;
Athirady Tamil News

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், இன்றைய கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்)

0

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், இன்றைய கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்)

நேற்றையதினம் 23.09.2018 மாலை ஐந்து மணியளவில் புர்கடோர்ப்பில் உள்ள திரு சுதாகரன் அவர்களின் வாசல்ஸ்தலத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” ஒன்றிய உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் “ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது.

இன்றைய கூட்டத்தில் “தவிர்க்க முடியாத, தகுந்த காரணங்களினால்” (சுகயீனம், வெளிநாடு சென்றுள்ளமை, போன்ற காரணங்களினால்) கலந்து கொள்ள முடியவில்லையென திரு.சஞ்சய், திரு.பன்னீர், திரு.இலக்சுமணன், திரு.ராஜா ஆகியோர் அறிய தந்து இருந்தனர்.

மேற்படி கூட்டமானது ஒரு நிமிட அமைதி வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. செயலாளரின் கடந்த கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர், பொருளாளர் திரு.அ.கைலாசநாதன் (குழந்தை) அவர்களின் இவ்வருட கணக்கறிக்கை மற்றும் தற்போது புங்குடுதீவில் நடைபெற்று வரும் “கிணற்று வேலைகளின்” முழுமையான செலவுக் கணக்கறிக்கை வாசிக்கப்பட்டதுடன், கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவராலும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதன்பின்னர், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், சமாதான நீதிவானும், முன்னாள் அதிபருமான “சமூக சேவகர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் அவர்கள் இலங்கையில் இருந்து தொலைபேசி மூலம் “கிணற்று வேலைகள் தொடர்பாகவும், புங்குடுதீவின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும்” அனைவருடனும் உரையாடி தெளிவுபடுத்தினார்.

இதன் பின்னர் நிர்வாகசபை எடுத்த தீர்மானங்கள் ஒவ்வொன்றாக ஒன்றிய உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டு, வாதப் பிரதிவாதங்களின் பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் கலந்து கொண்டோரினால் புங்குடுதீவின் புனரமைப்பு நடவடிக்கை மட்டுமல்லாது, இங்குள்ள நிர்வாக, செயற்குழு உறுப்பினர்கள் குறித்தும் வாதப் பிரதிவாதம் நடைபெற்று தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

1) “செயற்பாடின்மை, ஒழுங்கின்மை”

சுவிஸ் ஒன்றிய நிர்வாகசபை மற்றும் செயற்குழு மற்றும் ஆலோசனைச்சபை உறுப்பினர்கள் எவராயினும் எந்தவித அறிவித்தலுமின்றி தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்கு மேலாக, கூட்டத்துக்கு சமூகம் அளிக்காதவிடத்திலும், எந்தவித ஒன்றிய செயற்பாடும் இல்லாதவிடத்திலும்.. அவர்கள் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, புதிதாக தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

2) **நிர்வாக & செயற்குழு & ஆலோசனை சபை உறுப்பினர்கள் தொடர்பாக..

கடந்த கூட்டத்திலேயே தீர்மானித்தது போல், எந்தவொரு செயற்பாடும் இல்லாமல், கூட்டங்களிலும் கலந்து கொள்ளாமல் “பெயருக்காக” இருக்கும் எவராயினும் அந்த பொறுப்பில் (பதவியில்) இருந்து நீக்கப்பட வேண்டும் எனும் தீர்மானம் கலந்து கொண்ட அனைவராலும் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது.

இவர்கள் பொதுச்சபை கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு இருந்தாலும், செயற்பாடுகளோ, ஒத்துழைப்போ இல்லாமல் இருப்பவர்களை “பெயருக்காக” தொடர்ந்து பொறுப்பில் வைத்து இராமல், அவர்களை ராஜினாமா செய்யுமாறு கோருவது அல்லது நீக்குவதென அனைவராலும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இன்னுமோர் கூட்டத்தின் பின்னரும் இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்தால், இந்த முடிவை அமுல்படுத்த வேண்டும் எனவும், இந்த முடிவை இன்றே பகிரங்கத்தில் அறிவிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

3) **சர்வோதயத்துடனான குடிதண்ணீர் பிரச்ச்சினை…

இதன்போது சுவிஸ் ஒன்றியத்தில் வழங்கப்பட்ட “தண்ணீர் பவுசர்” குறித்தும், குடிதண்ணீர் பிரச்ச்சினை குறித்தும் விவாதிக்கப்பட்டது. எந்தவொரு முறைப்பாட்டையும் எழுத்து மூலம் தந்தால் சம்பந்தப்பட்டவர்களின் மூலம் பதில் பெற்று தரப்படுவதுடன், உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுமென சம்பந்தப்பட்டவர்களால் பதில் அளிக்கப்பட்டது.

4) ** ஒன்றியத்தின் நிதி நிலைமை..

புங்குடுதீவு பகுதிகளில் தொடர்ச்ச்சியாக “பொதுக் கிணறுகளை” புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்கப்படும் நடவடிக்கை “சுவிஸ் ஒன்றியத்தால்” மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், ஒன்றியத்தில் நிதி இல்லாத சூழ்நிலை குறித்தும் பிரஸ்தாபிக்கப்பட்டது. இதுக்கு உடனடியாக “ஒன்றிய உறுப்பினர்களை” இவ்வருட சந்தாவை கட்டுமாறு கேட்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
(ஆகவே அன்பான சுவிஸ் புங்குடுதீவு உறவுகளே உங்களின் இவ்வருட சந்தாவை உடன் செலுத்தி எமது “ஊர் நோக்கிய” செயற்பாட்டுக்கு கை கொடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.)

5) ** சுவிஸ் ஒன்றியம் குறித்து பிரஸ்தாபிப்பது, கதைப்பது தொடர்பாக..

ஊரில் இருந்தோ அன்றில் வேறு நாடுகளில் இருந்தோ வரும் ஊர் பிரமுகர்களுடன் நடைபெறும் “தனிப்பட்ட கூட்டங்களில்” ஒன்றியம் குறித்து பிரஸ்தாபிக்க அல்லது கதைக்க முதல், ஒன்றியத் தலைமைக்கோ, நிர்வாகத்துக்கோ தமது கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமென கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஏனெனில் இதன் மூலமே ஒன்றியம் சார்பான பதில்களை, நாம் தெரிவிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

6) **புங்குடுதீவின் வரவேற்பு வளைவு தொடர்பாக..

புங்குடுதீவின் ஆரம்பத்தில் (வாணர் தாம்போதியில்) “புங்குடுதீவுத் தாய் வரவேற்கிறாள்” எனும் வரவேற்பு வளைவு அமைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இது குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஒன்றியத்தின் கல்விப் பொறுப்பாளர் திரு.இலக்சுமணன் அவர்கள், வேறு இடத்துக்கு சென்ற காரணத்தினால், நேரில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையினால், தொலைபேசி மூலம் உரையாடினார். இதன்போது “ஒன்றியத்தால் மேற்கொள்ளும் “கிணற்று புனரமைப்பு” வேலைகள் பிரயோசனமான, மக்களுக்கு பயன்படும் நடவடிக்கை எனவும், தண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுத்து எமது செயல்பாடு அமைய வேண்டுமெனவும்” கேட்டுக் கொண்டார்.

மாலை ஏழு மணியளவில் அமைதி வணக்கத்துடன் கலந்துரையாடல் இனிதே நிறைவு பெற்றது.

(** முக்கிய குறிப்பு: இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மாற்றுக்கருத்து இருப்பின், அதனை எழுத்துமூலம் மூன்று தினங்களுக்குள் நிர்வாகசபைக்கு கிடைக்கக் கூடியவகையில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்) நன்றி..

“மக்கள் சேவையே மகேசன் சேவை”

இவ்வண்ணம்..
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து.
24.09.2018

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*