயாக்கள்
வாங்கோ எண்டேன்
அணி அணியாய் எடுத்து
தனித் தனியாய்ப் பிரிச்சான்..

ஒருநாள் புலி எண்டாலும்
மறுக்காமல் எழும்பெண்டான்
போரிட்ட புலியெல்லாம்
ஓரிடத்தில் முடக்கப்பட்டார்..

துணைப்படை, காவற்படை
எல்லைப்படையும் அதிலடக்கம்
எப்படையிலும் என் பங்கில்லை- அதனால்
தலை தப்பிய படையில் சிரிப்புடன் நான்..

போருக்குத் தப்பி ஊருக்கு வந்த -என்னை
காசிருந்தாத் தான் மதிப்பினம்
மனுசி, பிள்ளைய மாமியோட விட்டிற்று
வெளி ஊருக்குப் போவென்றாள் அன்னை,

வெளிநாடு வந்து விட்டேன்-எனக்கு
விசா எடுக்கப் பதியவேணும்,
உள்நாட்டில் உனக்கென்ன பிரச்சனை?
கேட்டால்? சொல்லித் தந்தார் கேஸ் காரர்.

மக்களின் விடுதலைக்காய் மனமுவந்து
இயக்கத்தில் இருந்ததாயும்- நான்
கனவில் கூட கண்டிராத களமுனைகளில்,
காயங்கள் பல பட்டதாயும்,
புதியதோர் கதையெழுத- சிறிதேனும்
தயக்கமின்றி ஏற்றுக் கொண்டேன்.

கோழிப்பொரியல் கடையிலிருந்து
கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணியுமடிச்சு
கூகுள் வலையில் விழுந்து -சிறப்பு
போராளிப் பயிற்சி பெற்றேன்.

சத்தியப் பிரமாணம், ஏ.கே யின் இயக்கம்
இணையத்தில் அறிந்து கொண்டேன்,
மாவீரர் குடும்பமென்றால் -இன்னும்
மவுசாம், மனுசிக்கு அழைப்பெடுத்தேன்,
அவளின் அண்ணனின் படம் எடுத்தேன்.

ஊரில, கள்ளக்கோழி பிடிக்கப் போய்
கம்பி கிழிச்ச காயத்தையெல்லாம்
போரில, நான்பட்ட விழுப்புண்ணாய் -நீலிக்
கண்ணீருடன் கதை விட்டேன்.

எனக்கு விசா கிடைச்சிட்டுது -மற்றவைய விட
அரையடி உயர்ந்த நினைப்பு,
இப்ப நான் நல்லாயிருக்கிறன்- இது
என் தந்திரங்கள் தந்த வனப்பு.

கவருக்கு கட்டின கலியாணம் -விசா,
காட்டும் கிடைச்சாப் பிறகு
சாதிப் பிரச்சனையாம், உறவுகள் கதற
கரம் பிடித்தவளையும், குழந்தையையும்
உதறித்தள்ளி, நல்ல சீதனத்துடன்
பவருக்கு,ஒரு பருவக்கிளியை
பதிவுத் திருமணமும் செய்தேன்.

அந்த மாதிரியிருக்கிறேன் -எனக்கு
பொழுதுபோக்கு வேணும் தானே?
“முகமூடி” போட்ட முகப்புத்தகத்தில்
முழுநேரமும் உலா வருகின்றேன்..

அப்பப்ப “அண்ணையோட நிண்டதாயும்”
அள்ளி விடுறேன், எல்லாரும் பாக்கினம்..
தப்பாய் எனக்குத் தெரியவில்லை -“ஏமாளிகள்”
ஏற்றுக் கொண்டு லைக்கும் போடுகினம்…

இப்படிக்கு…..
–கடமையிலிருந்து தப்பியவன்.

உண்மைகள் பலதை உரக்க சொல்லும் ஆழமான வரிகள்…
**நன்றி -வரிக்கு சொந்தமானவருக்கு…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 5 =

*