;
Athirady Tamil News

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாக சபையின்” முதலாவது கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்)

0

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாக சபையின்” முதலாவது கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்)

இன்றையதினம் மாலை ஐந்து மணியளவில் புர்கடோர்ப்பில் உள்ள திரு சுதாகரன் அவர்களின் வாசல்ஸ்தலத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” ஒன்றிய உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் “ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது.

இன்றையதினம் பல நிகழ்வுகள் இருந்ததினால், பலரும் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உள்ள போதிலும், “புதிய நிர்வாக சபை” தெரிவு செய்யப்பட்ட ஒரு மாதத்துக்குள், “ஒன்றியக் கூட்டத்தை” நடத்த வேண்டுமெனும் யாப்பு விதியின்படி இன்றைய கூட்டம் நடைபெற்றது.

இன்றைய கூட்டத்தில் “தவிர்க்க முடியாத காரணங்களினால்” (சுகயீனம், வெளிநாடு சென்றுள்ளமை, கோயில் திருவிழா போன்ற காரணங்களினால்) கலந்து கொள்ள முடியவில்லையென திரு.இரவீந்திரன், திரு.சஞ்சய், திரு.சதானந்தன், திரு.சதீஷ், திரு.வடிவேலு, ஆகியோர் அறிய தந்து இருந்தனர்.

மேற்படி கூட்டமானது ஒரு நிமிட அமைதி வணக்கத்துடன் ஆரம்பிக்கப் பட்டது. செயலாளரின் கடந்த கூட்ட அறிக்கைக்கு பின்னர், பொருளாளர் திரு.அ.கைலாசநாதன் (குழந்தை) அவர்களின் இவ்வருட கணக்கறிக்கை வாசிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்பின்னர் கலந்து கொண்டோரில் சிலர், தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

குறிப்பாக கல்விப் பொறுப்பாளர் திரு.இலக்சுமணன் அவர்கள் “கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமையில் வைத்தாலே எல்லோரும் கலந்து கொள்ளக் கூடியதாக இருக்கும், ஆகவே இதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டதுடன், நாம் எதை செய்தாலும், ஊரில் உள்ளவர்களும் ஒத்துழைக்கணும் என்பதை எடுத்துக் கூறினார். ஏனெனில், தான் தனிப்படட ரீதியாக பல விடயங்கள் செய்ததையும், ஆயினும் ஊரில் செய்யும் எந்தவொரு காரியத்துக்கும், ஊரில் உள்ளவர்கள் அக்கறையுடன் ஒத்துழைப்பது இல்லை என்பதையும், தமக்கு பணம் கிடைத்தால் மட்டும் காணும் என்று இருப்பதை காணக் கூடியதாக இருந்ததை” குறிப்பிட்டு உரையாடினார்.

அதேபோல் திரு.வசந்தன் உரையாற்றும் போது, கல்விக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் எமது ஊரில் உள்ள குறைபாடே, எமது சமுதாயத்தில் அவர்கள் (கல்வி கற்றவர்கள்) தங்கி வாழ்வது இல்லை எனவும், சமுதாய அக்கறை அங்குள்ள புத்திஜீவிகள் மத்தியில் குறைந்து கொண்டே போகிறது, இதனாலேயே பல தவறுகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல் திரு.குமார் உரையாற்றும் போது, ஒன்றிய நிதியை சரியான முறையில், உண்மையான தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், அத்துடன் அங்குள்ளவர்களும் அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

திரு.சௌந்தரராஜன் உரையாற்றும் போது, “அங்குள்ளவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு எந்தவித அக்கறையும் இல்லை எனவும், வெளிநாட்டில் உள்ளவர்கள் எங்கிருந்தோ அள்ளுகிறார்கள், தமக்கு தரட்டும் எனும் நோக்கிலேயே வாழ்கிறார்கள் எனவும் குறிப்பிட்டதுடன், ஒன்றியத்தின் நடவடிக்கைகளை ஊரில் மேற்கொள்ளும் போது, அங்குள்ள பலரிடம் கேட்டு முடிவெடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இதன் பின்னர் நிர்வாகசபை எடுத்த தீர்மானங்கள் ஒவ்வொன்றாக ஒன்றிய உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டு, வாதப் பிரதிவாதங்களின் பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1) “செயற்பாடின்மை, ஒழுங்கின்மை”

சுவிஸ் ஒன்றிய நிர்வாகசபை மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் எவராயினும் எந்தவித அறிவித்தலுமின்றி தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்கு மேலாக, கூட்டத்துக்கு சமூகம் அளிக்காதவிடத்திலும், எந்தவித ஒன்றிய செயற்பாடும் இல்லாதவிடத்திலும்.. கூட்டத்தைக் கூட்டி, அவர்கள் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, புதிதாக தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

2 ) “இணையத்தின் ஒன்றியம்”

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்துக்கென, ஒன்றியத் தலைவரினால் சுமார் நான்கு வருடத்துக்கு முன்னர் உருவாக்கப்படட “இணையத்துக்கு” கடந்த இரண்டு வருடமாக எந்தவித பணமும் கொடுப்படவில்லை என்பதுடன், ஒன்றிய நிதியை பயன்படுத்த முடியாத காரணத்தினாலும், அந்த இணையத்தை “சுவிஸ் ஒன்றியத்துக்காக” தொடர்ந்தும் அவரது பொறுப்பிலேயே விட்டு நடத்துவது எனவும்,

எதிர்காலங்களில் அவர் (திரு.ரஞ்சன்) பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிடடாலும் ஒன்றியத்துக்காக (ஒன்றியத்தின் செய்திகளையும் பிரசுரிக்கும் வகையில்) அந்த இணையத்தை பயன்படுத்த வேண்டுமெனும் கோரிக்கையுடன் அவரது பொறுப்பிலேயே தொடர்ந்தும் விடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

3 ) “பொன்னன் கிணறு”

பொதுமக்கள் பாவிக்கும், “பொன்னன் கிணறு” முழுமையாக புதிதாகக் கட்டித் தரும்படி, சுமார் இருபத்தைந்து குடும்பம் கையெழுத்திட்டு முன்வைத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு, மிகவிரைவில் அதனைக் கட்டிக் கொடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை முன்னைய காலத்தில், இதுவோர் தனிப்பட்டவரின் கிணறாக இருந்தது குறித்தும் வாதப் பிரதிவாதம் நடைபெற்றது. இருப்பினும் இக்கிணறை எவரும் உரிமை கோர மாட்டார்கள் எனவும், பொதுமக்களின் நன்மை கருதி இதனை உடன் செய்ய வேண்டும் எனவும், அப்படி ஒரு பிரச்சினை வந்தால், அந்த செலவை தான் ஒன்றியத்துக்கு தருவதாகவும் செயலாளர் திருமதி.சுதாகரன் உறுதிமொழி தந்ததை அடுத்து அக்கிணறை “சுவிஸ் ஒன்றியத்தின்” செலவில் கட்டிக் கொடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

4 ) “சர்வோதயத்துக்கு வழங்கிய தண்ணீர் தாங்கி”

அங்குள்ள தண்ணீர் பிரச்சினை குறித்தும், புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் பெயரில் சர்வோதயத்துக்கு வழங்கிய தண்ணீர் தாங்கியால் உள்ள நன்மைகள், பிரச்சினைகள் குறித்தும் வாத பிரதிவாதம் மேற்கொள்ளப்பட்டு..,

“ஏற்க்கனவே பொதுச்சபையில் தீர்மானித்ததின்படி இதுக்குரிய விளக்கத்தை திரு.இரவீந்திரன், திரு.ஸ்ரீதாஸ் ஆகியோரே தெரிவிக்க வேண்டுமெனவும், ஆயினும் திரு.இரவீந்திரன் அவர்கள் நாட்டில் இல்லாதபடியால், அவர் வந்ததும் கதைத்து முடிவெடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

5 ) “புங்.கமலாம்பிகை வித்தியாலத்துக்கு குடிநீர் விநியோகம்”

வெளிநாட்டு ஒன்றியம் ஒன்றால், “குடிநீர் வழங்கியமைக்கான” நிதி கடந்த ஏழு மாதமாக செலுத்தப்படாததினால், புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டு விட்டதாகவும், இதனை சுவிஸ் ஒன்றியம் நிறைவேற்றி தருமாறு “கமலாம்பிகை பழைய மாணவர்கள்” சார்பாக மூவர் கையெழுத்து வைத்து தந்த கோரிக்கையும் வாதத்துக்கு எடுக்கப்பட்டு..,

சுவிஸில் புங்.கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஒன்று இருக்கக் கூடியதாக, தன்னிச்சையாக “புங். சுவிஸ் ஒன்றியம்” தலையிடுவது பிழை எனவும், இந்த கோரிக்கையை முதலில் பழைய மாணவர் சங்கத்திடம் முன்வைத்து, அவர்களால் முடியாவிடில் “தம்மால் முடியாதென” எழுத்து மூலம் தந்தால் மட்டுமே, சுவிஸ் ஒன்றியம் தலையிட்டு தீர்வு காணுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

6 ) “புரொஜெக்ட்டர் (திரை)”

தமது கல்வித் தேவைக்காக (முக்கியமாக சுகாதார பாடத்துக்காக) புங்குடுதீவில் உள்ள அனைத்து பாடசாலைக்கும் உதவும் முகமாக ஒரு புரொஜெக்ட்டர் வாங்கி தருமாறும், இதனை பொதுவாக ஒரு பாடசாலையில் வைப்பதுடன், தேவையான நேரம், தேவையான பாடசாலைகள் பயன்படுத்தும் வகையில் செயல்படுவதாகவும் முன்வைத்த கோரிக்கை வாத பிரதிவாதங்களின் பின்னர்..,

அனைத்து பாடசாலை அதிபர்களும் “உடன்பட்டு செயல்படுவோமென” கையெழுத்து வைத்து தந்தால், சுவிஸ் ஒன்றியத்தால் வாங்கிக் கொடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை இதனை அரச செலவில் பெறும் வகையில் தான் சிலருடன் உரையாடிப் பார்ப்பதாகவும், முடியாவிடில் மட்டுமே ஒன்றிய நிதியை பயன்படுத்த வேண்டுமெனவும் தலைவர் திரு.ரஞ்சன் அவர்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

7 ) “மின்விளக்கு போடும் விடயம்”

மடத்துவெளி, ஊரதீவு பிரதேசங்களில் “மின்விளக்கு போடும் விடயம்” தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இதுபோன்ற விடயங்களை அந்தந்த பகுதி மக்களே முன்னின்று செயல்படுத்த வேண்டும், ஒன்றிய நிதியை இதுக்கு பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதென பெரும்பான்மையானோர் கருத்துத் தெரிவித்த போதும்,

“இந்த விடயம் தொடர்பாக, தான் வடமாகாண சபை உறுப்பினர் திரு.விந்தன் ஊடாக கதைத்து, அரச நிதி மூலம் நிறைவேற்றி தருவதுக்கு முயற்சிக்கிறேன்” என ஒன்றிய தலைவர் திரு.ரஞ்சன் தெரிவித்தார்.

(நேற்றைய கூட்டத்தின் போது வடமாகாண சபை உறுப்பினர் திரு.விந்தன் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலையிலும், இன்றையதினம் ஒன்றிய தலைவர் திரு.ரஞ்சன், அவருடன் மீண்டும் தொடர்பு கொண்டு உரையாடிய போது “இதனை பிரதேச சபை ஊடாகவே செய்ய வேண்டும் எனவும், புங்குடுதீவு பிரதேச சபை உறுப்பினர்கள் ஊடாக கதைத்து செய்து தருவதாகவும், நாளை விபரமாக தெரிவிப்பதாகவும்” குறிப்பிட்டார்.)

மாலை ஏழு மணியளவில் அமைதி வணக்கத்துடன் கலந்துரையாடல் இனிதே நிறைவு பெற்றது.

(** முக்கிய குறிப்பு: இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மாற்றுக்கருத்து இருப்பின், அதனை எழுத்துமூலம் மூன்று தினங்களுக்குள் நிர்வாகசபைக்கு கிடைக்கக் கூடியவகையில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்) நன்றி..

“மக்கள் சேவையே மகேசன் சேவை”

இவ்வண்ணம்..

திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து.
10.06.2018

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 2 =

*