;
Athirady Tamil News

தீர்க்கப்படாத சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய முறுகல், முன்னாள் தலைவர் உதயன் குமுறல்.. (நடந்தது என்ன?)

0

தீர்க்கப்படாத சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய முறுகல், முன்னாள் தலைவர் உதயன் குமுறல்.. (நடந்தது என்ன?)

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தின் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்கும் வகையில், “பொதுச்சபையை உடன் கூட்டுமாறு”, (இம்மாத முடிவுக்குள்) பொதுமக்கள், மற்றும் ஆலய அடியார்கள் போன்றோரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையானது, முருகன் ஆலய தற்போதைய நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் சிலரின் முயற்சியினால் “கொரோனா சூழ்நிலையெனக்” காரணம் காட்டி, ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது..

இதேவேளை சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தின் தற்போதைய பிரச்ச்சினைகளை சுட்டிக்காட்டியும், தவறுகளை எவ்வாறு தீர்க்க வேண்டுமெனும்? ஆதங்கத்தையும் “குறுந்தகவல்” மூலம் ஆலயத்தின் முன்னாள் தலைவர் திரு.உதயகுமார் கொட்டித் தீர்த்துள்ளார்.

இவர் இதே ஆலயத்தின் இதுக்கு முன்னைய நிர்வாக சபையில் தலைவராக இருந்தவர் என்பதும், ஆலயத்தின் வளர்ச்ச்சியில் ஆரம்பம் முதல் செயலாற்றி வருபவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சுமார் ஒருவாரத்துக்கு முன்னர் தற்போதைய நிர்வாகத்துக்கு அனுப்பிய கடிதமானது (குறுந்தகவலானது) “அதிரடி” இணையத்துக்கு பிரத்தியேகமாகக் கிடைக்கப் பெற்ற போதிலும், மக்களுக்கு உண்மை நிலை தெரிய வேண்டுமெனும் நோக்கில் இதில் பிரசுரித்து உள்ளோம்.
(தெரிவிப்பது நாம், தீர்மானிப்பது நீங்கள்)
*********************

மதிப்பிற்குரிய பேர்ண் முருகன் ஆலய நிர்வாகசபை உறுப்பினர்களின் கவனத்திற்கு,

பேர்ண் முருகன் ஆலய 2021 ஆம் ஆண்டு பொதுச் சபைக் கூட்டம் ஒத்திவைப்பிற்கான கடிதம் கிடைத்தது. நன்றி.
மேலும் ஆலய வளர்ச்சியினைக் கருத்திற் கொண்டு எனது சில கருத்துக்களை உங்கள் முன் வைக்கும் நிலைமைக்குத் தள்ளப் பட்டுள்ளேன். 1992ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை ஆலய சம்பந்தமான உள் விடயங்கள் வெளிவருவது வழமையாக இருந்தாலும், தற்போது வழமைக்கு மாறாக அதிக விடயங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இது ஆலய வளர்ச்சியைப் பாதிக்கும். இதற்கான தீர்வைப் பெற முயற்சிப்பது ஆலய நிர்வாகத்தின் கடமையாகும்.

புலம்பெயர் தேசத்தில் நாம் வாழும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக எமது ஆலயங்களை அமைத்து, அத்துடன் வேறு சில கலாச்சாரம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளையும் செய்து வருகின்றோம். அந்த வகையில் எமது ஆலய சட்டங்களை முக்கியமாக ஆலய நிர்வாகமும், அத்துடன் பொதுமக்களாகிய நாமும் மதித்து நடக்க வேண்டியது எமது கடமையாகும்.

அந்த வகையில் முக்கியமாக ஆலயத்தில் நடைபெறும் பூஜைகள், விழாக்கள் போன்ற வற்றிக்கான கட்டணங்கள் பொதுச்சபையில் தீர்மானித்ததின்படி தெரிந்தவர் தெரியாதவர் என்ற வேறுபாடின்றி அனைவரிடமும் ஒரே மாதிரியாக அறவிடப்படல் வேண்டும். நான் நிர்வாகத்தில் அங்கம் வகித்த 2016, 2017, 2018 ஆம் ஆண்டில் இக் கட்டணங்கள் சம்பந்தமாகவும், ஆலயத்திற்கு வரும் அடியவர்களுக்கு எவ்வித பாகுபாடும் காட்டாமல் எல்லோருக்கும் பொதுவான ஆலயம் என்பதை நிலை நிறுத்தி சில நடைமுறைகளை அமுல்படுத்தியதில் எனது பங்கு எந்த அளவிற்கு இருந்தது என்று உங்களில் பல பேருக்கு தெரிந்து இருக்கலாம் . (தற்போதைய நிலையில் நீங்கள் இதை மறுக்கலாம் ஆனால் உங்கள் மனச்சாட்சிக்கு இதன் உண்மைத்தன்மை தெரியும்.)அதில் ஓரளவு வெற்றியையும் ஆலயம் பெற்றிருந்தது. ஆனாலும் நான் தனிப்பட்ட ரீதியில் பலரின் மனக் கசப்புகளைப் பெற்றிருந்தேன்.

எந்த சட்டதிட்டங்களை நிலைநிறுத்த நாம் முயற்சி எடுத்தோமோ அந்த சட்ட திட்டங்கள் தற்போது தளர்வடைந்து மீண்டும் பழைய நிலைக்குச் செல்வது போலத் தோன்றுகிறது. மேலும் உதாரணமாக ஒரு விடயத்தை குறிப்பிட விரும்புகின்றேன். பொதுச்சபையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள கணக்குப் பரிசோதகர் மூவரையும் ஒட்டுமொத்தமாக இடைநிறுத்தியது அல்லது அவர்களின் கடமையை செய்ய விடாது தடுத்து வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.

கணக்குப்பரிசோதகர்கள் மூவரும் என்ன தவறு விட்டிருந்தாலும், அவர்களுக்கான நடவடிக்கை எடுக்கும் உரிமை எமது ஆலய யாப்பின்படி எனக்கு தெரிந்த வரை பொதுச் சபைக்குத் தான் உள்ளது. ஆதலால் இதற்கான தற்காலிக தீர்வைச் சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியாக பேசித் தீர்க்கலாம். அல்லது அடுத்த பொதுச்சபை கூட்டத்தில் இதற்கான நடவடிக்கையை எடுக்கலாம்.

அதைவிடுத்து ஆலயம் சார்பாக நீதிமன்றம் செல்வது ஆலய பணத்தை விரயமாக்குவதுடன், நமது ஆலயத்தில் இதுவரை காலமும் இடம்பெற்ற சட்டமீறல்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப் படுமாயின் அது ஆலயத்தின் எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்கும்.

ஆகவே ஆலயம் சார்பாக நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர்த்து சந்தர்ப்பம் ஏற்படும் போது அடுத்தடுத்த மாதங்களில் பொதுச் சபையைக் கூட்டி இதற்கான தீர்வைப் பெற முயற்சிக்கலாம். இதை எழுத உனக்கு என்ன உரிமை உள்ளது என நீங்கள் கேட்கலாம்.

1992ஆம் ஆண்டு சித்திரை 13ஆம் தேதி ஆலயம் ஆரம்பித்த நாள் தொடக்கம் இன்றுவரை பல குடும்பங்களினதும், பொதுமக்களினதும் பண உதவி மற்றும் சரீர உதவியினாலும் தான் இவ் ஆலயம் இன்று வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் 2015ஆம் ஆண்டின் இறுதியில் ஆலயம் என்ன நிலையில் இருந்தது என்று உங்களிற்கு நன்றாகத் தெரியும்.

2015இல் தலைவர் பதவிக்கு பலபேர் தெரிவு செய்யப்பட்டும் எவருமே முன்வரவில்லை. அப்படி இருந்த ஆலய நிலைமையை மாற்றி 2016, 2017,2018 ஆலய வரவில் (ca 1.7 mio) செலவு (6.5லட்சம்) போக மிகுதிப் பணம் கிட்டத்தட்ட 10 லட்சம் சுவிஸ் பிராங்குக் மேல் பழைய கடன்(2015 க்கு முந்திய) செலுத்தப்பட்டது. ( Bankamortisation + Zins, Gemeindeabrechnungen, Rechnungen vom Betreibungsamt, Architektenrechnun und andere diverse Rechnungen)

2016ஆம் ஆண்டு இறுதியில் வந்த வருமானத்தை வைத்து மதிப்பீடு செய்ததில் வருடம் தோறும் Bank Amortisation, Zins செலுத்தி மிகுதிப் பணத்தில் privatedarlehen என்று சொல்லப்படுகின்ற தனிநபர் கடன் (கிட்டத்தட்ட 5 இலட்சம் சு.பிராங்) 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் செலுத்தி முடிக்கலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டது.

ஆனால் இன்றுவரை தனிநபர் கடன் எவ்வளவு திருப்பிச் செலுத்தப்பட்டது? ஆலய வருமானம் எதிர்பார்த்ததை விட கூடவா? அல்லது குறையவா?மதிப்பீடு செய்யப்பட்டது போன்று இவ்வருட இறுதிக்குள் தனிநபர் கடன் திருப்பிக் கொடுக்க முடியுமா? முடியாவிடின் அதற்கான காரணம் என்ன? இது போன்ற வினாக்களுக்கான விடையைத் தயவு செய்து அடுத்த பொதுச்சபை கூட்டத்தில் தெளிவுபடுத்தினால் வரவேற்கத்தக்கது.

மேலும் இது சம்பந்தமான எனது ஆதங்கத்தை தங்களிற்கு நேரடியாக எடுத்துக் கூறுவது தான் சிறந்தது எனக் கருதி இக் குறுஞ்செய்தியை தங்களுக்கு அனுப்பி உள்ளேன். இது எனது தொலைபேசி இலக்கத்தில் இருந்து அனுப்பியுள்ளேன். வேறு யாரேனும் இதற்குள் வேறு விடயங்களைச் சேர்த்து weiterleiten செய்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.

நன்றி
த.உதயகுமார்
23.03.2021 Wichtrach

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய பொருளாளர் தூக்கி எறியப்பட்டார்.. செயலாளர் விலகல்?.. நடந்தது என்ன??

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய செயலாளர் திடீர் விலகல்.., பொருளாளரை வெளியேற்ற முடிவு(?).. நடப்பது என்ன??

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் மீண்டும் குழப்பம், நடந்தது என்ன?? (படங்கள்)

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் தொடரும் சர்ச்சை!! முற்றுப்புள்ளி வைப்பது யார்?

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் குளறுபடிகள் உச்சகட்டம்… நடந்தது என்ன?

http://www.athirady.com/tamil-news/category/howisthis

You might also like

Leave A Reply

Your email address will not be published.