;
Athirady Tamil News

சிறப்பாக நடைபெற்ற, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய” நிர்வாகசபைக் கூட்டம்..! (விபரமான தகவல், படங்கள்)

0

சிறப்பாக நடைபெற்ற, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய” நிர்வாகசபைக் கூட்டம்..! (விபரமான தகவல், படங்கள்)

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் நிர்வாகசபைக் கூட்டம், ஒன்றியத் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் தலைமையில் நேற்றையதினம் (23.02.2020) நடைபெற்றது. மேற்படிக் கூட்டத்தில் தலைவர், செயலாளர், உபதலைவர் திரு.சஞ்சய், ஆலோசனைசபை உறுப்பினர் திரு.பிரேம், ஒன்றிய முக்கியஸ்தர் திரு.தயாபரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

குடும்ப நிகழ்வொன்றின் காரணமாக தவிர்க்க முடியாமல் கலந்து கொள்ள முடியவில்லையென பொருளாளர் திரு.குழந்தையும், தான் சார்ந்த அமைப்பின் முக்கிய பிறிதொரு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால், முடிந்ததும் வருகிறேன் என திரு.இலட்சுமணன் அவர்களும், வேலை காரணமாக கலந்து கொள்ள முடியவில்லையென திரு.சுரேஷ், திரு.பாபு ஆகியோரும், தவிர்க்க முடியாத காரணங்களினால் (வேலை உட்பட) கலந்து கொள்ள முடியவில்லையெனவும், “எடுக்கும் முடிவுக்கு பூரண ஆதரவு எனவும்” திரு.குமார், திரு.பன்னீர், திரு.சதீஷ், திரு.பிரதீபன், திரு.அன்பு போன்றோரும் தெரிவித்து இருந்தனர்.

முதலில் அமைதி வணக்கத்தை தொடர்ந்து, பொருளாளர் திரு.குழந்தை, தலைவர் ஊடாக சமர்ப்பித்த கடந்த நான்கு வருடக் கணக்கறிக்கையும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து செயலாளரின் கடந்த கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புங்குடுதீவு அபிவிருத்தி ஒன்றியத் தலைவர் திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் மாஸ்ரர் அவர்கள் இலங்கையில் இருந்து தொலைபேசி மூலம், கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களுடன் உரையாடி, தற்போது புங்குடுதீவில் மேற்கொள்ளும் “புனரமைப்பு நடவடிக்கைகள்” குறித்து தெளிவாக விளக்கமளித்தார்.

இதனைத் தொடர்ந்து புங்குடுதீவில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான “கட்டிட ஒப்பந்தக்காரர்” திரு.வனோஜன் அவர்கள் இலங்கையில் இருந்து தொலைபேசி மூலம், கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களுடன் உரையாடி, “பெருக்குமர சுற்றாடல்”, மற்றும் “புங்குடுதீவு மயானங்களில்” மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து அனைத்து உறுப்பினர்களின் கேள்விக்கும் தெளிவாக பதிலளித்ததுடன், மேற்கொள்ளும் நடவடிக்கை எப்படி அமையும்? என்பதையும் தெளிவுபடுத்தினார்.

இதேவேளை, “பெருக்குமர சுற்றாடல் புனரமைப்புக்கு” பெருமளவு நிதி (பல இலட்சம் ரூபா) செலவு செய்வது, “நல்லதோர் விடயத்துக்கு என்பதினால் நாம் ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் அதுக்கு அப்பிரதேச சுவிஸ் புங்குடுதீவு உறவுகளிடமும் நிதி வாங்க வேண்டுமென” சிலர் தொலைபேசி மூலம் தெரிவித்த கருத்து விவாதத்துக்கு எடுக்கப்பட்டது.

“ஒன்றியத் தலைவர் திரு.ரஞ்சன்”….
இதுக்கு முதலில் பதிலளித்த ஒன்றியத் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள், “பெருக்குமரம்” என்பது பொதுவான விடயம், ஆகவே இதனைக் குறிப்பிட்ட சிலரும் நிதி தந்து தான், இதனை செய்ய வேண்டும் என்பது தவறான கருத்து. “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்” என்பது பன்னிரெண்டு வட்டாரங்களுக்கும் பொதுவானது. நான் தலைவராக இருக்கும் வரை, இதுபோன்ற கதைகள் தவறு. ஒருபகுதியில் “கிணறு, மயானம், மின்னிணைப்பு” போன்ற விடயங்களை செய்யும் போது “ஒன்றிய நிதியுடன்” மேலதிகமாக செலவு வருமென்றால், அப்பகுதி சுவிஸ் உறவுகளிடம் கதைத்து வாங்கலாமே தவிர, “பொதுக் காரியங்களுக்கு” நாம் அப்படி நினைப்பதோ, கதைப்பதோ தவறு எனவும், “அம்பலவாணர் அரங்கு” எப்படி பொதுமக்களுக்கு உரியதோ, அதேபோல் “பெருக்குமரமும்” பொது விடயம் என்பதை அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டுமென” கேட்டுக் கொண்டார்.

திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் (அதிபர்)….
இதுகுறித்து இலங்கையில் இருந்து கருத்துத் தெரிவித்த, புங்குடுதீவு அபிவிருத்தி ஒன்றியத் தலைவர் திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் மாஸ்ரர் அவர்கள் “புங்குடுதீவு பெருக்குமரம்” என்பது உலகெங்கும் உள்ள புங்குடுதீவு மக்களின் சொத்து, இதனை ஒன்றியத்தின் நிதியில் செய்வதே காலச்சிறந்தது, அப்பகுதி மக்களிடம் நிதி சேகரிப்பு என்பது அப்பகுதியில் மேற்கொள்ளும் கிணறு மயானம் போன்ற நடவடிக்கைகளுக்கே பொருந்தும், எதுஎப்படி இருப்பினும் “சுவிஸ் ஒன்றியமானது தொடர்ந்து வளரனும், அதுக்கு இதுபோன்ற பொதுவிடயங்களை ஒன்றிய நிதியில் இருந்து செய்வதே பொருத்தமானது” என்றார்.

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய முக்கியஸ்தர்” திரு.தயாபரன்….
புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய முக்கியஸ்தர்களில் ஒருவரான, திரு.தயாபரன் கருத்துத் தெரிவிக்கையில், “இதுபோன்ற விவாதமே பிழை எனவும், இன்று தினமும் பல நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் பொது இடத்தை, அப்பிரதேச மக்களின் பங்களிப்பிலும் தான் செய்ய வேண்டுமென கூறுவதே குறுகிய வட்டத்துக்குள் அடக்குகிறது எனவும், இதனை ஒன்றிய நிதியிலேயே, ஒன்றியத் தலைவர் ரஞ்சனின் பொறுப்பில் செய்து முடிக்க வேண்டுமெனவும்” தெரிவித்தார்.

“ஒன்றிய ஆலோசனைசபை உறுப்பினர்” திரு.பிரேம்…
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய ஆலோசனைசபை உறுப்பினர் திரு.பிரேம் அவர்கள், “முதலில் “பெருக்குமர புனரமைப்புக்கு” பெருமளவு நிதி செலவாகுவதால் அப்பகுதி மக்களிடம் நிதி வாங்கலாம் எனவும், நானும் அப்பகுதி (இறுப்பிட்டி) மகன் என்பதால் பங்களிக்க தயாராவே இருந்தேன், ஆயினும் இப்போது எல்லோரின் விளக்கத்தினால், இதனை “சுவிஸ் ஒன்றியத்தின் நிதியில்” செய்வதே சரியானது, ஏனெனில் “பெருக்குமரம்” தனிப்பட்ட சொத்தல்ல, அது பொதுச் சொத்து எனவும்” குறிப்பிட்டார்.

எனது கருத்து… (“ஒன்றிய செயலாளர்”)
ஒன்றிய நிதியிலேயே இதனைச் செய்ய வேண்டுமெனவும், ஒன்றிய அங்கத்தவர்களாக எந்தப் பகுதி மக்கள் கூடுதலாக இருக்கிறார்களோ, & பங்களிப்பு செய்கிறார்களோ, அந்த பகுதி மக்களுக்கு இந்த பெருமை சேரட்டும், யாரின் பங்களிப்பு கூடுதலாக இருந்தாலும், அவர்களின் பங்களிப்பு உட்பட ஒன்றிய நிதியால் இதனை செய்வதே சிறப்பு” எனவும் குறிப்பிட்டேன்.

“ஒன்றிய உபதலைவர்” திரு.சஞ்சய்….
“ஒன்றிய உபதலைவர்” திரு.சஞ்சய் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த விவாதமே தேவையற்றது எனவும், மூன்று மாதத்துக்கு முதல் நடந்த கூட்டத்திலும், அதுக்கு முன்னைய கூட்டத்திலும் இதுகுறித்து விவாதித்து, முடிவெடுத்து பகிரங்கமாக அறிவித்து இருந்தோம். அப்போது எதுவுமே கதைக்காதவர்கள், அல்லது எழுத்து மூலமாவது கருத்தைத் தெரிவிக்காதவர்கள், குறைந்தபட்ஷம் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டாவது தமது கருத்தை வலியுறுத்தி இருக்கலாம், என்னைப் பொறுத்தவரை ஒன்றிய நிதியில் இதனை மேற்கொள்வதே சரியெனவும்” தெரிவித்தார்.

§§§ இறுதித் தீர்மானம்…
இந்த வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து, மேற்படி “பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஒன்றிய நிதியிலேயே மேற்கொள்வது எனவும், இதுக்கென இலங்கை வங்கியில் வைப்பிலிடப்பட்ட பணத்தையும் மீளப்பெற்று மிகவிரைவில் வேலைகளை பூர்த்தி செய்வதெனவும், மேற்படி வேலைகளுக்கு இலங்கையில் திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் மாஸ்ரர் அவர்களும், சுவிஸில் இருந்து “ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களும் பொறுப்பாக இருப்பார்கள் எனவும், வேண்டிய ஆலோசனைகளையும், உதவிகளையும் திரு.இ.இளங்கோவன் (வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர்) அவர்களிடம் இருந்து பெற வேண்டுமெனவும், அதேவேளை செய்யப்படும் வேலைகளுக்கு ஒன்றியத்தின் பெயரும், சம்பந்தப்பட்டவர்களின் பெயரும் பதியப்பட வேண்டுமென அனைவராலும் ஏகமானதாகத் தீர்மானிக்கப்பட்டது.

அம்பலவாணர் அரங்கின் ஒரு ஆசிரியருக்கான இவ்வருட சம்பளம்…
பொது அரங்காக நிர்மாணிக்கப்பட்டு, புங்குடுதீவின் அனைத்து வட்டார மாணவ செல்வங்களையும் ஒருங்கிணைத்து பல கலைகளை போதிக்கும், “புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கின்” ஆசிரியர்களில் ஒருவரின் மாத சம்பளமான பத்தாயிரம் ரூபாவை (இவ்வருடத்துக்கான மொத்தநிதியை) அடுத்தமாதம் இலங்கைக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொள்ளும் “ஒன்றிய பொருளாளர்” திரு.குழந்தை மூலமாக வழங்கி வைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

“உயரம் பாய்தலுக்கான மெத்தை”….
புங்குடுதீவின் அனைத்துப் பாடசாலைகளும், (அவர்களின் எழுத்துமூல கோரிக்கையை ஏற்று) பாவிக்கும் வகையில் “விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தலுக்கான பாதுகாப்பு மெத்தையை (சிங்கிள்) அடுத்தமாதம் இலங்கைக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொள்ளும் “ஒன்றிய பொருளாளர்” திரு.குழந்தை மூலமாக வழங்கி வைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஏனைய கோரிக்கைகள்….
சிலர் எழுத்து மூலமும், தொலைபேசி மூலமும் முன்வைத்த ஏனைய எந்தவொரு கோரிக்கைகளையும், “பெருக்குமர புனரமைப்பு & மயானங்கள் புனரமைப்பு”க்கு பின்னரே பரிசீலிப்பது எனவும், அதனை அடுத்து வரும் நிர்வாகம் செய்வதே சிறந்தது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

“பெருக்குமர புனரமைப்புக்கு பின்னரான திறப்புவிழா”
புங்குடுதீவு பெருக்குமர புனரமைப்பானது அடுத்தமாதம் நடுப்பகுதியில் நிறைவு பெற்றால், அடுத்தமாதம் நடுப்பகுதியில் இலங்கைக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொள்ளும் “ஒன்றிய பொருளாளர்” திரு.குழந்தை மற்றும் அவரது நண்பர்களின் பங்களிப்புடன் “பெருக்குமர புனரமைப்புக்கு பின்னரான திறப்புவிழா”வை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்” அடுத்த பொதுச்சபைக்கு முன்னர் மேற்கொள்ளவுள்ள (திட்டமிட்டுள்ள) நடவடிக்கைகள்..

சுவிஸ் புங்குடுடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பாக, இலங்கையில் வைப்பிலிடப்பட்ட நிதியிலும், எம்மிடம் (சுவிஸில்) உள்ள நிதியிலும் “புங்குடுதீவு பெருக்குமர புனரமைப்பு, புங்குடுதீவு மயானங்களான “குறிகட்டுவான் முனியப்பபுலம், வல்லன் நாவுண்டான்மலை, ஊரதீவு கேரதீவு, இறுப்பிட்டி கேரதீவு, மணற்காடு” ஆகியவற்றை புனரமைப்பதெனவும் ஏகமனதாக தீர்மானித்து உள்ளோம்.

வரலாற்று சிறப்புமிக்க “புங்குடுதீவு பெருக்குமரம்”
இலங்கையின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல்” முட்புதர்கள் அடங்கிய பற்றைக்காடாக இருந்த நிலையில், “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” மூன்றுமாதத்துக்கு முன்னரும், அதுக்கு முன்னரும் நடைபெற்ற நிர்வாகசபை மற்றும் ஒன்றிய உறுப்பினர்களின் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடலை” துப்பரவு செய்து, அதனைச் சுற்றி “அழகுமிகு பூங்கா” போன்று அமைத்து, அங்கு வரும் உல்லாசப் பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் தரிசித்து செல்லும் வகையில் புனரமைப்பதென முடிவெடுத்து, கடந்த சிவராத்திரி தினமன்று (21.02.2020) ஆரம்பித்த வேலைகள் கடந்த மூன்றுநாட்களாக முன்னெடுக்கப்பட்டு, இயந்திரங்கள் மூலம் பற்றைக்காடுகள் அகற்றப்பட்டு, தற்போது சீரமைக்கப்பட்டு உள்ளது..

இதன் தொடர்ச்ச்சியாக “பெருக்குமரத்தை” சுற்றி மரத்துக்கோ, அதன் வேர்களுக்கோ, பாதிப்பு ஏற்படாத வகையில், செம்மண் பரப்பி, செங்கல்கள் பதியப்பட்டு முதல்சுற்று அமைக்கப்பட்டு, இரண்டாவதுசுற்று கிரில்கல்கள் மூலம் அமைக்கப்பட்டு பார்வையாளர்கள் அமரக் கூடிய ஆசனங்கள் அமைக்கப்பட்டு, அங்கு வரும் சிறுவர், குழந்தைகள் ரசிக்கக்கூடிய வகையில் ஊஞசல், ராட்டினம், சறுக்கிவிளையாடும் சர்க்கஸ் போன்றவற்றை அமைத்து (சிறுவர் பூங்கா போன்று) மின்இணைப்புகள், மின்இணைப்புக்கான சிறியதொரு அறை, மலசலகூடம், தண்ணீர்தாங்கி போன்றவற்றை அமைத்து “பலஇலட்சம் ரூபாவில்” முழுமையாகப் புனரமைப்பதென தீர்மானித்து செயல்படுத்துகிறோம்.

§§§§ புங்குடுதீவில் உள்ள மயானங்கள்….

புங்குடுதீவு குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்….
புங்குடுதீவு குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானத்தில் எரிகொட்டகை, கிணறு அமைத்தல், மண்டபம் புனரமைப்பு போன்ற வேலைகள் நடைபெறவுள்ளன..

புங்குடுதீவு வல்லன் நாவுண்டான்மலை மயானம்..
புங்குடுதீவு வல்லன் நாவுண்டான்மலை மயானத்தில் எரிகொட்டகை, கிணறு, மண்டபம் புனரமைப்பு போன்ற வேலைகள் நடைபெறவுள்ளன..

புங்குடுதீவு மணற்காடு (கன்னகைபுரம்) மயானம்….
புங்குடுதீவு மணற்காடு (கன்னகைபுரம்) மயானத்தில் எரிகொட்டகை அமைத்தல், கிணறு அமைத்தல் (தற்போதைய கிணறு மூடப்பட்டு உள்ளது), மண்டபம் திருத்தல் போன்ற வேலைகள் நடைபெறவுள்ளன..

புங்குடுதீவு ஊரதீவு கேரதீவு மயானம்…
புங்குடுதீவு ஊரதீவு கேரதீவு மயானத்தில், எரிகொட்டகை, கிணறு புதுப்பித்தல், மேல்கட்டு கட்டுதல் போன்ற வேலைகள் நடைபெறவுள்ளன..

புங்குடுதீவு இறுப்பிட்டி கேரதீவு மயானம்…
புங்குடுதீவு இறுப்பிட்டி கேரதீவு மயானத்தில், எரிகொட்டகை திருத்தல், கிணறு அமைத்தல், மண்டபம் திருத்தல் போன்ற வேலைகள் நடைபெறவுள்ளன.. (§§ மேற்படி மயானத்தை பிறிதோர் அமைப்பு செய்யவுள்ளதாக அறிகிறோம், அது உண்மையாயின் இத்திட்டம் எம்மால் நடத்தப்படாது)

“பொதுச்சபை ஒன்றுகூடல்”…
இவ்வருட ஏப்ரல் மாதம் இறுதிவாரத்தில் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” பொதுச்சபையைக் கூட்டி, புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதெனவும் ஏற்கனவே தீர்மானித்து இருந்த போதிலும், ஒன்றிய முக்கியஸ்தர் ஒருவரின் குடும்ப நிகழ்வு அவ்வாரம் உள்ளதினால் ஒருவாரம் பிற்போட்டு (மே மாதம் முதல் வாரம்) “பொதுச்சபையைக் கூட்டுவதெனவும்” தீர்மானிக்கப்பட்டது.

“பொதுச்சபையில் புதிய நிர்வாகசபைக்கு” தெரிவாவோருக்கான வேண்டுகோள்…
அதாவது..
1) எக்காலகட்டத்திலும் புங்குடுதீவு ஒன்றியத்துக்குள் அரசியல் (சார்பு அரசியல்) இருக்கக் கூடாது.
2) “புங்குடுதீவின் அபிவிருத்திக்கென” புங்குடுதீவு மக்களிடம் சேர்க்கும் எந்தவொரு நிதியும் (குறிப்பாக சந்தாப் பணம்) புங்குடுதீவில் உள்ள மக்களின் வளமான வாழ்வுக்கும், புங்குடுதீவின் அபிவிருத்திக்கும் “மட்டுமே” பயன்படுத்தப்படும்.
3) ஒன்றியத்தால் சுவிஸில் நடாத்தப்படும் எந்தவொரு விழாக்களோ, கூட்டங்களோ ஒன்றியத்தின் நிதியில் இருந்து ஒரு சதமேனும் எடுக்காமல், அதுக்கென தனித்து மக்களிடம் நிதி சேர்த்தோ அன்றில் ஒன்றிய முக்கியஸ்தர்கள் பங்களித்தோ செய்ய வேண்டும்.

இந்த மூன்று கோரிக்கைகளையும் ஏற்று நடத்தும் எவராயினும் புதிய நிர்வாக சபைக்கு தெரிவு செய்யப்பட வேண்டுமெனும் கோரிக்கை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சுமார் ஏழுமணியவில் அமைதி வணக்கத்துடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.

“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.

24.02.2020

DAN NEWS

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பழமைவாய்ந்த பெருக்குமரம் காணப்படும் சுற்றாடல், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தினரால் சிரமதானம் செய்யப்பட்டுள்ளது

Gepostet von DAN News am Samstag, 22. Februar 2020

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஆரம்ப நிகழ்வு..! (படங்கள் & வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − one =

*