;
Athirady Tamil News

“ஊருக்கென சேர்க்கப்பட்ட ஒன்றியத்தின் நிதி, புங்குடுதீவு மக்களின் நல்வாழ்வுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்”… -சொக்கலிங்கம் ரஞ்சன்..!

0

“ஊருக்கென சேர்க்கப்பட்ட ஒன்றியத்தின் நிதி, புங்குடுதீவு மக்களின் நல்வாழ்வுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்”… -சொக்கலிங்கம் ரஞ்சன்..!

“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில், “சுவிஸ் வாழ் தமிழ் மக்களுடன் இணைந்து” கடந்த 25.05.2019 மாலை OBERBURG எனுமிடத்தில் உள்ள “சமூகப் புரட்சியாளர்” அமரர் மு.தளையசிங்கத்தின் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

(மேற்படி விழாவில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் விழா மேடையில் ஆற்றிய உரை இது..)

தான் நேசித்த மக்களுக்காக அறப்போர் தொடுத்து, சமூகத்தின் விழிப்புணர்வுக்காக இலக்கியங்கள் படைத்து, இலட்சிய உறுதியோடு மரணத்தை தழுவிய “சமூக புரட்சியாளர்” ஐயா திரு மு. தளையசிங்கம் அவர்களை மானசீகமாக வணங்கி, வேரும் விழுதும் கலைப்பெருமாலை விழாவை சிறப்பிக்க எங்கள் அழைப்பை ஏற்று பிரதம விருந்தினராக கனடாவில் இருந்து வருகை தந்திருக்கும் பிரபல வர்த்தகரின் புதல்வர், சமூக சேவையாளர், பேராசிரியர் திரு.சி.கனகலிங்கம் ஐயா அவர்களுக்கும், சிறப்பு விருந்தினராக எங்கள் அழைப்பை ஏற்று வருகை தந்திருக்கும், எனது அன்புக்குரிய சமூகசேவையாளர் திரு. எஸ் .கே .சண்முகலிங்கம் அதிபர் அவர்களுக்கும், விஷ்ணு துர்க்கையம்மன் ஆலய குருமணிகள் சரவண பாவானந்த குருக்கள் அவர்களுக்கும், சுக் மாநில ஆலயகுரு பாஸ்கரன் ஐயா அவர்களுக்கும்,

கௌரவ விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் மதிப்புக்குரிய திரு.பாலகணேஷ் அண்ணர், சுவிஸ் பேர்ண் சிவன் ஆலயக் குருக்களில் ஒருவரான திரு.முரளி ஐயா, சமூக சேவையாளர் திருமதி.சிவதாஸ் லிங்கேஸ்வரி, சுவிஸ் பிரபல வர்த்தகர்களான திரு.இ.இரவீந்திரன் (சாய் ட்ரடேர்ஸ்), திரு.இ.ஸ்ரீதாஸ் (இம்போட் தாஸ்) உட்பட பெருந்தகைகளுக்கும், அரங்கு நிகழ்வுகளை வெளிப்படுத்தி விழாவை சிறப்பிக்க வந்திருக்கும் கலைஞர்களுக்கும், விழாவை சிறப்பிக்க வந்திருக்கும் உறவுகளுக்கும் நட்புக்களுக்கும் எனது இனிய வணக்கங்களை கூறிக்கொண்டு எனது உரையை ஆற்ற விழைகின்றேன்.

ஊருக்காய் ஊர் உறவுகள், நட்புக்கள் ஒன்றிணைந்த ஒன்றியத்தில் இணைந்து சேவை செய்வதற்காக வந்த நான், முதலில் இரண்டு வருடமாக ஒன்றியத்தின் உபதலைவராக, பின்னர் சுமார் நான்கு வருடமாக தலைவராக இருந்து என்னாலான பணிகளை செய்திருக்கின்றேன் என்ற திருப்தியோடு உங்கள் முன் வந்து நிற்கின்றேன்.

காலம் அன்று என்னையும், உங்கள் எல்லோரையும் போல ஊரில் இருந்து தூர தேசத்துக்கு பிரித்து வழி அனுப்பியது. வலிகளோடு வந்த நாங்கள், புது வழிகளை கண்டுபிடித்து, உழைப்பினால் உயர்ந்து, நாம் பிறந்த தேசத்துக்கும் உறவுகளுக்கும் எம்மாலான உதவிகளை செய்து வருகின்றோம். அதில் 23 ஆண்டுகளாக ஒன்றியத்தின் ஊடாக பல பணிகளை செய்து வருகின்றோம்.

கல்வி, வைத்தியம், வீதிகள் செப்பனிடல், குடிநீர் வசதி, கிணறுகள், குளங்கள் செப்பனிடல் என்பனவற்றையும் தாண்டி மின்சார வசதி, விளையாட்டு மைதான துப்பரவு, கலைஅரங்குகள் என பலதுறை சார்ந்து எமது பணிகளை செய்து வந்திருக்கின்றோம்.

அதில் அண்மைய காலமாக பல பணிகளை அரசின் உதவிகளோடும் அரசு சார்புள்ள நிறுவனங்களின் உதவிகளோடும், புலம்பெயர் எம்மவர் வியாபார நிறுவனங்களின் உதவிகளோடும் எம் உறவுகளின் உதவிகளோடும் செய்து முடித்திருக்கின்றோம்.

இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றியத்தின் தலைவர் என்ற முறையில் ஊருக்காக செய்த பணிகளுக்கு, எங்களோடு கைகோர்த்து உதவி நின்ற அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேவேளை எங்களுடைய நிர்வாக காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மலர் வெளியீட்டுடன், வேரும் விழுதும் கலைமாலை நிகழ்வும் , சிறுவர்களுக்கான அறிவுப்போட்டியும் செய்து இங்கு நாம் வாழும் சுவிஸ் நாட்டிலும் எமது உறவுகளை ஒன்றிணைத்து ஒற்றுமையாக உறவுகள் ஒன்றிணைவு நிகழ்வை நிகழ்த்தியிருக்கின்றோம். எமது இளம் சிறார்களின் படைப்பாக்கத்தை அரங்குகளில் காணவைத்து உறவுகளை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளோம். விழாக்களில் எமது ஊரையும் தாண்டி, அனைத்து ஊர் உறவுகளையும் இணைத்து விழாக்களையும் நிகழ்வுகளையும் நடத்தி வருகிறோம்.

தூரநோக்கு சிந்தனையில் எழும் எமது பார்வை, ஒன்றியத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளதையிட்டு மனமகிழ்வு கொள்ளும் நான், எமது உறவுகள் அனைவரையும் ஒன்றிணைத்து செயல்படும் பல திட்டங்களை, நிர்வாகசபை உறுப்பினர்களின் உதவியுடன் கொண்டு வந்தோம்..

இதேவேளை பழைய கதைகளை கதைத்து, பிரிந்து நிற்காமல், யார் பிழை விட்டாலும் அதனை சுட்டிக் காட்டும் அதேவேளை, பொதுநலனில் எல்லோரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்பதையே வலியுறுத்தியும் நின்றேன்.

எமது கடந்த சில ஆண்டு செயல்பாட்டில் என்னோடு பல்வேறு வழிகளில் ஒன்றிணைந்து நின்று செயலாற்றிய எனது நெருங்கிய உறவுகள், நண்பர்கள், தோழர்களை என்றும் நன்றியுடன் பார்க்கிறேன். அவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் இலக்கை அடைந்த பல சேவைகளை என்னால் செய்து முடித்திருக்க முடியாது.

அதேவேளை ஊரில் உள்ள கல்விச்சமூகமும் சரி, தனிநபர்களும் சரி தங்களது ஒத்துழைப்பை பல்வேறு சந்தர்ப்பத்தில் சரியாக வழங்காத போதும்; திரு.இளங்கோ அண்ணர், திரு.சண்முகலிங்கம் ஐயா, திருமதி.சிலோ அக்கா, திரு.சதீஷ் போன்ற ஒருசில ஊரில் உள்ள உறவுகளின் ஒத்துழைப்பின் முன்னெடுப்பால் சில சேவைகளை எம்மால் செய்ய முடிந்தது. எதிர்காலத்தில் ஊரில் உள்ளவர்கள் தங்களுக்கு, தாங்கள் வாழும் சமூகத்துக்கு என்ன தேவை? என்பதையாவது எழுத்துமூலம் ஒன்றியத்துக்கு அறியத் தரவேண்டும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

சுவிஸ் ஒன்றியத்தால், கடந்த வருடம் மிகவும் பயனுள்ள பல வேலைத்திட்டங்கள் எம்மால் மேற்கொள்ளப்பட்டது. நமது பிரதேசத்தில் அரசின் ஒத்துழைப்பின்றி எதுவும் செய்ய முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள், இதனைக் கருத்தில் கொண்டு புங்குடுதீவின் நன்மை கருதி, சுவிஸ் ஒன்றியம், முன்னாள் வடமாகாண ஆளுநரின் சந்திப்பினைக் கூட நடத்தி இருந்தது. இதுவோர் அரசியல் சந்திப்போ, அல்லது தனிப்பட்ட இரகசிய சந்திப்போ இல்லை..

ஆனால் அந்த சந்திப்பையும் அரசியலாக்கி, குழப்பமான சூழ்நிலையை சிலர் ஏற்படுத்தி விட்டார்கள். அதுக்கு எமது ஊரை சேர்ந்த ஒருசிலரும் உடந்தையாக இருந்தது எனக்கு மனவேதனையை தந்தது, அதிலும் கவலைக்குரிய விடயமாக எமது ஒன்றியத்தின் பெயரில், அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதோடு இவ்வாறான செயல்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இனிவரும் காலங்களில் எந்தவொரு விடயமாக இருந்தாலும், தனிநபர்களோ அல்லது அமைப்புக்களோ எமது ஒன்றிய நிர்வாக சபையோடு நேரடியாகக் கலந்துரையாடுமாறு இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

இதேவேளை இவ்வருட முடிவுக்குள் புங்குடுதீவில் நெசவாலை அல்லது தொழிற்சாலை அல்லது தொழில் முயற்சி உதவித் திட்டமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம்..

அன்பான உறவுகளே, நண்பர்களே உங்களிடம் இறுதியாக ஒரு வேண்டுகோள் கடந்த கால கசப்பான நிகழ்வுகளையும், நிகழ்கால முரண்பாடுகளையும் மறந்து, எதிர்கால எமது கிராமத்தின் நலனுக்காகவும் கிராம மக்களின் முன்னேற்றத்துக்காகவும் எமது எதிர்கால சிறுவர்கள் குழந்தைகளின் நலனுக்காகவும் எல்லோரும் ஓரணியில் ஒன்றியத்தில் இணைந்து நின்று சேவையாற்ற வேண்டும் என்று கூறிக் கொள்ளும் அதேவேளை..,

“மனிதநேயப் பணி” என்றால் என்னவென்று தெரியாமல், நானோ என்னை சேர்ந்தவர்களோ “பொதுச்சேவைக்கு” வந்தவர்கள் இல்லை என்பதை முதலில் சிலர் புரிந்து கொள்ள வேண்டுமென தயவுடன் தெரிவிக்க விரும்புகிறேன். தனிப்பட்ட ரீதியில் யார் வேண்டுமென்றாலும், எங்கு வேண்டுமென்றாலும், எந்த உலகத்துக்கு வேண்டுமென்றாலும் உங்களின் “மனிதநேய பணியினை” தாராளமாக செய்யுங்கள், இதனை தடுக்க யாரும் முன்வர மாட்டார்கள்.

ஆனால் நான் உட்பட எதிர்காலத்தில் ஒன்றியத்தின் பணிகளை செய்ய முன்வருவோர் அரசியல் கலப்பு, தனிநபர் கலப்புக்கள் இன்றி, ஊரின் பெயரில், ஊரின் நன்மை கருதி உருவாக்கிய “ஊரின் ஒன்றிய நிதியை, ஊருக்காக மட்டுமே” பயன்படுத்தி, பொதுவான நலன் சார்ந்து, சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

முறையான கணக்குவழக்குகளை காலம் தாழ்த்தாது வெளியீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதோடு, ஊரின் பெயரில் உருவாக்கப்பட்ட ஒன்றியத்தின் அங்கத்துவ நிதியையும், பொது நிதியையும் “எமது ஊர்நோக்கிய செயல்பாடுகளுக்கு மட்டுமே” பயன்படுத்த வேண்டும் என்றும்; விழாக்கள், விழா மலர் வெளியீடுகளை பிரத்தியேகமாக நிதி சேகரித்து செய்ய வேண்டும் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.

இதேவேளை அமரர் அம்பலவாணர் எமக்கு மட்டுமல்ல, தீவகத்துக்கே கட்டித் தந்த பாலமும் இருப்பதினால், எவராயினும் தனித்துக் கப்பலோட்டி மட்டுமே புங்குடுதீவுக்கு செல்ல வேண்டும் என்றோ, அன்றில் மற்றவர்களுக்கு கப்பலோட்ட பழக்க வேண்டும் என்றோ, அவசியமில்லை, பாலத்தாலும் சென்று புங்குடுதீவுக்கு தாராளமாக உதவலாம் என்பதையும் புரிந்து நடக்க வேண்டுமென அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இதேவேளை சரியான புரிதலுடன், சரியான முன்னெடுப்போடு ஒன்றியத்தை வழிநடத்த முன்வருபவர்களிடம் ஒன்றியத்தின் எதிர்கால நலனை கையில் அளிக்கும் அதேவேளை, பொறுப்புக்கு வருவோர் நேர்மையுடன், “ஊர்நோக்கி மட்டும்” செயல்படும் சந்தர்ப்பத்தில், எந்த நேரமும் ஒன்றியத்துக்கு உதவிடத் தயாராக உள்ளேன் என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொண்டு என்னோடு இணைந்து பயணித்த அனைவருக்கும் நன்றி கூறிக்கொண்டு, உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன்.

நன்றி, வணக்கம்.
திரு.சொக்கலிங்கம் ரஞ்சன்,
தலைவர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து.

மிகச்சிறப்பாக நடைபெற்ற, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்”, வேரும் விழுதும் விழாவின் “கலைப்பெருமாலை” நிகழ்வு..! (படங்கள்)

பொதுக்கிணறுகளை வெட்டுபவர்கள், சொர்க்கத்துக்கு போவார்கள்.. வாழ்த்துகிறோம்..! -மாகோ சி.கனகலிங்கம். (வாழ்த்துச் செய்தி)

புங்குடுதீவின் அனைத்து வெளிநாட்டு ஒன்றியங்களும் இணைந்து, நீர் தேவையை பூரணப்படுத்த வேண்டும்.. -எஸ்.கே.சண்முகலிங்கம். (வாழ்த்துச் செய்தி)

எம் இன உணர்வுகளை தக்க வைக்கும் பணியானது, எமது தலையாய கடமை.. -பேராசிரியர் கா.குகபாலன் (வாழ்த்துச் செய்தி)

அம்பலவாணர் அரங்கின் மூலம் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” மக்கள் சேவை தொடர வேண்டும்..- “இன்னிசை வேந்தர்” பொன். சுந்தரலிங்கம்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 5 =

*