;
Athirady Tamil News

யாழில் ஒன்பது மாதக் குழந்தையை தாக்கிய தாய்.. நிலையென்ன? (மக்களின் பார்வையில்) -மயூரப்பிரியன்.

0

கடந்த முதலாம் திகதி இரவு சமூக வலைத்தளங்களில் 27 செக்கன் காணொளி ஒன்றில், பெண்ணொருவர் சிறு குழந்தையை தடி ஒன்றினால் அடிகின்றார். அதன்போது அருகில் ஒரு பெண் நிலத்தில் எந்த சலனமும் இன்றி, படுத்து இருக்கிறார். குழந்தையை அடித்த பெண் அக்குழந்தையின் ஒற்றைக்கையை பிடித்து நிலத்தோடு “தர தரவென” இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்று அங்கும் குழந்தையை அடித்து அறைக்கதவை மூடிக்கொள்கிறார். அத்துடன் அந்த காணொளி முடிவுறுகிறது. அந்த காணொளி வைரல் ஆகின்றது.

பலரும் அதனை பகிர்ந்து குழந்தையை தாக்கும் பெண்ணை திட்டியும் , குழந்தையை காப்பாற்ற என்ன செய்வது என தெரியாது தமது ஆதங்கங்களை சமூக வலைத்தளங்களில் கொட்டியும் தீர்த்தனர்.

அது தொடர்பில் சில ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட சிலர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையம், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலர் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இரவு நேரம் ஆகையாலும் , அந்த பெண் குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்க பெறாததாலும் உடனடியாக எவராலும் எதுவும் செய்ய முடியாத நிலை.

மறுநாள் காலை கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெனோர்ண்டோ தலைமையில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் , ஊடகவியலாளர்கள் , நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , குடும்ப நல உத்தியோகஸ்தர் உள்ளிட்டவர்கள் குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்தார்கள்.

அரியாலை நாவலடி கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீட்டுத் திட்டம் ஒன்றின் கீழ் வழங்கப்பட்ட வீட்டில் வாடகைக்கு அக்குடும்பம் வசித்து வருகின்றது எனும் தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு சென்றனர்.

அங்கு சென்ற பொலிஸார் உள்ளிட்ட குழுவினர் குழந்தையை மீட்டு குழந்தையை அடித்த பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர். குழந்தையுடன் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டது, குழந்தையின் தாயார் தான் என்பதனையும் விசாரணைகளின் ஊடாக அறிந்து கொண்டனர்.

குறித்த பெண்ணின் குடும்பமானது திருகோணமலையை சொந்த இடமாக கொண்டது. அப்பெண் திருகோணமலையில் பிறந்து வளர்ந்தவர். மத்திய கிழக்கு நாட்டிற்கு தொழில்பார்க்கச் சென்றுள்ளார்.

அங்கு பணிப்பெண்ணாக வேலை செய்த சமயம் இந்தியாவை சேர்ந்த ஒருவருடன் முகநூல் ஊடாக காதலில் வீழந்துள்ளார். அதன் பின்னர் இருவரும் அங்கே ஒன்றாக வாழந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அப்பெண் குழந்தையை பிரசவித்துள்ளார்.

அக்கால பகுதியில் கொரோனா பெருந்தொற்று நோய் உலகையே உலுக்கிக்கொண்டு இருந்தது. அதனால் தொழில் வாய்ப்புக்கள் இன்றியும் தொற்று அபாயத்தில் இருந்து குழந்தையை காக்கவும் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்தனர். அதனால் மனைவியையும் பிள்ளையையும் இலங்கைக்கு திரும்பி செல்லுமாறும், கூறி இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார் கணவன்.

அதனை அடுத்து கடந்த ஜனவரி மாதம், 7 மாத கைக்குழந்தையுடன் நாடு திரும்பியுள்ளார் அப்பெண். 21 நாட்கள் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டும், பின்னர் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.

அக்கால பகுதியில் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுக்க ஆரம்பித்தார். தனிமைப்படுத்தல் கால பகுதியிலையே பெருமளவான பணம் அவருக்கு செலவாகியுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு செல்லுங்கள் என அனுப்பி வைத்த கணவன் பணம் அனுப்பாததால் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் விரக்தியில் காணப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணையின் போது ஏன் குழந்தையை அடித்தீர்கள்? என கேட்ட போது “நான் மனக்குழப்பம் ஏற்பட்டு மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் என்ன செய்கிறேன் என தெரியாமலே குழந்தைக்கு அடித்தேன்” என கூறியுள்ளார். மன குழப்பத்திற்கு மருந்தெடுத்தீர்களா ? என கேட்ட போது இல்லை என்றே பதில் அளித்தார்.

அதேவேளை குழந்தை தொடர்பான ஆவணங்களை தனிமைப்படுத்தல் முகாமில் தொலைத்து விட்டதாகவும் பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்திருந்தார்.

அனைவரின் மனங்களையும் உலுக்கிய அந்த காணொளியை எடுத்தவர், அந்த பெண்ணின் சகோதரன் என பொலிஸ் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டது.

எதற்காக காணொளி எடுத்தீர்கள் என கேட்ட போது , “அக்கா குழந்தையை அடிப்பதை பொறுத்துக்ெகாள்ள முடியவில்லை. இதனை எனது அப்பாவிற்கு காட்டவே எடுத்தேன். பின்னர் அக்கா அந்த வீடியோவை தா அவருக்கு (தனது கணவருக்கு) அனுப்புவோம் எனக் கேட்டார் அதனால் அவருக்கு கொடுத்தேன். அக்கா அதனை தனது கணவருக்கு அனுப்பினார். அவர் தான் சமூக வலைத்தளங்களில் அந்த காணொளியை பகிர்ந்தார் ” என அப்பெண்ணின் சகோதரன் கூறினார்.

எனது கணவருக்கு அந்த காணொளியை அனுப்பினேன். அவர் அதனை பார்த்து விட்டு என்னை ஏசினார். குழந்தைக்கு அடிக்காதே பணம் அனுப்புகிறேன் என கூறினார். ஆனாலும் அவர் அந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்க மாட்டார் என அப்பெண் கூறினார்.

அதனை அடுத்து அப்பெண்ணையும் குழந்தையையும் மீட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற பொலிஸார் விசாரணைகளின் பின்னர் பெண்ணையும் குழந்தையையும், யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் (சிறுவர் நீதிமன்றம்) ஆஜர்படுத்தினர்.

சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த மேலதிக நீதிவான், தாயாரையும் குழந்தையும் சட்ட மருத்துவ நிபுணர் முன்னிலையில் முற்படுத்த வசதியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்க உத்தரவிட்டார்.

அத்துடன், தாயாரின் மனநிலை தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரி ஊடாக உளநல மருத்துவ வல்லுநரிடம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதின்றம் உத்தரவிட்டது. தற்போது தாயும் சேயும் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலைமையில் குழந்தையை தாக்கியமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மீண்டும் எதிர்வரும் 09ஆம் திகதி யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் (சிறுவர் நீதிமன்றம்) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் தாயாரின் உளநல மருத்துவ அறிக்கை, தாய் மற்றும் குழந்தை தொடர்பிலான சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய அறிக்கை என்பன நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

குழந்தையை தாக்கிய காணொளியினை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பலரும் அப்பெண்ணை சகட்டு மேனிக்குள் குற்றம் சாட்டி பெண் மீதான தமது வன்மங்களை தீர்த்துக்கொண்டனர் .

குழந்தைகள் , பாலூட்டும் தாய்மார்களை கண்காணிக்க அவர்களுக்கான வைத்திய சேவைகளை வழங்க என அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட பொறிமுறைகள் உரிய முறையில் இயங்காமையே இந்த சம்பவத்திற்கு காரணம் எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தனது

குழந்தையை தாக்கிய பெண்ணை மாத்திரம் குற்றம் சாட்டி சமூகம் தப்பித்துக்கொள்ள முனைகின்றது. இந்த சமூகமும் தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அந்த பெண்ணின் செயலுக்கு இந்த சமூகமும் எதோ ஓர் வகையில், காரணமாக அமைந்துள்ளதும் மறுக்க முடியாத உண்மை. எனவே தாம் சார்ந்த சூழலில் மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது இருக்க அனைவரினதும் பங்களிப்பும் தேவை.

யுத்தம், இயற்கை அனர்த்தம் எதுவாகிலும் அது பெண்களையும் சிறார்களையுமே அதிகளவில் பாதிக்கின்றது. பெண் தன் குழந்தையை இப்படியும் அடிப்பாளா என்பவர்கள், தற்போதைய கொரோனா சூழல் ஆதரவற்ற ஒரு பெண்ணின் மீது எற்றிவைத்திருக்கும் சுமையைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.
  மயூரப்பிரியன்   

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 18 =

*