;
Athirady Tamil News

சில நினைவுகள்.. “கணபதிப்பிள்ளை தனபாலசுப்பிரமணியம்” -சூரிச் முருகன் கோயில்.

0

ஸ்ரீ சிவசுப்பிரமணியர் தேவஸ்தானம்
SRI SIVASUBRAMANIAR TEMPEL ZÜRICH

கணபதிப்பிள்ளை தனபாலசுப்பிரமணியம்
சில நினைவுகள்……

1984ஆம் ஆண்டு அமரர் க.தனபாலசுப்பிரமணியம் அவர்கள் தனது புலம்பெயர் வாழ்வை சுவிசில் ஆரம்பித்தார். அவர் தன் வாழ்நாளில் சுயநலமற்ற தன் சேவையாலும் மாறாத அன்புடனும் கலங்காத தெளிவுடனும் பதித்த தடையங்கள் அழியா இடம் பிடித்தவை.

மானிடத்தின் வாழ்வாங்கு வாழும் பாதையை செப்பனிடும் பணியாளராக சேவை புரிந்தவர். இவை அனைத்தும் இவரின் அயரா உழைப்பாலும் மற்றோரை நேசிக்கும் பண்பாலும் படைக்கப்பட்ட தடங்களாகும்.

இவர் புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்த காலத்திலும் நாட்டின் மீதும் தேசத்தின் மக்கள் மீதும் மாறாத நேசம் கொண்டதனால் இங்கும் மக்களுக்காக பல முன்னேற்ற காரியங்களை மேற்கொண்டார். 1985ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுவிஸ் தமிழர் சங்கம் சூரிச்சின் செயற்பாட்டில் ஆர்வம் கொண்டு செயற்பட்டதுடன் தமிழ் மக்களின் வாழ்வு சுவிசில் நேர்த்தியாக்க சுவிற்சலாந்தில் சுவிஸ் மக்கள் அமைப்புக்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர். சுவிஸ் தமிழர் கலாச்சார மன்றத்துடனும் அதன் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்தவர்.

தவறு எனப்பட்டதை தைரியமாக எதிர்க்கும் குணம் கொண்ட இவர் மிக சுதந்திரத் தன்மையுடன் வாழ்ந்தவர். உரமிட்டு வளர்த்த உயிர்த்தீயின் தூய்மைச்சுடரொளியில் இப் பிரபஞ்ச நியதிகளைப் பருகியவர்.

இதனால் தான் இவர் தொடர்ந்து சுவிற்சலாந்தில் சைவத்தமிழ் மக்களின் ஆன்மீக செயற்பாட்டிற்காகவும் அவர்களின் கலாச்சார அடையாளங்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தாபன மயப்படுத்தப்பட்ட ஆலய அமைப்பிற்கு முன்னின்று உழைத்தவர்களில் ஒருவரானார்.

சூரிச் அட்லிஸ்வீல் முருகன் கோவில் 1994ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் தர்மகர்த்தாவாக இருந்ததுடன் இவரின் ஆன்மீக ரீதியான அனுபவ முதிர்ச்சி மற்றும் இறை பக்தியின் காரணமாகவும் மும்முறை பரிபாலன சபைத் தலைவாக செயற்பட்டவராவார்.

2006ஆம் ஆண்டு விஸ்தரிக்கப்பட்ட முருகன் ஆலய கருங்கல் மூலஸ்தான விக்கிரகக் கட்டடத்தையும் கும்பாபிசேக நிகழ்வையும் குறுகிய காலத்தில் நிகழ்த்தி முடித்து தன் ஆளுமையையும் செயற்திறனையும் வியக்க வைத்தவர். அது மட்டுமல்லாமல் எமது இன, சமய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய ஆலயம் அமைக்க எடுக்க முயற்சியும், இந்து ஆன்மீக மையம் என்ற ஆன்மீக நிறுவனத்தை உருவாக்கியதையும் மறக்க முடியாது.

எக்காரியத்தையும் உடனே ஏற்றுக்கொள்ளாத இவர், ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவுகளை எவ் இடர் வரினும் தயங்காது துணிச்சலுடன் செய்யும் திறன் படைத்தவர். இவரின் தன்னலமற்ற செயற்பாட்டால் தான் முருகன் கோயில் தரமும் சேவையும் உலகறியப்பட்டது. பிறர் மனம் புண்படாது அனைவரையும் அரவணைத்து செயற்படும் அவரின் பண்பே இவரின் வெற்றியின் காரணமாகும்.

தனமண்ணருடன் நாம் வாழ்ந்த காலமும் அவருடன் இணைந்து பொது விடயங்களில் செயற்பட கிடைத்த சந்தர்ப்பங்களும் எம் வாழ்வில் மறக்க முடியாதவை ஆகும். இவரின் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். “செய்வன திருந்தச் செய்“ எனும் முதுமொழிக்கேற்ப எதிர்கால தீர்க்கதரிசனத்தோடு செயல் பல புரிந்தவர்.

எதிர்க்கருத்துக் கொண்டோரையும் தன் கருத்தால் இணைத்துக் கொண்ட திறன் மிக்க சான்றோன் இவர் எங்கள் மனதில் ஒளிரவேண்டிய வைரச் சிகரம்.. தனமண்ணர் குருவருளும் திருவருளும் கைவரப் பெற்ற தனமண்ணா இறைவழிபாட்பால் நாட்டில் மிக உயர்ந்தவர்.

இவரின் அனைத்து செயற்பாடுகளுக்கும் துணை நின்று உதவிய துணைவியார் துணையிழந்து போனாலும் அவர் புரிந்த நற்கருமங்கள் அவரின் ஆத்மாவை சாந்தி அடைய வைத்து இறைபதம் சேர்க்கும் என்ற ஐயப்பாடற்ற நினைவுகளுடன், சாந்தியடையவும் அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி பிள்ளைகள் உறவினர்களுடன் எங்கள் துயரத்தையும் பகிர்கின்றோம்.

உலக சீவராசிகள் அனைத்துமே அன்பு என்ற ஒன்றிற்காக ஏங்குகின்றன. அன்பில்லாதார் சுயநலமிகள், அன்புடையார் என்பும் கூடப் பொதுச் சொத்து அன்பின் இலக்கணமே தனமண்ணர். அதனால்தான் அவர் தன் சிறு நீரகங்களையும்கூட தானமாக வழங்கிச் சென்றுள்ளார்.

சந்திப்பும் பிரிவும் கூடத்தான்; தொடக்கம் என்பது முடிவும் கூடத்தான்; இவ் எதிர்மறையான தன்மைகள் இயற்கையையின் நியதி.
இதில் இரவு பகலின் எதிரியல்ல – இறப்பும் வாழ்க்கைக்கு எதிரியாக இல்லை; பிறக்கும்போதே இவை நிர்ணயிக்கப்பட்டவை.

அவரது ஆன்மா இறைவன் காலடியில் சாந்தி பெற எல்லாம் வல்ல முருகப்பெருமானை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி

சுவிஸ் அட்லிஸ்வீல், 23.04.2019
ஸ்ரீ சிவசுப்பிரமணியர் தேவஸ்தானம்.

blob:https://www.facebook.com/ace6f16b-aec2-4f3f-979d-c682c33e4b3f

blob:https://www.facebook.com/e054cccf-a7c8-419f-98aa-8203e86e960b

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 1 =

*