;
Athirady Tamil News

“இலங்கையின் வடக்கிலுள்ள சப்த தீவுகள்” 👉👉 (ஓர் கண்ணோட்டம்)

0

“இலங்கையின் வடக்கிலுள்ள சப்த தீவுகள்” 👉👉 (ஓர் கண்ணோட்டம்)

இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகள் சப்த தீவுகள் எனப்படும். அவ் ஏழு தீவுகளும் பின்வருமாறு:

1.லைடன் தீவு (வேலணைத்தீவு)
2.புங்குடுதீவு
3.நயினாதீவு
4.நெடுந்தீவு
5.அனலைதீவு
6.எழுவைதீவு
7.காரைநகர்

இவற்றுள் லைடன் தீவு, புங்குடுதீவு, காரைநகர் ஆகியவை கடல்வழிச் சாலைகள் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைக்கப்படுள்ளன.

ஏனைய நான்கு தீவுகளான எழுவைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு என்பவற்றுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து கடல்வழிப் போக்குவரத்துத் தொடர்பு மட்டுமே உண்டு.

#தீவுகளின் #பெயர் #விபரங்கள்

சப்த தீவுகள் கந்தபுராணத்தில் வேறு பெயர் கொண்டும் ஒல்லாந்தர் காலத்தில் ஒல்லாந்து நாட்டின் முக்கிய நகரங்கள் அல்லது தீவுகள் பெயர் இட்டு அழைத்தனர். அவற்றின் விபரம் பின்வருமாறு:

பெயர் // ஆங்கிலத்தில் // ஒல்லாந்தர் பெயர் /// கந்தபுராண பெயர்

வேலணைத்தீவு // Velanaitivu // Leiden (லைடன்) // சூசை
புங்குடுதீவு / /Pungudutivu // Middleburgh // கிரவுஞ்சம்
நயினாதீவு // Nainativu // Harlem // சம்பு
காரைநகர் // Karaitivu // Amsterdam // சாகம்
நெடுந்தீவு // Neduntheevu // Delft (டெல்ப்ற்) // புட்கரம்
அனலைதீவு // Analaitivu // Rotterdam // கோமேதகம்
எழுவைதீவு // Eluvaitivu // Ilha Deserta // இலவு

#வரலாறு

தீவுகளில் மக்களின் ஆரம்ப குடியேற்றம், வாழ்வு முறை, ஆட்சி முறைகள் பற்றிய வரலாற்று தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன.

இடப் பெயர்களை வைத்து நோக்குகையில் இலங்கை மீதான தென் இந்திய கடல் படையெடுப்புகளில் இத்தீவுகளில் படைகளை அல்லது தனைகளை தங்க வைத்திருக்கலாம் என்று தெரிகின்றது.

மேலும் ஊர்காவல்துறை போன்ற துறைகளும் முக்கியத்துவம் பெற்று விளங்கின. மேலும் தீவு மக்களின் உணவு மொழி போன்ற சில அம்சங்கள் கேரள மக்களுடன் ஒப்பிடத்தக்கவை.

போர்த்துகேயர் (1505 – 1658), ஒல்லாந்தர் (1656 – 1796) ஆகியோரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் கிறிஸ்தவ குருமார்கள் வந்து போதித்து பலர் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள்.

#சமூகம்

யாழ் சமூகத்தை ஒத்த சாதிய படிநிலை அடுக்கமைவே இங்கும் நிலவியது. குறிப்பாக “குடிமைகள்” என்று அழைக்கப்படும் ஒடுக்கப்பட்டோர் வயல்களிலிலும், மேற் சாதி வீடுகளிலும் கூலி வேலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டு சுரண்டப்பட்டனர்.

மேலும் சம ஆசனம் சம போசனம் மறுக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டனர். இவர்களை தவிர மீனவ சமூகமும் ஒதுக்கப்பட்ட ஒரு பிரிவினராகவே வாழ்ந்தனர்.

தற்போது இச் சாதி கட்டமைப்பு தீவு பகுதிகளில் மிதமாக இடம்பெற்ற கிறீஸ்தவ மத மாற்றம் பின்னர் ஏற்பட்ட புலப்பெயர்வு காரணமாக மிகவும் வலுவற்று இருக்கின்றது.

யாழ் சமூகத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. யாழ் குடாநாடு போலின்றி தீவுகளில் கல்வி வசதி குறைவு அதன் காரணமாக பலர் வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

இக் கூற்றை கா.சிவத்தம்பியின் யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை என்ற நூல் பின்வருமாறு விபரிக்கின்றது: “வியாபாரத்தை பொறுத்தமட்டில் (இத்தகைய) கல்வி வசதிகள் பெருமளவில் கிடையாத தீவுப்பகுதியினரே பெரும்பாலும் வெளிப் பிரதேசங்களில் கடைகள் நிறுவினர். இன்றும் இந்நிலைமை ஓரளவு தொடர்ந்து நிலவுவதைக் காணலாம்.

காரைநகர் புங்குடுதீவு முதலிய தீவுகளை சேர்ந்தவர்கள் இத்துறையில் முன்னோடிகளாக விளங்கினார்”.

இலங்கையின் வட மாகாணத்துக்கு உள்ளேயும் கிளிநொச்சி மற்றும் வன்னிப் பகுதிகளில் விவசாயக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட போது அங்கே இடம்பெயர்ந்து குடியேறியோரில் பெரும்பகுதியினர் தீவுப்பகுதிகளைச் சேர்ந்த மக்களே.

“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பதற்கமைய ஈழப் போர் காலத்தில் தீவுப் பகுதி மக்கள் பெரும்பாலனவர்கள் புலம் பெயர்ந்து விட்டார்கள்.

ஆரம்பத்திலேயே அவர்களுக்கு இருந்த வியாபார வெளி தொடர்புகள் இப் புலம் பெயர்வை உந்துவித்திருக்கலாம். பொரும்பாலான புலம் பெயர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிலும் சிதறி வாழுகின்றார்கள்.

#பொருளாதாரம்

விவசாயம், மீன்பிடி, வியாபாரம் ஆகிய மூன்று துறைகளுமே தீவுகளின் பொருளாதார அடிப்படை.நிலவளம், நீர்வளம் விவசாயத்துக்கு அவ்வளவு ஒத்துழைக்காவிடினும் நெல் தோட்ட செய்கை மற்றும் வியாபாரப் பயிரான புகையிலை செய்கையும் மேற்கொள்ளப்படுகின்றது. இத் தீவுகளின்புவியியல் சூழல் மீன்பிடித்தலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கின்றது.

தீவக மக்கள் கொழும்பு தென் இந்தியா மற்றும் பிற நாடுகளிலும் வியாபார தொடர்புகளை பேணியும் வியாபர தாபனங்களை உருவாக்கியும் பொருள் ஈட்டுவதில் ஈடுபட்டு வந்தனர், வருகின்றனர். இங்கும், யாழிலும் உற்பத்தியாகும் பல பொருட்களை இவ் வியாபரிகளே பல பிரதேசங்களிலும் சந்தைப்படுத்துகின்றார்கள்.

தீவக பொருளாதார கட்டமைப்பை யாழ்ப்பாண அரச உத்தியோக உயர் கல்வி தொழில் ரீதியிலான பொருளாதார கட்டமைப்போடு ஒப்பிட்டு வேறுபாடு சுட்டலாம்.

#அரசியல்

தீவுகள் அரசியல் முக்கியத்துவம் அற்ற பிரதேசங்களாகவே கணிக்கப்பட்டு வந்துள்ளன. எனவேதான் இந்திய அமைதி காக்கும் படை தீவுகளை ஆக்கிரமிக்கவில்லை.

மேலும் இலங்கை அரசு தீவுப்பகுதிகளை ஆக்கிரமித்த பொழுது ஈழப் போராளிகள் முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்க முயலவில்லை.

எனினும் நயினாதீவில் உள்ள விகாரை மற்றும் இராணுவ முகாம் ஊர்காவல்துறையில் உள்ள துறைமுகம் என்பன கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தவை.

புலம்பெயர்ந்தோர் ஊர் ஒன்றியங்கள்..

இத் தீவுகளில் இருந்து இடம் பெயர்ந்தோர் அத்தீவுகளின் சார்பாகவோ அல்லது அத்தீவுகளில் உள்ள கிராமங்களின் சார்பாகவோ ஊர் ஒன்றியங்கள் அமைத்து அத் தீவுகளில் சமூக சேவை செய்து வருகின்றார்கள்.

ஆபத்து உதவிகள், வைத்திய உதவிகள், பாடசாலைகள் மீள் கட்டமைப்பு, சனசமூக நிலையங்கள் பராமரிப்பு, தொழில் வள உதவிகள் (படகுகள் மீன் வலைகள், இழுவை இயந்திரங்கள், விதைகள் விவசாய நுட்பங்கள், மர வேலை கருவிகள்) பொருள் சந்தைப்படுத்தல், ஏற்றுமதி உதவிகள், போக்குவரத்து மேம்படுத்தல், மின்சத்தி வழங்குதல், கணணி கல்வி ஊக்குவிப்பு, தொலை தொடர்பு மேம்படுத்தல், குழந்தைகள்- முதியோர்- நோய் வாய்பட்டோர் பராமரிப்பு, கோயில்/ தேவாலயங்கள்/ பள்ளிவாசல்கள் பராமரிப்பு, மற்றும் விழா எடுத்தல் போன்ற பல சேவைகளில் ஈடுபட்டு அங்கிருக்கும் மக்களின் நலனில் அக்கறை காட்டி வருகின்றனர்.

(முகநூல் பதிவில் இருந்து….)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + five =

*