;
Athirady Tamil News

புளொட் தளபதி சுந்தரத்தின் வரலாறு.. இன்று 39 வது நினைவுதினம்..

0

புளொட் தோழர் சுந்தரத்தின் நினைவு..
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகர்களுள் ஒருவரும், தளபதியும், புதியபாதை ஆசிரியருமான தோழர். சதாசிவம் சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) யாழ் சுழிபுரத்தை பிறப்பிடமாய் கொண்ட அவர்; வீரமகனாய் மரணித்தது 02.01.1982 ஆண்டு.

புதிய பாதை அமைத்த தோழனை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றோம். சிறந்த தலைமைப் பண்பும், துணிச்சலும், போராட்டத் தெளிவும் மிக்க பொதுவுடைமைவாதியான தோழர் சுந்தரம் அவர்கள் 02.01.1982 ல் யாழ் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளின் தவைர் பிரபாகரனால் ஒளிந்திருந்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்;.

தோழரின் வரலாற்றை மேலும் அறிய…

வாசலைப்பார்த்து கதிரை போடப்பட்ட சித்திரா அச்சகத்தில் ஒருவர் அச்சகத்தின் உள்ளே வர உள்ளே கதிரையில் இருந்த சுந்தரம் வந்தவரைப்பார்த்துச் சிரித்திருக்கிறார் .சுட்டவனை சுந்தரத்திற்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும் என்று அபிப்பிராயப்படுகிறார் அச்சக உரிமையாளரான மரியதாஸ் மாஸ்ரர்.

அந்த அதிர்ச்சியிலிருந்தும் மன உளைச்சலில் இருந்தும் மரியதாஸ் மாஸ்ரர் வாழ்க்கை முழுதும் மீளவில்லை. அவர் வறுமையின் பின்னணியில் வாழ்பவர், போலீஸ் அவர் அச்சகத்தை மூன்று மாதங்களுக்கு மேலாக மூடியது. பின்னர் திறக்க அனுமதி கொடுத்தது.

ஒரு உள்ளூர் ஆலோசனையின்பேரில் சுந்தரத்தை வைக்கல் பொம்மையில் உருவம் செய்து அருகில் உள்ள ஞானம் ஸ்ரூடியோ சந்தியில் அவலச் சாவடைந்த உயிருக்கு செய்யும் சில “களிப்பு” வகைகள் செய்து சுந்தரத்தின் பாவனை உயிர் அவ்விடத்தில் கொளுத்தப்பட்டது .

மரியதாஸ் மாஸ்ரருக்கு பின்னர் எவ்வித அச்சக வேலைகளும் வராமல் நின்று போனது .தனது மகளை அவர் வீட்டு வேலைக்காக சிங்கப்பூருக்கு அனுப்ப முயன்றார். அவர் நண்பர்கள் ஓரிருவர் அவருக்கு அச்சக ஓடர்களை எடுத்துத்தர பெரிதும் முயன்றனர்,

எதுவும் வாய்க்கவில்லை ,அவர் நண்பர் ஒருவர் “இங்கே சுட வேண்டாம்!” என ஒரு அறிவித்தல் வைக்கச் சொல்லி அவரை மன உழைச்சலில் இருந்து மீட்க முயன்றார் .பின்னர் அச்சகம் மூடப்பட்டது .

ரஸமோனிய காலம்***

சுந்தரத்தின் கொலையில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு.அமிர்தலிங்கத்திற்கு “நோக்கம் இருக்குமா?” என ஒரு பலமான அல்லது லேசான அபிப்பிராயம் எப்போதும் இருந்து வந்திருக்கிறது.

அவரது “புதியபாதை” அரசியல் நிலைப்பாடுகள், அமிர்தலிங்கம் மீதான கடும் வெளிப்படையான விமர்சனம் என்பவை இவற்றிற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. இதனுடன் துரையப்பா கொலை பின்னணியும் சேர்த்து நோக்கப்படுகிறது.

அமிர்தலிங்கம் சுந்தரத்தின் மரணச்சடங்கில் கலந்து கொண்டிருக்கிறார், ஆனால் சுந்தரத்தை தனக்குத் தெரியாது நேரில் பார்த்ததில்லை என அவைக்கு தெரிவித்திருக்கிறார். பின்னொரு தகவலின்படி திருமதி.மங்கையற்கரசி அவர்கள் பிரபாகரன் காலில் விழுந்து அழுததாகவும் இன்னொரு கதை உண்டு,

ஆனால் ஆனைக்கோட்டை போலீஸ் நிலையத்தின் மீதான வெற்றிகரமான முதலாவது தாக்குதல் பிரபாகரனை பெரிதும் வேதனைக்கு உள்ளாக்கியதாகவும் அப்படி ஒரு தாக்குதலை பிரபாகரனும் செய்வதற்கு முயன்று பார்த்திருக்கலாம் எனவும் அதில் மிகவும் தேர்ச்சி பெற்ற இராணுவ வல்லமை சுந்தரத்திற்கே உண்டு எனவும், புலிகளில் இத்தகைய தகுதிநிலை சுந்தரத்திற்கு மட்டுமே உண்டு எனவும் பிரபாகரன் சுந்தரத்தைச் சுடுவதற்கு இதுவே காரணமாக இருந்தது எனவும் இன்னொரு காரணம் சொல்லப்படுகிறது.

சுந்தரத்தின் தந்தை இராமலிங்கம் சதாசிவம் ஆசிரியர், தாயார் கணபதிப்பிள்ளை பசுந்தரம். அம்மாவின் பெயரைத் தான் இயக்கப் பெயராக வைத்தார். அவருக்கு மணி ,பாபு என்றழைக்கப்படும் இரு சகோதரர்கள், சகோதரிகள் இருவர் பெயர் தெரியவில்லை. மாமன் இராசரத்தினம் பிரபல ஓவியர், மணி அவர் வழியில் ஓவியர்..

மறதியின் கணத்தில்**

போலீஸ் அச்சகத்தை மூடி அங்கிருந்த அனைத்து தஸ்தாவேஜுகளையும், நூல்களையும், அச்சுவேலை விபரங்களையும், தனது ஆய்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது அங்கு நுஹ்மானின் பலஸ்தீனக் கவிதைகள் ,மற்றும் செங்கை ஆழியானின் புவியியல் சூழலியல் நூல்கள் இருந்தன,

போலீஸ் ஒரு முன்நிபந்தனை மரியதாஸ் மாஸ்ரருக்கு விதித்தது. அங்கிருந்த பெயர்களிற்குரியவர்களை அவரே போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து நிறுத்த வேண்டும், செங்கை ஆழியான் பல தயக்கங்களினூடு போலீஸ் நிலையத்திற்கு வந்து தனது நிலையை போலீஸ் அதிகாரிகளுக்குப் புரிய வைத்தார் .

பேரா .எம் ஏ .நுஹ்மான் பலஸ்தீனக் கவிதைகள் மொழிபெயர்ப்பை ஒரு இளம் போலீஸ் அதிகாரி விசாரணைக்கு எடுத்துக் கொண்டார் .

போலீஸ் அதிகாரி நுஹ்மானைக் கேட்டார்..
”இதிலிருந்து சமூகத்திற்கு நீங்கள் என்ன செய்தியைச் சொல்ல வருகிறீர்கள் ?”
கைலாசபதி கூட இப்படியொரு கேள்வியை இலக்கியத்தளத்தில் அப்போது கேட்டிருக்க முடியாது என ஈழக் கவிதை செல்நெறிகள் பற்றி ஒரு ஆய்வு மாணவர் அப்போது கருத்து வெளியிட்டார்.

புதியபாதை எப்போதும் இடதுசாரிகள் தமது அச்சு வேலைகளை செய்யும் வேறொரு அச்சகத்திலேயே அடிக்கப்பட்டு வந்தது .
அந்த அச்சகத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாய் இந்த ஒரு இதழ் மட்டும் சித்திரா அச்சகத்தில் அடிப்பதற்கு மரியதாஸ் மாஸ்ரரால் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதுவும் அந்த அச்சகத்தின் பேரிலேயே…

மரியதாஸ் மாஸ்ரர் ஏழாலையைச் சேர்ந்தவர். இப்போது அவர் நிலை என்ன எனத் தெரியவில்லை. மறதியின் தளத்திலேயே எப்போதும் இயங்கும் வரலாற்றின் இருண்ட ஒரு மடிப்பில் மரியதாஸ் மாஸ்ரருக்கும் ஒரு இடம் இருக்கும்தான் இல்லையா ?

தோழர் சுந்தரமும், சந்ததியாரும் சிங்கள நூல்களை வாசிக்கவும், மொழி அறிவு பெறவும் சிங்கள மொழியை சுளிபுரத்தில் டாக்டர் தம்பையா என்பவரிடம் 70’இல் கற்றனர். மார்க்சிய நால்களையும், அதன் யதார்த்த நடைமுறைகளை தோழர்.கே.ஏ.சுப்பிரமணியத்திடமும் – விவாதங்களின் மூலம் கற்றுக் கொண்டனர்.

சிறிதுகாலம் சுந்தரம் புத்தளத்தில் பாதுகாவலராக வேலை செய்திருக்கிறார் .பின்னர் 1974 மட்டில் இந்தியாவிற்குப் படிக்கப்போன நாளில் வீட்டில் வறுமை நிலவியது, வயதிற்கு வந்த அவரது மூத்த சகோதரிக்கு திருமண ஏற்பாடுகளில் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கியிருந்த நேரத்தில் சுந்தரத்திற்கும் படிப்புச் செலவுகளிற்கு பணம் தேவையாக இருந்தது ,

சுந்தரத்தின் தாயார் பசுந்தரம் தனது தாலிக்கொடியை கச்சதீவிற்கு போன அவரது உறவினரிடம் கொடுத்தனுப்பிய போது சுந்தரம் அத் தாலிக்கொடியை கச்சதீவில் பெற்றுக் கொண்டார், அதை விற்று தனது படிப்பு தேவைகளை நிறைவேற்றி படிப்பை முடித்து 1977 இல் கொழும்பு வந்து கொழும்பில் இயக்கத் தொடர்புகள் ஏற்படுகிறது ,
பின்னர் காந்தீயம் அமைப்பு வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார் .மலையக மக்களுக்கான மறுவாழ்வுப்பணியில் அவர் தீவிரமாக ஈடுபடுகிறார் .

சுமார் ஆறுமாத இடைவெளிகளில் இடையிடையே வீட்டிற்கும் அவர் வந்து செல்கிறார். யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே நடைபெறும் தமிழ் வகைப்பட்ட தனிநபர் தீவிரவாத நடவடிக்கைகளில் சுந்தரமும் பங்கு கொண்டதாக போலீஸ் கருதுகிறது ,

1979 இல் அவரது தந்தையரையும் மைத்துனரையும் போலீஸ் கைது செய்து யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்தில் விசாரணையில் வைத்திருந்தது.

அவர் இறுதியாக வீட்டிற்கு வந்த 1981 ஜூன் மாத இறுதி இரவொன்றில், அயல் வீட்டில் வாங்கிவந்த உணவை அவர் தனது வீட்டில் இறுதியாக உண்டார். வறுமையின் காரணமாய் வீட்டில் சாப்பாடு இருக்கவில்லை, மரங்கள் அசைந்தாடும் அந்த இரவை ஒரு பதட்டத்துடன் கண்காணித்தபடி அவர் தாயிடமிருந்து அந்த உணவைப் பெற்றுக் கொண்டார். அவர் கடைசித் தங்கச்சி தனக்கு ஒரு வானொலிப் பெட்டியை வாங்கித் தரச்சொல்லி சுந்தரத்திடம் அப்போது கேட்டிருக்கிறார் .

” கொஞ்ச நாள் பொறு! நான் பிரச்சனையில் இப்போ இருக்கிறேன், உனக்கு வாங்கித் தாறேன்!” என சுந்தரம் தனது தங்கச்சிக்கு சொல்லிய போதிலும் அவரால் எப்போதும் தனது தங்கச்சிக்கு ஒரு வானொலிப் பெட்டியை வாங்கிக் கொடுக்க முடிந்ததில்லை. அவர் மூத்த சகோதரி வீட்டின் நிலையை அப்போது அவருக்கு சொல்லியிருக்கிறார், “அங்கை இருக்க வீடில்லாமை சனங்கள் இருக்கு! உங்களுக்கு இருக்க ஒரு வீடாவது இருக்கு!” என சுந்தரம் பதில் சொன்னார் .

சுந்தரம் சுடப்பட்டநிலையில் அவரது பால்ய உயிர் நண்பர் ஜெர்மனியில் இருந்து சுந்தரத்தின் இறுதிச் சடங்குகளுக்கான பணத்தை அனுப்பி அவரது செலவிலேயே சுந்தரத்தின் இறுதிக் கிரியைகள் மற்றும் தொடர்ந்த காரியங்கள் நடந்தன . சுந்தரத்தின் குடும்ப வறுமையை தன்னால் இயன்றவரை போக்கி நின்றார் அந்த ஜெர்மன் நண்பர். இடையிடையே தன்னால் இயன்றவரை அவர்கள் குடும்பத்தினருக்கு காசு அனுப்பிக் கொண்டிருந்தார்,

சுந்தரத்தின் இன்னொரு உயிர் நண்பர் அவரது கடைசித் தங்கச்சியை சீதனம் எதுவும் இல்லாமல் திருமணம் செய்து கொண்டார் .

(புளொட் தளபதி தோழர்.சுந்தரத்தின் நண்பர் ஒருவரின் பதிவில் இருந்து..)

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

(“புளொட்” தோழர் சுந்தரத்தின் படுகொலை குறித்து “தினமுரசு” பத்திரிகையில் தோழர் அற்புதன் எழுதியதில் இருந்து….)

1981ம் ஆண்டில் நடைபெற்ற அரச பயங்கரவாதம் ஆயுதப் போராட்டமே ஒரே பாதை என்ற நம்பிக்கைக்கு உரமிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், இளைஞர்களுக்கும் இடையிலான விரிசல் அதிகமாகியது. உமா-சுந்தரம் குழுவினர் தமிழீழ விடுதலைக் கழகம் (புளொட்) என்னும் பெயரில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

1981ம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு “தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்” பொங்கல் வாழ்த்துக்களை வெளியிட்டது.

அதேசமயம் புலிகள் என்ற பெயரையும் உமா-சுந்தரம் குழுவினர் பயன்படுத்தி வந்தனர். ‘புதிய பாதை’பத்திரிகையும் தொடர்ந்து வெளிவந்து கூட்டணியினரை சாடிக் கொண்டிருந்தது.

சுந்தரம் ஒரு சுறுசுறுப்பான போராளி. ஆயுதங்களைக் கையாள்வதிலும் தேர்ச்சியானவர். ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தாக்குதலில் துணிச்சலாகச் செயற்பட்டு அந்தத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர் சுந்தரம்.

§§ அச்சுக்கூடத்தில் சிந்திய இரத்தம் – பிரபாவின் முடிவு §§

சுந்தரத்தை ‘மண்டையில் போடவேண்டும்’ என்று முடிவு செய்தார் பிரபாகரன். யாழ் வெலிங்கடன் திரையரங்குக்கு முன்பாக இருந்தது சித்திரா அச்சகம். அங்கு தான் ‘புதிய பாதை’பத்திரிகை அச்சிடப்பட்டது.  ஆக்கங்கள் கொடுக்கவும் அச்சிடப்பட்ட ஆக்கங்களை சரிபிழை பார்க்கவும் சுந்தரம் சித்திரா அச்சகத்திற்கு வந்து செல்வார். சுந்தரத்தை அச்சகத்தின் உள்ளே வைத்து சுடவேண்டும் என்று திட்டமிடப்பட்டது.

§§ சுந்தரத்துக்கு குறி §§

02.01.1982 அன்று வழக்கம் போல சித்திரா அச்சகத்திற்கு வந்தார் சுந்தரம். அவர் உள்ளே சென்று அச்சிடப்பட்ட ஆக்கங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

அச்சகத்தின் ஜன்னல் ஒன்றின் வழியாக சுந்தரத்தை குறி பார்த்தது ஒரு கைத்துப்பாக்கி. வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. சுந்தரத்தின் உயிர் பிரிந்தது. “முதன்முதலில் இயக்க மோதல்” பகிரங்கத்திற்கு வந்தது அன்று தான்.

இயக்கங்களின் முரண்பாடு துப்பாக்கியால் தீர்க்கப்பட்ட முதல் சம்பவமும் அது தான். அதற்கு முன்னர் புலிகள் இயக்கத்தின் உள் இயக்கப் பிரச்னையில் சரவணன் எனப்படும் பற்குணரசா, மட்டுநகர் மைக்கல் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

ஆனால் இரு பிரிவாக இயங்கிய அமைப்புக்களிடையே நிலவிய முரண்பாடு துப்பாக்கியால் தீர்க்கப்பட்டது சுந்தரம் கொலையில் தான் ஆரம்பித்தது. அச்சகத்தில் வைத்து சுந்தரம் கொல்லப்பட்டதிலும் ஒரு நோக்கம் இருந்தது.

‘புதிய பாதை’ பத்திரிகையை அச்சிடுவதற்கு வேறு   ஒரு அச்சகமும் முன் வராமல் இருக்க வேண்டும். அதற்கான அச்சுறுத்தலாகவே ‘புதிய பாதை’ அச்சிடப்பட்ட அச்சகத்தில் வைத்தே சுந்தரத்தை பிரபா அணியினர் தீர்த்துக் கட்டினார்கள். சுந்தரம் கொலை நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உயர்மட்டக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

அக்கூட்டத்தில் பேசிய அமிர்தலிங்கம் ‘புதிய பாதை’ வெளிவராமல் தடுப்பதாகக் கூறியிருந்தார் என்று ‘புதிய பாதை’குழுவினர் தெரிவித்தார்கள். ‘சுந்தரம் புலிப்படை’என்ற பெயரிலும் பிரசுரங்கள் வெளியாகியிருந்தன. இயக்க மோதல்களை வேதனையோடு நோக்கினார்கள் மக்கள். பிரசுரங்கள் பரபரப்பாக வாசித்தறியப்பட்டன.

§§ பிரபா அணி விளக்கம் §§

சுந்தரம் தமது இயக்க ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தார் என்றும், தமது இயக்க பெயரை பயன்படுத்தினார் என்றும், அதனால் மரணதண்டனை விதிக்கப்பட்டதாகவும் பிரபாகரன் அணியினர் கூறினார்கள். இயக்க மோதல்கள் பகிரங்கத்துக்கு வந்தமை இலங்கைப் புலனாய்வுப்பிரிவுக்கு வாய்ப்பாக அமைந்தது.

‘புதிய பாதை’தொடர்பாகவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டன. இதனால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற பெயரில் பகிரங்கமாக இயங்க முடியாமல் போனது.

தமிழ் இளைஞர் பேரவை விடுதலை அணி என்ற பெயரில் இயங்கிய இளைஞர்கள் பலர் உமா மகேஸ்வரன் தலைமையில் செயற்பட முன் வந்தனர். அவர்களில் ஒருவர் மட்டக்களப்பைச் சேர்ந்த இரா.வாசுதேவா. இரா-வாசுதேவாவை அமைப்பாளராகக் கொண்டு தமிழீழ விடுதலைக் கழகம் என்றும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தலைமறைவாக இயங்கியது. அதன் தலைமையில் மக்கள் அமைப்பாக ‘தமிழீழ விடுதலைக் கழகம்’ பகிரங்கமாகச் செயற்பட்டது. புலனாய்வுத்துறையினரை ஏமாற்றவே அந்த முயற்சி.  (நன்றி.. தினமுரசு)

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

புதியபாதை வகுத்தவன் தான் சுந்தரம்
மக்கள் புரட்சி வெல்ல உழைத்தவன் தான் சுந்தரம்
 
புதியபாதை வகுத்தவன் தான் சுந்தரம்
மக்கள் புரட்சி வெல்ல உழைத்தவன் தான் சுந்தரம்
 
தலைவர்களின் பொய்யுரையை எதிர்த்தவன்
தன் மானத்தோடு விடுதலைக்கு உழைத்தவன்
தலைவர்களின் பொய்யுரையை எதிர்த்தவன்
தன் மானத்தோடு விடுதலைக்கு உழைத்தவன்
 
தமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தில்
ஒரு தளபதியாய் இறுதிவரை உழைத்தவன்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தில்
ஒரு தளபதியாய் இறுதிவரை உழைத்தவன்…..புதியபாதை
 
மலையத்து ஏதிலிக்கும் உதவினான்  – காணி
மனைகள் தந்து குடியமர்த்தி பேணினான்
மனக்கவரும் பாட்டாளிக் கொள்கையில் – தமிழ்
மக்களினம் நடைபோடத் தூண்டினான்……. புதியபாதை
 
சுழிபுரத்து மண்தனிலே தோன்றினான் பகைவர்
சூட்சி வெல்லும் வீரனாக விளங்கினான்
ஆனைக்கோட்டை காவல் நிலையம் தாக்கியே பகைவர்
ஆயுதத்தை கைப்பற்றிக் காட்டினான்……… புதியபாதை
 
தவறுகின்ற தலைமையினை சாடினான் – அவன்
தவறாது விடுதலையை நாடினான்
துரோகிகளால் சூடுபட்டு மறையினும் – எம்
தோழர்களின் உள்ளங்களில் வாழ்கிறான்………. புதியபாதை

“புளொட்” தோழர் சுந்தரம் அவர்களின், 37வது நினைவுதினம்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + nine =

*