;
Athirady Tamil News

திலீபன் தூபிக்கு எதிரில் இந்திய கலைஞர்களின் இசை நிகழ்வு: அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள்! (படங்கள் & வீடியோ)

0

திலீபன் தூபிக்கு எதிரில் இந்திய கலைஞர்களின் இசை நிகழ்வு: அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள்!

“தியாக தீபம் திலீபனின் நினைவுநாளில், யாழ் மாநகரசபை எல்லைக்குள் களியாட்ட நிகழ்வுகள் நடத்த அனுமதிக்க மாட்டோம்” என நேற்று யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் கூடி அதிரடி தீர்மானமொன்றை எடுத்துள்ளனர்.

ஏற்கனவே, திலீபனின் நினைவுநாளை மாநகரசபையே பொறுப்பேற்று நடத்துமென மாநகர முதல்வர் விடுத்த அறிவிப்பிற்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலைமையில், நேற்றைய அமர்வில் திலீபனின் நினைவுநாளில் மாநகரசபை எல்லைக்குள் நிகழ்வுகள் நடத்த அனுமதிப்பில்லையென்ற முடிவை எடுத்தனர்.

அத்துடன், வரும் 26ம் திகதி யாழ் மாநகரசபை மைதானத்தில் மத்திய சுற்றுலா அதிகாரசபை ஏற்பாடு செய்துள்ள நிகழ்வொன்றை நிறுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு வடக்கு முதலமைச்சர் அமைச்சும் அனுசரணை வழங்குகிறது. தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அந்த நிகழ்விற்கு, மைதானத்தை வழங்குவதில்லையென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நினைவேந்தல்களை எப்படி அனுட்டிப்பதென? தெரியாமல், “தமிழ் அரசியல்வாதிகள் ஆர்வக்கோளாறில் அவதிப்படுவதன் விளைவே” இது. நினைவேந்தல்களை எதனுடன் முடிச்சுப் போடுவது? என்பதை தெரியாமல், அரசியல்வாதிகள் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

திலீபனின் நினைவுநாள், மாவீரர் வாரம், கரும்புலிகள் வாரம், மாலதி நினைவுநாள், குமரப்பா புலேந்திரன் நினைவுநாள், கிட்டு நினைவுநாள், ஜெயசிக்குறுவில் மரணித்தவர்களின் நினைவுநாள், தமிழ்செல்வன் நினைவுநாள், பால்ராஜ் நினைவுநாள், முள்ளிவாய்க்கால் நினைவுநாள் என ஒவ்வொரு மாதமும் தமிழர்கள் உளப்பூர்வமாக அஞ்சலிக்க நிகழ்வுகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நாட்களில் நிர்வாகம் முடங்க வேண்டுமென எதிர்பார்ப்பது ஆரோக்கியமானதல்ல.

தேவையற்ற சில களியாட்டங்களை, நிகழ்வை குழப்பவது போன்ற களியாட்டங்களை தவிர்க்கலாம். ஆனால், உணர்வுபூர்வ அஞ்சலியென்பது, ஊரெல்லாம் “அட்ராசிட்டி“ பண்ணி செய்வதல்ல. அஞ்சலி.., செய்துவிட்டு வீட்டில் போயிருக்க வேண்டும் என்றும் அர்த்தமல்ல.

தமிழ் சமூகம் மேலும்மேலும் வீழ்ச்சியடைந்து, தனக்குள் தானே முடங்கியிருக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் யாரும் மரணிக்கவில்லை. சந்ததி வாழ வேண்டுமென்று தான் வீழ்ந்தார்கள். நமது அரசியல்வாதிகளும், கட்சிகளும் நினைவேந்தலில் தமக்குள் போடும் குடுமிப்பிடி சண்டைகள் தான் அசிங்கமானவையே தவிர, அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய நிகழ்வுகள் அல்ல.

இத்தனைக்கும், திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்பாக கடந்த மூன்று நாட்களாக அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் இசைவேள்வி நடைபெற்று வருகிறது. செப்ரெம்பர் 21ம் திகதி ஆரம்பித்த நிகழ்வு செப்ரெம்பர் 24 முடிவடைகிறது. இதில் இந்திய இசைக்கலைஞர்கள் தான் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வையும் எதிர்க்க வேண்டும் என நாம் குறிப்பிடவில்லை. ஆனால், திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்பாக, இந்திய கலைஞர்களை அழைத்து நடத்தப்படும் இசைவேள்விக்காக “பொங்காத” நமது அரசியல்வாதிகள், உள்ளூர் மக்களிற்கு ஏதாவது விதத்தில் பயன்படும் சுற்றுலாத்துறை நிகழ்வை நிறுத்த வேண்டுமென கூட்டம் போட்டு முடிவெடுத்துள்ளனர்.

இந்திய கலைஞர்களின் நிகழ்ச்சி விசயத்தில் தலையிட்டால் இந்திய தூதரகம் கோபிக்கலாமென கருதியோ, என்னவோ, நம்மவர்கள் யாரும் வாய் திறக்கவில்லை.

இந்த நிகழ்வு குறித்து யாழ் பல்கலைகழக இசை விரிவுரையாளர் கலாநிதி சுகன்யா அரவிந்தனின் வீடியோ கருத்து இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் இந்தியர்கள் கலந்து கொள்கிறார்கள். அதில் இலங்கை கலைஞர்களும் கலந்து கொள்வது சிறப்பம்சம் என அரிய முத்துக்களை பகிர்ந்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக நடந்து வரும் இசை நிகழ்ச்சியில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். அதாவது திலீபனின் நினைவேந்தலில் கலந்து கொள்பவர்களை விட அதிகமானவர்கள் இங்கு குழுமுகிறார்கள்.

திலீபனின் நினைவேந்தலை குழப்ப வேண்டுமென்பதற்காகவே திட்டமிடப்பட்ட நிகழ்வை போல இது தென்பட்டும், இதுவரை ஏன் நமது ஆர்வக்கோளாறு அரசியல்வாதிகள் யாரும் வாய் திறக்கவில்லை?
(நன்றி… தமிழ் பேஜ்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × one =

*