;
Athirady Tamil News

சிறப்பாக நடைபெற்ற, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” இன்றைய கலந்துரையாடல் கூட்டம்..! (படங்கள்)

0

சிறப்பாக நடைபெற்ற, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” இன்றைய கலந்துரையாடல் கூட்டம்..! (படங்கள்)

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” நிர்வாகசபை உறுப்பினர்களுடனான “கலந்துரையாடல் கூட்டம்” ஒன்றியத்தின் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் தலைமையில், இன்று (24.11.2019) மாலை 05.00 க்கு (17.00) புர்கடோர்ப் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் “தவிர்க்க முடியாத காரணங்களினால்” கலந்து கொள்ள முடியவில்லையென திரு.ரமணன், திரு.பன்னீர், திரு.சதீஷ், ஆகியோர் அறியத் தந்திருந்தனர்.

*** செயலாளர், பொருளாளரின் அறிக்கைகள்…

அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து, முதலில் கடந்த கூட்டறிக்கை செயலாளரினால் வாசிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து “ஒன்றிய பொருளாளர்” திரு.அ.கைலாசநாதன் (குழந்தை) அவர்களினால் இவ்வருட கணக்கறிக்கை வாசிக்கப்பட்டதுடன், கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவராலும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேபோல் ஒன்றியத்தின் இலங்கை வங்கிக் கணக்கில் நான்கு வருட சேமிப்பில் (வட்டியை நோக்கமாகக் கொண்டு) வைப்பில் இடப்பட்ட இருபத்தைந்து இலட்சம் ரூபாவுக்கான பணத்துக்கு வந்த முதல்வருட வட்டி குறித்தும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

வேரும் விழுதும் விழாவுக்கான வரவுசெலவுக் கணக்கறிக்கை….

இவ்வருடம் நடைபெற்ற வரவு செலவுக் கணக்கறிக்கை பொருளாளரின் ஒப்புதலுடன், தலைவரினால் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அதேவேளை, விழாவுக்கும், விழா மலருக்குமென நிதி எழுதி, “இதுவரை தராதோரிடம்” அதனை உடன் பெற்று, நிலுவையாக உள்ள நிதியை நிவர்த்தி செய்யுமாறும், இந்நடவடிக்கையை தலைவர் உடன் மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கு ஆசிரியர் வேதனம்…

புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில் நடைபெறும் கல்விச் சேவையில் ஈடுபடும் ஆசிரியைகளில் ஒருவரின் வேதனத்தை மாதாமாதம் (பத்தாயிரம் ரூபா) சுவிஸ் ஒன்றியம் மூலம் செலுத்தி வருவது அனைவரும் அறிந்ததே.. அந்தவகையில் அடுத்த வருடத்துக்கான (2020) முழுமையான வேதனத்தையும் செலுத்துவதெனவும் அனைவராலும் தீர்மானிக்கப்பட்டது.

புங்குடுதீவு அபிவிருத்தி சங்கத் தலைவர் எஸ்.கே.சண்முகலிங்கம்….

இதனைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து தொலைபேசி மூலம் உரையாற்றிய புங்குடுதீவு அபிவிருத்தி சங்கத் தலைவரும், சமூக சேவகருமான திரு. எஸ்.கே.சண்முகலிங்கம் அவர்கள் “புங்குடுதீவின் தற்போதைய நிலை குறித்து” விளங்கப்படுத்தியதுடன், நிர்வாகசபை உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து தெளிவுபடுத்தினார்.

ஒன்றியத் தலைவரின் உரை….

இதனை தொடர்ந்து இவ்வருடம் பலரும் ஒன்றிய சந்தாவை செலுத்தாமல் இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் சிலர் எழுத்து மூலமும், நேரடியாகவும் (தற்போதைய நிர்வாகம் இல்லாவிடில் பங்களிக்க முடியாதெனத்) தெரிவித்த கருத்துக்களும், இதுகுறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகசபை உறுப்பினர்கள் பலரதும் கருத்தைத் தொடர்ந்து, பதிலளித்த ஒன்றியத் தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன், “இதுபோன்ற கருத்தையே பலரும் சொல்வதை தானும் அறிவேன், என்னிடமே பலரும் கூறி உள்ளனர், அதாவது “நீங்கள் நிர்வாகத்தை விட்டு செல்ல உள்ளதால், நாம் எதுக்கு சந்தாவைக் கட்ட வேண்டும்?” எனும் கேள்வியைக் கேட்கிறார்கள். “இது முற்றிலும் தவறான சிந்தனை, யார் நிர்வாகத்தில் இருந்தாலும், நாமும் இணைந்தே “ஊர் நோக்கிப்” பயணிப்போம், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மூன்று தீர்மானத்தையும் எவரும் மீற முடியாது என்பதை மனதில் கொண்டு எல்லோரும் இணைந்து செயல்படுங்கள்..

அதாவது..
1) எக்காலகட்டத்திலும் புங்குடுதீவு ஒன்றியத்துக்குள் அரசியல் (சார்பு அரசியல்) இருக்கக் கூடாது.
2) “புங்குடுதீவின் அபிவிருத்திக்கென” புங்குடுதீவு மக்களிடம் சேர்க்கும் எந்தவொரு நிதியும் (குறிப்பாக சந்தாப் பணம்) புங்குடுதீவில் உள்ள மக்களின் வளமான வாழ்வுக்கும், புங்குடுதீவின் அபிவிருத்திக்கும் “மட்டுமே” பயன்படுத்தப்படும்.
3) ஒன்றியத்தால் சுவிஸில் நடாத்தப்படும் எந்தவொரு விழாக்களோ, கூட்டங்களோ ஒன்றியத்தின் நிதியில் இருந்து ஒரு சதமேனும் எடுக்காமல், அதுக்கென தனித்து மக்களிடம் நிதி சேர்த்தோ அன்றில் ஒன்றிய முக்கியஸ்தர்கள் பங்களித்தோ செய்ய வேண்டும்.

இவை மூன்று விடயங்களிலும் கடந்த ஐந்தாறு வருடமாக தெளிவாக இருந்து நாம் செயல்படுவதினால், தொடர்ந்தும் எவர் நிர்வாகத்துக்கு வந்தாலும், அவ்வாறே செய்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்பதை திடமாக நம்பி;

சுவிஸில் உள்ள புங்குடுதீவு மக்கள், “சுவிஸ் ஒன்றியத்துடன்” இணைந்து பயணிப்பதுடன், உடன் இம்மாத முடிவுக்குள் இவ்வருட சந்தாவை செலுத்துமாறும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்வதாகத்” தெரிவித்தார். இவரது கருத்தும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

“பொதுச்சபை கூட்டத்துக்கான அறிவிப்பு…

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் புதிய நிர்வாகத்தை தெரிவு செய்யும் பொதுச்சபைக்கான கூட்டத்தை அடுத்த வருடம் (2020) அல்லது மார்ச் மாதம், 01ம் திகதி, அல்லது மார்ச் மாதம் 08ம் திகதி, நடாத்த எண்ணியுள்ளோம், இத்திகதிகள் பெரும்பாலானோருக்கு சரிவராவிடில், 2020 ஏப்ரல் மாத இறுதியில் நடாத்தப்படும். இப்பகிரங்க அறிவித்தல் கிடைத்த (இன்றிலிருந்து) மூன்று வாரத்துக்குள் தங்களுக்கு வசதியான திகதியை நிர்வாகசபைக்கு அனைத்து ஒன்றிய உறுப்பினர்களும் தெரியப்படுத்தவும். பெரும்பாலானோரின் முடிவுக்கு இணங்க திகதி நிர்ணயிக்கப்படும்.

புங்குடுதீவில் மேற்கொள்ளப்பட உள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள்..

அடுத்த வருட துவக்கத்தில் புங்குடுதீவின் வரலாற்றுமிக்க சுற்றுலாத் தளங்களில் ஒன்றான “பெருக்குமர” சுற்றாடல் புனரமைக்கப்படுவதுடன், அவ்விடத்தில் சிறுவர் பூங்கா போன்று அமைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அதேபோல் புங்குடுதீவில் உள்ள சில மயானங்கள் புனரமைப்பது உட்பட புங்குடுதீவில் “சுவிஸ் ஒன்றியத்தால்” மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதுடன், அதுகுறித்து திரு.இளங்கோ அண்ணர், திரு.சண்முகலிங்கம் மாஸ்ரர் உட்பட அங்குள்ளோருடன் கதைத்து விரைவில் தீர்மானித்து அடுத்த வருட (ஜனவரி) ஆரம்பத்தில் செய்வதெனவும், இவற்றுக்கு முடிந்தவரை அரச நிதியையும் பெற ஒன்றியத் தலைவர் முயற்சிக்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைதி வணக்கத்துடன் நிர்வாகசபையின் கலந்துரையாடல் முடிவுற்றது.

##ஒன்றிய ஆலோசனைசபை உறுப்பினரின் அறுபதாவது பிறந்ததின வாழ்த்து மடல்..

கலந்துரையாடலின் முடிவில், புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் கல்விப் பொறுப்பாளராகவும், ஆலோசனை சபை உறுப்பினராகவும் உள்ள திரு.சின்னத்துரை இலக்ஷ்மணன் அவர்களின் நடந்து முடிந்த அறுபதாவது (மணி விழா) பிறந்த தினத்தை முன்னிட்டு, ஒன்றியத்தின் சார்பில் அவருக்கு வாழ்த்து மடல் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். (மேற்படி நிகழ்வானது, ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினர்களின் தனிப்பட்ட நிதிப் பங்களிப்பில் நடத்தப்பட்டது)

(விழாவுக்கும், விழா மலருக்குமென நிதி எழுதி, “இதுவரை தராதோரும்”, இவ்வருட சாந்தப்பணம் செலுத்தாதோரும் அதனை உடன் செலுத்துமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். தொடர்புக்கு.. திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (தலைவர்) -077.9485214, திரு,அ.கைலாசநாதன் (குழந்தை -பொருளாளர்) -079.9373289, ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.) நன்றி..

“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.

24.11.2019

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 1 =

*